தங்கச் செயின்
பிரேமா தன் கழுத்தில் புதியதாக வாங்கிய தங்கச் செயினை கண்ணாடி முன் அமர்ந்து அழகு பார்த்துக் கொண்டிருந்தாள். நேற்றுதான் கணேஷ் வாங்கிக் கொடுத்திருந்தான். அவள் மீது அவனுக்கு ஏக ஆசை.


பிரேமா தன் கழுத்தில் புதியதாக வாங்கிய தங்கச் செயினை கண்ணாடி முன் அமர்ந்து அழகு பார்த்துக் கொண்டிருந்தாள். நேற்றுதான் கணேஷ் வாங்கிக் கொடுத்திருந்தான். அவள் மீது அவனுக்கு ஏக ஆசை.
""வேண்டாம்... ஏன் இதெல்லாம் வாங்கித் தர்றே?'' என்றாள் பிரேமா.
""உன் கழுத்துக்கு அழகாய் இருக்கும், பிரேம்... மேலும் உன் பிறந்த தினத்திற்கு ஞாபகமாய் நான் எதாவது வாங்கித் தர வேண்டாமா?'' என்றான்.
அவனுடைய காதலொழுகும் பேச்சைக் கேட்டு பிரேமாவிற்கு பெருமை தாங்க முடியவில்லை.
கணேஷும் பிரேமாவும் கல்லூரியிலிருந்து ஒன்றாகப் பழகி வருகிறார்கள். முதலில் சாதாரணமாகப் பேச ஆரம்பித்து, பின் அதுவே இணை பிரியா நட்பாக மாறி விட்டது. எது என்றாலும் கணேஷ் பிரேமாவிடம் போன் செய்துவிடுவான். பிரேமாவும் அப்படித்தான். அவர்களுடைய இரு குடும்பத்தினருக்கும் அவர்கள் அளவுக்கு மீறிப் பழகிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்து போய்விட்டது. பிறகு இரு குடும்பத்தினரும் கூடி அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து விடுவது என்று முடிவு செய்து விட்டார்கள்.
கணேஷுக்கு ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் பணி. பிரேமா இன்னும் வேலை தேடிக்கொண்டிருக்கிறாள். அவளும் பி.இ. படித்திருந்தாள். அவளுக்கு எந்த வேலை கிடைத்தாலும் சென்னையை விட்டுப் போக விரும்பவில்லை.
கணேஷ் அவளிடம் அடிக்கடி சொல்வான்.
""நீ வேலை தேடி எங்கும் போக வேண்டாம். நான் ஒருவன் சம்பாதிப்பதே போதும்'' என்று. ஆனால் பிரேமாவிற்கு அவனுடைய குடும்பத்தினரை நினைத்து கொஞ்சம் பயம். அவர்களும் கணேஷுடன் இருக்கிறார்கள். வேலை எதுவுமில்லாமல் குடும்பப் பொறுப்பை முழுவதும் சுமக்க முடியுமா? என்ற சந்தேகம் அவளுக்கு. தன் மனதை முழுவதும் அவனிடம் திறந்து காட்டவில்லை. அவள் சொல்வதை அவன் விரும்பாவிட்டால் என்ன செய்வது? அதனால் அவர்கள் திருமணம் செய்து கொள்வதும் தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. அவள்தான் ஒரு வேலை கிடைக்கட்டும் என்று அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். சனி, ஞாயிறுகளில் அவர்கள் இருவரும் சுற்றாத இடம் இல்லை.
சென்னையில் இப்போது பரவிக் கிடக்கும் எல்லா மால்களிலும் அவர்களைக் கட்டாயமாகப் பார்க்கலாம்.
""உனக்கு வேலை கிடைத்தால் நான் வேண்டாம் என்று சொல்லப் போவதில்லை. அதைத் திருமணத்திற்குப் பிறகு கூட முயற்சி செய்யலாமே'' என்றான் கணேஷ் ஒருநாள் ஏக்கத்துடன். அன்று அவளை விழுங்கி விடுவதைப் போல் பார்த்துக் கொண்டிருந்தான்.
""இத்தனை நாள் பொறுத்தே. இன்னும் சில நாட்கள் பொறுத்துக்கொள். எனக்கு எப்படியும் வேலை கிடைத்துவிடும்'' என்றாள் பிரேமா அவனுடைய தீவிரமான பார்வையைத் தவிர்த்து.
