அழகான நாள்கள்

இன்னும் இருபத்தி நான்கு மணி நேரம்தான் டைம் கொடுத்திருக்காங்க.
அழகான நாள்கள்


""இன்னும் இருபத்தி நான்கு மணி நேரம்தான் டைம் கொடுத்திருக்காங்க. அப்பாவை வீட்டுக்கு அழைத்துட்டு போகச் சொல்லிட்டாங்க' ‘ என ஆர்த்தி தன் மூத்த மகன் ராம்குமாருக்கு கைப்பேசியில் சொன்னவுடன் மொத்த குடும்பமே ஆஸ்பத்திரிக்கு வந்துவிட்டது.

இளைய மகள் அழுது கொண்டே, "" என்னம்மா .. அப்பாவுக்கு ஐம்பது வயதுதான் ஆகுது. டாக்டருங்க இப்படி சொல்லிட்டாங்க!'' என அம்மாவிடம் ஒட்டிக் கொண்டாள். ஆர்த்தி தன்னுடைய தாய்க்குப் போன் பண்ணி வீட்டுக்கு வரச் சொல்லி விட்டாள்.

எல்லோரும் பெரிய டாக்டர் அறையில்.. ""பேஷண்ட்டுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பல்ஸ் குறைந்து கொண்டே வருகிறது. சில நேரம் அவருக்கு நினைவு வரலாம். அந்த நேரம் நல்ல விஷயங்களைப் பேசுங்கள். அவரும் பேச விரும்புவார். ஆனால் முடியாது. முயற்சி பண்ணுவார். பக்கத்திலே இருங்கள்'' என சொல்லி அனுப்பினார்.

பாட்டி அப்பாவை நடு மையத்தில் கிடத்தி வைத்தாள். வீடே அமைதியானது. அம்மா மட்டும் அருகில் இருந்தார். மற்றவர்கள் ஆளுக்கு ஒரு மூலையில். இரண்டாவது மகன் சுந்தர் டி.வி.யை மெதுவாக இயக்கிக் கொண்டிருந்தான். லட்சுமி பாட்டி அம்மாவை நச்சரித்துக் கொண்டிருந்தாள்.

""பிராவிடண்ட் பண்டு எவ்வளவு வரும், பேங்குல டெபாசிட் போட்டு இருக்காரா?
இன்சூரன்ஸ் எவ்வளவு போட்டு இருக்கார். பில்டிங் லோன், கார் லோன் அடைச்சிட்டாரான்னு...'' அம்மா நெகிழ்ந்தாள்.

அம்மா எங்களைப் பார்த்து, "" எல்லோரும் சாப்பிடப் போங்க'' என்றார். வீட்டுக்கு மூத்தவன் என்பதால் எல்லா காரியத்தையும் நான் பார்த்து செய்து கொண்டிருந்தேன். அப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென முகத்தில் ஏதோ மாற்றம். என்னை அழைப்பது போல் இருந்தது. அருகில் சென்றேன்.

"'சித்தப்பா..... சித்தப்பா'' என்று அரை குறையாகக் கேட்டது. எங்களிடம் பல வருடங்கள் பேசாமல் இருந்த சித்தப்பாவை போனில் அழைத்தேன். உடனே அவரும் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டார். சித்தப்பா, அப்பா அருகில் சென்றார். அடையாளம் கண்டு சித்தப்பாவை கை கூப்பினார்.

""உனக்கு நான் கொடுக்க வேண்டியதை உன் அண்ணியிடம்..'', என தட்டுத்தடுமாறினார். ""வேண்டாம் அண்ணா. நான் எல்லாம் மறந்துட்டேன். நீங்க நல்லா ஆகிடுவீங்க..'' என்று சொல்ல, அப்பாவின் கண்களின் ஓரம் நீர் கசிந்தது. ஆனால் ஒரு திருப்தி. சிறிதுநேரம் கண் மூடினார். சித்தப்பா என் தம்பி, தங்கையிடம் பேச ஆரம்பித்தார். அவர்களுக்கும் ஒரு திருப்தி. சித்தி அம்மாவின் கையை ஆறுதலாகப் பிடித்துக் கொண்டார்.

