கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

அன்றே கொல்லும்

அந்தக் கோயிலுக்குப் போவதென்றால் அவளுக்கு மிகவும் பிடிக்கும். இத்தனைக்கும் கோயில் அவள் வீட்டை விட்டுச் சற்று தள்ளியே இருந்தது. அவள் இருப்பது தென்சென்னை.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:27 am

இந்துமதி

அந்தக் கோயிலுக்குப் போவதென்றால் அவளுக்கு மிகவும் பிடிக்கும். இத்தனைக்கும் கோயில் அவள் வீட்டை விட்டுச் சற்று தள்ளியே இருந்தது. அவள் இருப்பது தென்சென்னை. கோயில் இருப்பது வட சென்னையில் நெரிசலான தெரு ஒன்றில்.
ஓட்டிச் செல்லும் வண்டியை நிறுத்தக் கூட இடமிருக்காது. கோயிலைச் சார்ந்த யாராவது வந்து, இரு சக்கர வாகனங்களையெல்லாம் நகர்த்தி, இவளது காரை கோயில் சுவரை ஒட்டி நிறுத்திக் கொடுப்பார்கள். வழிபாடு முடித்து, இவள் வரும்போது எடுத்துக் கொடுப்பார்கள்.
இவள் அந்தக் கோயிலில் உள்ள அத்தனைப் பேருக்கும் பிடித்தவளாளாள். அனைவரிடமும் சமமாகப் பழகி, அன்பாகவும், பிரியமாகவும் பேசியது அவர்களைக் கவர்ந்தது. மேலும், இவள் பிரபலமான பத்திரிகையின் ஆசிரியை என்பதால் கூடுதல் கவனம் கிடைத்தது. 
செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் ராகு காலங்களில் தவறாமல் கோயிலுக்கு வருவாள்.  கருவறையை நூற்று எட்டு முறை சுற்றி பிரதட்சணம் செய்வாள்.  அந்த நேரங்களில் கருவறையை ஒட்டிய வெளிப் பிரகாரத்தில் கதவோரத்தில் சுவரையொட்டி அமர்ந்து,  கோயிலின் பிரதான அர்ச்சகர் மணி பண்டாரம் சொல்லும் தமிழ்ப் பக்திப் பாடல்களைக் கேட்பதற்கென்றே ஓடி வருவாள். 
பேரிலேயே மணி இருப்பதாலோ, என்னவோ கோயிலின் காண்டா மணி மாதிரியான கணீர் குரல் அவருக்கு.  ஸ்பஷ்டமான உச்சரிப்பு நாளெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் போலிருக்கும் அவளுக்கு. அவர் பாடி முடித்த பின்னரும் ரீங்காரமிடும். வெறும் இசையைவிட பக்தியோடு கூடிய இசைக்கு அப்படிப்பட்ட ரீங்காரமும், ஈர்ப்பும் உண்டு என்பதை அவள் உணர்ந்திருந்த காரணத்தினாலே ஓடி வருவாள்.
""என்னம்மா சர்வேஸ்வரீ.. என்று தரையில் கை ஊன்றி தன் பாரசரீரத்தைத் தூக்கிக் கொண்டு எழுந்து நிற்பவர், அவளைக் கண்டதும் முகம் விகசரிப்பார்.
""வாங்க சகோதரி''
எல்லோரும் அவருக்கு சகோதரிதான். ஒருமுறை அவர் மனைவி வந்து நின்றார். வந்திருப்பவர் யார் என்று கூட கவனிக்காமல், ""வாங்க சகோதரி!'' என்று சொல்லிவிட்டார். சுற்றி நின்ற கூட்டம் கொல்லென்று சிரித்தது.
""என்னங்கய்யா.. ? அம்மனைக் கூட சகோதரின்னுவீங்க போலிருக்கு..'' என்றதும், "" எனக்கு சகலமும் இந்த அம்மாதான்!'' என்றார்.
அவருக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் செந்தில்நாதன் சமயபுரம் மாரியம்மன் கோயில் திருப்பணியில் இருந்தார்.  இரண்டாவது மகன் பரமசிவம் அருகே இருந்த முருகன் கோயில் கைங்கர்யம் பண்ணிக் கொண்டிருந்தார். மூன்றாவதும் கடைசியுமான மகன் கார்த்திகேயன் இதே கோயிலில் கல்லூரிப் படிப்புடன் அவ்வப்போது வந்து அப்பாவுக்கும் சேவகம் செய்வான். 
