வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மீண்டு வந்த மருத்துவர்கள்!

தெருவில் இறங்கி நடக்கும்போது,  யாராவது தும்மினால்,  இருமினால் பத்தடி தூரம் தள்ளி நடப்பவர்கள் இப்போது அதிகமாகிவிட்டனர்.

News image
Updated On :15 மார்ச் 2020, 4:32 pm

ந. ஜீவா

தெருவில் இறங்கி நடக்கும்போது, யாராவது தும்மினால், இருமினால் பத்தடி தூரம் தள்ளி நடப்பவர்கள் இப்போது அதிகமாகிவிட்டனர். பேருந்து, ரயில் பயணங்களில் முடிந்தவரை எங்கேயும் கைபடாமல் பயணம் செய்ய வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வுடன்தடுமாறுகிறவர்கள் பலர்.


பேருந்தில் பயணம் செய்யும் போது அருகில் இருப்பவர் இருமுறை தும்மினால், அந்த இருக்கையிலிருந்து எழுந்து அடுத்த இருக்கைக்குத் தாவிச் செல்பவர்கள் அதிகம். செல்போன்களில் யாரிடமாவது பேச விரும்பினால் அரசின் இருமலுடன் கூடிய எச்சரிக்கை விளம்பரங்களைக் கேட்டு அஞ்சி நடுங்குபவர்களும் உள்ளனர். நமக்கே இப்படியென்றால், கரோனா வைரஸ் தாக்குதலுக்கு பெருமளவில் உள்ளாகியிருக்கும் சீனாவில் மக்களின் வாழ்க்கைநிலை எப்படியிருக்கும்? கற்பனையே செய்ய முடியவில்லை.

சீனாவில் கடந்த வாரம் வரை, சுமார் 81 ஆயிரம் பேர் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றனர். அவர்களில் 3 ஆயிரத்து 200 பேர் இறந்துவிட்டனர். 60 ஆயிரத்து 200 பேர் நலமடைந்து வீட்டுக்குத் திரும்பி இருக்கின்றனர். 5000 பேர் நோயின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி, மோசமான நிலையில் இருக்கின்றனர்.

சீனா மட்டுமல்ல உலகம் முழுவதும் பல நாடுகள் இந்த வைரஸின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன. இத்தாலியில் ஏறத்தாழ 9,200 பேரும், ஈரானில் 8,100 பேரும், தென்கொரியாவில் 7,500 பேரும், இந்தியாவில் 56 பேரும் கடந்த வாரத்தில் இந்த நோய்த் தொற்றுக்கு உள்ளானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன (ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ஜ்ர்ழ்ப்க்ர்ம்ங்ற்ங்ழ்ள்.ண்ய்ச்ர்/ஸ்ரீர்ழ்ர்ய்ஹஸ்ண்ழ்ன்ள்/).

கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி யார் என்று தெரியாத நிலையில் நமக்கும் தொற்றிக் கொள்ளுமோ என்று நாம் பொது இடங்களில் இப்படி பயந்து சாகிறோம் என்றால், நோயாளிகளுக்கு மருத்துவம் செய்யும் மருத்துவர்களின் நிலை பற்றி நினைத்தே பார்க்க முடியவில்லை. நோய்த் தொற்று எந்த நேரத்திலும் ஏற்படலாம் என்ற நிலையில் ஆறாயிரம் அடி உயரத்தில் கம்பி மீது நடப்பது போன்றது மருத்துவர்களின் நிலை. உயிருக்குத் துணிந்து அவர்கள் ஆற்றும் மருத்துவப் பணி மகத்தானது.

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கு மருத்துவம் செய்த மூன்று மருத்துவர்கள், கரோனா வைரஸ் தொற்று தாக்குதலுக்கு உள்ளாகி நோயாளிகளானார்கள். பிற நோயாளிகளுக்குப் போன்றே அவர்களுக்கும் மருத்துவம் செய்யப்பட்டது. அவர்களும் சுயமருத்துவம் செய்து கொண்டனர். இப்போது நலமடைந்துவிட்டனர்.

மீண்டும் மருத்துவமனைப் பக்கம் தலைகாட்டாமல், மருத்துவப் பணியில் இருந்து ஒதுங்கிவிடுவார்கள் என்றுதானே நினைக்கிறீர்கள்? இல்லை... மீண்டும் அவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க வந்துவிட்டனர்.

அவர்களில் ஒருவர் மருத்துவர் செள நிங். வூகான் அருகிலுள்ள டாங்ஜி மருத்துவமனையில் இதயநோய் மருத்துவர். அவருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அவர் அதில் இருந்து நலமடைந்து கடந்த மாதம் 10 - ஆம் தேதி வேலைக்கு எந்த தயக்கமும் இல்லாமல் திரும்பிவிட்டார். இப்போது அறுவைச் சிகிச்சைக்கூடத்தில் நோயாளிகளின் உயிர்களைக் காக்கும் பணியில் அவர் ஈடுபட்டிருக்கிறார்.

