எச்சரிக்கை

ஊரடங்குமூன்றாம் முறையாக அமலுக்கு வந்தது. கரோனா தொற்று விகிதம் ஏறிக் கொண்டே போனது.
எச்சரிக்கை


ஊரடங்குமூன்றாம் முறையாக அமலுக்கு வந்தது. கரோனா தொற்று விகிதம் ஏறிக் கொண்டே போனது.

அந்தப் பொது மருத்துவ மனையில் நோயாளிகளின் கூட்டம் - கரோனா தொற்றுக்கான சிறப்பு வார்டுகள் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள். முழுவதுமாக மூடிய உடையுடன் நர்சுகளும், மருத்துவர்களும் தங்கள் பணியைச் செய்து கொண்டிருந்தனர். சின்ன சக்கரம் வைத்த தள்ளு வண்டியில் பழங்களும், பிரட்டும், முட்டை மற்றும் சத்தான உணவும் சென்று கொண்டிருந்தன. வழக்கத்தை விட நிசப்தமாய் இருந்தது - எல்லாரும் அணிந்திருந்த மாஸ்கினால் இருக்கலாம்!

""என்னா ஆயா, ஜொரமா? இந்தா சீட்டு வாங்கிக்கிட்டு, மூணாம் நம்பர் ரூமுக்குப் போ'' என்றார் நீல நிற உடையில் முகமூடியுடனும், கையில் க்ளவ்சுடனும் இருந்த மருத்துவமனைச் சிப்பந்தி.

ஆயாவுக்கு வயது எழுபதுக்கு மேல் இருக்கும். சாயம் போன புடவையை, இடுப்பிலிருந்து, கணுக்கால் வரை சுற்றியிருந்தது - ஹூக் இல்லாத ரவிக்கை, தொள தொளவென்று தொங்கிக் கொண்டிருந்தது - கையில் ஒரு ரப்பர் வளை, எண்ணெய் காணாத பரட்டைத் தலை, நெற்றியில் ஒரு பச்சை குத்திய பொட்டு. கன்னங்களில் குழி, கண்ணில்கலக்கம்.

""ஆயா, ஜொரம் கம்மியாத்தான் இருக்கு. இந்த மாத்திரைங்கள சாப்பிடுங்க.

வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கங்க - வெளீல போகாதீங்க, யாரையும் வீட்டில சேக்காதீங்க''

""சரிங்க டாக்டர். எல்லாரும் சொல்றாங்களே, கரோனா, அந்த ஜொரமா இது?''

""அப்படித் தெரியல. இருந்தாலும் டெஸ்ட் பண்ணுவாங்க. வீட்டு விலாசம் குடுத்துட்டுப் போங்க''

""ஆசுபத்திரில தங்கத் தேவையில்லையா?''

""தேவையில்ல ஆயா; இங்கே இருந்தாலே தொத்து அதிகமாக வாய்ப்பு அதிகம். மாத்திரைங்கள சரியா சாப்பிடுங்க. நிறைய சுடுதண்ணி குடிங்க. வீட்டிலேயே ரெஸ்ட் எடுங்க''- சொன்ன டாக்டரம்மாவுக்கு முப்பது வயசிருக்கும்

- குரலை வைத்து ஆயா மனசுக்குள்ள யூகம் பண்ணியது! தலை முதல் கால் வரை மூடிய பாதுகாப்புக் கவசம் ஆயாவுக்கு வித்தியாசமாகத் தெரிந்தது.

வெளியில், வாகனங்களும், மனிதர்களும் ஏதும் பயமின்றி அலைந்து கொண்டிருப்பது, சட்டம் மீறிய செயலாக இருந்தாலும், தவிர்க்க முடியாது என்பதைப் போன்ற தோற்றத்தைக் கொடுத்தது.

பலர் மாஸ்க் கூட அணியாமல் இரண்டு சக்கர வாகனங்களில், சாய்ந்து நின்றுகொண்டு, வாழைப்பழ வண்டிகளுடன் பேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

சாலையோர பெட்டிக்கடையில் இருவர், கழுத்தில் மாஸ்க்குடன் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தனர்.

