சிட்டுக்குருவி கூடு கட்டணும்

காலை விடிந்தும், விடியாத நேரம். நன்றாக உறங்கி கொண்டிருந்த பிள்ளைகள் இருவரையும், மெதுவான குரலில், ""பிள்ளைகளா எழுந்திருங்கள்'' என்று அம்மா உசுப்பினாள்.
சிட்டுக்குருவி கூடு கட்டணும்

காலை விடிந்தும், விடியாத நேரம். நன்றாக உறங்கி கொண்டிருந்த பிள்ளைகள் இருவரையும், மெதுவான குரலில், ""பிள்ளைகளா எழுந்திருங்கள்'' என்று அம்மா உசுப்பினாள். மகன் பாபு, ""என்னம்மா இந்நேரமே எழுப்பி விடுற?'' என சத்தமாக கேட்க , ""உஷ் ! மெதுவா'' என்று அமைதிப்படுத்தி மகள் அபியையும் எழுப்பினாள்.

""என் கூட சத்தமில்லாமல் வாங்க'' என்று ஜன்னல் ஓரம் அழைத்துச் சென்றாள்.
""ஜன்னல் வழியா பாருங்கள். அது “சிட்டுக்குருவி''” மூவரும் ஆர்வம் மேலிட பார்க்க , சிட்டுக்குருவிகள் அழகாக இரை பொறுக்கிக் கொண்டு இருந்தன. பிளஸ் டூ படித்த மகள் அபி, ""ஓ ..இதுதான் சிட்டுக்குருவியா?'' என ஆர்வம் பொங்கக் கேட்டாள்.
""ஆமாம்... எவ்வளவு அழகா இருக்கு'' என்று மகன் சொல்ல, அம்மா அவர்களை அமைதிப்படுத்தினாள்.
""பறந்து போய்விடும். சத்தம் போடாதீர்கள்''
அவை பரபரப்பாக இரை தேடுவதும், அதை கொத்தித் தின்பதும், படபடவென்று இறக்கை அடித்து பறப்பதும் , அதுவும் இவ்வளவு அருகில்.... மூவரும் வைத்த கண் இமைக்காது பார்த்தார்கள்.
""இப்பெல்லாம் சிட்டுக்குருவிகளைப் பார்ப்பதே அபூர்வம்'' - அம்மா சொன்னார்.
""செல்போன் டவர் பெருக்கத்தால் சிட்டுக்குருவி இனம் விருத்தியாகாமல் போய் விட்டன என படித்திருக்கிறேன்'' என்று பாபு சொல்ல, ""அது மட்டும் இல்ல... உணவு தானியங்கள் கிடைக்காததால் அவை நகர் பகுதிக்குள் வரவில்லை'' என அபி சொல்ல, அம்மா தொடர்ந்தார்: "" சிட்டுக்குருவி லேகியம் தயாரிக்கிறேன்னு பேர்வழிகள் அதைக் கொன்று இருக்கிறார்கள். நம்ம அப்பா சொல்லிருக்கார்... சிறு வயசில தன்னுடைய நண்பர்களுடன் கிராமத்திற்குச் சென்று கவட்டை மூலம் கல் வீசி சிட்டுக்குருவி வேட்டையாடி சுட்டு சாப்பிட்டு இருக்கோம்னு... அது கூட காரணமா இருக்கலாம்'' என்று அம்மா சொல்ல, ""ஐயோ சுட்டு சாப்பிடுவாங்களா?'' என தங்கை பதற, ""மேற்கொண்டு எதுவும் சொல்லாதீங்க'' என காதைப் பொத்திக் கொண்டாள்.
அம்மாவுக்கு நர்ஸ் வேலை. அப்பா இல்லாத இந்த கஷ்டத்திலும் என்னை இன்ஜினியரிங் படிக்க வைத்து விட்டாள். முடித்து இரண்டு வருஷம் ஆகியும் வேலைதான் கிடைத்தபாடில்லை. நான் வேலைக்குப் போனால் தான் தங்கையை நல்ல படிப்பு படிக்க வைக்க முடியும். இந்த கஷ்டத்துலயும் அம்மா, மகள் மருத்துவம் படிக்கணும்னு அபியை அரசு நடத்தும் நீட் தேர்வு பயிற்சிக்கு அனுப்பி வைக்கிறாள்.
