அம்மா ஏன் வரச் சொன்னார்?

அம்மா காலையில் போன் செய்திருந்தார்.
அம்மா ஏன் வரச் சொன்னார்?

அம்மா காலையில் போன் செய்திருந்தார்.
திருமுருகனுக்கு சந்தோசமாக இருந்தாலும், "எதற்காக போன் அடிக்கிறார்?' என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. ஏனென்றால் எப்போதும் அவன்தான் போன் செய்வான். வாரத்துக்கு ஒரு முறையாவது! 
இதுவரை அம்மா போன்செய்து, நன்றாக இருக்கிறாயா? என ஒரு வார்த்தை கேட்டதில்லை. என்னவோ தெரியவில்லை, அவன்மேல் அம்மாவுக்குப் பாசம் குறைந்து கொண்டே வருகிறது. போனில் பேசும்போதுகூட இறுக்கமான குரலில் பதிலளிப்பார். 
அண்ணன்களிடமும் அவ்வாறுதான் நடந்துகொள்கிறாரா என்றால்... அப்படியில்லை. போனவாரம் அம்சவல்லி கல்யாணத்தில் லெச்சண்ணனை பார்க்கும்போதுகூட அவரே சொன்னாரே... அம்மாவே அவருக்குப் போன்செய்து கல்யாணத்துக்கு வருவதாகக் கூறினார் என்று. 
அப்புறம் ஏன் அம்மா இன்னும் வரவில்லை? எனத் திருமுருகன் கேட்டுக் கொண்டிருக்கும்போதே அம்மா உள்ளே நுழைந்து கொண்டிருந்தார். லெச்சண்ணனை பார்த்துச் சிரித்தபோது இருந்த மலர்ச்சி, திருமுருகனிடம் திரும்பிச் சிரித்தபோது காணாமல் போயிருந்தது. முன்னெல்லாம் அப்படியில்லை. அம்மாவின் முகத்திலிருந்து... இல்லையில்லை, உடல்முழுவதும் அன்பும் பாசமும் அலைஅலையாகப் பாய்ந்து தனது உடலுக்குள் ஊடுருவுவதைப் போலவே உணர்வான்.
தனக்குப் பிரிக்கப்பட்ட சொத்துகளிலிருந்து இரண்டை விற்றுக் காசாக்கிய நேரத்தில் ஒரு பைசா கூட அண்ணன்களுக்கோ, தங்கைக்கோ, அம்மாவுக்கோ கொடுக்கவில்லை என்ற கோபமாகக் கூட இருக்கலாம். அதிலிருந்துதான் அம்மா சரியாகத் தன்னுடன் பேசவில்லை என்பதைப் புரிந்து கொண்டாலும், அப்படியெல்லாம் இருக்காது... கேவலம் பணத்துக்காக தன்மேல் பாசம் இல்லாமல் இருப்பாரா என்ற கேள்வியும் மனத்துள் எழும். 
செல்போனை கையில் வைத்துக்கொண்டு அம்மாவின் நினைவுகளைச் சுமந்து சிலநொடித் துளிகளில் பயணப்பட்டவனை, ஹலோ என்ற அம்மாவின் குரல் மீண்டும் நினைவுலகுக்குக் கொண்டுவந்தது.
சுதாரித்து, அம்மா... நல்லாயிருக்கியாம்மா? 
என்றான்.
இருக்கேன் என உணர்ச்சிகள் ஏதுமற்ற குரலில் கூறியவர், ""உடனே புறப்பட்டு மேலூருக்கு வா'' என்றார்.
அக்கறையோடு, "நல்லாயிருக்கியா...' எனக் கேட்பதற்காகத்தான் அம்மா போன் செய்திருக்கிறார் என்ற நினைப்போடு செல்போனை எடுத்தவனின் உற்சாகம் நொடியில் கீழிறங்கியது. 
""என்னம்மா விசயம். ஏதாவது சிக்கலா?'' 