இவற்றையெல்லாம் பார்த்தபடி, மாஸ்க் அணிந்த பெண் போலீஸ் ஒருவர் தன் வண்டியிலிருந்து இறங்கி, அருகிலிருந்த காய்கறி வண்டிக்காரனிடம் தக்காளியும், கொத்தமல்லியும் வாங்கிக் கொண்டு போனார்.

ஆயாவுக்குச் சொந்த ஊர், மேட்டுக் குப்பம் - கடலூருக்கு அருகில் உள்ள சின்ன கிராமம். புருஷன் கிடையாது. கட்டிக் கொண்டவன் வேறொருத்தியுடன் போகிறான் என்று தெரிந்தவுடன், அவனை அழைத்து, அமைதியாகப் பேசி, அவளுடனேயே அனுப்பி விட்டது. தாலிக் கயிற்றை அதிலிருந்த தங்கத்துடன் கழற்றி அவனிடமே கொடுத்து விட்டுத் திரும்பிப் பார்க்காமல் வந்து விட்டது! இருந்த ஒரு பிள்ளையும், சாதி விட்டு சாதி பெண்ணைக் கட்டிக்கிட்டு, ஊருக்குப் பயந்து, காணாமல் போய்விட்டான்.

கிராமம் பிடிக்காமல், சென்னைக்கு வந்து, வீட்டு வேலை செய்து கண்ணியமாகத் தன்னைக் காப்பாற்றிக் கொண்டது ஆயா. இருபது வருஷமா ஆயா வேலை செய்கிற அந்த வீட்டுக்கு இரண்டு மாடி - அகலம் குறைவாகவும், நீளம் அதிகமாகவும் இருக்கும் அந்தக் கால வீடு. கீழே வீட்டுக்காரரும், முதல் மாடியில் மத்திய தரக் குடும்பம் ஒன்றும் வசிக்கிறார்கள். இரண்டு குடும்பங்களுக்கும், வீட்டு வேலை செய்வது, பால் போடுவது எல்லாம் ஆயாதான். அரை மைல் தள்ளி இருந்த நல்லாங்குப்பத்தில் ஒரு சின்ன குடிசையில் இரவில் மட்டும் முடங்கிக் கொள்ளும். மற்ற நேரங்களில் இந்த வீட்டிலேயே மோட்டார் ஷெட்டில் தங்கி விடும்.

மொட்டை மாடியின் கோடியில் ஓர் அறை. வெளியில் பாத் ரூம், லெட்ரீன் -அங்குதான் கார்த்தியின் குடியிருப்பு. காலை முதல் இரவு வரை அலையும் பிழைப்பு அவனுக்கு. கிராமத்தில் அவன் பெற்றோர் ஏதோ விவசாயம், வேலை என்றிருக்கிறார்கள். மாதம் கார்த்தி அனுப்பும் சொற்ப பணத்தை நம்பி இல்லை அவர்கள் வாழ்க்கை!

துணி துவைப்பது, அயர்ன் செய்து வைப்பது, வீடு கூட்டுவது என உதவும் ஆயாவுக்கு மாதச் சம்பளம் கொடுப்பான் கார்த்தி - ஓடிப்போன பிள்ளையின் நினைவு வரும்போதெல்லாம், கார்த்தியை ஏக்கத்துடன் பார்க்கும் ஆயா. அவனுக்குக் காலையில், சூடான நாயர் கடை டீ வாங்கி வந்து கொடுக்கும். இரண்டு வேளையும் டீ மட்டும் இல்லாமல் ஆயாவுக்கு ஒரு வேலையும் ஓடாது.

கீழ் வீட்டில் விஷ்ணு சகஸ்ரநாமமும், முதல் மாடியில் சீர்காழியின் முருகன் பாடலும், மேலே கார்த்தி அறையில் இளையராஜாவின் பாடல்களும் தினமும் காலையில் கேட்கும். ஆயாவுக்குத் தன் கிராமத்து மாரியம்மன் கோயிலில் போடும் "தாயே கருமாரி' பாட்டுதான் பிடிக்கும்! பிடிப்பில்லாத வாழ்க்கையானாலும், நாலு பேருக்கு உதவியாய் இருப்பதில் ஆயாவுக்கு மகிழ்ச்சிதான்.

