பனித்துளி!

சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது புறநோயாளிகள் பிரிவு.நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வரும் புற்றுநோயாளிகள், நம்பிக்கையுடனும்,  எதிர்பார்ப்புகளுடனும் வரும் மருத்துவமனை அது.
பனித்துளி!

சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது புறநோயாளிகள் பிரிவு. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வரும் புற்றுநோயாளிகள், நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புகளுடனும் வரும் மருத்துவமனை அது. எல்லா மருத்துவ வசதிகளும் ஒரே இடத்தில் அமைந்துள்ள புற்றுநோய் சிறப்பு மருத்துவமனை.

தனக்கிருப்பது புற்றுநோய்தான் என்பதை அறிந்தவர்கள், ஒருவித தயக்கத்துடன் "மேலே என்ன' என்பதைப் போல வருவார்கள். சந்தேகத்தில், வருபவர்கள் முகத்தில் ஒரு எதிர்பார்ப்பு - "அதுவாக இருக்கக் கூடாதே' - அச்சத்துடன் கூடிய ஒரு முகப் பாவத்துடன் வருவார்கள். சிகிச்சை எடுப்பவர்கள் ஒரு வித சிநேகப் பாவத்துடன், முகத்தில் ஒரு நம்பிக்கையுடன் வருவார்கள். இன்றைய அறிவியல் முன்னேற்றம், சிகிச்சை முறைகள் எல்லாம், புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்த முயல்கின்றன. வாழ்க்கையே ஒரு
நம்பிக்கைதானே!

""சிஸ்டர், இன்னிக்கு சீதம்மாவுக்கு நாலாவது கீமோதெரபி. ப்ளட் கவுண்ட், சுகர் எல்லாம் பார்த்துப் பிறகு ஆரம்பிக்கச் சொல்லுங்க..''

""சங்கருக்கு ஒரு எக்ஸ்ரே டெஸ்ட் எடுத்து, வெட் பிலிம் குடுக்கச் சொல்லுங்க! ஒரு வருஷமாயிடுச்சு கீமோ நிறுத்தி. நல்லா இருக்காரு, இருந்தாலும் இது ஒரு ரெகுலர் செக் அப்தான்!''

""அந்தப் பையன் சிவா இன்னிக்கு டிஸ்சார்ஜ். பிரட்னிசலோன், விட்டமின்ஸ் கொடுத்து, மூணு வாரம் கழிச்சு வரச் சொல்லுங்க..''

"பளிச்' சென்ற வெள்ளை உடையில், சிரித்த முகத்துடன் இருந்த நர்ஸ், நான் சொன்னவைகளைக் குறித்துக்கொண்டு, விரைவாக வார்டு நோக்கிச் சென்றார்.

காம்பவுண்டுக்கு வெளியே இருந்த நாயர்கடையிலிருந்தோ அல்லது யாருடைய கைப்பேசியிலிருந்தோ தெரியவில்லை - காற்றில் கரைந்து வந்து நெஞ்சை நிறைத்தது அந்த ஹிந்திப் படப்பாடல். "ஜிந்தகி அவுர் குச் பி நஹீ.. தேரி மேரி கஹானி ஹை' "வாழ்க்கை என்பது உன் கதையும், என் கதையும் அன்றி வேறில்லை' - லதா, முகேஷ் குரல்கள். ஒரு விநாடி, என் கவனம் பாட்டில் நின்றது. இரவின் அமைதியில் சீலிங் ஃபேனைப் பார்த்தவாறு அமைதியாய்ப் படுத்திருந்த ரஹீமை மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்தியது அந்தப் பாடல்!

ரஹீமுக்கு வயது பதினாலு. ஆந்திராவின் நெல்லூருக்கு அருகில் உள்ள மிகச் சிறிய கிராமத்திலிருந்து வருகிறான். வயதுக்கு மீறிய உயரம் கூடத் தான். முகத்தில் ஒரு புன்சிரிப்பு. அக்குளைத் தாங்கி இரண்டு பக்கமும் ஊன்று கோல்கள் - வலது கால், தொடையின் கீழ்ப் பாதியிலிருந்து ஆம்புடேட் செய்யப்பட்டிருந்தது. வெள்ளை முண்டாசு தலைகீழாகக் கட்டியதைப் போல, அறுவைச் சிகிச்சை செய்த இடத்தில் போட்டிருந்த பாண்டேஜில் இன்னும் பச்சை ரத்தத்தின் காய்ந்த சுவடுகள் திட்டுத் திட்டாய்த் தெரிந்தன. கையில் ஃபைலுடன் இரு பக்கமும் அவன் பெற்றோர் - முகம் முழுக்க சோகம் அப்பியிருந்தது. ஊன்று கோல்களைச் சுவரில் சாத்தி வைத்துவிட்டு, அருகிலிருந்த கட்டிலில் அமர்ந்தான் ரஹீம்.

