திரைக்கதிர்

இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி  இப்போது நடிகை ஆகிவிட்டார். முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் "விருமன்' படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து வருகிறார்.
திரைக்கதிர்
Published on
Updated on
2 min read


இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி இப்போது நடிகை ஆகிவிட்டார். முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் "விருமன்' படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து வருகிறார். கோகுல் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கவுள்ள "கொரோனா குமார்' படத்திலும் அதிதி கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் முறைப்படி சங்கீதம் கற்றுள்ள அதிதி பாடகியாகவும் அறிமுகமாகி உள்ளார். தெலுங்கில் கிரண் கொர்ரபதி இயக்கத்தில் வருண் தேஜ் நடித்துள்ள "கானி' படத்தில் "ரோமியோ ஜூலியட்' என்ற பாடலை அதிதி ஷங்கர் பாடியுள்ளார். இதற்கு தமன் இசை அமைத்துள்ளார். இதே தமன்னை ஷங்கர் "பாய்ஸ்' படத்தில் நடிகராக அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

-------------------------------------------------------------

புகழ்பெற்ற எழுத்தாளர் முகுந்தனின் கதையிலிருந்து தழுவி உருவாக்கப்பட்ட, "மஹாவீர்யார்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகிஉள்ளது.

நிவின் பாலி மற்றும் ஆஷிஃப் அலி முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கும் இப்படம், வர்த்தகரீதியாகவும், விமர்சனரீதியாகவும் வெற்றி பெற்ற "1983' மற்றும் "ஆக்சன் ஹீரோ பிஜு' படங்களுக்குப் பிறகு நடிகர் நிவின் பாலி மற்றும் இயக்குநர் அப்ரித் ஷைனி இணைந்து பணியாற்றும் மூன்றாவது படம் ஆகும். நிவின் பாலி மற்றும் இயக்குநர் அப்ரித் ஷைனி ஆகியோர் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு இப்படத்தில் மீண்டும் இணைகிறார்கள். இப்படம் கரோனா கட்டுப்பாடுகள் நிலவிய கடுமையான காலகட்டத்தின் மத்தியில், ராஜஸ்தான், கேரளா ஆகிய இடங்களில் பெரும் பட்ஜெட்டில் பிரமாண்டமாகப் படமாக்கப்பட்டுள்ளது.

அப்ரித் ஷைனி திரைக்கதை எழுதியுள்ள இப்படத்தில் லால், லாலு அலெக்ஸ், சித்திக், ஷான்வி ஸ்ரீவஸ்தாவா, விஜய் மேனன், மேஜர் ரவி, மல்லிகா சுகுமாரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

-------------------------------------------------------------

விக்ரம் நடித்து வெளியாகி உள்ள "மகான்' அவரது 60- ஆவது படமாகும். இதைக் கொண்டாடும் வகையிலும், விக்ரமின் கடும் உழைப்புக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், அவரின் ரசிகர்கள் 60 பேர் தங்கள் மோட்டார் சைக்கிள்களில் பல குழுக்களாகப் புறப்பட்டு, தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் சென்று, தாங்கள் மிகவும் நேசிக்கும் நடிகரின் 60-ஆவது படத்தின் புகழைப் பரப்பி வருகின்றனர் சென்னை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி மற்றும் மதுரை முழுவதுமான பகுதிகளில் பைக் ஓட்டி, விக்ரமின் அன்பையும் நேர்மறை எண்ணத்தையும் மக்களிடம் பரப்பி வருகிறார்கள்.

இந்திய திரையுலகில் எவருடனும் ஒப்பிடமுடியாத, கதாபாத்திரத்திற்குள் புகுந்து கொள்ளும் விக்ரமின் திறமையான நடிப்பாற்றலை பாராட்டுவதற்காக ரசிகர்களால் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

"மகான்' தற்போது பிரைம் விடியோவில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளிலும், கன்னடத்தில் "மகா புருஷா' என்ற பெயரிலும் பிரத்யேகமாக உலக அளவில் வெளியாகியுள்ளது.

  -------------------------------------------------------------

"அரண்மனை 3' படத்திற்குப் பிறகு சுந்தர்.சி தனது "அவ்னி சினி மேக்ஸ்' நிறுவனம் சார்பில் புதிய படத்தைத் தயாரித்து இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் ஜீவா, ஜெய் , ஸ்ரீகாந்த் என மூன்று ஹீரோக்கள் நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக மாளவிகா ஷர்மா, அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தட்டா, ரைஷா வில்சன் ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் யோகிபாபு , கிங்ஸ்லி, பிரதாப் போதன், சம்யுக்தா ஷண்முகம், திவ்யா தர்ஷினி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். 19 வருடங்களுக்கு பிறகு சுந்தர் சி - யுவன்சங்கர் ராஜா கூட்டணி சேரும் படம் இது. கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார். சென்னை, ஊட்டி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக இதன் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

-------------------------------------------------------------

"பிரேமம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷ் ஜோடியாக "கொடி' படத்தில் நடித்தார். அதன் பிறகு தமிழில் குறிப்பிடும் படியாக படங்கள் இல்லை. தெலுங்கில் முன்னணி நடிகையாக ஆனார். இப்போது "தலைநகரம் 2' வில் நடித்து வருகிறார். அனுபமா சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்குகிறவர். வழக்கமாக கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது தான் வரைந்த ஓவியங்களை வெளியிட்டு வருகிறார். ஓவியம் வரையும் விடியோவையும் வெளியிட்டு வருகிறார். இந்த ஓவியங்களுக்கு பரவலான பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com