""இவன் ஒருத்தன். எல்லாத்தையும் போன்லயே கேட்டுக்கிட்டு... பொறப்பட்டு வாடான்னா'' எனச் சொல்லி செல்போனை வேறு யாரோ ஒருவரிடம் கொடுப்பதுபோல், ""இந்தாப்பா... சொல்லிட்டேன்'' என்றவரின் குரல் மெலிதாகக் கேட்டது. 
""சார்... டிக்கெட்'' என்ற நடத்துநரின் உயர்த்தப்பட்ட குரலில் உலுக்கப்பட்ட பிறகே, தான் பேருந்தில் பயணம் செய்கிறோம் என்ற உணர்வுக்கே வந்தான் திருமுருகன். 
முன்சீட்டில் அம்மாவின் தோளில் சாய்ந்திருந்த பெண் குழந்தை அவனையே குறுகுறுவெனப் பார்த்துக் கொண்டிருந்தது. ஒன்றரை அல்லது இரண்டு வயதிருக்கும். சிவப்பாக அழகாக இருந்தாள். திருமுருகன் முகத்தை கோமாளிபோல் அஷ்டகோணலாக்கி காது வரைக்கும் வாய்விரித்துச் சிரித்தான். அவளும் சிரித்தவள், பருவப்பெண்ணைப்போல் வெட்கப்பட்டு அம்மாவின் நெஞ்சுக்குள் மறைந்து கொண்டாள். மீண்டும் மெதுவாக வெளியே எட்டிப் பார்த்தாள். அவன் மீண்டும் அதே முகத்தைக் காட்டியதும் வெட்கத்துடன் மறைந்தாள். குழந்தையின் செய்கையைக் கவனித்துப் பின்பக்கம் பார்த்த அம்மா மெலிதாகச் சிரித்து, ""மாமாப்பா... சொல்லு... மா..மா'' என்றார். 
குழந்தை தன் மழலைக்குரலில், "மாமா' என்றது. 
ஆணோ, பெண்ணோ எந்தக் குழந்தையாக இருந்தாலும் எல்லாருடைய குரலும் இப்படித்தான் இருக்குமா? ஒன்றரை வயதுக் கதிரின் குரலைக் கேட்பதுபோலவே உணர்ந்தான். ஆனால்... ஆனால்... அவன் ஒன்றரை வயதுக்கு மேல் தாண்டவேயில்லை. அவன் மட்டுமல்ல, அதற்குப்பிறகு பிறந்த ராஜா, தேவி, பிரீத்தா... எல்லாரும்... எல்லாரும்... ஒரு வயது, இரண்டு வயது... அவ்வளவுதான். அதற்குமேல் பூமியில் வாழப் பிடிக்காமல் கிளம்பிவிட்டார்கள். 
இது நான் வாங்கிவந்த சாபமா... அய்யோ! இதற்கு அந்தக்குழந்தைகளை தராமலேயே இருந்திருக்கலாமே... கொடுப்பதுபோல் கொடுத்துப் பிறகு பிடுங்கிக் கொள்வது... அதைவிட வேதனை இந்த உலகத்தில் இருக்கிறதா?  
திருமுருகன் கண்களில் அவனையும் அறியாமல் ஈரம் கசிந்தது. வேகமாக இமைகளை மூடி தூங்குவதுபோல் பாசாங்குசெய்தான். குழந்தை பார்த்துவிடக்
கூடாதென்ற பதற்றம்.
