உச்சி வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது.
அறுவடையான வயலுக்குள் இறங்கி நடந்து கொண்டிருந்த அந்த மூன்று பேரும் நெல் பயிரின் அடிக்கட்டைகள் கால்களில் குத்தி வலி உண்டாக்கவே வரப்பில் ஏறி நடக்கத் தொடங்கினர். வெயில் காரணமாகவும், மக்களின் நடமாட்டம் காரணமாகவும் வரப்பில் படர்ந்து கிடந்த புற்கள் தேய்ந்து மறைந்து போனதால் கால்கள் சூடு தாங்காமல் தவித்தன.
வியர்வை பெருக்கெடுக்க பசிக் களைப்போடு நடந்து கொண்டிருந்த அவர்களது இலக்கு சற்றுத்தூரத்தில் தெரிந்த ஒரு மூன்று கட்டு வீடாக இருந்தது.
அந்த வீடு வயல்களுக்கு நடுவே ஒரு தீவுபோல அமைந்திருந்த மேடான பகுதியில் கட்டப்பட்டிருந்தது. வீட்டின் முன்பு பத்துப் பதினைந்து தென்னை மரங்களும், ஐந்தாறு மாமரங்களும் நின்று நிழல் பரப்பிக் கொண்டிருந்தன. அருகே ஒரு கிணறும், அதில் ராட்டினமும் கயிற்றில் கட்டித் தொங்கிக் கொண்டிருந்த வாளியுமாக இருந்தன. வீட்டின் பின்புறம் ஒரு பிரம்மாண்டமான வைக்கோல் போரும் மாடு கட்டும் தொழுவமும் இருந்தன. தொழுவத்தின் அளவை வைத்துப் பார்த்தால் பத்துப் பதினைந்து மாடுகளுக்கு குறைவில்லாமல் இருக்க வேண்டும் என்பது புரிந்தது.
வீட்டை நெருங்கியதும் வரப்பிலிருந்து மேட்டிற்கு ஏறி சற்று நடந்ததும் கிணறு வந்தது. கிணற்றைப் பார்த்ததும் அவர்களில் வயதில் குறைவாக இருந்தவன் அவசர அவசரமாகத் தண்ணீரை இறைத்து உடல் முழுதும் கொட்டிக் கொண்டான். அதைப் பார்த்ததும் மற்ற இருவரும் அவ்வாறே தண்ணீரை இறைத்து மேலே ஊற்றிக் கொண்டு கட்டியிருந்தவாறே வேட்டியின் அடிப்பகுதியைப் பிழிந்து கொண்டு மேல் துண்டையும் பிழிந்து கொண்டனர். ஆனால் உடம்பின் ஈரத்தைத் துடைக்க வேண்டும் என்ற எண்ணமே மூவருக்கும் வரவில்லை. சுகமாக வீசிய தென்னை மற்றும் மாமரக்காற்று அவர்களது ஈரமான வெற்று உடம்பில் தவழ்ந்தபோது அவர்களுக்கு அற்புதமான சுகானுபவம் கிட்டியது.
வீட்டின் நடைவாசலில் ஏறித் திண்ணையை நெருங்கியதும் அவர்களில் ஒருவன் ஆனந்தமாக திண்ணையில் ஏறி படுத்துவிட்டான். சிமிண்ட் பால் ஊற்றி வழுவழு என்று பூசப்பட்டிருந்த அந்த திண்ணை ""வா வா... வந்து ஓய்வெடுத்துக் கொள்'' என்று அழைப்பதுபோல் நீண்டு கிடந்தது. ஒருவன் படுத்ததும் பசிக்களைப்பினாலும் வெயிலில் நடந்து வந்த களைப்பினாலும் துவண்டு போயிருந்த மற்றவர்களும் "அப்பாடா' என்று திண்ணையில் படுத்துவிட்டனர்.