ஐடி துறை என்பது மோசமான துறை. பிரேமா எதிர்பார்த்த மாதிரி அவ்வளவு எளிதாக வேலை கிடைக்கவில்லை. பிரேமா வீட்டிலும் வற்புறுத்தி விட்டார்கள் கணேஷை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி.
ஒருநாள் கணேஷ் வீட்டிலிருந்து அவன் அம்மா அப்பா பிரேமா வீட்டிற்கு வந்தார்கள். ""பெண் வேலைக்குப் போக வேண்டுமென்பதில்லை. திருமணம் செய்து கொள்ளச் சொல்லுங்கள்'' என்றார்கள்.
பிரேமா வீட்டிலும் பெண்ணிடம் கேட்டுச் சொல்கிறோம் என்று சொல்லி விட்டார்கள்.
பிரேமா உறுதியாக அவள் அப்பா அம்மாவிடம் சொல்லிவிட்டாள்.
""கணேஷை மட்டும் நம்பி இருக்க முடியாது. வேலை கிடைத்தால்தான் திருமணம் செய்து கொள்வேன்''என்று.
பிரேமாவின் முடிவைக் கேட்டவுடன் சற்று கோபமாக இருந்தான் கணேஷ். அவன் அடுத்த முறை பிரேமாவைப் பார்க்கும்போது சரியாகப் பேசவில்லை.
""என்ன கணேஷ்... நீங்களும் புரிந்து கொள்ள மாட்டீர்களா? இப்பவே கல்யாணம் பண்ணிக்கொண்டு அவஸ்தைப் பட வேண்டுமா?'' என்றாள் ஒருநாள்.
""நான் வேற பெண்ணைப் பார்க்க வேண்டியதுதான்'' என்றான் காட்டமாக.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பிரேமாவை கணேஷ் பார்க்கவே இல்லை. உண்மையில் அவன் வீட்டில் அவனுக்கு வேற இடத்தில் பெண் பார்க்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவனிடம் சொல்ல அவன் பெற்றோர்கள் தயங்கினார்கள். கணேஷும் அவர்கள் அதுமாதிரி சொல்லிவிடக் கூடாதே என்று பயந்தபடி இருந்தான்.
முதலில் பிரேமாவும் இது குறித்து கவலைப்பட வில்லை. தனக்கு எப்படியும் வேலை கிடைத்துவிடும் என்று உறுதியாக இருந்தாள். ஆனால் நாளுக்குநாள் அந்த உறுதி குலைந்து கொண்டே இருந்தது. வேலை கிடைத்தவுடன் தன்னைத்தான் கணேஷ் திருமணம் செய்து கொள்ளப் போகிறான் என்று முழுக்க முழுக்க நம்பினாள். அன்புடன் வாங்கிக் கொடுத்த தங்கச் செயினை அவள் அடிக்கடி பார்த்துப் பெருமைப்பட்டுக் கொள்வாள். தனக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை என்ற மன வருத்தமும் அவளிடம் இல்லாமல் இல்லை. பேசாமல் அவனைக் கல்யாணம் செய்து கொண்டு விடலாமென்று ஒரு நாள் யோசனை செய்தாள்.
அவளுடைய செய்கை அவனுக்கு அலுப்பாக இருந்தது. இப்போதெல்லாம் வீட்டிற்குக் கூட அவன் உரிய நேரத்திற்கு வருவதில்லை. பிரேமா அடிக்கடி அவனுக்குப் போன் செய்வாள். ""எங்காவது போகலாம்'' என்பாள்.
""வேலையாக இருக்கிறேன்'' என்று போனை கட் செய்து விடுவான். பிரேமாவிற்கு வருத்தமாக இருக்கும். சிலசமயம் அவன் தன்னை விட்டுப் போய்விடுவானோ என்று பயம் ஏற்படும். கல்யாணத்திற்கு சரி என்று சொல்லி விட்டால் என்ன என்று நினைத்தாள்.