பாட்டி என்னிடம் கிசுகிசுத்தாள். ""டேய் உங்க அப்பா இருக்கிறதை எல்லாம் தூக்கி கொடுத்துடுவார் போல.. சொத்து பிரிக்கும்போது உங்க அப்பா கொஞ்சம் ஜாஸ்தியா எடுத்துக்கிட்டார் அவ்வளவுதான்! அவர்தாண்டா தன் தம்பியை படிக்க வைச்சார். இதுல என்ன தப்பு'' என்றார். நான் பாட்டியை முறைத்தேன். அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

"ஏண்டியம்மா, உங்க அப்பா நகை ஏதேனும் வாங்கி வச்சிருக்காரா?'' என்று தங்கை காவியாவையை நச்சரித்தார். இந்தக் காலத்துல நூறு சவரன் போட்டாத்தான் நல்ல மாப்பிள்ளை கிடைக்கிறாண்டி என்று கூறிக்கொண்டே அம்மா அருகில் உட்கார்ந்து கொண்டார்.

காலேஜ் படிக்கிற தம்பி அம்மாவின் இடது பக்கம் உட்கார்ந்து கொண்டான். எங்களிடம், "" உங்கப்பா நல்லவர். உத்தமர். நாணயஸ்தர். சித்தப்பா குடும்பத்துக்கு துரோகம் பண்ணிட்டேன்னு தினம் என்னிடம் சொல்லி வருத்தப்
படுவார். அவரைப் போல ஒருத்தர் இனி ....'' என துக்கம் தொண்டையை அடைக்க பேச முடியாமல் தவித்தார்.

மீண்டும் அப்பாவின் குரல்.

எல்லோரும் அருகில் சென்றோம். ஏதோ சொல்ல வாயெடுத்தார். ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்ல ஆரம்பித்தார். தம்பியும், தங்கையும், ""சொல்லுங்கப்பா.. வசந்தி அத்தையை சொல்றீங்களா? எங்களுக்கு அவங்க வீடு தெரியும். ஓடிப்போய் கூப்பிட்டு வருகிறோம்'' என்று ஓடினார்கள்.

பாட்டி, அம்மாவிடம், ""அவதான் ஒடுகாலியே, அவள எதுக்குக் கூப்பிடணும்..'' என்றார்.

பதினைந்து வருடம் கழித்து அத்தை, மாமா இரண்டு குழந்தைங்க வீட்டுக்கு வந்தார்கள். அப்பாவைப் பார்த்ததும் அத்தை ""அண்ணா'' என்று காலில் விழுந்து கதறினார். அப்பா மெதுவாக அவர் தலையைத் தொட்டார். மாமாவை அருகில் அழைத்தார். குழந்தைகளைத் தொட்டுப் பார்த்தார். பின்பு ஒருபக்கமாகச் சாய்ந்து பேச முடியாமல் தவித்தார். எல்லோருக்கும் அழுகை வந்தது.

அத்தை கழுத்தில், கையில் இருந்த கவரிங் நகைகளைக் கண்டு குமுறினார். ஏதோ சொல்ல முயற்சிக்க அம்மாவும் புரிந்து கொண்டு, ""நீங்கள் எப்பவும் சொல்லுவீங்களே.. தங்கைக்கு இருபது பவுன் போட்டு அவளை நல்லா வாழ வைக்கணும்னு.. செய்றேங்க..'' என்றார்.

அப்பா தலையை ஆட்டினார்.

நாங்கள், சித்தப்பா குடும்பம், அத்தை குடும்பம் எல்லோரும் ஒன்றாக அவர் முன்பு நின்றோம். புன்முறுவல் பூத்தார். கையை சிரமப்படுத்தி தூக்கி ஆசிர்வாதம் பண்ணினார்.

பாட்டி எங்களை அழைத்து, "" உங்கப்பா.. இப்படியே எல்லாத்தையும் தானம் பண்ணிடுவார் போல'' என சொல்ல, அம்மா பாட்டியை முறைத்தார். அம்மா பாட்டியிடம், ""அவரைப் பற்றி எனக்குத் தெரியும்மா. அவர் வாழ்நாளெல்லாம் எதுக்கு வருந்தினாரோ அதைத்தான் தன் கடைசி மூச்சில் நிறைவேற்றுகிறார்'' என்று அதட்டினார். மீண்டும் அப்பாவைப் பார்க்கிறோம். ஒரு அமைதி.