""நெல்லூர்ப் பக்கனெ மா ஊரு சார். அரவம் - தமிழ் - தெலுசு சார். புள்ள நெல்லாயிடுவானா சார்? என்னமோ, பெரிய வியாதின்னு சொல்லி காலையே எடுத்துட்டாங்களே சார்'' - ரஹீமின் தாயாரின் குரல் உடைந்தது. அருகில் வெள்ளை லுங்கி, மல் ஜிப்பாவில் ரஹீமின் தந்தை, கண்களில் கண்ணீருடன் நின்றுகொண்டிருந்தார். படுக்கையில் கிடந்தபடி என்னையும் அவர்களையும் மாறி மாறிப் பார்த்த ரஹீம், உருதும் தெலுங்கும் கலந்த மொழியில், கவலைப் படாதீர்கள் என்று அவர்களைச் சமாதானப்படுத்தியது எனக்குப் புரிந்தது. அவன் என்னைப் பார்த்த புன்னகையில் வலி தெரிந்தது.
கையிலிருந்த ஃபைல், ரஹீமுக்கு எலும்பில் வரும் புற்றுநோய் என்றது. வேறெங்கும் பரவாததால், கட்டிக்கு மேல் கொஞ்சம் விட்டு, பாதித் தொடையில் ஆம்புடேட் செய்திருந்தார்கள். மேல் சிகிச்சைக்காக - ரேடியேஷன், கீமோ
தெரபி - எங்களிடம் அனுப்பப்பட்டிருந்தான். வழக்கமான கேள்விகள், பதில்கள், அறிவுரைகள், சிகிச்சை சம்பந்தமான சந்தேகங்கள், பதிலே சொல்லமுடியாத நல்லாய்டுவானா சார்?
""பயப்பட வேண்டாம்மா. வேறே எங்கெயும் பரவல. மாதம் ஒன்று வீதம் ஆறு மாதம் கீமோ - மருந்து - ஊசி போடுவோம். ஆப்பரேஷன் செய்த இடத்துக்குக் கொஞ்சம் ரேடியேஷன் - ஸ்பெஷல் கரண்ட் - கொடுப்போம். கண்ட்ரோல் பண்ணிரலாம்மா, வார்த்தைகளிலிருந்த உறுதி, மனதில் இல்லை, வியாதியின் தீவிரம் அப்படி''
சிகிச்சைக்காக ஜெனரல் வார்டில் அட்மிட் ஆனான் ரஹீம். அவனுக்குத் தமிழ் தெரியாது - எனக்குத் தெரிந்த தெலுங்கு அவனுக்குப் புரியாது! ஒவ்வொரு முறையும் தெலுங்கும் தமிழும் நன்கு அறிந்த ஒருவர் எங்கள் உரையாடலுக்கு உதவுவார். முதல் அட்மிஷன் மூன்று வாரங்கள் - தினமும் ரேடியேஷன், வாரத்தில் ஒன்று என மூன்று கீமோதெரபி -மருந்துகள், ஊசிகள், சலைன் ட்ரிப்புகள். புதிதாய்த் திறக்கப்பட்டிருந்த அந்தக் கட்டடத்தின் தரை தளத்தில் மூன்றாவது கட்டில் அவனுடையது. அவன் தந்தை விவசாயி, ஊருக்குச் சென்று விட்டார். வார்டுக்கு வெளியே இருந்த பெரிய புளிய மர நிழலில், உறக்கம் காணா கண்களுடன் அவன் அம்மா, கையில் ஒரு சிறு துணிப்பையுடன் நான் வரும்போதும், போகும்போதும் பார்த்தபடி அமர்ந்திருப்பார். ""நல்லாய்டுவானா ரஹீம்?' - கண்ணில் எப்போதும் தெரியும் கேள்வி.
பக்கத்து பெட்டிலிருந்த வெங்கட்ராமி ரெட்டிக்கு, பன்னிரண்டு வயது, உருண்டையான முகம், குள்ளமான, பூசினாற்போன்ற உடம்பு. கண்களில் எப்போதும் ஒரு குறும்புடன் புன்னகை! அவனுக்கு வேறு வகையான புற்றுநோய். மாதா மாதம் வந்து கீமோதெரபி எடுத்துக் கொள்பவன். ரஹீம் வந்த அன்றிலிருந்தே இருவரும் நண்பர்கள் ஆனார்கள். இணைத்தது வியாதியோ, மொழியோ அல்ல - இருவருடைய மகிழ்ச்சியும், வயதும்தான்!
