புதிய இசை மணத்தில் ஓர் ஆன்மிகப் புதையல்!

எதிர்பாராமல் தட்டுப்பட்ட தென்றலை போல, கரோனா தீ நுண்மி தொற்றால் சோர்ந்திருக்கும் மக்களின் மனங்களில் புத்தின்பம் பாய்ச்சும் புதுமையான இசைக்கலவையில் "முத்தைத்தரு பத்தித் திருநகை' பாடலை வடித்திருக்கிறார்
புதிய இசை மணத்தில் ஓர் ஆன்மிகப் புதையல்!


எதிர்பாராமல் தட்டுப்பட்ட தென்றலை போல, கரோனா தீ நுண்மி தொற்றால் சோர்ந்திருக்கும் மக்களின் மனங்களில் புத்தின்பம் பாய்ச்சும் புதுமையான இசைக்கலவையில் "முத்தைத்தரு பத்தித் திருநகை' பாடலை வடித்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான். காலங்காலமாகப் பாடப்பட்டு வரும்முருகன், ஐயப்பன், காலபைரவர், விநாயகர், வெங்கடேஷ்வரர், சிவபெருமானின் புகழ்பெற்ற பாடல்களை மறு உருவாக்கம் செய்திருக்கிறார் ஜிப்ரான்.

ஆன்மிகத் தேடலில் ஈடுபட்டுள்ளோருக்கு இசைப் புதையலாகக் கிடைத்திருக்கும் "ஜிப்ரானின் ஆன்மிகப் பயணம்' பாடல் தொகுப்பு, சமூக வலைதளங்களில் சக்கைப் போடு போடுகிறது. இது குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் அளித்த சிறப்புப் பேட்டி:

""ஒழுக்க நெறிகளை மட்டுமே பறைசாற்றி வரும் ஆன்மிக இன்பத்தை இன்றைய இளைஞர்களின் இசையில் தந்தால், அது அவர்களை நல்வழிப்படுத்தும். கரோனா காலத்தில் இளம் உள்ளங்களில் ஆன்மிக பலத்தை அதிகரித்து, அதன் வாயிலாக நேர்மறைச் சிந்தனை, தன்னம்பிக்கையைப் பெருக்க வேண்டுமென்பதே ஆன்மிக இசைத்தொடரின் நோக்கமாகும். கரோனாவால் மூடப்பட்டிருக்கும் ஆன்மிகத்தலங்களை இசையின் மூலம் இளம் மனங்களில் திறக்க வைப்பதே எங்கள் முயற்சிக்குக் கிடைத்துள்ள வெற்றியாகும்.

முதலாவதாக வெளியிடப்பட்டுள்ள ஆன்மிகத் தொடரில் ஸ்ரீஆதிசங்கரர், அருணகிரிநாதர், தல்லபாகா அன்னமச்சார்யா உள்ளிட்டோரின் பழம்பெருமை வாய்ந்த 6 பாடல்களை, சிம்பொனி இசையில் தந்துள்ளோம். இளையராஜாவுக்கு பிறகு ஆன்மிக இசைக்கு சிம்பொனி இசையைப் பயன்படுத்தியிருக்கிறேன். "முத்தைத்தரு', "ஹரிவராசனம்', "கணேஷ பஞ்சாட்சரம்', "ஓம் நமசிவாய', "பிரம்மம் ஒகட்டே', "காலபைரவாஷ்டகம்' ஆகிய 6 பாடல்களுக்கும் மொழி ஒரு தடையே இல்லை. அந்த பாடல்களில் ஒளிந்திருக்கும் ஆழமான கருத்துகள் ஆன்மிக இன்பத்தை வருடிச் செல்லும். அதனால்தான், காணொளியில் இப்பாடல்களின் பொருள்களையும் ஆங்கிலத்தில் தந்துள்ளோம். பொருள் பொதிந்த, ஆழமான, ஆன்மிக தவம் நிறைந்த, காலத்தை வென்ற பாடல்களின் வரிகளோடு இசையைப் பொருத்தியிருக்கிறோம் என்றே நினைக்கிறேன். பாடலின் பொருளைப் புரிந்து இசையோடு சுவைத்தால் ஆன்மிக மலர் மனதில் மலரும் என்பதில் ஐயமே இல்லை.

அருணகிரிநாதர் அருளிய "திருப்புகழ்' பாடல்களை தனி இசைத் தொடராக கொண்டுவரும் திட்டமும் உள்ளது. அருணகிரிநாதரின் பாடல் வரிகளிலேயே தாளமும், லயமும் ஒளிந்திருக்கும். காலம் கடந்தும் மக்களின் மனங்களை நிறைந்திருக்கும் "திருப்புகழ்' - ஐத் தொடர்ந்து திருப்பாவை போன்ற ஆன்மிக இலக்கியங்களுக்கும் இசை வடிவம் அளிக்க திட்டமிட்டுள்ளோம்.

ஆன்மிகத்திற்கு மதம் கிடையாது. ஆன்மிகமும், மதமும் வெவ்வேறானவை. நாம் அடிப்படை தர்மத்தோடு நடந்து கொள்ள வேண்டுமென்பதையே அனைத்து மதங்களும் போதித்து வந்துள்ளன. இசைக்கருவிகள் மீட்டும் இசையை மட்டும் தனியாக கேட்டு நாம் பழகியதில்லை. கடந்த 3 ஆண்டுகளாக இசைக்கருவிகளை மட்டுமே பயன்படுத்தி இசைத் தொகுப்புகளை உருவாக்கியுள்ளேன்.

சோனி நிறுவனத்தோடு இணைந்து பாப் இசை பாடல்களையும் கோர்த்திருக்கிறேன். அடுத்தகட்டமாக, திருவாசகம், திருக்குறள் இசைக்கோவை வரும். கர்நாடக இசை, நாட்டுப்புற இசையையும் புதுமையான இசைகோணத்தில் வழங்க திட்டமிட்டிருக்கிறேன்.

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் "ரணசிங்கம்', மாதவனின் "மாறா', "தீரன்' படத்தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் விக்ரம்பிரபு நடிக்கும் தமிழ் படங்களுக்கு இசையமைத்து வருகிறேன். மேலும் 3 படங்களுக்கான அறிவிப்பு வெளியாகும். தெலுங்கில் 2 படங்களுக்கு இசை கோர்த்து வருகிறேன்.

கரோனா கஷ்டத்தில் இருந்து திரையுலகம் மீண்டு வரவேண்டும். இன்னல்கள் நிறைந்த கரோனா காலம் கடந்துபோகும். திரையுலகம் பழைய கெத்தில் வலம் வரும்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com