எனக்கென்னமோ அப்பா முகத்தில் ஒரு திருப்தி தெரிவது போல் இருந்தது.

இந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் வெகுநேரம் கழிந்தது. ஒவ்வொரு நொடியும் யுகமாகச் சென்றது. நாங்கள் மெதுவாக கண் அயரத் தொடங்கினோம். அம்மாவும், பாட்டியும் அப்பா அருகில் இருந்து பார்த்துக்
கொண்டனர்.

அம்மா அப்பாவுக்கு குளுக்கோஸ் தண்ணீர் கொடுத்துக் கொண்டே, பாட்டியிடம்,அம்மா, "" இந்த சின்ன வயதில் அவர் போறாரே'' என்று அழுகையை வெடித்தாள். எல்லோரும் தூங்கியதை அறிந்து கொஞ்சம் சத்தமாகவே அழுதாள். கடைசிக் காலத்தில் பிராயச்சித்தம் தேடும் அப்பாவைப் பார்க்கும்போது எனக்கு அவர் தெய்வமாகவே காட்சியளித்தார்.

திடீரென புரண்டு புரண்டு படுப்பதும், மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்குவதுமாக இருந்த தன் கணவரைக் கண்டு ஆர்த்தி பயந்தாள். தன் தாயை அழைத்தாள். தன் கணவரின் வாயிலிருந்து ஏதோ வார்த்தை வெளிவரத் துடித்தது. அப்பா கொஞ்சம் சிரிக்க ஆரம்பித்தார். வயிற்றை தடவிக் காட்டினார். புரியாமல்
தவித்தோம்.

தங்கை, "" என்னன்னு சொல்லுங்கப்பா'' என்று அழுது கொண்டே கேட்டாள்.

அம்மா, ""என்னங்க சொல்லுங்க.. நான் உங்க ஆர்த்தி பக்கத்துலதான் இருக்கேன்''. அப்பா கொஞ்சம் சிரித்தபடியே எங்களுக்குத் தெரிந்தார். வாயைத் திறந்து ஏதோ சொல்ல முயற்சிக்கிறார். முடியவில்லை. பாட்டி பால் கிண்ணத்துடன் நெருங்கி வந்தார். அம்மாவுக்கும், எனக்கும் விபரீதம் புரிந்தது. தம்பி அவர் தலையை வருடிக் கொண்டிருந்தான். மீண்டும் எதோ நினைத்து சிரிப்பது போல் சிரித்துக்கொண்டே வாயில் இருந்து வார்த்தை ஒன்று வெளியே வந்தது. மிகத் தெளிவாக, ""கனகா'' என்று.