ஆள் அரவம் கேட்டு வெளியே வந்த ஒரு மூதாட்டி இவர்களைப் பார்த்ததும் ""யாருப்பா நீங்க? யாரா இருந்தாலும் சரி வாங்க. வழிப்பயணம் புறப்பட்டு வந்தீங்களாட்டியும், வேகாத வெயிலில் புறப்பட்டிருக்கீங்களே!'' என்று கூறிவிட்டு ""கொஞ்சம் இருங்க'' என்றவர் உள்ளே சென்று ஒரு பெரிய சொம்பு நிறையத் தண்ணீரும் ஒரு டம்பளரும் எடுத்து வந்தார். அவர்கள் முன் வைத்து ""மொதல்ல தண்ணியைக் குடிச்சு தொண்டையை நனைச்சுக்குங்க, அப்பறம் பேசலாம்'' என்று சொல்லிவிட்டு சற்று நேரம் அவர்களை உற்றுப் பார்த்துவிட்டு உள்ளே சென்றார்.
அந்த மூதாட்டிக்கு எழுபது வயதிற்கு மேலிருக்கலாம். நடை, உடை, பேச்சு ஆகியவற்றை வைத்து அனுமானிக்கும்போது அவர்தான் அந்த வீட்டின் தலைவியாக இருக்க வேண்டும் என்று உறுதியாயிற்று.
உள்ளே சென்ற அந்த அம்மையார் ஒரு பிரிமனையைக்கொண்டு வந்து திண்ணையின் ஒரு பக்கத்தில் வைத்தார். பிறகு உள்ளேயிருந்து ஒரு பெரிய மண்பானையைத் தூக்கி வந்து பிரிமனையில் வைத்தார். ""எலே காசி இங்கே வாடா'' என்று குரல் கொடுத்தார். அதைக் கேட்டதும் உள்ளேயிருந்து சுமார் முப்பது வயது மதிக்கத்தக்க வாட்டசாட்டமான ஓர் இளைஞன் வந்தான். அவனிடம் ""கொல்லைப்பக்கம் போயி தேக்கு மரத்திலிருந்து நாலஞ்சு எலை பறிச்சுக்கிட்டு வா'' என உத்தரவிட்டவர், இவர்கள் பக்கம் திரும்பி ""பாவம் இதுக்கு ஒண்ணும் தெரியாது. சொன்ன வேலையைச் செய்யும். போடற சாப்பாட்டைச் சாப்பிடும். சின்னப்பையனா இருந்தப்போ எங்கெங்கோ திரிஞ்சுட்டு இங்கே அநாதையா வந்து சேர்ந்தது. அப்பன் ஆயி இல்லே. சொந்த பந்தமும் இல்லே. இங்கே ஒட்டிக்கிட்டுது. தானா எதுவும் செய்யத் தெரியாது. சொன்னதைச் செய்யும். நில்லுன்னா நிக்கும். எடுன்னா எடுக்கும். அவ்வளவுதான் வஞ்சனையில்லாம உழைக்கும். வீட்டில ஒரு பிள்ளையாவே ஒண்டிடுச்சு'' என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று ஒரு மண் பானையில் உறை ஊற்றி கடைந்து வைத்திருந்த மோரையும் உப்பு
மரவையையும் எடுத்து வந்து அந்தப் பெரிய பானையை மூடியிருந்த தட்டை எடுத்துவிட்டு மோரை ஊற்றி உப்பையும் போட்டு அகப்பையால் கலக்கத் தொடங்கினார். கம்பங்கூழின் மணம் கம்மென்று பரவி அந்த மூன்று பேரின் பசியை நன்றாகக் கிளறிவிட்டது.
காசி கொண்டுவந்த தேக்கு இலைகளைக் கழுவிவிட்டு மூன்று இலைகளிலும் பதமாக எண்ணெய்விட்டு வறுக்கப்பட்டிருந்த நெத்திலிக் கருவாட்டைக் கொண்டுவந்து வைத்ததுடன் மூன்று பெரிய குவளைகளில் கூழை நிரப்பி அவர்கள் முன் வைத்து ""சாப்பிடுங்கப்பா'' என்றார்.