பேருந்து நிரம்பி வழிந்தாலும் யாருமற்ற பாலைவன வெயிலில் அமர்ந்து செல்வதுபோலவே உணர்வு. சில
சமயங்களில் இப்படித்தான். வெறுமையான, வாழ்க்கையின் மேல் பிடிப்பில்லாத மனநிலை தொடர்ந்து சில கணங்களுக்கு நீடிக்கும். அப்போது எதையும் செய்யாமல் மவுனமாக தியானத்தில் ஈடுபடுவதுபோல் பாசாங்காவது செய்ய வேண்டும். இல்லையென்றால் இந்த உயிரை இன்னும் ஏன் சுமந்துகொண்டிருக்கிறேன் என்ற கேள்வி எழும்பும். நரம்புகளும், மனதும் தளர்ந்து போய் சுயகட்டுப்பாட்டை இழந்து, விளிம்புநிலைக்குத் தள்ளப்படும்போதே ஒரு வேகமான சுழல் உள்ளுக்குள் உருவாகி திடுக்கென விழிப்புநிலையை உருவாக்கிவிடும். அது யாரால் உருவாக்கப்பட்டது. தன் கட்டுப்பாட்டில் இல்லாத மனம் அதை செய்திருக்க வழியில்லை. உள்ளே இருக்கும் வேறு யாருடைய மனமோ அவனை விழிப்புணர்ச்சி அடையச் செய்ததுபோலவே ஒரு பிரமை! 
நிர்மலாவின் சிரித்தமுகம் மூடப்பட்ட கண் திரையில் மெதுவாக விரிந்தது. மனதுக்குள் அவள் வரும்போதெல்லாம் ஒரே மாதிரியான முகத்துடன்தான் வருவாள். புன்னகை முகத்தில் மஞ்சள் தேய்த்து நெற்றி நடுவில் வட்டமாகப் பொட்டிட்டு... 
வாழ்க்கையின்மேல் பிடிப்பில்லாத மனநிலை எவரால் உருவாக்கப்பட்டதோ அவராலேயே விழிப்புணர்ச்சியும் கொடுக்கப்பட்ட விசித்திரமான சம்பவம் அங்கே நிகழ்ந்துகொண்டிருந்தது.
நாலு பிஞ்சுகளையும் இழந்த துக்கம் தாளாமல் உன் மடியில் விழுந்து கதறி, நானும் ஒரு குழந்தையாக மாறிப்போனதை உன்னால் உணரமுடியவில்லையா? எனக்கு நீயும், உனக்கு நானும் குழந்தைகளாக மாறி மனநிறைவுடன் வாழும் வாழ்க்கையைப்பற்றி நீ அறிந்திருக்கவில்லையா?’’ குழந்தைகளை இழந்த துக்கத்தில் தளர்ந்துபோய் பூமிக்கடியில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் நிர்மலாவிடம் பலசமயங்களில் மனதுக்குள்ளேயே இந்தக் கேள்வியைக் கேட்கும்போதெல்லாம் ஒரே பதில்தான் திரும்பத் திரும்ப எதிரொலிக்கும்.
நீங்கள் வாழவேண்டும். என்னால்தான் துக்கங்களை தாளமுடியாமல் உடலும் மனமும் சீர்கெட்டுவிட்டது. ஆனால் உங்கள் உடலும் மனமும் எதையும் தாங்கும். உங்களால் முடியும். நீங்கள் வாழவேண்டும். உங்களுக்காக இல்லாவிட்டாலும் என அந்தச் சொற்றொடர் முற்றுப்பெறாமல் காற்றோடு கரைந்துவிடும்.
முற்றுப்பெறாத அந்த வாக்கியத்தை நிறைய நாட்கள் யோசித்திருக்கிறான். நுணுகி நுணுகி யோசித்துக் களைத்திருந்தவேளையில் திடீரென மூளைக்குள் ஓர் இணைப்பு ஏற்பட்டது போன்ற உணர்வு. விடையைக் கண்டுபிடித்துவிட்ட திருப்தி. அதன்பிறகு கண்களின் உள்திரைக்குள் தோன்றும் நிர்மலாவின் முகத்திலும் புன்னகையுடன் திருப்தி கலந்திருந்தது. அது-
பேருந்து நிலையத்துக்குள் பேருந்து, மிக நீளமான ஹாரன் சத்தத்துடன் நுழைந்து திருமுருகனின் சிந்தனையைக் கலைத்தது. பேருந்திலிருந்து இறங்கி, ஆட்டோக்கள், இருசக்கரவாகனங்களின் மோதல்களிலிருந்து தப்பித்து கவனமாக நடக்கும்போதுகூட அதே கேள்வி. அம்மா எதற்காக வரச்சொன்னார்? 