மணி பண்டாரத்தின் கம்பீரமும், அவரது மனைவி ஈஸ்வரியின் அழகையும் சேர்த்துப் பிறந்தவன்.  நெடுநெடுவென்ற உயரம், நல்ல நிறம், தீர்க்கமான மூக்கு, பளீரிடும் கண்கள், சிரிக்கும்போது தெரியும் அரிசி கோர்த்த பற்கள், கூடவே அவர்கள் பரம்பரையில் இல்லாத படிப்பும் சேர்ந்து கர்வமும் அகங்காரமும் கொண்டவனாக்கி இருந்தது.
அவனது சரளமான ஆங்கிலமும், இலக்கிய அறிவும் இவளை அவனிடம் அதிகம் பேச வைத்தது. 
""வீட்டுக்கு வாயேன் கார்த்தி..''
ஒருநாள் வந்தவன் பின்னர் அடிக்கடி வர ஆரம்பித்தான். அம்மனுக்கு சார்த்திய மாலையும், விபூதி குங்குமப் பொட்டலங்களும் கொண்டு தருவான். அவளை எப்போதும் ""மிஸஸ் ராமநாதன்'' என்று மரியாதையும் கண்ணியமும் கலந்தே அழைப்பான்.
"'சூடா காபி வேணும்!'' என உரிமையோடு கேட்பான். சில சமயங்களில் ""சாப்பாடு போடுங்க!'' என்று உட்காருவான். இருவரும் பேசிக் கொண்டே சாப்பிடுவார்கள். 
அவன் பேச்சில் கிண்டலும், நக்கலும் துள்ளும். வானத்தை இரு விரல்களுக்கு இடையில் மடித்து வைத்துக் கொண்டிருப்பவனாகத் தெரிவான். தான் அழகன் என்பதிலும், அறிவாளி என்பதிலும் மிகுந்த பெருமை. கோயிலில் அவளைச் சுற்றி நிறைய தாவணிக் கனவுகள் மிதக்கும். 
அபிஷேகமும், அர்ச்சனையும் இத்தனை அழகாகப் பண்ணுவான். அலங்காரம் பண்ணினால், அம்மன் அன்று அவ்வளவு அழகாக ஜொலிப்பாள். அவன் கையில் வித்தை இருந்தது. முகத்தில் அழகு இருந்தது. பேச்சில் ஆங்கிலம் வந்தது. ஆகவே யாரையும் எடுத்தெறிந்து பேசும் சுபாவமும் கூடிக் கொண்டது.
என்ன காரணத்தினாலோ இவளிடம் மட்டும் பவ்யமாக நடந்துகொள்வான். வாயடித்து வம்புக்கு இழுப்பான்.
""ஆமாம்.  உங்க மீடியா ஆட்களைப் பற்றி தெரியாதா?'' என்பான்.
"" என்ன தெரியும் உங்களுக்கு?''
""எல்லாம் தெரியும். மீடியாவில் நிறைய அப்ரெண்டீஸ் இருக்காங்க.. முக்கால்வாசி மீடியா ஆள்கள் எங்க காலேஜ்லேயிருந்து விஸ்காம் படிச்சிட்டுப் போனவங்கதானே!''
""நான் பத்திரிகை ஆள்தானே..?''
""பத்திரிகை மட்டும் மீடியாவுக்கு சளைச்சதா என்ன?''
""எதை வச்சு அப்படி சொல்றீங்க.. கார்த்தீ..?''
""சொல்றேன். சொல்றேன். இந்தக் கச்சேரியை இன்னொரு நாள் வச்சிக்குவோம். இன்னிக்கு நிறைய வேலை இருக்கு..'' என்று நழுவி விட்டான்.
அன்று கோயிலினுள் நுழைந்த உடனே கார்த்திகேயனைப் பார்த்தாள். அவனது அப்பாவுக்கென ஒதுக்கப்பட்டிருந்த சிறிய அறையின் படிக்கட்டுகளில் உட்கார்ந்திருந்தான். மிகவும் அதிகமாகவே தனித்திருந்தான். அதுவும் பெண்கள் பரிவாரமின்றி தனியாகக் கண்டது அவளுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. 
""வாங்க.  மிஸஸ் ராமநாதன்..'' என்று எழுந்துகொண்டான்.
""என்ன கார்த்திகேயன். தனியா உட்கார்ந்திருக்கீங்க...''
