பேல்பூரி

 உடையும் வரை நான் உண்மையாக இருப்பேன்.
பேல்பூரி

கண்டது


(அண்ணாமலைநகரில் உள்ள ஒரு முடிதிருத்தகத்தில் இருக்கும் கண்ணாடியில்)

 உடையும் வரை நான் உண்மையாக இருப்பேன்.

பொன்.பாலாஜி ,
அண்ணாமலைநகர்.

(பட்டுக்கோட்டை , முத்துப்பேட்டை சாலையில் அமைந்திருக்கும்ஓர்
உணவகத்தின் பெயர்)

மீசைக்காரர் உணவகம்.

 ஜி.அழகிரிவேல்,
ஒதியடிக்காடு.

(கோயம்புத்தூர் பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த ஒரு பைக்கின் பின்புறத்தில்)

 வாழ்க்கையில் வேகத்தைக் காட்டு...
 வளைவில் அல்ல.

- வெ.சென்னப்பன்,
எல்லப்புடையாம்பட்டி.


கேட்டது


(திருச்சி - பெட்ரோல் பங்க் ஒன்றில்)

""தினமும் டேங்கை புல் பண்ண சொல்றீங்களே, ஏன்?''

""என் மனைவி மாதிரி எப்போ பெட்ரோல் விலை எகிறி அடிக்கப் போகுதோன்னு தெரியாமல் தான்''

-பா.சிவானந்தம்,
திருச்சி

(நாகப்பட்டினம்  பேருந்தில் இருவர்)

 ""வார்டு மெம்பர் ஆயிட்டீங்களே... முதல்ல வார்டுல எந்த வேலையைச் செஞ்சு முடிக்கப் போறீங்க?''
""முதல்ல...  செலவு செய்ய வாங்கின கடனை அடைக்கணும்...  அப்புறம்தான்  தொகுதி பத்தி யோசிக்கணும்!''
""சரி... சரி...  பதவி முடிய ஒரு மாசம் இருக்கும்போது தொகுதி பத்தி யோசிங்க!'' 

-மருத.வடுகநாதன்,  
வேதாரண்யம்.

யோசிக்கிறாங்கப்பா!

வார்த்தை என்பது ஏணியைப் போன்றது,
நீங்கள் பயன்படுத்துவதைப் பொருத்து.
ஏற்றியும் விடும்.
இறக்கியும் விடும்.

கே.ஆர். உதயகுமார்,
சென்னை - 1.

மைக்ரோ கதை


மண்டையைப் பிளக்கும் உச்சி வெயிலில் பைக்கை வேகமாக செலுத்திக்கொண்டிருந்த சேகர்,  "" ஏங்க ஒரு நிமிடம் வண்டியை நிறுத்துங்க'' என்று பின்னால் உட்கார்ந்திருந்த மனைவி அமுதாவின் பதட்டமான குரலை கேட்டதும் கலக்கத்துடன் வண்டியை ஓரம் கட்டி நிறுத்தினான்.

""அதோ அங்கே பாருங்க. பட்டுப் புடவை 75 ரூபாய், காட்டன் சேலை 25 ரூபாய் என்று போர்டு எழுதியிருக்குது. நூறு ரூபாயில் இரண்டு புடவை வாங்கிட்டு வந்துடுறேன். நீங்க பணம் தர வேண்டாம் . என்னிடம் இருக்கிற ரூபாய்க்கு நான் வாங்கிக்கிறேன். நீங்க ஒரு பத்து நிமிடம் வெயிட் பண்ணினா போதும்'' என்று சொல்லிட்டு எதிர் திசையை நோக்கி நடந்தாள்.

மனைவி சென்ற திசையை உற்று நோக்கிய சேகர் மனதுக்குள் சிரிப்பு பொங்க, அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

5 நிமிடத்தில் திரும்பி வந்தாள் மனைவி.

""என்ன அதுக்குள்ள சேலை வாங்கிட்டியா?'' ஆச்சரியமாகக் கேட்பதைப் போல கேட்டான் சேகர்.

மனைவி சலிப்புடன் சொன்னாள்:

""விலை ரொம்பக் குறைவா இருக்கேன்னு எனக்கு சந்தேகம்தான். இருந்தாலும் போய்ப் பார்க்கலாம்னுதான் போனேன். ஆனால்?''

""என்ன?''

""அது ஜவுளிக்கடை இல்லேங்க... லாண்டரி கடைங்க.அயர்ன் பண்றதுக்குரிய  ரேட்டை போர்டில் எழுதி வச்சிருக்காங்க'' அசடு வழிந்தாள் அமுதா.

நாஞ்சில் சு. நாகராஜன் , பறக்கை.



எஸ்எம்எஸ்

கண்ணாடி நம் முகத்தில் அழுக்கை காட்டினால்,
கண்ணாடியை உடைக்க மாட்டோம்,
மாறாக முகத்தை சுத்தம் செய்வோம்.

செளமியா சுப்ரமணியன்,
சென்னை-117.


அப்படீங்களா!


அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஒருதம்பதியினர்90 ஆண்டு பழைய கார் ஒன்றில் பயணம் செய்து உலகம் முழுக்கச் சுற்றி வந்துள்ளனர். ஐந்து கண்டங்கள், 102 நாடுகளை அவர்கள் சுற்றிப் பார்த்திருக்கின்றனர். 3 லட்சத்து 62 கிலோ மீட்டர் பயணம் செய்து இருக்கின்றனர்.

31 வயதான ஹெர்மன்னும்,29 வயதான கேண்டலாரியாவும் ஜனவரி 25, 2000- இல் தங்களுடைய உலகம் சுற்றும் பயணத்தை அலாஸ்காவிலிருந்துதொடங்கினர்.22 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதுதான் அவர்களுடைய பயணம்நிறைவு பெற்றிருக்கிறது.

இந்தப் பயணத்தின்போது அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்திருக்கின்றன.

""உலகைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற எங்களுடைய கனவு நிறைவேறியிருக்கிறது'' என்று மகிழ்ச்சியுடன் சொல்கின்றனர்.

""பயணத்தின்போது உலகம் முழுவதும் நாங்கள் சந்தித்த மனிதர்கள் எல்லாரும் நம்ப முடியாத அளவுக்கு மிகவும் மனிதத்தன்மையுடனும்,நல்லவர்களாகவும் இருந்தார்கள். இதைத்தான் நாங்கள் இந்தப் பயணத்தின்போது கண்டுபிடித்தோம்'' என்கிறார்கள் ஹெர்மன் தம்பதியினர்.

அவர்கள் பயன்படுத்திய கார் 1928 மாடல் அமெரிக்க காராகும். கடந்த 22 ஆண்டுகளில் 8 முறை காரின் டயர்களை மாற்ற வேண்டியிருந்ததாம். பழுதடைந்த என்ஜினை அடிக்கடி சரி செய்ய வேண்டியிருந்ததாம்.

என்.ஜே.,
சென்னை-58.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com