சிறிய கேட்டைத் தாண்டி செருப்பை கழற்றிப்போடும்போதே ஹாலிலிருந்து அம்மா பார்த்துவிட்டார். உள்ளே நுழையும்போதே அம்மாவின் முகத்தில் மெலிதான புன்னகை மேகம் மிதந்து கொண்டிருந்தது. அது கூட ஏதோ ஒரு உதவியைத் தன்னிடமிருந்து எதிர்பார்த்துக் காத்திருப்பதைப்போல் தோன்றியது. மறுநொடியே, நான் ஏன் இப்படி இருக்கிறேன். ஒவ்வொரு செயலுக்கும் ஏதோவொரு காரணமிருப்பதாக ஆய்வு செய்துகொண்டு... எனத் தனக்குத்தானே கேள்வி எழுப்பிக் கொண்டான்.
உள்ளறையிலிருந்து இரண்டு அண்ணன்களும் அவர்களுடைய இல்லத்தரசிகளும் வெளியே வந்தார்கள். அப்போதே அவனுக்கு விளங்கிவிட்டது. ஏதோ ஒரு முக்கியமான விசயத்துக்கு முடிவெடுப்பதற்காக ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் என்று! சொத்து சம்பந்தப்பட்ட விசயமாக இருக்குமா... வாய்ப்பில்லையே. அதுதான் ஏற்கெனவே இன்னாருக்கு இவ்வளவென்று பிரித்துக் கொடுத்தாயிற்றே!
எல்லோரும் அவனைப்பார்த்து புன்னகை 
செய்தபடி சேர்களிலும் சோபாவிலும் அமர்ந்தார்கள். 
திருமுருகனும் அருகில் கிடந்த சேரில் அமர்ந்தான். 
அவனுக்கென்னவோ, அவர்கள் எல்லோரும் ஒரு குழுவாகவும், தான்மட்டும் தனித்திருப்பதாகவும் தோன்றியது. யாருடனும் ஒட்டாமல் அதிகம் தொடர்பில்லாமல் இருந்தால் இப்படித்தான் மனது நினைக்கிறது. 
ரத்த உறவுகளாக இருந்தாலும்... 
""நீங்க அவசரமா பொறப்பட்டு வரச்சொன்னதும், உங்களுக்குத்தான் ஒடம்பு கிடம்பு சரியில்லாமப் போச்சோன்னு பதறிப்போயிட்டேன்'' என மவுனத்துக்குள் வார்த்தைகளை நிரப்பினான். 
"ஒன்னோட அக்கறையை குப்பையில போடு...' என்ற உணர்வை ஒரு நொடியில் வெளியிட்ட கண்களை மறுநொடியில் புன்னகையால் மாற்றி, ""எனக்கில்ல முருகா! உன் தங்கச்சிக்குத்தான்'' என முடிக்காமல் நிறுத்தினார் அம்மா.
""தங்கச்சிக்கு என்னம்மா?'' பதற்றத்துடன் கேட்டான் திருமுருகன். மனம், மிகப்பெரிய சோகத்தை எதிர்கொள்ள தயாரானதுபோல் இருந்தது.
""அடிவயிறு வலிக்குதுன்னு சொன்னா... யூரின் போறதுல ரொம்பநாளாவே சிக்கலா இருந்திருக்கும்போல. அவளப்பத்தித்தான் உனக்குத் தெரியும்ல. புருசன் புள்ளன்னு கிடப்பா. தன்னோட உடம்பை பார்த்துக்க மாட்டா... நேத்து ராத்திரி அடிவயிறு வலிக்குதுன்னு சொல்லிட்டே மயங்கி விழுந்துட்டா. புருசன்காரன் வேலம்மாவுக்கு தூக்கிட்டு ஓடினான்'' என்ற அம்மாவின் கண்களில் துளிர்த்த கண்ணீரை சேலைத்தலைப்பால் துடைத்துக்கொண்டே, ""அவளை ஆண்டவன் இப்படி சோதிக்கக்கூடாது'' என்றவரால் அதற்குமேல் பேசமுடியவில்லை. தன் மகளின் நோயைப்பற்றி தன் வாயால் சொல்வதற்குப் பயந்தாரோ என்னவோ!