""தனியா உட்காரணும்னு தோணிச்சு. உட்கார்ந்திருக்கேன்!''
"" உங்களைச் சுற்றி நிறைய கோபியர் கூட்டம் இருக்குமே.. இன்னிக்கு காணோமேன்னு கேட்டேன்..''
""அமாவாசை, கிருத்திகைன்னால் நிறைய பேர் வரமாட்டாங்க..''
""ஆனால் இன்னிக்கி செவ்வாய்க்
கிழமை ஆச்சே.. ராகு கால பூஜை இருக்கே..''
""ஆமா.. இன்னும் கொஞ்ச நேரத்துல  துர்க்கையம்மன் சந்நிதி நெறஞ்சிடும்..''
""அதுவரை நீங்க.. ஃப்ரீதானே கார்த்திகேயன்.. அன்னிக்கு பாதியில் விட்ட கச்சேரியை இன்னிக்குத் தொடரலாமா..?''
""எந்தக் கச்சேரி''
""பத்திரிகைக்காரங்களைப் பத்தின கச்சேரி..''
""ஓ! அதுவா..? என் காதுல விழுந்ததைத் தான் சொன்னேன்!''
"'என்ன விழுந்திச்சு?''
""பெண் எழுத்தாளர்களைப் பற்றி..''
இவள் நெற்றியும், புருவங்களும் சுருங்கப் பார்த்தாள்.
""என்ன அப்படிப் பார்க்காதீங்க..'' என்றவன் ஒரு குறிப்பிட்ட பெண் எழுத்தாளர் பெயரைச் சொன்னான்.
""பத்து பைசா குடுத்து கூப்பிட்டா கூட வருவாங்களாமே..?''
""என்ன, என்ன, என்ன.....?!''  - அதிர்ந்து போனாள் இவள்.  உடல் குலுங்கியது.  மனசு வலித்தது. அடிவயிறு பற்றி எரிந்தது.
"ஒரு பெண்ணைப் பற்றி.. அதிலும் எழுத்தாளரைப் பற்றி எவ்வளவு தரக்குறைவாக விமர்ச்சிக்கிறான். தன்னிடம் அவளைப் பற்றி இத்தனை துச்சமாய்ப் பேசுபவன், தன்னைப் பற்றி மற்றவர்களிடம் பேச மாட்டான் என்பது என்ன நிச்சயம்..?'  என்று நினைத்தவள் அங்கு நிற்கப் பிடிக்காமல் உள்ளே போனாள். கருவறைக்கு வெளியே அம்மன் முன் நின்று கை கூப்பினாள்.
""என்ன பேச்சு பேசிவிட்டான் தாயே..! பெண் தெய்வமான உனக்கு அபிஷேகமும், அலங்காரமும், அர்ச்சனையும் செய்கிறவன் வாயில் இருந்து வர வேண்டிய வார்த்தைகளா இவை..? பெண் குலத்தையே அசிங்கப்படுத்தி விட்டானே..? கேவலப்படுத்தி விட்டானே.  பார்த்துக் கொண்டு பேசாமல் இருக்கலாமா.. ? நீயும் கேட்டாய் அல்லவா..? உன் காதிலும் விழுந்ததல்லவா..?''
"" .... நான் உன்னை உண்மையாகப் பூஜிக்கிறவள் என்றால், செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் தவறாமல் உன்னை 108 முறை சுற்றி வருவது உண்மை என்றால், அரசனைப் போல் அன்றே தண்டிக்க வேண்டும்.. இன்று செவ்வாய்க்கிழமை. ராகு காலத்தில் உன்னைச் சுற்ற வந்திருக்கிறேன். என் 108 சுற்றுகள் முடிவதற்குள் தெய்வமாய் நின்று கொல்லாமல், அரசனாக அவனை இன்றே தண்டிக்க வேண்டும். நான் அதைக் காண வேண்டும்!''
சந்நதம் வந்தவளைப் போல் சொல்லிவிட்டு, வலம் வர ஆரம்பித்தாள்.
