விசும்பல்கள்

சியாமளாவுக்குக் குழப்பமாகவும், கோபமாகவும் இருந்தது.  குழப்பத்திற்குக் காரணம் அலுவலகத்தில் நடந்தது. கோபத்திற்குக் காரணம் வீட்டில் இருந்தது.நாற்பது வயதை எட்டாத இளம் விதவை சியாமளா.
விசும்பல்கள்

சியாமளாவுக்குக் குழப்பமாகவும், கோபமாகவும் இருந்தது.  குழப்பத்திற்குக் காரணம் அலுவலகத்தில் நடந்தது. கோபத்திற்குக் காரணம் வீட்டில் இருந்தது. நாற்பது வயதை எட்டாத இளம் விதவை சியாமளா. இரண்டு வருடம் முன்பு, திடீரென முளைத்த  ஒவர்பிரிட்ஜ் மேல் டூவீலரில் வேகமாய் வந்த அவள் கணவன், தண்ணீர் லாரியின் பின்னால் மோதி, தெறித்து, விழுந்த இடத்திலேயே உயிரை விட்டான். போஸ்ட்மார்ட்டம் எல்லாம் செய்து, அவன் இறப்புச் சான்றிதழ் தவிர வேறொன்றும் இவளுக்குக் கிடைக்கவில்லை.

அமெரிக்கக் கம்பெனி முதலாளி நல்லவர். கணவனின் நேர்மைக்கும், அகால மரணத்துக்குமான சன்மானமாக, கிராஜுவேட் ஆன சியாமளாவுக்கு ஒரு கிளார்க் உத்தியோகம் கொடுத்தார். நன்றியுடன் வேலையில் சேர்ந்தாள். வாழ்க்கை கேள்விக்குறியாகும் போது, சில நல்லவர்கள் தெய்வமாகத் தெரிவார்கள்!

அங்கு மானேஜராக இருந்தவன் சிவா. கண்டிப்புக்குப் பெயர் போனவன். ஆனாலும் தன் சக சிப்பந்திகளை மரியாதையுடனும், கருணையுடனும் நடத்துவான். சியாமளாவின் கணவன் இறப்பில் வருந்தி, அவளுக்கு வேலை கற்றுக் கொடுத்து, கொஞ்சம் தன்னம்பிக்கையையும் வளர்த்தான்.

சியாமளாவின் ஒரே மகன், ப்ளஸ் ஒன் படிக்கும் சங்கர்.  "அரும்பு மீசை, நடுவில் விட்டு, ஓரத்தில் மட்டும் மெஷின் கட் செய்த "பிரஷ்' தலை,  ஜீன்ஸ், "தொடாதே' என்றெழுதிய டி ஷர்ட்' படிப்பில் சுமார்! கணவன் இறந்த பிறகு, ஒரே மகனை ஆளாக்கும் சுமை முழுதும் அவள் தலையில்.

""அம்மா, நான் கேட்டது என்னாச்சு?'' - இரண்டு நாட்களாகக் கேட்டுக்கொண்டிருக்கிறான்.

""ரொம்ப காஸ்ட்லியா இருக்கேப்பா? விலை கம்மியான பிராண்ட் ஏதாவது பாரேன்''

""அதெல்லாம் சரியா வராதும்மா. இப்போ ஸ்கூல்ல ஹோம்வொர்க் எல்லாம் கூட வாட்ஸ் ஆப் லெதான் அனுப்புறாங்க. அதுக்கெல்லாம் அந்த செல்போன்தான் சரிவரும்மா''

மறுநாள் அலுவலகத்தில், ""சிவா, நல்ல ஸ்மார்ட்போன் "என் ரேஞ்சுக்குள்ள" பார்த்து சொல்லேன். சங்கருக்கு வேணுமாம், மறுக்க முடியல்லெ'' என்றாள்.

""இரு, பார்த்து சொல்றேன். காஷியர் கிட்டே அட்வான்ஸ் வாங்கிக்கோ. திடீர்ன்னு பணத்துக்கு எங்கே போவே?''

சியாமளாவுக்கு நிம்மதியாய் இருந்தது. இந்தக் காலக் குழந்தைகளின் எதிர்பார்ப்பு எப்போது, என்ன என்பதே தெரியமாட்டேன்கிறது பெருமூச்சு விட்டாள்.

மாலை, சுமார் ஆறாயிரம் பெறுமான செல் சியாமளாவின் மேஜைமீது சிணுங்கியது.