அன்று இரவில் அபி, ""நாளைக்கும் சிட்டுக்குருவி வருமா?'' எனக் கேட்க, அம்மா பழைய கதையை ஆரம்பித்தாள்:
""எங்கள் கல்யாணத்தின் போது அப்பா தள்ளு வண்டியில் காய்கறி வியாபாரம் பண்ணிட்டு இருந்தார். ஒத்தாசைக்கு நானும் சில நேரம் செல்வேன். குடும்ப கஷ்டம். வருமானம் பத்தலை. அதனால உங்களை அரசு பள்ளிகூடத்துல தான் படிக்கவச்சோம். ஒரு நாள் உங்க அப்பா, ரூபாய் பத்து ஆயிரம் இருந்தால் கடை ஒன்று அட்வான்ஸ் கொடுத்து வாடகைக்கு பிடிக்கலாம், காய்கறி வியாபாரம் பெரிதாக பண்ணலாம் என சொல்ல, நான் என் கையில் போட்டு இருந்த ஒரு ஜோடி வளையலைக் கழட்டிக் கொடுத்திட்டேன்''
""ஐயோ அம்மா, இதையே தான ஆயிரம் தடவை சொல்லிருக்க''ன்னு பிள்ளைகள் சலித்துக் கொண்டனர்.
""இதைக் கேளுங்க... அப்பவே பாட்டி, எங்களைத் திட்டினார்கள். இருக்கிறத விட்டுட்டு ஏன் பறக்க ஆசை படுகிறீங்கன்னு. ஆனால் அப்பா பிடிவாதமா இருந்து, கடை பிடித்து வியாபாரம் பண்ண ஆரம்பித்துட்டார். ஆனால் பெரிதாக வியாபாரம் இல்லை. கைல இருந்த காசும் கரைந்து போனது. என்ன செய்வது என்றே புரியல. ஒரு நாள் பாட்டி என்னை அழைத்து, "அங்கே பார்! சிட்டுக்குருவி நம் வீட்டில் கூடு கட்டிக் கொண்டு இருக்கிறது. ஆமாம்... அத்தை நானும் பார்த்தேன்... வீட்டை அசிங்கம் பண்ணுதுங்க, இப்பவே விரட்டி விடறேன்'னு சொல்ல, ""அப்படி ஏதேனும் பண்ணிடாத, குருவி கூடு கட்டின்னா பணம் சேரும்னு சொல்வாங்க'' என்றார்.
நான் பாட்டியை வியப்புடன் பார்த்தேன். நானும் பாட்டியும் நெல்மணிகள், நவதானியங்கள் போட்டு வைப்போம். முதலில் இரண்டு குருவிகள் பின்னர் பெருகி நான்கு குருவிகள் சேர்ந்தன. ஒரு நாள் அப்பா எனக்கு இரண்டு ஜோடி வளையல்கள் வாங்கிட்டு வந்தார். பாட்டிக்கு சந்தோஷம். "நான் அப்பவே சொன்னேன்ல நமக்கு பணம் சேர ஆரம்பிச்சுடுச்சு, குருவிகள் கூடு கட்டின நேரம்' என்று பாட்டி சொல்ல, அப்பா மெலிதாக சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்று விட்டார். நான் முழுவதும் நம்பவில்லை. எல்லாவற்றிக்கும் காரணம் நம் அப்பாவின் கடுமையான உழைப்பு தான் என மனதில் பட்டது. ஆனால் பாட்டி பிடிவாதமாக எல்லாம் குருவி கூடு கட்டின அதிர்ஷ்டம் என்று கூறிக்கொண்டே இருப்பார். யாரும் வீட்டுக்கு வந்தால் சிட்டுகுருவிக் கூட்டை பார்த்து விடக்கூடாதுன்னு வெளியே வைத்து பேசி அனுப்பி விடுவார் .
சில மாதங்கள் கழித்து அப்பா ஒரு கடை விலைக்கு வருது, வாங்கி பதிய போறேன்னு சொன்னார். பாட்டி சொன்ன அதிர்ஷ்டம் உண்மைதான்னு எனக்குப் பட்டது. நாம் இருந்தது வாடகை வீடுதான். ஆனால் மகிழ்ச்சியான வாழ்க்கை. நல்ல உடைகள், நகைகள் என எத்தனையோ சந்தோஷம் அனுபவித்தோம்.