அந்த நேரத்தில் அம்மன் சந்நிதியில் அதிகக் கூட்டமில்லை.  ஒட்டியிருந்த துர்கையின் கர்ப்பக் கிரகத்தில் பெண்கள் கூட்டம் மொய்த்துக் கொண்டது. நீண்ட அலுமினிய மேஜையில் இடமே இல்லாது எலுமிச்சை விளக்குகள். துர்கை சந்நிதி பூஜையை கார்த்திகேயனே கவனித்துக் கொண்டான். அர்ச்சனை வேண்டி கேட்டவர்களுக்குச் செய்து கொடுத்து கொண்டிருந்தபோது, ஒரு நெடிய ஆண் உருவம் உள்ளே நுழைந்ததை வலம் வந்த இவள் கவனித்தாள்.
""யார் இவர்..? - புது முகமாகத் தெரிகிறதே..? இதற்கு முன் கோயிலில் பார்த்த ஞாபகமே இல்லையே...?''
வந்த அந்த மனிதர் அம்மன் பக்கம் திரும்பக் கூட இல்லை. நேராக துர்கையம்மன் இருப்பிடம் சென்றார். அர்ச்சனை முடிந்து, பித்தளைத் தாம்பாளத் தட்டில் சூடம் ஏற்றி, ஆரத்தி காட்டினான் கார்த்திகேயன்.
ஜ்வாலையைத் தொட்டு ஒற்றிக் கொள்ள வசதியாக நீட்டினான். அத்தனைப் பேருக்கும் குங்குமம் கொடுத்தான்.
""இங்க கொஞ்சம் சூடம் காட்டுங்க சாமீ..?' - அந்தப் புதிய நெடிய உருவம் பெண்களுக்கெல்லாம் பின்னால் முன்னேற இடமின்றி நின்று கேட்டது.
அதை கவனிக்காத கார்த்திகேயன் மீத
மிருந்த பெண்களுக்கும் குங்குமம் தந்தபோது, நெடிய உருவம் சற்று உரக்கவே குரல் கொடுத்தது.
""சாமீ... எனக்கும் கொஞ்சம் குங்குமம் குடு.. சாமீ..?''
இப்போதும் கார்த்திகேயன் அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை.  பெண்களிடம் சிரிக்கச் சிரிக்கப் பேசுவதைப் பார்த்த நெடிய உருவத்தின் பேச்சு கடிந்தது.
""வயசுப் பொண்ணுங்களையும் தட்டுல விழுற காசையும் மட்டும்தான் கவனிப்பாயா..?  ஆம்புளங்க நிக்குற பக்கம் திரும்பக் கூட மாட்டியா..?''
ஒட்டுமொத்தக் கூட்டமும் அதிர்ந்தது. அவளும் வலம் வருவதை நிறுத்திவிட்டு, ஒருவித மிரட்சியோடு ஏறிட்டாள்.
""டேய்.. என்னடா சொன்ன..?'' -ஆரத்தித் தட்டை வைத்துவிட்டு நெடிய உருவத்தை நெருங்கினான் கார்த்திகேயன்.
""இதப் பாரு சாமி.. அடா புடான்னு பேசாத..! அப்புறம் எனக்கும் கோபம் வரும். வந்தா என்ன செய்வேன்னு தெரியாது!''
""என்னடா செய்வ நீ..? என்ன செய்ய முடியும் உன்னால்...?''
""எங்க கோயிலுக்குள்ள வந்து என்னையே மிரட்டுறீயா..? போடா வெளியே .. கோயிலை விட்டு வெளியே போ..!''
""யாரடா கோயிலை விட்டு வெளியே போகச் சொல்ற ..? என்னையா..?''
பின்னர்,  கடினமான வார்த்தைகளால் திட்டியவாறு அந்த நெடிய உருவம் கார்த்திகேயனை நெருங்கி வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அவனைப் பற்றி இழுத்து கன்னத்தில் ஓர் அறை விட்டது. பின்னர் சரசரவென்று கோயிலைவிட்டு வெளியேறி காணாமல் போனது.
திடுக்கிட்டு போனான் கார்த்திகேயன். அவமானத்தினால் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. 
""என்ன மிஸஸ் ராமநாதன், முன்ன பின்ன தெரியாதவன் கோயிலுக்குள் நுழைஞ்சு என்னைக் கன்னத்துல அறையுறான். 
பார்த்துக்கிட்டு பேசாமல் இருக்கீங்களே..?''
அவள் திரும்பி அம்மனைப் பார்த்தாள். அம்மன் ""திருப்தியா?'' என்று கேட்டு சிரிக்கிற மாதிரி இருந்தது. அவள் உதட்டிலும் யாருக்கும் தெரியாத புன்னகை ஒன்று எட்டிப் பார்த்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.