பேல்பூரி
""ராகு -கேது பெயர்ச்சி உங்க ராசிக்கு சிறப்பா நடந்திருக்கு. இனிமேல் உங்களுக்கு திருமணத் தடை எதுவும் இருக்காது! பொண்ணுங்க ரவுண்டு கட்டி வருவாங்க!''


(திருச்சி டவுன் பஸ்ஸில் ஜோதிடர் தனக்குத் தெரிந்தவரிடம்)
""ராகு -கேது பெயர்ச்சி உங்க ராசிக்கு சிறப்பா நடந்திருக்கு. இனிமேல் உங்களுக்கு திருமணத் தடை எதுவும் இருக்காது! பொண்ணுங்க ரவுண்டு கட்டி வருவாங்க!''
""ஜோசியரே! கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. என் பொண்டாட்டி எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு உங்க பக்கத்துல தான் நிற்கிறா!''
பா.சிவானந்தம்,
திருச்சி.
(நாகர்கோவில் தலைமை அஞ்சலக வாசலில் இளைஞர்கள் இருவர்)
""மாப்ளே எந்த வேலைக்குப் போனாலும் போட்டியும்பொறாமையுமா இருக்காங்க. எங்கே... எதுக்கு போறதுன்னே தெரியலை''
""பேசாம துபாய்க்கு ஒட்டகம் மேய்க்கப் போயிடு... ஒரு பய போட்டிக்கும் வரமாட்டான். பொறாமையும் படமாட்டான்''
சு. நாகராஜன்,
பறக்கை.
(பொறையாரில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில்)
தை பிறந்தால்வழி பிறக்குதோ, இல்லையோ...
"தைரியம்' பிறந்தால் நிச்சயம் வழி பிறக்கும்!
-சரஸ்வதி செந்தில்,
பொறையார்- 7.
(இராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தின் பெயர்)
வாழைப் பந்தல்
ஆர். பூஜா,
சென்னை -1.
"யாருமே வேண்டாம்'என்ற முடிவை...
யாரோ ஒருவர் தான் எடுக்க வைக்கிறார்.
-மீ.யூசுப் ஜாகிர்,
வந்தவாசி.
திருமணமான பெண் ஒருத்தி தன்தாயாரைத் தேடி வந்தாள். அவளுடைய முகம் வருத்தமுற்றிருந்தது. கண்கள் கலங்கியிருந்தன.
தாயார் தன் மகளைப் பார்த்து, ""என்ன விஷயம்?'' என்று விசாரித்தார். மகள் தன்னுடைய கஷ்டங்களை எல்லாம் ஒவ்வொன்றாக தாயாரிடம் சொன்னாள். ""இவற்றிலிருந்து எப்படி விடுபடப் போகிறேன் என்று தெரியவில்லை'' என்று கூறி தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள் மகள்.
இவற்றை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட தாயார், தன் மகளை சமையலறைக்கு அழைத்துச் சென்றார். மூன்று பாத்திரங்களில் தண்ணீரை ஊற்றி, எரியும் அடுப்பிலே அதையெல்லாம் எடுத்து வைத்தார்.
சிறிது நேரத்தில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தது. ஒரு பாத்திரத்திலே கேரட்டை எடுத்துப் போட்டார். மற்றொரு பாத்திரத்தில் முட்டையைப் போட்டார். இன்னொரு பாத்திரத்தில் கொஞ்சம் காபித்தூளை போட்டார்.
அந்தப் பெண்ணுக்கு எதுவும் புரியவில்லை. இருந்தாலும் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தில், அந்தப் பாத்திரங்களை கீழே இறக்கி வைத்தார் தாயார். கேரட்டையும், முட்டையையும் எடுத்து வெளியே வைத்தார். காபியையும் ஒரு கோப்பையிலே ஊற்றினார்.
""மகளே இதெல்லாம் என்ன என்று தெரிகிறதா?'' என்று கேட்ட தாயார், ஒவ்வொன்றையும் தொட்டுப் பார்க்கச் சொன்னார்.
""எப்படியிருக்கிறது?'' என்று கேட்டார் தாயார்.