ஒரு நாள் பாட்டி மிகவும் சோகத்துடன் அமர்ந்து இருந்தார். சிட்டுகுருவிகளெல்லாம் எங்கோ பறந்து விட்டன. தினந்தோறும் வீடு முழுவதும் இரை தூவி வைப்போம். ஆனால் சிட்டுக்குருவிகள் திரும்பி வரவே இல்லை. பாட்டி எப்பவுமே கலக்கமாகவே காணப்பட்டார். "அதெல்லாம் கவலைப்படாதீர்கள் அத்தை,
உங்கள் மகன் பார்த்துக் கொள்வார்' என ஆறுதல் சொல்வேன். உங்கள் அப்பா திடீரென்று பஸ்ஸில் அடிபட்டு இறந்து போனார். இடிந்து போய் விட்டோம். சில மாதங்களில் பாட்டியும் போய் சேர்ந்து விட்டார். குடும்பம் நிலைகுலைந்து போனது. கடையை விற்று பாக்கி கொடுத்தது போக கொஞ்சம் பணம் கிடைத்தது. பின்னர் நானும் இந்த நர்ஸ் வேலைக்குப் போய் விட்டேன்.
பாபு அம்மாவிடம், "" சிட்டுகுருவி... கூடு.... அதிர்ஷ்டம்... எல்லாம் கட்டுக் கதைதான். இதை எப்படி நம்புறீங்க?'' என அம்மாவின் முகத்தைப் பார்த்தேன். அபி எங்களிடம், ""நாம் லவ்பேர்ட்ஸ் வளர்ப்போம். அது தான் அழகாயிருக்கும்'' என்று கூற, அம்மா எழுந்து நின்று , ""இல்லை... நாம் சிட்டுக்குருவி வளர்ப்போம்'' என்று சொன்னாள்.
""அது எப்படி முடியும்மா?''
"" முடியும்... நாம் குருவிகளை வீட்டுக்குள் வரவழைப்போம்'' என்ற அம்மாவை, புரியாமல் பார்த்தோம் இருவரும். அம்மா அடுத்த நாள் எங்கெங்கோ அலைந்து திரிந்து குருவிக்கூடு வாங்கி வந்தாள். மேலே ஏறி கூட்டைக் கட்டி வைத்தோம். நெல்மணிகள் வாங்கி ஜன்னல் ஓரம் போட்டு வைத்தாள். ஆங்காங்கே வைக்கோல் பரப்பி வைத்தாள். அப்படி ஏதும் நடக்கவில்லை. அம்மாவுக்கு நம்பிக்கை மட்டும் குறையவில்லை, என்றாவது ஒரு நாள் குருவிகள் கூடு கட்ட வருமென்று.
அந்த அதிசயம் ஒரு நாள் நடந்தது. ஜன்னலில் கிடந்த நெல்மணிகளை சிட்டுக்குருவிகள் கொத்தி தின்று கொண்டிருந்தன. பின்னர் தினந்தோறும் வர ஆரம்பித்தன. அந்நேரங்களில் அதனை தொந்தரவு பண்ணிடக்கூடாதுன்னு ஓர் அறைக்குள் எங்களை போக சொல்லிவிடுவார். ஒரு நாள் சிட்டுக்குருவிகள் வீட்டுக்குள் உள்ள கூட்டுக்குள் அடைந்து விட்டன. அதிலிருந்து நாங்கள் சத்தமாக கூட பேசுவதில்லை. மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. நாங்கள் சாப்பிட்ட உணவு பருக்கைகளை பறந்து வந்து எடுத்துச் செல்லும் அளவுக்கு குருவிகள் சகஜமாகிவிட்டன.
தங்கை அபி நீட் தேர்வு எழுதிவிட்டாள். ஒரு நாள் அம்மாவிடம் புலம்ப ஆரம்பித்துவிட்டேன்.
""எத்தனை இன்டர்வியூ சென்று வந்து விட்டேன். வருடம் சம்பளம் இரண்டு லட்சம் சம்பள வேலையில் இருந்து வருடம் பத்து லட்சம் சம்பள வேலை வரை, எத்தனை கம்பெனி ஏறி இறங்கி விட்டேன் எல்லாம் வேஸ்ட்தாம்மா. இவளை பாருங்க நீட் எழுதி இருக்கா, பாஸாகுறது கஷ்டம். அவள் டாக்டர் ஆக முடியாது. வீணா கற்பனையை வளர்த்துக் கொள்ள வேண்டாம்''ன்னு சொல்லுங்க.