முதல் கரோனா ஊரடங்கில், குடிசையில் முடங்கியது ஆயா. ஆனாலும், சாப்பாடு, பாதுகாப்பு கருதி, வீட்டுக்கார அம்மாள், வீட்டின் பின்னால் ஷெட்டிலேயே தங்கிக் கொள்ளச் சொன்னாள். மாஸ்க் போட்டுக்கொண்டு, பால் வாங்கவும், கடைக்குக் கறிகாய் வாங்கவும் மட்டும் போகும். மற்ற நேரங்களில், வீட்டில் கிடைத்ததை சாப்பிட்டுவிட்டு, வீட்டிலேயே அடங்கிக் கிடக்கும். நாயர் கடை திறந்தால் டீ குடிக்கப் போகும் - மாமி வீட்டுக் காப்பி ஆயாவுக்கு அவ்வளவாகப் பிடிக்காது!

அன்று மாலை வீட்டுக்கு வந்த கார்த்திக்கு, தலைவலி, இருமல். உடம்பும் அனலாய்க் கொதித்தது. வேலைக்குப் போன இடத்தில் தொற்றியிருக்கலாம். வழியில் கடையில், டூ வீலர் நிறுத்தத்தில், பெட்டிக்கடையில் எங்கும் நிறையப் பேரின் அஜாக்கிரதையினால் தொற்று பரவுகிறது என்று அரசு என்ன சொன்னாலும் கேட்காத மக்கள். விவரம் அறிந்து வந்த கார்ப்பொரேஷன் அதிகாரிகள், மருந்து கொடுத்து, வீட்டிலேயே தனிமைப்படுத்தினார்கள். பச்சை நோட்டீஸ் ஒட்டிச் சென்றார்கள். யாரும் வீட்டிற்குள் வருவதற்கும், வெளியே செல்வதற்கும் அனுமதி இல்லை என்று எச்சரித்துவிட்டுச் சென்றார்கள்.

ஒரு வாரத்தில் கார்த்தி சரியாகிவிட்டான்; ஆனாலும் இன்னும் ஒரு வாரம் வீட்டிலேயே தனிமைப் படுத்தப்பட்டான் - ஆயாதான் தினமும் கஞ்சி, பால், பிரெட் என வாங்கிக் கொடுத்தது. கீழ் வீட்டு மாமியும் ஒரு வேளைக்குச் சமையல் செய்து ஆயாவிடம் கொடுத்து விடுவாள். இஞ்சி, மிளகு, எலுமிச்சை எல்லாம் போட்டு, கொதிக்க வைத்துக் கை வைத்தியமும் செய்தது ஆயா. கார்த்தியும் ஆயாவை ஜாக்கிரதையாக இருக்கச் சொல்வான். மாஸ்க் அணிவது, கை கால் சுத்தமாகக் கழுவுவது, கடைகளில் தள்ளியே இருப்பது என ஆயாவும் மிகவும் எச்சரிக்கையாக இருந்தது.

கார்த்தி ஆபீசில், சேல்ஸ் குறைந்தாலும், அவ்வப்போது "சர்வீஸ்' செய்வதற்குப் போய்வந்தான். கையில் பணம் குறைவாக இருந்தாலும், ஆயாவுக்குப் பணம் கொடுத்து விடுவான்.

இந்த முறை ஊரடங்கின் போதுதான், ஆயாவுக்கு இருமலும் ஜுரமும் வந்தது. மருத்துவ மனையிலிருந்து வந்தவுடன், மாமி வீட்டுக்குப் போகாமல், தன் பக்கத்து குடிசை அம்சாவிடம் விவரம் சொல்லி அனுப்பியது.