எந்த நேரமும் தெலுங்கில் பேசிச் சிரித்த
படியே இருப்பார்கள்! அவர்களைச் சுற்றி ஒரு மகிழ்ச்சி வட்டம் இருந்துகொண்டே இருக்கும்! இருவரையும் எனக்கு எவ்வளவு பிடிக்குமோ, அவ்வளவு அவர்களுக்கும் என்னைப் பிடிக்கும். அவர்களைப் பார்த்தாலே மற்ற நோயாளிகளுக்கும், மருத்துவமனைச் சிப்பந்திகளுக்கும் ஒரு மகிழ்ச்சியும், அன்பும் ஏற்பட்டுவிடும்.
காலையில் வந்தவுடனே, சுந்தரத் தெலுங்கு கலந்த ""குட் மார்னிங் சார்'' - புன்னகை! சில நாள்களிலேயே என் அரைகுறைத் தெலுங்கை ரஹீம் புரிந்து கொண்டான் - சில ஆங்கில, தமிழ் வார்த்தைகளுடன் என்னுடன் பேசுவான்.
""என்ன ரஹீம், நாஸ்தா தின்னாவா?'' என தெலுங்குக்கு ரஹீமும், ராமி ரெட்டியும் சிரிப்பார்கள்.
""ஆவ்னு சார். சால பாகவுந்தி சார் டிபனு..''- இது ரஹீம்.
""சட்னிலொ காரம் தக்குவா உந்தி சார்!'' - ராமி ரெட்டி.
நான் கொஞ்சம் புரியாமல் முழிக்க, ரஹீம், சட்னிலோ கொஞ்சம் காரம் "கம்மி' ன்டாரு சார் என்று விளக்குவான். அவர்களிடம் இருந்த மகிழ்ச்சியும், துள்ளலும் எவரையும் எளிதில் தொற்றிக் கொள்ளும்!
சில மருத்துவக் காரணங்களுக்காக, ரஹீம் இரண்டு வாரங்கள் கூடுதலாகத் தங்க நேரிட்டது. மருந்துகளினால், ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைந்து விட்டன. வெளியில் நோய்த் தொற்றுக்கு வாய்ப்பு அதிகம் எனபதால், இரண்டு அல்லது மூன்று நாள்கள் மருத்துவமனையில் வைத்திருந்து, தேவையானால் ரத்தம் செலுத்தி, பின்னரே வீட்டுக்கு அனுப்பி வைப்பதுதான் சிகிச்சை முறை. அதற்குள் அந்த மாதசிகிச்சை முடிந்து, ராமி ரெட்டி, டிஸ்சார்ஜ் ஆகி, அடுத்த முறையும் வந்து கீமோ எடுத்துச் சென்றுவிட்டான்.
தன் வீட்டிலிருந்து ரஹீமுக்காகப் பழங்களும், தின்பண்டங்களும் கொண்டு வந்திருந்தான் ராமி ரெட்டி. இந்தக் குழந்தைகளுக்கு எங்கிருந்து வந்தது இந்தப் பந்தமும், பாசமும்? வியப்பாயிருந்தது.
அன்று இரவு டியூட்டியில் - ரவுண்ட்ஸ் வரும்போது, இனிமையான ஹிந்திப் பாடல் - "ஜிந்தகி யோர் குச் பி நஹீ' - மூன்றாவது பெட்டில் இருந்து கசிந்து கொண்டிருந்தது. மங்கிய இரவு விளக்கின் ஒளியில், சுழன்றுகொண்டிருந்த ஃபேனைப் பார்த்தவாறு, "வாழ்க்கையில் ஒன்றும் இல்லை' என்றவாறு படுத்திருந்தான் ரஹீம். தலைமாட்டில் ஓர் ஆரஞ்சு கலர் சான்யோ டிரான்சிஸ்டரில் இருந்து பாடல் வந்து கொண்டிருந்தது. சப்தமில்லாமல் சுவரோமாக நின்று கொண்டு முழுப் பாடலையும் கேட்டேன். இன்றுவரை அப்படியொரு அமைதியை நான் அனுபவிக்கவில்லை. ரஹீமைத் தொந்திரவு செய்யாமல் ரவுண்ட்ஸ் முடித்து என் அறைக்குச் சென்று விட்டேன்.
