கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

அப்பளத்திற்காக அலையாய் அலைந்தோம்!

திரை உலகம் பலரையும் பலவிதமாக மாற்றிவிடுகிறது. இங்கு நடிக்க ஆசையாய் வந்த பாரதிராஜா இயக்குநரானார்.

News image
Updated On :22 ஏப்ரல் 2016, 10:43 am

சலன்

திரை உலகம் பலரையும் பலவிதமாக மாற்றிவிடுகிறது. இங்கு நடிக்க ஆசையாய் வந்த பாரதிராஜா இயக்குநரானார். படங்களை இயக்க வேண்டும் என்ற ஆசையுடன் வந்த சமுத்திரக்கனி, சசிகுமார் இன்று சிறப்பானமுறையில் நடித்து வருகின்றனர். அதுபோல தான் ஒரு சிறந்த இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்த பலருள் மணிராஜும் ஒருவர். இவர் இன்று இயக்குநர் ஆனாரா? இல்லை வேறு துறையை தேர்ந்தெடுத்தாரா? அவரே சொல்கிறார் கேளுங்கள்:

""என் சொந்த ஊர் கோவை. சென்னைக்கு வந்தவுடன் வேலை செய்ய வேண்டும் அல்லது படிக்க வேண்டும். சென்னை ஓவியக் கல்லூரியில் படித்து நல்ல முறையில் பாஸ் செய்தேன். எனது ஒன்று விட்ட சகோதரர் இயக்குநர் பரதன். அதனால் சினிமாவில் ஓர் இயக்குநராகலாம் என முடிவு செய்தேன். இந்த நிலையில் எனக்கு கலை இயக்குநர் அசோக்கிடம் வேலை செய்ய வாய்ப்புக் கிடைத்தது. அப்படி வேலை செய்த பல படங்களில் ஒன்று "தேவர் மகன்'. அந்தப் படத்திற்காக நாங்கள் பொள்ளாச்சியில் வேலை செய்து கொண்டிருந்தோம். அடுத்த நாள் காலையில் என்ன காட்சி எடுக்கப் போகிறார்கள், அதற்கு என்னென்ன பொருள்கள் வேண்டும் என்று முடிவு செய்தோம். அடுத்த நாள் காட்சிகள் படமாக்கப்பட்டு வேலைகள் சுறுசுறுப்பாக நடந்த வண்ணம் இருந்தன. திடீர் என்று எங்களுக்கு ஒரு சோதனை வந்தது. கமல்ஹாசனும் ரேவதியும் பங்கு பெரும் ஒரு காட்சிக்காக ஓர் அப்பளம் தேவை என்றார்கள். சரி என்று உடனே பக்கத்துக்கு கடையில் வாங்கி வந்து வைத்தோம். டைரக்டர் அதைப் பார்த்துவிட்டு, ""நான் இதை கேட்கவில்லை. ஒரு பெரிய அப்பளம் தேவை'' என்றார். அதாவது ராஜஸ்தான் அப்பளம் என்று கூறுவார்கள். ஒரு பெரிய தாம்பாளம் அளவுக்கு இருக்கும். காட்சியின்படி அந்த அப்பளம் நொறுக்கப் பட வேண்டும். பொள்ளாச்சியில் அவ்வளவு பெரிய அப்பளத்திற்கு எங்கு போவது? ஒன்றுமே புரியவில்லை தேடினோம், தேடினோம். ஆனால் கிடைக்கவே இல்லை. அதனால் டைரக்டர் வேறு காட்சிகளை எடுத்துக் கொண்டிருந்தார். பலரையும் கேட்டபோது, ஒரே ஓர் இடத்தில் அது கிடைக்கும் என்றார்கள். அங்கு போனபோது எங்கள் நல்ல நேரம் அலையாய் அலைந்த பின் அப்பளம் கிடைத்தது. அது ஒரு வட நாட்டவரின் வீடு. அவர்கள் அந்த வகை அப்பளத்தை வைத்திருந்தார்கள். ஒன்றுக்கு இரண்டாக அவர்களை கெஞ்சிக் கேட்டு வாங்கி வந்தோம்.

என்னுடைய முதல் படம் "அதர்மம்', மறைந்த முரளி தான் படத்தின் கதாநாயகன். இதுவரை நான் 56 படங்களுக்கு மேல் கலை இயக்குநராக வேலை செய்திருக்கிறேன். அதில் புகழ் பெற்ற படங்களும் உண்டு. அவை தில், தூள், தெனாலி, காதலா காதலா, தீனா, யூத், ரமணா, ஆட்டோகிராப், எம். குமரன் சன் ஆஃப் மகாலக்ஷ்மி, கனா கண்டேன் போன்ற படங்களைக் குறிப்பிடலாம். என்னைப் பொருத்தவரை பாடலில் தான் நமது திறமையை காண்பிக்க முடியும் என்று நினைக்கிறேன். அப்படி பல படங்களில் நான் வித்தியாசத்தைக் காண்பித்து இருக்கிறேன். உதாரணத்திற்கு, என்னுடைய செட்டில் கிரேன் காட்சிகள் கீழிருந்து மேலும் மேலிருந்து கீழும் அதிகம் இருக்கும். அதற்கு உதாரணம், "தூள்' படத்தின் செட். அதில் தேர் மற்றும் வீடு. அதை எக்ஸ்பிரஸ் அவென்யூ என்று நாம் இன்று அழைக்கும் இடத்தில், முன்பு ஒரு பழைய மாடி வீடு இருந்தது. அதையும் இணைத்து அந்த செட்டைப் போட்டேன். "கில்லி' படத்தில் உள்ள விஜய் வீடு, லைட் ஹவுஸ் என எல்லாமே செட்டுதான். மகாபலிபுரத்தில் போடப்பட்டது.

இப்படி பல விஷயங்களைப் பார்த்துப் பார்த்து அன்று செய்தோம். ஆனால் இன்று நாங்கள் உழைத்துச் செய்த பலவற்றை கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் செய்து விடுகிறது. போகப் போக எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. நான் இன்று ஒரு படம் இயக்க முடிவு செய்து, அதற்கான வேலையில் இறங்கி உள்ளேன். என்னுடைய ஆசையே அதுதான். கதையைத் தேர்வு செய்து, திரைக்கதையையும் எழுதி முடித்து விட்டேன். புகழ் பெற்ற இரு கதாநாயகர்களிடம் கதையைச் சொல்லி அவர்கள் கதையையும், திரைக்கதையையும் பாராட்டி உள்ளனர். தயாரிப்பாளர் கிடைத்தால் படம் எடுக்க தயார் நிலையில் எல்லாம் உள்ளது. இந்த வருடம் படம் முடிந்து வெளி வரும் என்று நினைக்கிறேன்'' என்றார் மணிராஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.