"" கேரட் ரொம்ப மென்மையாக இருக்கு. முட்டை கொஞ்சம் கடினமாக இருக்கிறது'' என்று சொன்னாள் மகள்.
காபியைக் குடித்து விட்டு, ""ரொம்ப சுவையாக இருக்கிறது'' என்றுகூறினாள்.
தாய் கூறினார்:
""கொஞ்ச நேரத்திற்கு முன்பு இந்த மூன்று பொருள்களையும் ஒரே மாதிரி தண்ணீரில் தான் கொதிக்க வைத்தோம். ஒரே நேரத்தில் கீழே இறக்கி வைத்தோம். ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. வாழ்க்கையில் கஷ்டங்கள் என்பவை இப்படிக் கொதிக்க வைக்கிற மாதிரி தான். கஷ்டங்களை நாம் எப்படிச் சந்தித்து சமாளிக்கப் போகிறோம் என்பதில் தான் விஷயமே இருக்கிறது'' என்று கூறினார் தாய்.
மகளின் முகத்தில் தெளிவு பிறந்தது.
ஜி. மஞ்சரி ,
கிருஷ்ணகிரி.
கயிறு அறுந்த பிறகுதான்
பட்டத்திற்கு தெரிகிறது...
தனது உயரத்திற்கு
தான் மட்டும் காரணம் அல்ல என்பது!
தி. பச்சமுத்து,
புதுப்பேட்டை.
கண்ட இடத்தில் கைகளை வைப்பது, பின்பு அதே கையால் செல்லிடபேசியை எடுத்துப் பேசுவது என்பது சாதாரணமாகிவிட்டது.
கைகளில் தொற்றிக் கொண்டுள்ள வைரஸ்களை- பாக்டீரியாக்களை - அடிக்கடி கைகளை சோப் போட்டுக் கழுவியோ, சானிட்டைஸரைக் கொண்டோ அழிக்க முடியும். கைகளைத் தூய்மையாக்கிக் கொள்ள முடியும்.
கிருமி தொற்றுள்ள செல்லிட பேசிகளை என்ன செய்வது? செல்லிட பேசிகளைத் தூய்மையாக்குவதற்காக வந்திருக்கிறது, போன் சோப்.
சோப் என்றதும் நாம் குளிக்க பயன்படுத்தும் சோப் போல இருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள். இது மூக்குக் கண்ணாடியை வைக்கும் பெட்டியைப் போல இருக்கிறது. அதன் உள்ளே செல்லிடபேசியை வைத்தால் சில நிமிடங்களில் தூய்மையாகிவிடும்.
இந்த போன்சோப்பின் மேல், கீழ் புறத்தில் புற ஊதாக் கதிர்களை வெளியிடும் பல்புகள் இருக்கின்றன. பல்புகள் வெளியிடும் புற ஊதாக் கதிர்கள் செல்லிட பேசியைத் தூய்மையாக்கிவிடுகிறது. செல்லிட பேசி தூய்மையானதும் அதைத் தெரிவிக்கும் எச்சரிக்கை ஒலி கேட்கும். திறந்து பார்த்தால், செல்லிட பேசி தூய்மையானதை அறிவிக்கும் ஒளியும் ஒளிரும்.
இந்த போன்சோப்பில் செல்லிட பேசியை வைத்திருக்கும்போது, செல்லிட பேசி சார்ஜ் ஆவது கூடுதல் சிறப்பு.
இந்த போன் சோப்பை 4 ஆயிரம் மணி நேரங்கள் அதாவது, 2,40,000 நிமிடங்கள் பயன்படுத்த முடியும். அதற்குப் பின் புற ஊதாக் கதிர்களை வெளியிடும் பல்புகளை மாற்ற வேண்டும்.
செல்லிட பேசியைத் தூய்மையாக்குவதைப் போல சாவி, பணம், கிரெடிட் கார்ட் என எல்லாவற்றையும் இந்த போன்சோப்பின் மூலம் தூய்மையாக்க முடியும். மிகப் பெரிய செல்லிட பேசிகளில் இருந்து போன்களை வைக்கும் சிறு பெட்டிகள் வரை எல்லாவற்றையும் இந்த போன் சோப் தூய்மையாக்கிவிடும்.
என்.ஜே.,
சென்னை-58.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...