அந்த மூதாட்டி கூழைக் கொண்டு வந்து வைத்ததிலிருந்து மோரைக் கலந்ததையும், உப்புப்போட்டு கலக்கியதையும் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அர்த்தத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கம்பங்கூழின் மணமும் அதற்கு பக்கவாத்தியமாக நெத்திலிக் கருவாட்டின் வாசமும் பசியால் துடித்துக் கொண்டிருந்த அவர்களைச் சுண்டி இழுத்தாலும் ஏதோ ஒன்று அவர்களைத் தடுத்துக் கொண்டிருந்தது. அதெல்லாம் ""ஒண்ணும் வேணாம் ஆயா'' என்று அவசர அவசரமாக மறுத்தான் ஒருவன்.
""சரிதான் நிறுத்துங்கப்பா, மூஞ்சியைப் பார்த்தாலே ரெண்டு நாள் பட்டினி கிடந்த மாதிரி தெரியுது. ஒவ்வொருத்தன் வயித்துலேயும் என்னைப் போட்டுப் புதைக்கலாம்போல இருக்கு. இப்ப எதுக்கு வீணான யோசனை. பரவாயில்லே சும்மா கூழைக்குடிங்க. எதுவா இருந்தாலும் அப்புறம் யோசிச்சுக்கலாம்'' என்று களைப்புடன் சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து ஒரு தாயின் பரிவோடு வற்புறுத்தினார் அந்த மூதாட்டி. இறுதியாக பசிதான் அவர்களை வென்றது. அவர்களில் வயதில் சிறியவன் கூழ் நிரம்பிய குவளையை எடுத்து மடக்
மடக்கென்று குடிக்கத் தொடங்கினான். மற்ற இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு ஒருவிதத் தயக்கத்துடன் குடிக்க ஆரம்பித்தார்கள். அந்த மூதாட்டி மீண்டும் மீண்டும் குவளைகளை நிரப்ப வயிறு நிரம்பக் குடித்துவிட்டு பெரிதாக ஏப்பம் விட்டுவிட்டு ""அப்பாடா'' என்று களைப்புடன் சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டனர்.
""இது எங்க குடும்பத்து ஆளுங்களுக்காக காய்ச்சுன கூழு. இப்ப வீட்டிலே யாரும் இல்லே. அவுங்கள்லாம் இருந்திருந்தா காலையிலேயே இந்தக் கூழு சரியாப் போயிருக்கும். ராத்திரி நடு சாமத்திலே எங்க ரெண்டாவது மருமக வகையிலே ஒரு துக்கமுன்னு ஆளு வந்து சொன்னது. உடனே விடியறதுக்குள்ளாவே எல்லோரும் கூண்டு வண்டியைக் கட்டிகிட்டு புறப்பட்டுப் போயிட்டாங்க. நியாயமா நானும் போயிருக்கணும். ஆனா வீட்டிலே யாராவது இருக்கணும்முங்கறதுக்காக என்னை இருக்கச் சொல்லிட்டு எனக்குத் துணையா இந்த நட்டாமுட்டியையும் வச்சிட்டு போயிட்டாங்க. இனிமே அங்கே காரியமெல்லாம் முடிஞ்சு ரெண்டாவது மகனையும் மருமகளையும் அங்கேயே விட்டுட்டு விளக்கு வைக்குற நேரத்துக்குத்தான் மத்தபேரு வருவாங்க. நீங்க கவலைப்படாம பயப்படாம திண்ணையில் படுத்துக் களைப்பாறுங்க. நல்லா வெயில் தணிஞ்சதும் புறப்பட்டு போகலாம்'' என்று சொல்லிவிட்டு, ""எலே காசி இங்கே வா'' என்று அந்த ஆளையும் அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார் அந்த மூதாட்டி.
வெயிலில் நடந்து வந்த களைப்பு, பசி நீங்கி வயிறு நிறைந்த மயக்கம் எல்லாம் சேர்ந்து அவர்களை எதையும் யோசிக்கவிடாமல் அப்படியே படுக்க வைத்துவிட்டது.