""சிவா, இந்த ஃபைலில் இரண்டு இன்வாய்ஸ் மிஸ்ஸிங்''

"" ம்.. கமலாகிட்டே கேளு. இன்வார்ட் லிஸ்டுலெ இருக்கான்னு பார்க்கச் சொல்லு. காபி எடுத்து, ரீப்ளேஸ் பண்ணிடு''

சிவா எப்போதுமே இப்படித்தான். எல்லாவற்றுக்கும் ஓர் உடனடி தீர்வு வைத்திருப்பான். முதலாளிக்கும் சிவாவிடம் பிடித்த குணமே, இந்த பிராப்ளம் சால்விங் திறமைதான்!

லஞ்ச் ப்ரேக். எதிரும் புதிருமா உட்கார்ந்து சாப்பிடும்போது சிவா கேட்டான். ""என்ன சியாமளா, முகம் ஒரு மாதிரியா இருக்கே?''

""ஒண்ணுமில்லே சிவா...  இரண்டு வருஷமா அவுஸ் ஓனர் வீட்டு வாடகையை ஒசத்தலையேன்னு பார்த்தேன்''

""வீட்டு வாடகைதானே, ஏத்தத்தான் செய்வாங்க; அதுதானே வழக்கம்?''

""அது கூட பரவாயில்லே சிவா. கொஞ்ச நாளாவே வீட்டுக்காரன் பார்வையும், பாடி லாங்வேஜும் சரியா இல்லே. இன்னிக்குக் காலைலே வரும்போது, வீட்டுச் சாவியை என் கையத் தொட்டு வாங்கிக்கறான்.  முகம் முழுக்க சிரிப்போட, ஜொள்ளு''

சிவா நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தான்.  வாடியிருந்தது.

""தனியா ஒரு பெண் கண்ணியமா வாழ்க்கை நடத்தவே முடியாதா சிவா?''

""சரி விடு. ஒரு நாள் முகத்துலெ அறைஞ்ச மாதிரி நேராவே சொல்லிடு. என்ன, வாடகை ஏறும், இல்லேன்னா வேறெ வீடு பார்க்கணும். அவ்வளவுதானே?''
இவள் தயிர் சாதத்தை முடிக்கு முன்பே, அவன் தன் டிபன் பாக்ûஸ எடுத்துக் கொண்டு வாஷ் பேசின் பக்கம் போனான்.

சியாமளாவுக்கு ஆச்சரியமாக இருந்தது  இவனால் எப்படி இவ்வளவு யதார்த்தவாதியாக இருக்க முடிகிறது என்று!

சங்கருக்கு நட்பு வட்டம் பெரியது. பீச், ஓட்டல், மாலில் சினிமா என்று எதற்கும் குறைவு கிடையாது. அவ்வப்போது பணம் கேட்கும்போது, சியாமளா மறுப்பதும், அவன் கோபப்படுவதும், வாக்குவாதம், விதண்டாவாதம் எல்லாம் அரங்கேறும்.

சியாமளா எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை சங்கர். உடனே டூ வீலர் வேண்டும் எனப் பிடிவாதம்.

""பணத்துக்கு எங்கேடா போவேன்? அப்பாவும் இல்லே, நீ கொஞ்சம் பொறுப்பை உணர்ந்து நடந்துக்கக் கூடாதா?''

""என்னம்மா பெரிய பொறுப்பு? இப்போ விட்டா ஸ்கூல் லைஃப் திரும்பக் கிடைக்குமா? நம்ம கஷ்டங்கள் எப்பொவும்தான் இருக்கு. அப்பொ படிப்பை விட்டுட்டு வேலக்குப் போயிடட்டுமா?''  அனலைக் கக்கினான்.

""ஹும், படிச்சவனே இங்கே தாளம் போடறான். உன் ப்ளஸ் ஒன்னுக்கு, மூட்டைத் தூக்கற வேலை கூட கிடைக்காது''

""மூர்த்தியோட அம்மாவும் உன்னை மாதிரி சிங்கிள் பேரண்ட்தானேம்மா? அவனுக்கு மட்டும் அவன் அம்மா எப்படி கேட்டதெல்லாம் வாங்கித் தர்ராங்க?''
""அவங்கப்பா சொத்து கொஞ்சம் இருக்கு. சொந்த ஃப்ளாட். அவங்க வேலை செய்யற கம்பெனியும், சம்பளமும் பெரிசு'' சியாமளா உண்மையில் பாதியைத்தான் சொன்னாள்.

ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால், பள்ளிக்கூடத்து வாசலில் பார்த்துப் பழகியவர்கள் சியாமளாவும், மூர்த்தியின் அம்மாவும். தினம் ஒரு "பளிச்' புடவை, கழுத்து இறக்கித் தைத்த டிசைனர் ப்ளௌஸ், தங்கக் கொலுசு, டூவீலர், கூலிங் கிளாஸ் என பெண்களே திரும்பிப் பார்க்கும் வகையில் வருவாள் மூர்த்தியின் அம்மா.

