

காபியில் சிக்கரி கலந்து சாப்பிடலாம் என்று சொல்கிறார்கள். காபியில் வலி நிவாரணி கேஃபின் இருப்பதைப் போல, சிக்கரி சேர்த்தால் ஏற்படும் நன்மைகள் ஏதேனும் உள்ளதா? அதிலுள்ள பாதகங்கள் எவை?
தி.ரங்கசாமி, ஸ்ரீரங்கம்.
Cichorium intybus எனும் செடியின் வேரிலிருந்து தயாரிக்கப்படும் சிக்கரியைத்தான் நாம் காபிப் பொடியுடன் கலந்து பயன்படுத்துகிறோம். நல்ல மணம் தரும் சிக்கரி கலந்த காபியைக் குடிப்பதற்கு ஆனந்தமாக இருந்தாலும் சிலருக்குத் தலைசுற்றலை அது ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. காபித்தூளை குறைவாகச் சேர்த்து டிகாக்ஷன் தயார் செய்வதற்காக சிக்கரி கலப்பார்கள். திருமணங்களிலும், ஹோட்டல்களிலும் காபிப் பொடி மட்டுமே கட்டுபடி ஆகாததால் சிக்கரி சேர்த்து டிகாக்ஷன் போட்டு, பாலுடன் கலந்து சூடாக குடிக்கக் கொடுப்பார்கள். பலரும் அதைச் சாப்பிட்டு வயிறு அப்சட் ஆகி, ஒரு வித மயக்கநிலையில் இருப்பதையும் பார்க்க முடிகிறது. ஆயுர்வேத முறையில் இதற்கான காரணமென்ன என்று நாம் ஆலோசிக்க வேண்டியிருக்கிறது. சிக்கரி காபி வயிற்றில் வந்தடைந்தவுடன், அங்குள்ள பாசகம் எனும் பித்தத்தின் குணங்களாகிய ஊடுருவும் தன்மை, சூடு ஆகியவற்றைத் தூண்டி, அந்த குணங்களை, ரத்தநாளங்களின் வழியாக உடனடியாக மூளைக்கு எடுத்துச் சென்று, அங்குள்ள தர்ப்பகம் எனும் கபத்தின் குணங்களாகிய மந்தம் மற்றும் குளிர்ச்சியைக் கிளறிவிட்டு உருக்குவதால், மனதின் ஒரு தோஷமாகிய ரஜஸ் கிளர்ந்தெழப்பட்டு, சுதந்திரமாக வலம் வரத் துவங்குகிறது. மூளையின் நரம்புகளிலுள்ள பிராண வாயுவினுடன் இது கைகோர்த்துக் கொள்வதால், இந்தச் சுழற்சியின் விளைவால், மயக்கம் போன்ற ஒரு கிறுகிறுப்பை அது ஏற்படுத்துகிறது.
இப்படி ரஜ-பித்த-வாயுவின் விஷமமான ஒரு நிலையை ஏற்படுத்தும் சிக்கரி காபியின் மீதுள்ள மோகத்தைத் தவிர்ப்பதே நலம். ஆனால் மிகவும் மந்தமான, சுறுசுறுப்பற்ற, சோம்பேறித்தனமான மனிதர்களுக்கு இது போன்ற கிளர்ச்சியூட்டும் பானங்களால், அவர்களுடைய உடல்-மனநிலையில் சிக்கரி கலந்த சூடான காபி, நல்ல மாற்றங்களைத் தற்காலிகமாக ஏற்படுத்தித் தரலாம். ஆனால் அதுவே நிரந்தரமாக மாற்றித் தருமா? என்றால், மாற்றித் தராது என்றே கூறலாம்.
காபிப்பொடியிலுள்ள கேஃபின் எனும் வேதிப்பொருள், மூளை நரம்புகளுக்கு ஒரு க்ரியா ஊக்கியாக இருப்பதாலும், அதன் நறுமணம் மற்றும் சுவை, மனிதர்களை அடிமைப்படுத்துகிறது.
மேற்குறிப்பிட்ட காரணங்களை வைத்து ஆலோசித்துப் பார்த்தால், பித்தம் எனும் தோஷத்தின் ஆதிக்கத்தை உடலில் அதிகம் கொண்டவர்களுக்கு, சிக்கரி காபியும், காபியும் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது என்று தெளிவாகிறது. மற்றவர்கள் காபியை சிக்கரி சேர்த்து அருந்துவதால், அதிகம் பாதிக்கப்படுவதில்லை என்பதையும் ஊகித்தறியலாம். அதனால் நீங்கள் இவ்விஷயத்தில் சற்று நிதானித்து, உடல் தன்மைக்கேற்ப முடிவெடுக்கவும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.