அவர்கள் கண்விழித்தபோது மாலை மணி நான்குக்கு மேலிருக்கும். திடுக்கிட்டவர்களைப்போல, ""சரி புறப்படலாமா?'' என்று அவர்களுக்குள் கேட்டுக் கொண்டிருந்தபோது உள்ளேயிருந்து வெளியே வந்த அந்த மூதாட்டி, ""என்னப்பா புறப்படுறீங்களா! இதுகளை எடுத்துக்கிட்டுப் போங்க'' என்று நடைவாசலில் இருந்த மூன்று மூட்டைகளைக் காட்டினார். அந்த மூன்று மூட்டைகளுடன் சிறிய துண்டுச்சாக்குப் பைகளும் பக்கத்தில் இருந்தன. அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது காசி அவற்றை அங்கு வைத்திருக்க வேண்டும். அவர்கள் திடுக்கிட்டவர்களாக, ""என்ன ஆயா இது?'' என்று கேட்டனர்.
""ஒண்ணுமில்லேப்பா, ஆளுக்கு ஒரு கலம் நெல்லும் துண்டு சாக்குலே பத்து நாளைக்கு வேண்டிய உப்பு, புளி, மளிகை சாமானுவ இருக்கு. அதோட கொஞ்சம் திருக்கை கருவாடும் வச்சிருக்கேன். எங்களுக்கு வேண்டிய மளிகை சாமானெல்லாம் மிளகு, சீரகம், பூண்டு வரைக்கும் வருடத்துக்கு வேண்டியதை மொத்தமாக வாங்கி வச்சிருவோம். அதிலேதான் உங்களுக்குக் கொஞ்சம் குடுத்துருக்கேன். போனதும் நெல்லைக்குத்தி அரிசியாக்கி குழம்பு வச்சு பொண்டாட்டி புள்ளைங்களோட நீங்களும் சாப்பிடுங்க. பாவம் அவங்களும் எத்தனை நாள் பட்டினியோ''
""ஆயா இதெல்லாம் வேண்டாம் ஆயா'' என்றான் ஒருவன்.
""பரவாயில்லேப்பா தயங்காம கொண்டு போங்க''
""ஆயா நான் யாருன்னு தெரிஞ்சா?'' என்று இழுத்தான் அவர்களில் ஒருவன்.
""உன்னையா எனக்குத் தெரியாது நல்லாத் தெரியும். எனக்கு மட்டுமா இந்த ஜில்லாவுக்கே உன்னைப் பற்றித் தெரியுமே. நீதான் பலே திருடன் மலையப்பன். வழிப்பறி செய்றது வீடு பூந்து திருடுறதுன்னு பெரிய பெரிய பேர் எடுத்தவன். இவுங்க ரெண்டு பேரும் உன் கூட்டாளிங்க. உன்னைக் கண்டாலே எல்லாரும் நடுங்குவாங்களே. கொஞ்சநாளா உனக்கு தொழில் சரியா அமையலேன்னு நினைக்குறேன். வீட்டிலேயும் பசியும் பட்டினியுமா கஷ்டமாயிருந்திருக்கும். இன்னிக்கு என் புள்ளைங்க நாலு பேரும் ஊருலே இல்லேங்கற துப்புக்கெடைச்சு எதையாவது அடிச்சுகிட்டுப் போகலாமுன்னு வந்தீங்க, என் புள்ளைங்க இருந்திருந்தா இந்தப் பக்கம் தலைகாட்டவே உங்களுக்கு துணிச்சல் வந்திருக்காது. என் மகன் ஒவ்வொருத்தனும் வீமன் சூரனாட்டம் ஒருத்தன் நாலு ஆளை அடிப்பான். கம்பை எடுத்து சுத்த ஆரம்பிச்சா யாராலேயும் கிட்ட நெருங்க முடியாது. அவனுவ இல்லேங்குற துணிச்சல்லேயே வந்திருக்கீங்க''
அவர்கள் திடுக்கிட்டவர்களாக ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு தயக்கத்துடன், ""ஆயா இதையெல்லாம்''... என்று இழுத்தனர்.