நான் ஒரு பிரெளசிங் சென்டர்க்கு வேலைக்கு சென்று விட்டேன். சம்பளம் ஆறாயிரம் மட்டுமே. பல நாட்களாகவே அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை. ஆகவே சம்பளமும் சரியாக வரவில்லை. குடும்ப கஷ்டம். ""அம்மா, அபியை நர்ஸ் வேலைக்கு அனுப்பு, வீட்ல சும்மாதான இருக்கா''ன்னு வெடித்துவிட்டேன். தங்கை எங்கள் அருகில் வந்து, "" சரிம்மா நான் உங்கள் கூடவே நர்ஸ் வேலைக்கு வருகிறேன்'' என்றவுடன் எல்லோருமே கண் கலங்கினோம். அம்மா எங்கள் இருவரையும் மடியில் படுக்க வைத்து கன்னத்தை தடவிக் கொடுத்து கொண்டிருந்தார். அவர் கண்களில் இருந்து கண்ணீர்த் துளிகள் எங்கள் மேல் பட்டு தெரித்தது.
"அம்மா, நீ சொன்னியே சிட்டுகுருவி கூடு, அது இதுன்னு... அதிர்ஷ்டம் வரும்னு, அதெல்லாம் பொய்ம்மா, அப்பா உழைத்தார். பணம் சேர்த்தார்''
தங்கையும் ""ஆமாம் அண்ணன், நீ சொல்வதுதான் சரி. நானும் வேலைக்கு போய்ட்டா பணப் பிரச்சனை தீரும். நாலு காசு நம்பளும் சேர்த்து வைக்கலாம்'' என்று அம்மாவை நோக்கினாள். தான் சொன்னது எதும் நடக்கவில்லை என்று, அம்மாவுக்கு தான் ஏதோ தோல்வி அடைந்து விட்டோம்னு, தலையை கவிழ்ந்து கொண்டார். எந்தவித சத்தமும் போடாமல் அமைதியாக கூண்டில் அடைந்து கொண்டிருக்கும் சிட்டுக்குருவிகளை விரக்தியாகப் பார்த்து கொண்டிருந்தார். வீடு முழுவதும் ஒரு நிசப்தம். அந்த சூழ்நிலையே எங்களுக்கு ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியது.
அம்மாவை அப்படி ஒரு சோகத்தில் நாங்கள் பார்த்ததே இல்லை. மகள் வேலைக்குப் போக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டாளே என்ற வேதனை அவள் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. அன்று அப்படியே அம்மா மடியில் தூங்கிவிட்டோம். ஆனால் அம்மா தூங்கினார்களா என்று எங்களுக்குத் தெரியாது.
காலையில் எல்லோரும் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தோம். தங்கை அபியை பார்க்கும்போது கஷ்டமாக இருந்தது, எப்படி படித்து முன்னேறி வர வேண்டியவள். குடும்ப பாரத்தை சுமக்க வேண்டி கனவு
களைத் தொலைத்து இன்று நர்ஸ் வேலைக்கு செல்கிறாள். டாக்டர் ஆக வேண்டியவள், இன்று நர்ஸ் உடையில் பாவம் அவள்... அம்மா எங்கள் யாரிடமும் பேசவில்லை.
அப்போது அபியின் பள்ளி ஆசிரியை கதவைத் தட்டி உள்ளே வந்தார்.
""உங்கள் அபிராமி நீட் தேர்வில் பாசாகிவிட்டாள்'' எனக் கூற எல்லோரும் வாயடைத்துப் போய் விட்டோம். யாருமே பேச முடியவில்லை. அப்பொழுது என் செல்போன் மெசேஜ் ஒலி சிணுங்கியது, எடுத்துப் பார்த்தேன். பெரிய ஜ.டி கம்பெனி வொர்க் ஆர்டர். வருடம் ஆறு லட்சம் சம்பளத்துல உடனே சேர வேண்டும் என்று. அனைவரின் முகத்திலும் புன்னகை. அம்மா எங்களை அணைத்துக் கொண்டார்.
சிட்டுக்குருவிகள் படபடவென்ற சிறகடித்து, அமைதியைக் கிழித்து "கீச்! கீச்!' என்ற சத்தத்துடன் எங்களை வட்டமடித்துப் பறந்தன. அதன் சிறகுகள் எங்கள் கன்னங்களை சுகமாக வருடிச் சென்றன.
அதிர்ஷ்டமோ, அல்லது எங்கள் திறமையோ... எது எப்படியோ, இறந்து போன எங்கள் பாட்டி, அம்மாவின் நம்பிக்கை பொய்பிக்கவில்லை என்றே மனதில் தோன்றியது. அண்ணார்ந்து பார்த்தேன். அந்த சிட்டுக்குருவி கூடு கலையக்கூடாது என்று மனதில் வேண்டிக்கொண்டேன். எங்கள் வாழ்வில் புது
வசந்தம் பிறந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com