இருந்த சில வாரங்களுக்குள் ரஹீம், வார்டு வேலைகளில் நர்சுகளுக்கு உதவ ஆரம்பித்துவிட்டான். மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்குவது, உணவு நேரத்தில் எல்லோருக்கும் உணவு வழங்குவது எனத் தன் ஊன்றுகோல்களுடன் அவன் செய்த உதவிகள், எல்லோரையும் மகிழ்ச்சியில் வைத்தது!
பிரச்னைகள் ஏதுமின்றி, ரஹீம் ஐந்தாம் வாரம் முடிவில் டிஸ்சார்ஜ் ஆனான். சிரித்தபடி, கையில் துணிப் பையுடன், ""ஒஸ்த்தாம் ஸார்.. புய்ட்டு வரன் ஸார்'' கட்டைகளைத் தாங்கியபடி, படியிறங்கினவனைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தேன். சிகிச்சைக்குப் பிறகு உடல் நன்கு தேறியிருந்தது ரஹீமுக்கு.
நான்காம் முறை சிகிச்சைக்கு வந்த வந்த ரஹீம், ராமி ரெட்டியைப் பற்றிக் கேட்டான்.
""ராமி ரெட்டி எல்லாக உன்னானு சார்? ஒச்சிப் போயினாடா?''
ராமி ரெட்டி இந்த மாதம் வந்திருக்க வேண்டியவன். ஆனால், அவனுக்குத் திடீரென்று நோய் அதிகமாகி, சிறுநீரகம் வேலை செய்ய முரண்டு பிடித்ததையும், ஒரு வாரகாலப் போராட்டத்துக்குப் பின் மறைந்தே போனான் என்பதையும் நான் இந்தக் குழந்தையிடம் சொல்ல விரும்பவில்லை.
செயற்கையாகச் சிரித்து, ""அவனது வீட்டில் விசேஷம் இருப்பதால் அடுத்த வாரம்தான் வருகிறான்'' என்று பொய் சொன்னேன். ""ஓ. அல்லாகா..'' என்றவன் முகத்தில் ஒரு நிம்மதி. என்னால் கொடுக்க முடிந்த மிகச் சிறிய நிம்மதி!
காலம் நிற்காமல் ஓடிக்கொண்டேதானே இருக்கிறது? ரஹீமின் சிகிச்சை முடிந்தது. இனி ஆறு மாதத்துக்கொரு முறை செக் அப்புக்கு வந்தால் போதும் என்ற நிலை. அவன் காலுக்கு அளவெடுத்து, செயற்கையான லெதர் கால் பொருத்தப் பட்டது. கொஞ்சம் நடை பழகி, வீட்டுக்குப் போகும்போது ரஹீம் என்னிடம் வந்தான்.
""சால தாங்க்ஸ்... ஸார்'' என்றவன் பையிலிருந்து ஒரு புதிய ஆரஞ்சு கலர் சான்யோ டிரான்சிஸ்டரை எடுத்து என்னிடம் கொடுத்தான்!
துபாயிலிருக்கும் அவன் மாமாவிடம் சொல்லி, எனக்காக வாங்கியதாகச் சொன்னான். நான் மறுத்ததை அவன் பொருட்படுத்தவில்லை - அதற்குமேல் மறுக்க எனக்கு மனமில்லை. அருகில் வந்து வணங்கிச் சென்ற அம்மாவின் கை பிடித்து செயற்கைக் காலுடன் நடந்து போன ரஹீம், "வாழ்க்கையில் என்ன இருக்கிறது?' என்ற கேள்விக்கான அழகான பதிலாகத் தெரிந்தான்.
தினமும் ஏதாவதொரு ஸ்டேஷனில் - இந்திப் பாடல்கள் வரும் ஸ்டேஷனில் - "ஜிந்தஹியோர் குச் பி' பாடல் வருமா என்று காத்திருந்த எனக்கு ஏமாற்றமே. ஆரஞ்சு சான்யோ வைப் பார்க்கும் போதெல்லாம், மேலே சுழலும் ஃபேனைப் பார்த்தவாறு படுத்திருந்த ரஹீமே என் மனதில் நிழலாடினான்.