ஓரிரண்டு வருடங்களில் நெருங்கிய நட்பானாலும், சியாமளா கொஞ்சம் விலகியே இருந்தாள் வாழ்க்கைக் கண்ணோட்டம்   இருவருக்கும் வெவ்வேறானது.

சிரித்துப் பழகி, எதையும் சாதித்துக் கொள்ளும் திறமை இருந்தது மூர்த்தியின் அம்மாவிடம். மால்கள், சினிமா தியேட்டர், ஃபைவ் ஸ்டார் ஓட்டல் என மேலதிகாரிகளுடன் செல்வதைப் பெருமையாகச் சொல்லிக்கொள்வாள் "" சிரித்துப் பேசிப் போவதில் எனக்கொன்றும் நஷ்டம் இல்லை; பிடித்துதானே அவர்களும் வருகிறார்கள்?'' என்பாள். வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கொள்கைப் பிடிப்பு அவளுக்கு!

இதையெல்லாம் சங்கரிடம் சொல்வதற்கு சியாமளாவுக்கு விருப்பம் இல்லை. இம்மாதிரி விஷயங்கள் இந்த வயதில் தவறான எண்ணங்களுக்கு வித்திட்டுவிடும் என்பதால், மிகவும் கவனமாக இருந்தாள் சியாமளா.

""அம்மா, எல்லோரும் ஸ்கூல்ல உல்லாசப் பயணம் போறாங்க. ஐந்து நாள் டூர் நானும் போகணும்மா'' அலுவலகம் விட்டு வந்ததும் ஆரம்பித்தான் சங்கர்.
""மூவாயிரம் ரூபாய்க்கு நான் எங்கே போவேன்? இப்போ முடியாது. அடுத்த முறை பார்த்துக்கலாம்''

""ம்க்கும், அடுத்த வருஷம் பூரா படிப்புதான் ப்ளஸ் டூ. நேரம் எங்கே இருக்கும்? டூரே இருக்காது. மூர்த்தியெல்லாம் பணம் கொடுத்துட்டான் தெரியுமா?''
குழந்தை முகம் பார்த்து மனம் நெகிழ்ந்தது. இளமையில் வறுமை கொடியதுதான்.

""ஏற்கெனவே ஆபீசில் நெறைய அட்வான்ஸ் வாங்கியாச்சு. ஏதோ சிவா உதவியால வண்டி ஓடறது. நீயும் நம்ம நெலைமை புரியாமெ ஏதாவது கேக்கற.  புரிஞ்சுக்கோடா சங்கர்''

""எப்பொவும் உனக்கு இல்லே பாட்டுதான்''  முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு , அறைக்குள் சென்று கதவைச் சார்த்திக் கொண்டான் சங்கர்.

வாசல் புறம் ஏதோ சத்தம் கேட்கவே, சியாமளா ஜன்னல் வழியே பார்த்தாள். பூந்தொட்டியைச் சரி செய்வது போல் அவளைக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணன்.

""குட் ஈவினிங். பையன் கோபமாய் இருக்கான் போல்ருக்கு. இந்தக் கால பையன்களே  ஏன் பொண்ணுங்களும்தான் சொன்ன பேச்சைக் கேட்கிறதே இல்லே''

ஒப்புக்குத் தலையாட்டிவிட்டுத் திரும்பினாள் சியாமளா. இவன் ஏன் சம்மன் இல்லாமெ ஆஜர் ஆகிறான்? அவள் மைண்ட் வாய்ஸ் சொன்னது.

""ஏதாவது உதவி தேவையா?''

கோபம் வந்தது பல்லைக் கடித்துக்கொண்டு, திரும்பிப் பார்த்து "வேண்டாம்' எனத் தலையாட்டினாள்.

""குழந்தை ஆசைப்பட்டா, எக்ஸ்கர்ஷன்தான் அனுப்பி வையுங்களேன். நான் பணம் தருகிறேன், மெதுவா திருப்பித் தாங்களேன்'' -ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைப் பட்டதாம்!

""வேண்டாம் சார். கடன் வாங்கற சக்தி கூட இப்போ எங்கிட்டெ இல்லெ. உங்க உதவிக்கு என் நன்றி'' என்று "பட்'டென்று சொல்லி, உள்ளே சென்று விட்டாள். "கழுகாட்டம் அலையறான்கள்' முணுமுணுத்தாள்.