ஆயாவுக்கு ஜுரம் என்று தெரிந்தவுடன், குப்பத்தில் இருந்தவர்கள், அந்தப் பக்கம் வருவதையே தவிர்த்தார்கள். ஒரு வாய் தண்ணீர் கொடுக்கக் கூட யாரும் முன்வரவில்லை. தொற்றுக்கு எல்லோரும் அஞ்சினார்கள். வெளியே எங்கும் செல்லக் கூடாது என்ற அரசு உத்தரவு வேறு. கார்ப்பொரேஷனில் கஷாயம், மருந்துகள் கொடுத்தார்கள் - சாப்பாட்டுக்கு வெளியே செல்ல முடியாத நிலை. பட்டினியிலும், ஜுரத்திலும், குடிசையில் முடங்கிக் கிடந்த ஆயாவின் உடல்நிலை மோசமாகியது. கரோனாவை விடக் கொடுமையான தனிமையும், பட்டினியும் ஆயாவை வீழ்த்தின.

ஆயாவைப் பற்றிக் கேள்விப்பட்ட கார்த்தி, குடிசைக்கு வந்து பார்த்தான். தூரத்திலிருக்கும்போதே கையை ஆட்டி, ஆயா அவனைத் தள்ளிப் போகச் சொல்லியது. வருத்தத்துடன் கார்த்தி, அம்சாவிடம் பணம் கொடுத்து, ஆயாவுக்கு இரண்டு வேளையும் டீயும், பிரெட்டும் வாங்கிக் கொடுக்கச் சொன்னான். மேலும் அரிசியும், மளிகையும் வாங்கிக் கொடுத்து, ஒரு வேளைக்காவது சாப்பாடு போடச் சொன்னான். அம்சாவும் சம்சாரி. கார்த்தியின் உதவி அவளுக்கும் தேவையாய் இருந்தது. ஆயாவை முடிந்த வரையில் கவனித்துக் கொண்டாள் அம்சா - சில வேளைகளில், வாசலில் வைத்துவிட்டுப் போன பிரெட், டீ, கவனிப்பாரற்று, கிடக்கும். தெரு நாய் ஒன்று பிரெட்டைக் கவ்விச் சென்றுவிடும்.

வயதாலும், சரியான ஆகாரம் இல்லாததாலும், குடிசையில் கோடையின் வெப்பத்தாலும் ஆயாவின் உடல்நிலை மோசமாகியது. மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது. மருத்துவ மனை செல்லும் அளவுக்குக் கூட உடலில் வலு இல்லாமல் போனது. இரவில் தூக்கத்திலேயே ஆயாவின் உயிர் பிரிந்தது. அந்த இரவு முழுவதும், தெருவில் நாய் அழுத ஓலம் கேட்டுக் கொண்டிருந்தது.

ஆயாவின் இறுதிச் சடங்குகள் செய்ய யாரும் தயாராக இல்லை. சுற்றியிருந்தவர்கள், அருகிலிருந்த மயானத்தில் கூட ஆயாவுக்கு இடம் தர மறுத்தார்கள். போலீஸ் வந்தது. இறந்த ஆயாவின் உடலை அடக்கம் செய்வதில் எதிர்ப்புகள் வந்தன.

சமூக ஆர்வலர்கள், கார்ப்பொரேஷன் அதிகாரிகளுடன் சேர்ந்து, கார்த்தி ஆயாவின் உடலை, மருத்துவ மனைகளில் கட்டுவதைப் போல கட்டி, ஆம்புலென்ஸில் எடுத்துச் சென்று, ஊருக்கு வெளியே எரியூட்டினான். "நாம் நோயுடன் போராடவேண்டும், நோயாளியுடன் அல்ல' என்ற அரசு அறிவிப்பை யாரும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

தனக்குத் தொற்று வந்தபோது ஆயா, ""என்னை ஒண்ணியும் செய்யாதுய்யா. நீ நல்லா சாப்பிட்டு, மருந்து தின்னு, ஓய்வெடுய்யா; சாமியிருக்குது, நல்லாயிடுவே'' என்று சொல்லி செய்த உதவிகள் நினைவுக்கு வர, கார்த்தி கண்ணில் நீர் நிரம்பியது.

இரண்டு நாள் கழித்து, ஆயா வேலை செய்த வீட்டுக்காரருக்கு, ஒரு நோட்டீஸ் வந்தது. அதில் ஆதிலட்சுமிக்கு - ஆயாவின் முழுப் பெயரே இப்போதுதான் தெரிகிறது - வீட்டில் உள்ளவர்களுக்கு - கரோனா தொற்று இல்லை என்று ரிசல்ட் வந்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com