வைரஸ் தொற்றால் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நோயாளிகளுக்கான பரிசோதனை செய்து அவர்களுக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தார் செள நிங். நான்கு நாட்கள் மருத்துவப் பணியில் அவர் மூழ்கிக் கிடந்தபோது, அவருக்கும் வைரஸ் தொற்றிக் கொண்டது. வீட்டில் தனியறையில் தனக்குத் தானே மருத்துவம் பார்த்துக் கொண்டார். போதிய ஓய்வு எடுத்துக் கொண்டார். நலமடைந்து மீண்டும் வேலைக்குத் திரும்பிவிட்டார். இதற்கிடையில் தனது சுயமருத்துவம் பற்றிய விவரங்களை சமூக ஊடகங்களில் வெளியிட அது வைரலாகி பலருக்கும் பயனைத் தந்திருக்கிறது.

இன்னொரு மருத்துவர் யுவான் ஹெய்டோ. வூகானில் உள்ள டாங்ஸிஹு மாவட்டத்தில் உள்ள பீப்பிள்'ஸ் மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் வேலை செய்து கொண்டிருந்தார்.

கடந்த ஜனவரி மாதம் 14 -ஆம் தேதி, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மூச்சுவிடத் திணறிக் கொண்டிருந்த ஒரு நோயாளி அவர் பணி செய்து கொண்டிருந்த அவசரச் சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு வரப்பட்டார். அவருக்கு மூச்சுக்குழலில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. நோயாளியின் மூச்சுக் காற்றில் இருந்து ஏராளமான கரோனா வைரஸ் அவசரச் சிகிச்சைப் பிரிவிலிருந்த காற்றில் கலந்தன.

யுவான் ஹெய்டோவுக்கு வைரஸ் தொற்றிக் கொண்டது. கடுமையான காய்ச்சல். 102 டிகிரிக்கும் மேலாக உடலின் வெப்பநிலை உயர்ந்தது. அவர் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அதற்குப் பிறகு அவசரச் சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டார். உடல்நிலை மிகவும் மோசமாகியது. உயிருக்கு ஆபத்தானநிலையில் அவர் இருக்கிறார்; எது வேண்டுமானாலும் அவருக்கு நேரலாம் என்றநிலை ஏற்பட்டது. யுவான் ஹெய்டோவின் நெருங்கிய நண்பரான ஹு மிங் என்பவர் அவரைப் பார்த்ததும் கதறி அழுத காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பட்டு அதைப் பார்த்த பலரையும் சோகத்துக்கு உள்ளாக்கியது.

சிறிதுநாளில் யுவான் ஹெய்டோவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. படிப்படியாக அவருடைய உடலின் வெப்பநிலை குறைந்தது. ஓரிரு நாட்களில் அவரைச் சுற்றி மீண்டும் பழைய பேச்சுக்குரல்கள் கேட்டன. அவர் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, அவர் கடைசியாக மருத்துவம் பார்த்த நோயாளியின் உடல் நிலை பற்றிய தகவல்களை தனது சக மருத்துவப் பணியாளர்களிடம் அவர் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தது.

ஒரு நோயாளி என்ற நிலையில் தான் நோயிலிருந்து மீண்ட மருத்துவ அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு கரோனா வைரஸ் தொற்று நோய்க்கான சிகிச்சைகளை எவ்வாறு மேம்படுத்துவது என்ற எண்ணமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

கடந்த பிப்ரவரி 21 - ஆம் தேதி மீண்டும் தனது மருத்துவப் பணிக்குத் திரும்பிவிட்டார் யுவான் ஹொய்டோ. மருத்துவமனையில் 19 - ஆவது மாடியில் உள்ள அவருடைய பிரிவில் பணி செய்யும் அவர், ""என்னுடைய சொந்த மருத்துவ அனுபவங்களை என்னிடம் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குப் பயன்படுத்துகிறேன்'' என்கிறார்.

இன்னொருவர் செள ஜின்ஜிங். பெண் மருத்துவர். வூஹான் பல்கலைக்கழகத்தின் ரென்மின் மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் வேலை செய்து கொண்டிருக்கிறார்.

கடந்த ஜனவரி மாதம் 17 - ஆம் தேதி காய்ச்சல் என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. அவருக்கு 10 வயது மகள் இருக்கிறாள். அவளிடம் தனக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதைச் சொல்வதற்கு செள ஜின்ஜிங்கால் முடியவில்லை.

பதினைந்து நாட்களுக்குப் பிறகு, கொஞ்சமாக வைரஸ் தொற்று குறையத் தொடங்கியது. நோய் குணமானது உறுதியானதும் செள ஜின்ஜிங் செய்த முதல் வேலை, மீண்டும் மருத்துவமனையில் பணியாற்ற விண்ணப்பித்ததுதான். பிப்ரவரி 24 - ஆம் தேதி மீண்டும் பணியில் சேர்ந்து கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறார்.

""இதெல்லாம் பெரிய விஷயமில்லை. வேறு வேலை செய்பவர்கள் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் குணமடைந்த பிறகு, மீண்டும் தங்களுடைய பழைய வேலைக்குத் திரும்புவதில்லையா? அதைப் போலத்தான் இதுவும்'' என்கிறார் செள ஜின்ஜிங் சாதாரணமாக. ஆனால் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, மருத்துவர்களால் குணமடைந்து வீடு திரும்பும் நோயாளிகள் மருத்துவப் பணியாளர்கள் முன்நின்று நன்றியுடன் பணிந்து வணங்கிச் செல்வது இந்த மருத்துவர்களின் உயிர்காக்கும் பணியின் உன்னதத்தை உலகிற்கே சொல்லிக் கொண்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.