மறைந்த சென்னை தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநர் ஏ.நடராஜன் பற்றி சென்னை வானொலி நிலையத்தின் முன்னாள் இயக்குநர் எஸ்.வேணுகோபால்ரெட்டி சொல்கிறார்:
""ஏ.நடராஜன் என்னுடைய 45 ஆண்டுகால நண்பர். ஒத்த வயதுடையவர் என்றாலும் நான் அவரைப் பெயர் சொல்லி அழைத்ததில்லை, "பிரதர்' என்றே அழைப்பேன். அவரும் என்னை "வாங்க பிரதர்' என்பார்.
சென்னை வானொலியில் நாங்கள் பணிபுரிந்த காலம் ஒரு பொற்காலம் என்றுதான் கூறவேண்டும். டி.வி, இண்டர்நெட் மூலம் இன்று உலக நிகழ்வுகளை தரிசிப்பதுபோல், அன்று எல்லாவற்றுக்கும் வானொலிதான். மீ.ப.சோமு, அகிலன், துறைவன், எம்.எஸ்.கோபால், சுகி.சுப்பிரமணியம் என்று பல ஜாம்பவான்கள் சென்னை வானொலியை அலங்கரித்த காலம் அது. ஒரே சமயத்தில் நாங்கள் இருவரும் நிகழ்ச்சிப்பொறுப்பாளர்களாக இருந்தோம். தமிழ் நிகழ்ச்சிகளை அவரும், ஆங்கில நிகழ்ச்சிகளை நானும் கவனித்து வந்தோம்.
அப்போது ஏ.என். தொடங்கிய "நகர்வலம்' நிகழ்ச்சி, "நகர்வலம்' நடராஜன் என்று சொல்லும் அளவுக்கு அவருக்குப் புகழைத் தேடித்தந்தது. அதேபோல "நிலாமுற்றம்' என்ற நிகழ்ச்சியும் அவரின் சிந்தனையில் உதித்தது. பிரபல இலக்கியவாதிகள், திரையுலகக் கலைஞர்களை வானொலி மேடைக்கு அழைத்துவந்து, பார்வையாளர்களுடன் கலந்துரையாட வைத்தார். கவிஞர் வைரமுத்து, பொன்மணி வைரமுத்து இருவரும் திருமணம் செய்வதற்கு முன்பே இளைய பாரதம் கவிதை நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கிறார்கள்.
கட்சி பாகுபாடு இன்றி எல்லா அரசியல் தலைவர்களுடனும் நட்போடு பழகியவர் நடராஜன். சட்டமன்றத் தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல்கள், நெருக்கடி நிலை பிரகடனம், புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர் காலங்கள் என எந்த சூழ்நிலையையும் மன உறுதியுடன் கையாள்வதில் அவருக்கு நிகர் அவரே.
எந்த நெருக்கடியிலும் நிலைகுலைய மாட்டார். எவரிடமும் இனிமையாகப் பழகும் சுபாவம் அவரின் கூடப்பிறந்த குணம். அபூர்வமான ஞாபகசக்தி அவருக்கு இயற்கை தந்த வரம்.
தேர்தல் பிரச்சார சமயங்களில், அரசியல் தலைவர்களின் வானொலிப் பேச்சை ஒலிபரப்புவதற்கென்று சில ஒலிபரப்பு விதிமுறைகள் வானொலிக்கு உண்டு. அத்தலைவர்களின் உரையை முன்பே படித்து எடிட் செய்து, அனுமதி பெற்று ஒலிப்பதிவு செய்யவேண்டும். விதிமுறைகளையும் மீறாமல், தலைவர்களின் மனமும் கோணாமல் சூசகமாகவும், இங்கிதமாகவும் பேசி காரியத்தை நிறைவேற்றுவதில் நடராஜனின் நிபுணத்துவம் வெளிப்படும்.
தமிழ்நாடு அரசின் சார்பில் 1981-ஆம் ஆண்டு பாரதியார் நூற்றாண்டு விழா எட்டயபுரத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டபோது, அந்த நிகழ்ச்சிகளை நேரடி ஒலிபரப்பு செய்யும் பணியில் நடராஜனும், நானும் இணைந்து பணிபுரிந்தோம். எட்டயபுரத்தில் இருந்தபடி நடராஜன் தமிழ் ஒலிபரப்பை கவனித்துக்கொண்டார். நான் திருச்சியில் இருந்தபடியால், பாரதியார் விழாவின் ஆங்கில மொழியாக்கம் திருச்சி வானொலியில் இருந்து அப்லிங்க் செய்யப்பட்டு தேசிய நிகழ்ச்சியாக ஒலிபரப்பானது. நானும் நடராஜனும் ஆற்றிய பணிகளில் மறக்கமுடியாத மகத்தான பணி இது.
உதவி இயக்குநர், துணை இயக்குநர், இயக்குநர் என படிப்படியாக பதவி உயர்வு பெற்று உயர்ந்தபோதும் அன்பு மாறாத அதே "பிரதராக' விளங்கினார். பணி ஓய்வுக்குப் பிறகும் பிஸியாக இருக்க அவரால் முடிந்தது என்றால் அதற்குக்காரணம், அவரின் கற்கண்டு பேச்சும், கற்பனைத் திறனும், கலை உள்ளமும்தான்!
சிறந்த ஒலிபரப்பாளர், மேடைப்பேச்சாளர், எழுத்தாளர், இசை ஆர்வலர், மக்கள் தொடர்பாளர் எனப் பன்முகத்திறமையுடன் இறுதிக்காலம் வரை சுறுசுறுப்புடன் செயல்பட்டவர். இலக்கிய உலகம் நல்ல எழுத்தாளரை இழந்ததுபோல், என் குடும்ப நண்பரை, தனிப்பட்ட முறையில் என் "பிரதரை' இழந்து நான் வருந்துகிறேன். அவர் ஆன்மா சாந்திபெற பிரார்த்திக்கிறேன்.''
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மக்களோடு மக்களாக பணியாற்ற வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்!

அரசியல் என்பது சாலை வலம் வருவதல்ல; மக்களோடு மக்களாக களத்தில் நிற்பது! - அண்ணாமலை

கமலாலயக்குளத்தின் புனிதத் தன்மை பாதுகாக்கப்படுமா?

திருச்செந்தூா் கடலில் மூழ்கிய மூதாட்டி பத்திரமாக மீட்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


