ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மூளைப் பகுதியை வலுப்படுத்த...

என் கணவருக்கு வயது 77. ஸ்கேனில் மூளைச் சுருக்கம் என்றும், ஞாபகமறதி, கண் காது பாதிப்பு வந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். பிடறி வலி, கழுத்துக்கு மேல் பின் மண்டையில் வலிக்கும் போது மயக்கம் வருகிறது, தலை சுற்றுகிறது என்றும் தடுமாறுகிறார்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மூளைப் பகுதியை வலுப்படுத்த...
Updated on
2 min read

என் கணவருக்கு வயது 77. ஸ்கேனில் மூளைச் சுருக்கம் என்றும், ஞாபகமறதி, கண் காது பாதிப்பு வந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். பிடறி வலி, கழுத்துக்கு மேல் பின் மண்டையில் வலிக்கும் போது மயக்கம் வருகிறது, தலை சுற்றுகிறது என்றும் தடுமாறுகிறார்.

என் வயது 68. பதினைந்து வருடங்களாக காதில் பவுன், இமிடேஷன் என்று எந்த தோடு போட்டாலும் அரிப்பு, கசிவு வருகிறது. இரண்டு நாள் விட்டு மறுபடியும் தோடு போட்டால், ஒரு வாரம் அரிப்பு இல்லாமல் அதன் பிறகு மறுபடியும் வந்துவிடுகிறது. இவை குணமாக என்ன வழி?

- ங.பத்மா, திருவாரூர்.

மனிதர்களுடைய வயதை ஆயுர்வேதம் மூன்று பிரிவுகளாக எடுத்துக் கூறுகிறது. அதில் குழந்தைப் பருவத்தில் கபதோஷத்தினுடைய குணங்களாகிய நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம், வழுவழுப்பு, கொழகொழப்பு, நிலைப்பு ஆகியவை தம்முடைய ஆதிக்கத்தினால் உடல் வனப்பையும், அழகையும் மேம்படுத்துகின்றன. வயோதிகத்தில் இவற்றிற்கு நேரெதிரான வாயுவினுடைய குணங்களாகிய வறட்சி, லேசானதன்மை, சொரசொரப்பு, ஊடுருவும்தன்மை, நிலையற்றதன்மை போன்றவற்றின் ஆதிக்கம் இயற்கையாகவே மனித உடலில் கூடுவதால் அதுவே மூளையினுடைய உட்புற வறட்சி மற்றும் நரம்புகளில் ஏற்படுத்தும் வறண்ட தன்மையினால் மூளைச்சுருக்கம், கண்பார்வை மங்குதல், காதினுடைய நரம்புகளின் கேட்கும் திறன் குறைதல், எலும்புகளினுடைய தேய்மானம் ஆகியவற்றிற்குக் காரணமாகிறது.

மேற்குறிப்பிட்ட குணங்களைக் குறைத்து, அதற்கு எதிரான குணங்களை மூளைப்பகுதியில் ஏற்படும் அளவிற்கு ஆயுர்வேத சிகிச்சைகள் செய்தால், அவருடைய பாதிப்புகளனைத்தும் பெருமளவில் குறைய வாய்ப்பிருக்கின்றன. மூளைப்பகுதியை வலுப்படுத்துவதற்கு மூக்கின் உள்ளே விடப்படும் மூலிகை நெய்மருந்துகளால் மட்டுமே சாத்தியம் என்பதால், அவர் இரண்டு சொட்டு க்ஷீரபலா101 எனும் நெய்மருந்தை லேசாக உருக்கி, காலை இரவு உணவிற்கு அரை மணி நேரம் முன்பாக விட்டுக் கொள்வது நல்லது. கண் நரம்புகளின் பாதுகாப்பிற்காக ஒன்றிரண்டு சொட்டுகள் நயனாம்ருதம் எனும் மருந்தை இரவு படுக்கும் முன் கண்களில் விட்டுக் கொள்ளலாம். காதினுடைய கேட்கும் திறன் வலுப்பட வசாலசுனாதி எனும் தைல மருந்தை இதமான சூட்டில் நான்கு சொட்டுகள் காலை, இரவு சாப்பிடுவதற்கு முன் காதினுள் விட்டுக் கொள்ளலாம். மறுநாள் காலை ஒரு பஞ்சினால் காதைத் துடைத்துவிட்டு மறுபடியும் இந்த எண்ணெய் சிகிச்சையைத் தொடரலாம். கார்ப்பாஸாஸ்த்யாதி எனும் தைல மருந்தை இரும்புக் கரண்டியில் லேசாகச் சூடாக்கி பின் மண்டை, கழுத்து மற்றும் மேல்புற முதுகுத் தண்டுவடப்பகுதிகளில் இதமாகத் தடவி மூலிகை இலைகளாகிய நொச்சி, ஆமணக்கு, புங்கை, எருக்கு, கல்யாணமுருங்கை, கற்பூர இலை, யூகலிப்டஸ் ஆகியவற்றை பந்து போல ஒரு துணியினுள் நறுக்கி சுருட்டிக் கொண்டு லேசாகச் சூடாக்கி, எண்ணெய் தடவிய பகுதிகளில் ஒத்தடம் கொடுப்பதும் நல்லதே. திங்கள், புதன், சனிக்கிழமைகளில் க்ஷீரபலா எனும் தைலத்தை வெதுவெதுப்பாக தலையில் தடவி அரை,முக்கால் மணிநேரம் ஊறிய பிறகு ஆறிய,வெந்நீரில் குளிப்பது மிகவும் உசிதமானது.

தங்களுக்கு ஏற்பட்டுள்ள அரிப்பு, கசிவிற்கு தாமிரக் கலப்புள்ள பவுன் மற்றும் இரசாயனக் கலப்புள்ள இமிடேஷன் நகைகள் காரணமாகலாம். ஓர் உபாதையைத் தோற்றுவிக்கும் காரணத்தை அதன் மீதுள்ள மோகத்தினால் மறுபடியும் அதைப் பயன்படுத்துவது நலம் தராது. அதனால் நீங்கள் இதுபோன்ற தோடுகளைப் பயன்படுத்துவதை நிறுத்தி வேப்பிலை, அருகம்புல், மஞ்சள் ஆகியவற்றை அரைத்து, அரிப்பு மற்றும் கசிவு ஏற்படும் பகுதியில் போட்டு வைப்பதால் அங்கு ஏற்பட்டுள்ள கிருமித் தொற்று நீங்கி, புண் விரைவில் ஆறிவிடும். கசிவுள்ள நிலையில் களிம்புகள் பூசுவது தவறு என்பதால், அவை நன்றாக வற்றிப்போன நிலையில் சததெüதக்ருதம் எனும் ஆயுர்வேதக் களிம்பைப் பூசலாம். ஆயுர்வேத மருத்துவமனைகளில் செய்யப்படும் அட்டைப்பூச்சி வைத்து கெட்ட இரத்தத்தை உறிஞ்சச் செய்யும் சிகிச்சையின் மூலமாக இரத்தம் சுத்தமாவதுடன் தங்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வையும் இந்த சிகிச்சை ஏற்படுத்தித் தரும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com