மூத்த அண்ணி தொடர்ந்தார். 
""ரெண்டு கிட்னியும் ஃபெயிலியர் ஆயிடுச்சாம். வாரத்துக்கு ரெண்டு தடவ ஆஸ்பத்திரிக்குப்போய் டயாலிசிஸ் பண்ணனுமாம். என்னோட வேலை பார்க்கிற டீச்சர் மகளுக்கு இதேமாதிரிதான் ஆச்சு. டயாலிசிஸ் பண்றது பேஷண்ட்டுக்கு எவ்வளவு பெரிய வேதனை தெரியுமா? கிருமித்தொற்று ஆயிடுச்சுன்னா சிக்கல்தான். அப்புறம் அதுக்கும் வைத்தியம் பார்க்கணும். ரொம்ப கஷ்டப்படறாங்க'' என்றவர்,  ""டாக்டர் ஒரே வார்த்தையில சொல்லிட்டார். எவ்வளவு சீக்கிரம் கிட்னியை பொருத்துறோமோ அவ்வளவுக்கு நல்லதுன்னு''  என முடித்தார். 
திருமுருகனுக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. "கூடப்பிறந்த தங்கைக்கு, ஒரே ரத்தத்துக்கு இவ்வளவு பெரிய சோதனையா? இறைவா... ஏன் எங்கள் குடும்பத்தை மட்டும் இப்படிச் சோதிக்கிறாய். போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ!' நிலையில்லாமல் தவித்தது மனம். 
""தங்கச்சி இப்ப எங்க இருக்கா. அவள நான் பார்க்கணும்'' என்றான்.
""பெட்ல சேர்த்தாச்சு. ரெண்டுநாள் இருக்கணும்னு சொல்லிட்டாங்க'' 
""கவலைப்படாதீங்கம்மா. அண்ணனுங்க நாங்க மூணுபேரு இருக்கோம்ல. பணத்தை ஏற்பாடு செஞ்சு காப்பாத்திடலாம்'' ""பணத்தை ஏற்பாடு செஞ்சுடலாம் சரி... கிட்னி?' 
""பேப்பர்ல விளம்பரம் கொடுக்கலாம். ஆஸ்பத்திரில பதிவு செஞ்சு வைக்கலாம். இன்னும் என்னென்ன வழியிருக்கோ அத்தனையும் முயற்சி செய்யலாம்'' 
அண்ணி குறுக்கிட்டார். 
""அதுல நிறைய காலதாமதம் ஆயிடுமே. உலகத்துல எத்தனைபேர் கிட்னிக்காக காத்திருக்காங்க தெரியுமா? அப்படியே கிடைச்சாலும் அவங்க உடம்புக்கு ஒத்துக்கணுமே. எனக்குத் தெரிஞ்சு ஒரு அம்மாவுக்கு கிட்னி ஒத்துக்காம செத்தே போயிடுச்சு'' என்றதும் அம்மா பதறினார். 
""ஏம்மா இந்த நேரத்துல சாவு கீவுன்னு பேசிக்கிட்டு''   என்றார் நடுக்கத்துடன்.
""உலகத்துல நடக்கறதைத்தான் சொல்றேன் அத்தே! அதான் டாக்டர் சொன்னார்... . ஒரே ரத்த உறவுல இருந்து கிட்னி கிடைச்சா ரொம்ப நல்லதுன்னு'' எனத் தீர்வின் மையப்புள்ளிக்கு நகர்ந்தார்.