""பரவாயில்லேப்பா, எடுத்துக்கிட்டு போங்க, நீங்களா எடுத்தாத்தான் அது திருட்டு. இப்போ நானா குடுக்கறேன், இது தானம். நீ எதுக்கு யோசிக்கிறிங்கறது எனக்கு நல்லாப் புரியுது. மோரும் உப்பும் போட்ட கூழுக்குடிச்சப்பறம் அந்த வீட்டிலேயே கை நீட்டக்கூடாதுன்னு நீ நெனைக்கிறே. உப்புதின்ன வீட்டுக்கு உபத்திரம் செய்யக்கூடாது. பாலைக் குடிச்ச வீட்டுக்கு பாதகம் நெனைக்கக் கூடாதுங்கறது உன்னோட தொழில் தர்மம். அதைப் போலவே சம்சாரியான எனக்கு ஒரு தர்மம் இருக்கில்லே. வீட்டிலே பொண்டாட்டி புள்ளைங்களெல்லாம் பசியோட தவிச்சுகிட்டுருக்கப்ப ஏதாவது கெடைக்கமுன்னு வந்த உன்னை வெறுங்கையோட அனுப்புனா, அது எனக்குப் பாவம். உனக்கு உன் தர்மம் மாதிரி எனக்கு என் தர்மம் பெரிசு. இது நானாக் கொடுக்கறது. வறுமையிலே இருக்கற புள்ளைகளுக்கு ஒரு தாய் தர்ரதா நெனைச்சுக்கோயேன். தயங்காம எடுத்துகிட்டுப் போங்க ஒண்ணு மட்டும் சொல்றேன். திருடன் பொண்டாட்டி என்னைக்கும் கம்மனாட்டிதான்னு ஒரு சொலவடை இருக்கு. ஒங்க எல்லாருக்கும் குடும்பம் பொண்டாட்டி, புள்ளைகள் இருக்கு. அவங்களை நெனச்சுப் பார்த்தாவது ஒங்க தொழிலை மாத்திக்க முயற்சி பண்ணுங்க. உங்களுக்கு உடம்பில வலு இருக்கு. உழைக்க நல்ல தெம்பு இருக்கு. ஏதோ சொல்லணும்னு எனக்கு தோனிச்சு சொல்லிட்டேன். அப்பறம் உங்க சௌகரியம்'' என்று கூறியவர், ""எலே காசி இங்கே வாடா'' என்று அழைத்து, ""இந்த மூட்டைகளை அவங்க தலையில தூக்கிவிடு'' என்று காசியிடமும், ""நீங்க உங்க துண்டை எடுத்து சும்மாடு சுத்திக்கங்க'' என்று உத்தரவிடுவது போல என்று அவர்களிடமும் கூறினார். அந்த மூவரும் அப்படியே நெடுஞ்சாண் கிடையாகத் தரையில் விழுந்து அந்த மூதாட்டியை வணங்கினர். ""இதெல்லாம் என்னப்பா? நீங்க நல்ல இருந்தாச் சரி. புறப்படுங்க'' விடை கொடுத்தார் அந்த குடும்பத்தலைவி.
தலையில் சுமையுடனும் கையில் குட்டிச்சாக்கு சுமையுடனும் நடந்த அவர்கள் சற்றுத்தூரம் வந்ததும் நின்று அந்த வீட்டைத் திரும்பிப் பார்த்தனர்.
அந்த சூரியனின் மஞ்சள் ஒளியில் அந்த வீடு ஒரு கோயிலைப்போலக் காட்சியளிப்பதைப்போல ஒரு பிரமை தட்டியது. அவர்கள் மௌனமாக நடக்கத் தொடங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எதிர்க்கட்சித் தலைவர் என்ன ரப்பர் ஸ்டாம்ப்பா? சிபிஐ இயக்குநர் விவகாரத்தில் ராகுல் கடும் அதிருப்தி!

அதானி குழுமப் பங்குகள் சரிவுடன் நிறைவு!
அதிமுக எம்எல்ஏக்கள் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவை மீறி வாக்களிக்கக் கூடாது: இபிஎஸ் தரப்பு எச்சரிக்கை!

ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள்! டெலிகிராமில் வாங்கிய இளைஞர்!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