மறுநாள் அலுவலகத்தில் சிவாவிடம் விவரம் கூறி வருந்தப்பட்டாள் சியாமளா. மாலை வேலை முடிந்து கிளம்பும்போது சிவா அவளைத் தன் கேபினுக்குக் கூப்பிட்டான்.

""இங்கே பார் சியாமளா, நீ ஏன் கிருஷ்ணன் கிட்டெ கைமாத்தா பணம் வாங்கிக்கக் கூடாது, கடன்தானே?''

""வேண்டாம் சிவா. அவன் பார்வையே சரியில்லே. வேண்டாத வெனைய வெலைக்கு வாங்கிக்கறா மாதிரிதான் இது. அப்புறம் அவன் பார்க்கிற போதெல்லாம் பல்லிளிக்கணும்  தேவையா?''

சிவாவின் முகத்தில் ஏதோ மாற்றம் தெரிந்தது. சியாமளாவுக்குப் புரியவில்லை. சிவா எதற்கோ தயங்குவதைப்போல் இருந்தது.

""அதுக்கில்லே. யாரும் சும்மா உதவி செய்துடறது இல்லே இந்தக் காலத்துலே. ஏதேதோ எதிர்பார்ப்புகளோடதான் செய்யறாங்க. நாமதான் அனுசரித்துப் போகணும். தேவை நமக்குத்தானே? வேண்டாம்னா நஷ்டமோ, கஷ்டமோ அதுவும் நமக்குத்தானே?''

""இப்போ என்ன சொல்ல வரே சிவா?''

""இப்போ இதெல்லாம் சகஜமாப் போச்சு சியாமளா. சமயத்துலே நான் கூட ஏன் உனக்கு இதெல்லாம் செய்யணும்ன்னு நினைப்பேன்; சிலசமயம் தேவையான்னு கூட எனக்குத் தோணும். எது காரணம்? ஆழ்மன விகாரங்களை அவ்வளவு எளிதாகக் கடந்துவிட முடியாது சியாமளா''

"சுருக்' கென்றது சியாமளாவுக்கு. சீ, இவனும் இவ்வளவுதானா? மனதில் விகல்பமில்லாத மனிதர்களே கிடையாதா? ஒரு பெண் தனியாக வாழ்வது அவ்வளவு கடினமா?

""சாரி சிவா, உன் பேச்சு எனக்குப் புரியலெ. இது வரைக்கும் நீ செய்த உதவிகளுக்கு, மனதிலே உன்னை ரொம்ப உயர்வா நெனச்சிக்கிட்டிருக்கேன். அந்த பிம்பம் கலையற மாதிரி நீ ஏதாவது கேட்பதற்கு முன்னாடி, நான் இங்கிருந்து போயிடறேன்''  சொல்லியவாறே, திரும்பிப் பார்க்காமல் வெளியேறினாள்.

உலகத்தின் மீதும், மனிதர்கள் மீதும் கோபம் கொப்பளித்தது.  தனிமையில் தள்ளாடும் தன் மீது ஒரு கழிவிரக்கம் ஏற்பட்டது. வெளியில் வானம் கருத்திருந்தது, மழை வருமோ?

வானத்தில் தனியாய்ப் பறக்கும் ஒரு மாலைப் பறவை திக்கு தெரியாமல் செல்வதைப் போலத் தோன்றியது.

வீட்டிற்கு வந்தவள் சங்கரைப் பார்த்தாள். இவனது தகுதிக்கு அதிகமான ஆசைதானே எல்லா துயரங்களுக்கும் காரணம் என்று எரிச்சலும், கோபமுமாய் வந்தது. ஒன்றும் பேசாமல் உள்ளே சென்றாள்.

""அம்மா, எக்ஸ்கர்ஷனுக்குப் பணம் கிடைத்ததா?''

ஆவேசம் வந்தவள் போல் சங்கர் அருகில் வந்தாள்  அவள் முறைத்த முறைப்பில் சங்கர் மிரண்டான். தலைக்கு மேல் உயர்ந்த அவளது வலது கை. சங்கரின் இடது கன்னத்தில் "பளீரென' இறங்கித் தடம் பதித்தது.

""மானத்தை விற்று உனக்கு சுற்றுலாவா? போதும் நீ படித்தது  மூட்டைத் தூக்கிப் பிழைத்து, உன் சம்பளத்தில் ஊரைச் சுற்று''

அறைந்த வேகத்தில்... நடு வீட்டில் விழுந்து குலுங்கிக் குலுங்கி அழுதாள் சியாமளா. விசும்பல்கள் நீண்ட நேரம் உயிர்த்திருந்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com