ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இரத்தக் கசிவும் பட்டினி சிகிச்சையும்!

என் வயது 37. ஒரு வருடத்திற்கு முன்பு அறுவைச் சிகிச்சையின் மூலம் இரண்டாவது குழந்தை பிறந்தது.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இரத்தக் கசிவும் பட்டினி சிகிச்சையும்!
Updated on
2 min read

என் வயது 37. ஒரு வருடத்திற்கு முன்பு அறுவைச் சிகிச்சையின் மூலம் இரண்டாவது குழந்தை பிறந்தது. பிறந்த ஒரு மாதம் கழித்து எனது வலது மூக்கிலிருந்து இரத்தக் கசிவு ஏற்பட்டது. அவ்வப்போது ஒன்று முதல் பத்து சொட்டிற்கு சொட்டும். வலது பக்க உச்சந்தலையிலிருந்து கழுத்து வரை வலி விட்டு விட்டு இருக்கும். இவை எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இவை குணமாக வழி ஏதேனும் உள்ளதா?

சக்தி,கோவில்மேடு - கோவை.

சக்ரதத்தர் எனும் முனிவர் இருவகையான இரத்தக்கசிவு உபாதைகளைப் பற்றி விரிவாகக் குறிப்பிடுகிறார். அதில் மேல்வழியாக அதாவது மூக்கு, வாய் வழியாக வரக்கூடிய இரத்தக்கசிவு உபாதைக்கு அவர் மருந்துகளைக் கொடுப்பதற்கு முன் பாதிக்கப்பட்டுள்ள நபரை பட்டினி இருக்கச் செய்ய வேண்டுமென்றும், ஆனால் அதன் மூலமாக உடல்வலுவிற்கோ, தசைநார்களுக்கோ, வயிற்றிலுள்ள பசித்தீக்கோ குறைவு ஏற்படக்கூடாது என்றும் தெரிவிக்கிறார். இதைக் குறிப்பிடுவதற்கு காரணம் என்ன? என்று நாம் ஆராய்ந்தோமேயானால், பட்டினியின் மூலம் குடல் பகுதியில் ஏதேனும் தேவையற்ற க்லேதகம் மற்றும் கெட்டுப் போயுள்ள பாசகம் எனும் பித்தங்களைச் சீர் செய்வதற்கான வழியாகும் என்று அறியலாம். மேலும், வயிற்றில் மப்புநிலை இருந்தால் அதை மாற்றுவதற்கு பட்டினி இருப்பது என்பது மிகப்பெரிய ஒரு சிகிச்சையாகவும், அஷ்டாங்கஹ்ருதயம் எனும் ஆயுர்வேத நூல் குறிப்பிடுகிறது.

பட்டினி இருப்பதால் ஏற்படக்கூடிய நன்மைகள்:

  • உட்புறக்குழாய்களில் சீர்கேடடைந்துள்ள வாத, பித்த, கபங்களைச் சீராக்கும்.

  • பசித்தீயை நன்றாகத் தூண்டிவிடும்.

  • உடல் லேசாகும்.

  • ஆரோக்கியம் மேம்படுதல்.

பசி, தண்ணீர் தாகம், நாக்கில் ருசி, ஜீரண சக்தி, உடல்பலம், ஓஜஸ்ஸý எனும் உடலின் உயர்ந்த சாரம் ஆகியவற்றை நன்கு மெருகேற்றும்.

தங்களுக்கு பட்டினி சிகிச்சையை பொறுத்துக் கொள்ள முடியாத நிலை இருந்து வலுவின்மை, தசைநார், பலவீனம் போன்றவை இருப்பதனால் தர்ப்பணம் எனும் ஒரு சிகிச்சைமுறையைக் கையாளவேண்டுமென்று அவர் மேலும் குறிப்பிடுகிறார்.

தர்ப்பண சிகிச்சைமுறை:

நெல்பொரியை நன்றாகப் பொடித்து தேனும், நெய்யும் குழைத்து காலையில் சாப்பிடுவதால் மூக்கிலிருந்து ஒழுகும் இரத்தமானது நின்றுவிடும். பேரீச்சம்பழம், உலர் திராட்சைப்பழம், அதிமதுரம், சிற்றீச்சைப்பழம் ஆகியவற்றை வகைக்கு பத்து கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து கால் லிட்டராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி காலையில் 125 மி.லி. மாலையில் 125 மி.லி. சிறிது சர்க்கரை கலந்து சாப்பிட இரத்தநாளங்கள் உடைந்து கசியக்கூடிய இரத்தத்தை நன்றாகக் கட்டுப்படுத்திவிடும்.

பச்சரிசி, 60 நாளில் விளையக்கூடிய அறுபதாம் குறுவை, கரும்புவேர், ஞாழல் போன்றவை பயன்படுத்துவதற்கு உகந்தவை. மைசூர் பருப்பு, பச்சைப்பயறு, கறுப்பு கொண்டைக் கடலை, மங்குட்டப் பயறு, துவரம் பருப்பு ஆகியவை பருப்புவகை சூப்புகளாகவும், கஞ்சியாகவும் காய்ச்சி பயன்படுத்துபவர்களுக்கு இரத்தம் ஒழுக்கு உள்ள நோயாளிகளுக்கு நல்லது என்று சக்ரதத்தர் மேலும் குறிப்பிடுகிறார். மரங்கொத்திப்பறவை, புறா, முயல், மான் போன்றவற்றின் மாமிச சூப்பு வகைகளும் இரத்தக்கசிவை உடனடியாக நிறுத்தக்கூடியவை. இவை உடல் போஷணையை உருவாக்குவதால் காலை உணவாக இவற்றைச் சாப்பிடலாம்.

ஆடாதொடை இலைகளை நீர்விட்டு மூழ்குமளவுச் செய்து இட்லித் தட்டில் போட்டு குக்கரில் வேக வைத்து இலைகளை இடித்துப் பிழிந்து சுமார் ஒரு அவுன்ஸ் (30 மி.லி) எடுத்து அரை ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் சர்க்கரை கலந்து காலை மாலை இருவேளை சாப்பிட்டால், மிகக் கடினமான இரத்த ஒழுக்கு நோயும் குணமாகும் என்று சக்ரதத்தர் குறிப்பிடுகிறார். பழுக்காத அத்திக்காய்களை இடித்துப் பிழிந்து 15 மி.லி. சாறு எடுத்து அரை ஸ்பூன் தேனுடன் கலந்து சாப்பிட்டாலும் மூக்கிலிருந்து ஒழுகும் இரத்தக் கசிவை அது நிறுத்தும் என்று பைஷஜ்ய ரத்னாவளி எனும் புத்தகத்தில் காணப்படுகிறது.

மூன்று கிராம் கடுக்காய்ப்பொடியுடன் 6 மி.லி. தேன் குழைத்து ஒரு நாளில் மூன்று வேளை உணவிற்கு முன் சாப்பிட்டால் இரத்தக்கசிவு உபாதை நிற்பதுடன் அது பசியை நன்றாகத் தூண்டிவிடும். செரிக்காத உணவை செரிக்கச் செய்யும். கபதோஷத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும், வயிற்று வலியையும், பேதியையும் கட்டுப்படுத்தும். வ்ருஷக்ருதம், வாசாகுடூச்யாதி கஷாயம், மாயாபலாதி சூர்ணம் போன்றவை இரத்தக் கசிவை நிறுத்தக்கூடிய நல்ல ஆயுர்வேத மருந்துகள்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com