அத்துடன் அவர் சத்தம் நின்றது. ஒரே மயான அமைதி. இப்பொழுது ஒருவொருக்கொருவர் , ""யாரது கனகா'' என்று கேள்வியுடன் அப்பாவை நெருங்கினோம்.
பாட்டி தைரியமாக அருகில் சென்று, அப்பாவை உலுக்கிப் பார்த்தாள். இறந்து விட்டார்.
""கனகா யாரு, யாருக்காவது தெரியுமா?'' என்று எங்கள் எல்லோரையும் பார்த்துக் கேட்டார். ""தெரியாது'' என்று கோரஸாகச் சொன்னோம். அம்மா மெளனம் கலைத்து அழ ஆரம்பித்தார். தங்கை அப்பாவின் கையைப் பிடித்து கதறினாள். தம்பி ஒரு மூலையில் நின்று அழுது கொண்டிருந்தான். பாட்டி பரபரப்புடன் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தாள்.
பாட்டி எங்களுக்கு உத்தரவு போட்டாள். ""கனகா என்ற பெயர் உங்கப்பா எப்பவாவது சொல்லியிருக்காரா? என்று பாட்டி, அம்மாவிடம் கேட்ட கேள்விகள் எல்லோரையும் வறுத்தெடுத்தது.
""அடியே ஆர்த்தி, கனகா உன் புருஷனுக்கு என்ன வேணும்? ""தெரியலம்மா'' என அம்மா வார்த்தையை மென்று முழுங்கினார். விடவில்லை பாட்டி.
""வீடு உன் பேர்லதான இருக்கு. டெபாசிட் வாரிசு யாருன்னு போட்டிருக்கார். கனகாங்ககிற பேர்ல ஏதும் டெபாசிட் பண்ணியிருக்காரா. ஏதேனும் சொத்து கனகாங்கிற பேர்ல இருக்கான்னு பார்த்தீங்களா?
""ஐயோ அம்மா.. அதெல்லாம் ஒன்னும் இல்ல. நீ கொஞ்சம் சும்மா இருக்கியா?'' என்று அம்மா அதட்டலாக சொல்லி, எங்களைப் பார்த்து, ""அப்பா கனகான்னுதான் சொன்னாரா, நல்லா கவனிச்சீங்களா'' என்று கேட்க தங்கை, ""ஆமாம்மா அப்பா தெள்ளத் தெளிவாக.. கனகான்னுதான் சொன்னார்'' .
பாட்டி ஏதோ சொல்ல வாயெடுக்க, "" அம்மா நீங்க கொஞ்ச நேரம் சும்மா இருக்கீங்களா..'' என கெஞ்சும் பார்வையில் பார்த்தார்.
""ஆமாண்டி இப்ப சொல்லுவ எப்பவோ ஓடிப்போன தங்கச்சிய வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாரு. தம்பியிடம் மன்னிப்பு கேட்கிறார். இதுபோலத்தான் எங்கோ இருக்கிற கனகா வரப்போறா. எனக்கு இதில் பங்கு கொடு, அதில் பங்கு கொடுன்னு உங்கள நடுத்தெருவுலவிடப் போறா, ஏதோ வயசானவ சொல்றேன். இந்தக் காலத்து ஆம்பளைகளை நம்ப முடியாதுடி'' என்று அம்மாவை ஓரக் கண்ணால் பார்த்தார்.
தங்கை ரொம்ப பயந்து, ""அம்மா யாராவது வந்து நம்மட்ட இருக்கிறதை புடுங்கிட்டுப் போயிடுவாங்களா?'' என்றாள்.
நான் பாட்டியிடம், ""ப ôரு இவள் பயப்புடுறா. அப்படி யாரேனும் வந்தால் நான் பார்த்துக்கிறேன்..'' என்று தைரியம் சொன்னேன். திரும்பிப் பார்த்தேன்.
தம்பியைக் கூட்டிக் கொண்டு பாட்டி அப்பா பீரோவை நோண்டிக் கொண்டிருந்தாள். அம்மா தலையில் கை வைத்துக் கொண்டார். அப்பா இறந்த துக்கத்தை விட கனகா யார் என்ற பிரச்சனை எங்களுக்கு ரொம்பவே உருவெடுத்தது. அப்பாவை நோக்கினேன். என் மனதுக்குள், ""ஐயோ! அப்பா கொஞ்சநேரம் உயிர் பிழைத்து இருந்து, இந்தப் புதிருக்கு விடை சொல்லாமல் போயிட்டீங்களே!'' என அழுதேன்.
ஆமாம் யார் கனகா? இந்தப் புதிருக்கு அப்பா தான் விடை சொல்ல முடியும்னு எனக்குத் தோன்றியது. எனக்கே கொஞ்சம் பயம் தொற்றிக் கொண்டது.