ஆறு மாதத்திற்கொரு முறை ரஹீம் வருவதும், எல்லாப் பரிசோதனைகளும் செய்துகொண்டு, திரும்பிப் போவதுமாய் நடந்து கொண்டிருந்தது.
ஒரு திங்கள்கிழமை காலை மருத்துவமனை வந்தவுடன் நர்ஸ், இன்று அதிகாலை மூச்சுவிடுவதில் சிரமம் என்று ரஹீம் அட்மிஷன் சார். நுரையீரலில் நோய் பரவியிருக்கிறது. இரண்டு பக்கமும் மாரில் நீர் சேர்ந்திருக்கிறது. கண்டிஷன் க்ரிடிகல்தான் என்றாள். எதிர்பார்த்ததுதான் என்றாலும், இவ்வளவு சீக்கிரம் நான்காம் நிலைக்குப் போய்விடும் என்று நினைக்கவில்லை.
ஆக்சிஜன் மாஸ்க், சலைன் ட்ரிப், கை கால்களிலிருந்து மானிட்டரை இணைக்கும் வயர்கள், நெளி நெளியாய் ஒளிரும் வண்ணக் கோடுகள் காட்டும் திரை இவற்றின் மத்தியில் கண் மூடிப் படுத்திருந்தான் ரஹீம். மெதுவாகத் தொட்டேன் - கண்விழித்துப் பார்த்து, கோணலாய் சிரித்தான். ""பாக உன்னாரா சார்?'' காற்றாய் வந்தது அவனது வார்த்தைகள்.
""கவலைப்படாதே, நல்லாயிடும். ஊசி, மருந்தெல்லாம் கொடுத்திருக்கிறது'' என்றேன், மெல்லக் கையைத் தட்டியவாறு.
மீண்டும் புன்னகைத்து ""ராமி ரெட்டி எல்லாக உன்னானு சார்?''
என்னால் பதில் சொல்லமுடியவில்லை. மையமாகச் சிரித்து, தலையசைத்து, கேஸ் ஃபைலைப் பார்த்தபடி நகர்ந்தேன். தன் உடல் உபாதைகளைக் காட்டிக் கொள்ளாத முகம். அமைதியும் புன்னகையும் தவழும் முகம். ரஹீமை இழந்துகொண்டிருக்கிறோம் என்ற நினைப்பு என்னைப் பாறையாய் அழுத்தியது.
சிகிச்சைகளை நிராகரித்தது பரவிய நோய். மாரில் நீர், மூச்சு முட்டல், அவஸ்தை - என் கண்னெதிரிலேயே விழிகள் நிலை குத்தி நிற்க, சிரித்தபடி விடை பெற்றான் ரஹீம். தலை மாட்டில் அவனுடைய ஆரஞ்சு கலர் சான்யோ இரண்டு ஆப்பிள்களுக்கிடையே இருந்தது. அதிலிருந்து எந்தச் சப்தமும் இல்லை. "ஜிந்தகியோர் குச்' பாட்டு வந்தால் ஒரு வேளை கேட்பதற்கு உயிர்ப்பானோ?
ரஹீமுக்கு அவன் முடிவு முன்னமேயே தெரிந்திருக்கலாம். அவன் காட்டிய தைரியமும், விவேகமும், வாழ்க்கையையும், மனிதர்களையும் நேசித்த நேயமும் வேறு எந்த மனிதரிடமும் நான் காணாதவை. ஒரு முறை கூட அவன் தன் வியாதியைப் பற்றியோ, அதன் தீவிரத்தைப் பற்றியோ என்னிடம் எதுவும் பேசியதில்லை. ராமி ரெட்டியிடம் காட்டிய நட்பும், அன்பும் நான் எங்கும் காணாதவை.
வாழ்க்கையில் என்ன இருக்கிறது? நான் அதற்குப் பிறகு "ஜிந்தகியோர்' பாடலுக்காக ஆரஞ்சு கலர் சான்யோவை ஆன் செய்யவே இல்லை. ரொம்ப நாள்களுக்கு என் ஷோ கேஸில் ஆரஞ்ச் கலர் சான்யோ ரஹீமின் நினைவுகளைச் சுமந்துகொண்டு அமைதியாய் நின்றுகொண்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com