திருடு போன சைக்கிளும்... குத்துச் சண்டையும்!
குத்துச்சண்டை உலகின் சிம்மசொப்பனமாக விளங்கிய மாவீரர் முகமது அலியின் மூதாதையர்கள் அமெரிக்காவின் தென்கிழக்கு மாகாணமான கென்டகியில் உள்ள லூயிஸ்வில்லி மாநகரில் அடிமைகளாக


குத்துச்சண்டை உலகின் சிம்மசொப்பனமாக விளங்கிய மாவீரர் முகமது அலியின் மூதாதையர்கள் அமெரிக்காவின் தென்கிழக்கு மாகாணமான கென்டகியில் உள்ள லூயிஸ்வில்லி மாநகரில் அடிமைகளாக வாழ்ந்தவர்கள்.
பிழைப்புக்காக இசைக்கருவிகள் வாசிப்பதும், இசைப் பாடல்கள் பாடுவதும் இவர்களின் குடும்பத் தொழிலாக இருந்து வந்தது. முகமது அலியும் ஓர் இசைக் கலைஞனாக பயிற்சி பெறத்தான் விரும்பினார். ஆனால், அவர் சிறுவனாக இருந்தபோது நடந்த ஒரு சம்பவமே அவரை குத்துச் சண்டை வீரராகப் பயிற்சி பெறத் தூண்டியது என்றால் வியப்பாகத்தான் இருக்கும்.
1942ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிறந்த கேஸியஸ் மார்செலஸ் க்ளேவுக்கு (முகமது அலியின் இயற்பெயர்) பன்னிரண்டு வயது நிரம்பிய சமயத்தில், அவர் உயிருக்கு உயிராக நேசித்த அவருடைய சைக்கிள் திருடு போனது. சொல்ல முடியாத ஆத்திரத்துடன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த முகமது அலி, காவலர்கள் முன்னிலையில் "என் சைக்கிளைத் திருடியவன் மட்டும் என் கையில் மாட்டினால், அவன் முகத்தில் ஓங்கி இப்படிக் குத்துவேன்' என்று முஷ்டியை உயர்த்திக் காட்டினார். இந்தக் காட்சி, ஒரு சிறந்த திரைப்படத்தில் வரும் திருப்புமுனைக் காட்சி போன்று முகமது அலியின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியது. முகமது அலியின் கடுங்கோபமும் ஆக்ரோஷமான முகமும் அங்கிருந்த போலீஸ்காரர் ஜோ இ மார்ட்டினின் மனதில் தைத்தது. "தம்பி, சைக்கிள் திருடனின் முகத்தில் ஓங்கிக் குத்துவதற்கு இந்த உடம்பு பத்தாது. நீ உன் உடம்பை இரும்பைப்போல் உறுதியாக்க வேண்டும். நானே உனக்கு குத்துச்சண்டைப் பயிற்சி அளிக்கிறேன்' என்று கூறியதோடு நில்லாமல், அன்றே பயிற்சியைத் தரத் தொடங்கினார். பயிற்சியைத் தொடங்கியபோது முகமது அலியின் உயரம் 4அடி 3செ.மீ, எடை 87பவுண்டுகள். சரியாக ஆறு ஆண்டுகளில் முகமது அலி குத்துச்சண்டைக்காக மேடை ஏறியபோது அவரின் உயரம் 6அடி 3செ.மீ, எடை 212 பவுண்டுகள், வயதோ வெறும் பதினெட்டுதான்.
யாரோ முகம் தெரியாத சைக்கிள் திருடனின் மேல் முகமது அலிக்கு ஏற்பட்ட ஆவேசத்தை சரியான பாதையில் திசை திருப்பிய பயிற்சியாளர் ஜோ இ மார்ட்டின், முகமது அலியைவிட 26 வயது மூத்தவர். ஆனால், முகமது அலி ஆப்பிரிக்க இனத்தவர் என்ற காரணத்தால், சில உணவு விடுதிகளில் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்படும் சமயங்களில், முகமது அலியை காரில் அமர வைத்துவிட்டு, வயது வித்தியாசம் பாராமல் ஜோ இ மார்ட்டினே அவருக்கு உணவு வாங்கி வந்து தருவார். இந்தப் பாரபட்சமான நிலைமை, 1960 ஆம் ஆண்டு ரோம் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் அவர் தங்கம் வென்ற பின் மாறத் தொடங்கியது. அனுமதி மறுத்த விடுதிகள் எல்லாம், முகமது அலிக்குப் பாராட்டுவிழாக்களை நடத்தி, நட்சத்திர விடுதிகளாக கௌரவம் பெற்றன.
தன் பதினெட்டாம் வயதிலேயே குத்துச் சண்டை உலகின் விடிவெள்ளியாகத் துலங்கிய முகமது அலி, தன் 22ஆவது வயதில், "குத்துச்சண்டை உலகின் ஆபத்தான வீரர்' என்றறியப்பட்ட சோனி லிஸ்டனை ஏழு சுற்றுக்களில் வீழ்த்தி அதிர்ச்சி தோல்வி கொடுத்து, உலகின் ஹெவி வெயிட் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். அதன் பின் அவருக்கு சாதனைகள் வந்து குவியத் தொடங்கின.
1967ஆம் ஆண்டு நடந்த வியட்நாம் போரில் அமெரிக்க ராணுவ வீரராக களமிறங்கும்படி அமெரிக்க அரசு முகமது அலியைக் கட்டாயப்படுத்தியது. இதற்கு முகமது அலி மறுத்தார். இதனால், கோபமுற்ற அமெரிக்க அரசு அவரது சாம்பியன் பட்டத்தைப் பறித்ததுடன், நான்கு ஆண்டுகள் அவர் குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்கவும் தடை விதித்தது. போராட்ட குணமே இரத்தமும் சதையுமாகக் கொண்ட முகமது அலி, அத்தடைகளுக்கு அஞ்சாமல், தனக்கேற்பட்ட தடையை உடைத்தெறியும் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் கவனம் செலுத்தினார். 1971ஆம் ஆண்டு அமெரிக்க நீதிமன்றம் முகமது அலி போட்டிகளில் பங்கேற்கலாம் என்று தீர்ப்பளித்தது. 1974 ஆம் ஆண்டு ஜோ பிரேசியருடன் மோதி, மீண்டும் உலகின் ஹெவி வெயிட் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
தன் வாழ்நாளில் 61முறை மேடையேறி, 56முறை வெற்றிகண்ட முகமது அலி, அதில் 37 முறை "நாக் அவுட் பஞ்ச்' மூலம் எதிரிகளை மண்ணைக் கவ்வச் செய்தார்.
"வெற்றி என்பது ஒருவரின் தனிப்பட்ட சொத்தல்ல. பயிற்சியாலும் முயற்சியாலும் அது எவருக்குமே சாத்தியம்' என்று உலகுக்குரைத்த அந்த மாவீரன், "இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வீரர்' என்ற பட்டத்தையும் 1999இல் வென்றார். 4.6.2016 அன்று தன் 74 ஆம் வயதில் உலக ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தி மறைந்தார் முகமது அலி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...