""அதாம்பா. ஒருத்தருக்கு ரெண்டு கிட்னி தேவையில்லையாமே. ஒரே கிட்னியில வாழ்க்கையை ஓட்டிடலாம்னு சொல்றாங்கப்பா! தங்கச்சியோட வாழ்க்கையை யோசிச்சுப் பாருப்பா. வாரத்துக்கு ரெண்டுநாளு டயாலிசிஸ் செஞ்சு வாழ்க்கையை ஓட்டறது எவ்வளவு கஷ்டம். அவளோட பிள்ளைங்கள நினைச்சுப்பாரு. நண்டும் சிண்டுமா''  
திருமுருகன் அமைதியாக இருந்தான். அவனுக்குப் புரிந்துவிட்டது. அவர்கள் பணத்துக்காக தன்னை வரச்சொல்லவில்லை. 
""நீ மனசு வச்சீன்னா தங்கச்சியை காப்பாத்திடலாம்பா! பணம்காசு கொடுத்து உதவி பண்ணவேணாம். கிட்னிதான் இப்போதைக்கு தேவை'' என்ற அம்மாவை நிமிர்ந்துபார்த்தான்.
""அம்மா... தப்பா எடுத்துக்காதீங்க. தங்கச்சிக்கு கிட்னியை கொடுக்கலாம்தான். ஆனா...'' 
""கிட்னியை கொடுத்ததுக்கப்புறம் உன்னோட உடம்புக்கு ஏதாவது ஆகிடுமோன்னு பயப்படுறியா... அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. ரெண்டு மாசம் பெட் ரெஸ்ட் எடுத்தா போதும். அவங்க கொடுக்கிற மாத்திரையை சாப்பிட்டு உடம்பை தேத்திடலாம். சந்தேகமிருந்தா வேலம்மாவுக்குப் போலாம். டாக்டர் எல்லா விவரமும் சொல்வார்'' என்றார் மூத்த அண்ணன்.
""அதெல்லாம் எனக்குத் தெரியும்ண்ணே! எனக்கு வேற சில கடமைகள் இருக்கு. அதுக்கு இந்த உடம்பு பலவீனமடையாம பார்த்துக்கணும். அதான்''
""என்ன பெரிய கடமை? உனக்கென்ன புள்ளையா குட்டியா? எல்லாம் போய்ச் சேர்ந்துடுச்சுங்க. கட்டின பொண்டாட்டியும் போயிட்டா. தனிக்கட்டைதானே?'' என்றார் அம்மா.
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த மூத்த அண்ணி மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தார். 
""உங்க ரத்தமும், உங்க தங்கச்சி ரத்தமும் ஒரே குரூப். அதனால செட்டாகிடும்னு நினைக்கிறோம்'' 
என்றார்.
""அண்ணன் ரத்தமும் அதே குரூப்தானே'' என்றதும் அண்ணியின் முகம் கடுமையானது.
""கரெக்ட்தான். ஆனா, அவருக்கு புள்ளைகுட்டிங்க இருக்கு. ரெண்டும் பொம்பளப்பிள்ளைங்க. மூத்தவ இப்பத்தான் காலேஜ் போயிருக்கா. அவளுக்கு மட்டும் இந்தவருசம் எவ்வளவு செலவு தெரியுமா? ரெண்டாவது ப்ளஸ்டூ படிக்கிறா. அவங்களெயெல்லாம் கரைசேர்க்கிறதுக்கு அவர் உழைக்க வேண்டாமா? அதுக்கு உடம்பு சரியாயிருந்தாத்தானே முடியும்?''”
""அதான் ஒரு கிட்னியைவச்சு நல்லபடியா வாழலாம்னு சொன்னீங்களே?''”
""சொன்னோம்தான். டாக்டர் நம்பிக்கை கொடுக்கிறார்தான். ஆனா... நம்ம நேரத்துக்கு ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகிப்போச்சுன்னா. வேலை செய்ய முடியாம படுத்துக்கிட்டார்னா அப்படி ஒரு கோணமும் இருக்குல்ல''
""ஒருவேளை நான் கிட்னி கொடுத்து, என்னோட உடம்பும் அதேமாதிரி ஆயிடுச்சுன்னா'' எனச்சொல்லிவிட்டு அனைவரையும் ஒருபார்வை பார்த்தான் திருமுருகன். ""அண்ணனுக்காவது ஒத்தாசைக்கு அண்ணி இருக்காங்க. புள்ளைங்க இருக்குதுங்க. ஆனா எனக்கு... நீங்க பார்த்துக்குவீங்களா?'' என தொடர்ந்து பேசினான். அறை முழுவதும் கனத்த மவுனம்!