அப்போதுதான் அந்த மோசமான சம்பவம் நடந்தது. அவள் தினமும் சென்னைஅசோக்நகரில் உள்ள அனுமார் கோயிலுக்குப் போவாள். மனதிற்கு அப்போதுதான் நிம்மதி கிடைக்கும் என்பதில் அவளுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. அப்படி ஒரு மாலை பொழுதில் அனுமார் கோயிலுக்குச் சென்று கொண்டிருக்கும்போது, வேகமாக பைக்கில் வந்த இருவர் அவள் முன்னால் நின்று, நேரம் என்ன? என்று கேட்டார்கள். இவள் நேரம் பார்த்துச் சொல்வதற்குள், அவர்களில் ஒருவன் அவள் கழுத்தில் உள்ள தங்க செயினை அறுத்துக்கொண்டு வண்டியில் தப்பிவிட்டான். கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விட்டது. திக் பிரமை பிடித்தாற்போல் ஆகிவிட்டது பிரேமாவிற்கு. பெரிதாக ஓலமிட்டாள். பக்கத்தில் நடந்து செல்பவர்கள் எல்லோரும் கூடி விட்டார்கள். என்ன என்று விசாரித்தார்கள். சிலர் உடனே போலீசில் புகார் செய்ய சொன்னார்கள். பிரேமாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அவளுக்குத் தலையைச் சுற்றுவதுபோல் தோன்றியது. தன்னை நிதானப்படுத்திக்கொண்டு அசோக்நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தாள். ஆனால் இதை அவள் வீட்டில் சொல்லவே இல்லை. ஏன் என்றால் கணேஷ் வாங்கிக் கொடுத்த தங்கச் செயினைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது.
அவளுக்குத் தாங்க முடியாத வருத்தம். இனிமேல் அந்த நகை கிடைக்காது என்று தோன்றியது. போலீஸ் மீது அவளுக்கு நம்பிக்கை இல்லை. திருட்டைப் பற்றி அவள் விளக்கியபோது, நகையைப் பற்றிய விவரத்தைக் கூறும்படி தொந்தரவு செய்தார்கள். வேறு வழியில்லாமல் என்னைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறவர் வாங்கிக் கொடுத்தார், என்று சொன்னாள். புகாரை ஏற்றுக்கொண்டு பார்க்கலாம் என்று போலீஸ் ஸ்டேஷனில் கூறிவிட்டார்கள். மேலும் கணேஷ் கேட்டால் என்ன செய்வது என்ற பயமும் இருந்தது. அவன் இப்போதெல்லாம் பேசுவதே இல்லை. அவனைப் பார்ப்பதே கஷ்டமாக இருக்கிறது. அவன் வேறு பெண்ணிடம் மனதை செலுத்திவிட்டானோ என்றெல்லாம் கற்பனை செய்ய ஆரம்பித்தாள்.
அவள் வீட்டில் சொல்லாமல் திடீரென்று ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் கணேஷ் வீட்டிற்குச் சென்றாள் பிரேமா. எல்லோருக்கும் ஆச்சரியம். அவனுடைய அப்பா அம்மாவிடம் பிரேமா பாசத்துடன் பேசிக்கொண்டிருந்தாள். அடுப்பங்கரையில் அவன் அம்மாவிற்கு சமையலுக்கு உதவி செய்தாள். அங்கேயே அவள் அன்று சாப்பிட்டாள். அன்று முழுவதும் கணேஷ் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
""என்ன அதிசயமாக இருக்கிறதே?'' என்று அவளை விசாரித்தாள் கணேஷ் அம்மா.
""நான் கணேஷைத் திருமணம் செய்துகொண்டு இங்கயே வந்துவிடப் போகிறேன்'' என்றாள் பிரேமா எதிர்பாராதவிதமாய்.
அவள் பேச்சைக் கேட்டு அவர்கள் திக்பிரமை பிடித்தவர்கள் போல் இருந்தார்கள். அவள் சொன்னதைக் கேட்டு நம்ப முடியாமல் அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் கணேஷ்.
மாலை நேரத்தில் அவர்கள் வீட்டிலிருந்து கிளம்பினாள் பிரேமா.
""எங்கள் வீட்டு மருமகளாக நீ வரவேண்டும்'' என்று அவன் பெற்றோர்கள் வாழ்த்தினார்கள்.
பிரேமாவை கொண்டு போய் விடுகிறேன் என்று அவளை அழைத்துக் கொண்டு போனான் கணேஷ். அவளை பஸ் ஏற்றும்போது, கணேஷ் கேட்டான்: ""நான் வாங்கிக் கொடுத்த செயின் உன் கழுத்தில் காணோமே? ''என்று.
அவள் சொன்னாள்: ""திருட்டுப் பயம் அதிகமாகி விட்டது. வங்கி லாக்கரில் வைத்திருக்கிறேன்''என்று.
அப்போது திகைப்பு அவனிடம் ஏற்படாமல் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...