""என்னோட மனைவி இருந்திருந்தான்னா நீங்க இப்படியெல்லாம் கேள்வி கேட்டுருப்பீங்களா. அவளும் அதைக் கேட்டுட்டு சும்மா இருந்திருப்பாளா? புத்தகங்கள்ல பத்திரிகைகள்ல கிட்னி தானத்தைப் பத்தி ரொம்ப உயர்வா எழுதுறாங்கதான். ஆனா ஒவ்வொரு மனுசனுக்கும் வாழ்க்கை சூழ்நிலைன்னு ஒண்ணு இருக்குல்ல. அதையும் கணக்குல எடுத்துக்கிட்டு முடிவு செய்யறதுதான் புத்திசாலித்தனம். தங்கச்சியோட நிலைமை ரொம்ப சிக்கலானதுதான். அதுல எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்ல. கிட்னியைக் கொடுத்ததுக்கப்புறம் என்னோட உடம்புக்கு ஏதாவது ஆகிடுச்சுன்னா என்ன செய்றதுங்கிற கேள்வி ஒரு காரணமாயிருந்தாலும், இன்னொரு காரணமும் இருக்கு'' எனச் சொல்லிவிட்டு அனைவரையும் மீண்டும் பார்த்தான்.
""நான் ஏற்கெனவே சொன்னமாதிரி எனக்குன்னு சில பொறுப்புகள் இருக்கு. உங்களுக்குத் தெரியாத விசயத்தை இப்பச் சொல்லப்போறேன்...'' 
""வேற பொண்ணப்பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கிட்டியா?'' எனக்கேட்ட அம்மாவை திகைப்புடன் பார்த்தான். 
""அம்மாவா இப்படியெல்லாம் பேசுகிறார். என்னோட மனைவியோட இடத்துல வேற ஒருத்தியை வச்சு யோசிச்சுப் பார்க்கவே என்னால முடியாது. இன்னொரு கல்யாணம் எப்படிப் பண்ணிக்குவேன்''” என்றவன் சில நொடிகள் எதுவும் பேசாமல் மவுனமாக மனதுக்குள் அழுதான். 
""சொத்து வித்தப் பணத்தை என்ன செஞ்சானோங்கிற கேள்வி உங்க எல்லோருடைய மனசுலயும் ஓடிக்கிட்டிருக்கும். அந்தப்பணத்தை பேங்க்ல போட்டு அதுல வர்ற வட்டிப்பணத்தை வச்சு பத்துப்பேரை படிக்க வச்சுக்கிட்டிருக்கேன். அந்தப் புள்ளைங்க படிக்க வழியில்லாம வேலைக்குப் போயிட்டு இருந்ததுங்க. நான் தான் அவங்க பெத்தவங்ககிட்ட கலந்துபேசி சம்மதம் வாங்கி பள்ளிக்கூடத்துல சேர்த்தேன். ரெண்டுமூணு நிறுவனங்கள்ல கணக்கு எழுதி அதுல வர்ற பணத்தை என்னோட செலவுபோக புள்ளைங்க படிக்கிறதுக்குத்தான் பயன்படுத்துறேன். எனக்காக இல்லைன்னாலும் அந்தப்புள்ளைங்களுக்காவது இந்த உடம்பு நல்லா இருக்கணும்னு நினைக்கிறேன். அது தப்பான்னு நீங்களே சொல்லுங்க. என்னோட உழைப்பு அவங்களுக்கு இப்பத் தேவைப்படுது. ஒருவேளை இந்தப்பொறுப்பு இல்லாம இருந்திருந்தா... தங்கச்சிக்கு கிட்னியை கொடுக்கலாங்கிற முடிவை தயங்காம எடுத்திருப்பேனோ என்னவோ''” என்றவனை அனைவரும் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com