விடியும் நேரம். எல்லோரும் வரத் தொடங்கினார்கள். அப்பாவுடன் வேலை பார்த்தவர்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ரெடி பண்ணினார்கள். ""சுற்றும் முற்றும் இருபது மைல் தொலைவுக்கு ஒட்டுங்கடா..'' என ஒருத்தர் உத்தரவு போட்டார். அப்பா மூலையில் சாத்தி வைக்கப்பட்டிருந்தார். பாட்டி என்னைத் தேடி வந்தார்.
""டேய் ராம்குமார்.. உங்கப்பா கனகான்னு பெயர் சொல்லும்போது, வயிற்றை தடவிக் காட்டினார். நீ பெரிய பையன்தான் உனக்குப் புரியாதது இல்லை. வேறு ஒரு தொடர்பு உங்க அப்பாவுக்கு இருக்கணும். ஏன் இப்ப வயிற்றுப் பிள்ளைக்காரியாகக் கூட இருக்கலாம். என் மனசு பாட்டி சொல்றது உண்மையாக இருக்கக் கூடாது'' என தவித்தது.
அம்மா சோகமும், குழப்பமும் கலந்து காணப்பட்டார். பாட்டி வருபவர்கள் போவோர்கள் அனைவரையும் ஓரக் கண்ணால் பார்த்துக்கொண்டும், அவர்கள் பேசுவதையும் காது கொடுத்தும் கேட்டுக் கொண்டார். எல்லோரும் அப்பாவை வானளவு புகழ்ந்து பேசி அனுதாபம் தெரிவித்தனர். பெரிய அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் அனைவரும், ""குமாரசாமி சார்.. எங்களுக்கெல்லாம் ஒரு உதாரண புருஷராக வாழ்ந்தார். அவருக்கு எதிலும் ஒழுக்கம்தான் முக்கியம். மிகவும் கண்டிப்பானவர்'' என்று அப்பாவுக்குப் புகழாரம் சூட்டினார்கள்.
பல பெண் ஊழியர்களும் அம்மாவுக்கு ஆறுதலாக கையைப் பிடித்துக் கொண்டு, ""சார் எங்களுக்கெல்லாம் ஒரு உடன்பிறவா சகோதரர் போல இருந்தார்'' என கண் கலங்கினார்கள். அம்மா கொஞ்சம் குழப்பத்தில் இருந்து மீண்டு எங்கள் மூவரையும் அணைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தார்.
எல்லாம் முடிந்தது.
அப்பா இருந்த இடத்தில் ஒரு அகல் விளக்கு. அம்மா பெருங்குரலில் அழுதார். தங்கை இப்பொழுது மிகவும் சத்தமாக அழுது கொண்டிருந்தாள். பாட்டியை பார்க்கும்பொழுதெல்லாம் எங்களுக்கு அந்தக் கனகா என்ற வார்த்தையே காதில் கேட்டது. பாட்டி விருட்டென எழுந்தாள். கூந்தலை அள்ளி முடித்தாள்.
""கவலைப் படாதீங்கடா. எத்தனை கனகா வந்தாலும் நான் பார்த்துக்கிறேன்'' என்று சவால் விட்டார். அம்மாவுக்குக் கூட அது தையரியத்தைக் கொடுத்திருக்கனும் போல மெதுவாக கண் அயர்ந்தார்.
அந்த வயக்காட்டில் இரு பெண்மணிகள் கையில் அரிவாளுடன் காட்டு வேலைக்குச் சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் கண்ணில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் பட்டது..
""அடியே இதுல இருக்கிற குமாரசாமி யாருன்னு தெரியுதா! நம்ம கூட எட்டாப்பு வரை படிச்சான்ல அவன்தான் இவன். இப்ப கவர்மெண்ட் உத்தியோகம். அவன நாம பார்த்தே முப்பது வருஷம் இருக்கும்ல. நாம ஆறாம் வகுப்பு படிக்கும்போது கருவாட்டுக் குழம்புக்கு ஆசைப்பட்டு என் தூக்குச்சட்டியை திருடி சோற்றை சாப்பிட்டு வயித்துக்கு ஒத்துக்காம பாத்ரூமுக்கும் கிளாசுக்கும் வயித்தை பிடிச்சிட்டு ஓடிட்டு இருந்தானே, எப்ப பார்த்தாலும் இதை சொல்லியே அவனை கிண்டல் பண்ணுவோமே''
"" ஹேய்! என்னடி இன்னுமா இதையெல்லாம் ஞாபகம் வைச்சிருக்க.. கனகா...''
என்றாள்.
குமாரசாமியின் வீடு, மூன்றாம் நாள் காரியம் முடிந்து அனைவரும் கலைந்து சென்றுவிட்டனர். ஒரு அமைதி. அந்த இரண்டு கிராமத்துப் பெண்மணிகள் வீட்டுக்குள் நுழைந்தனர். அதில் ஒருத்தி, "" நான் சோலை. இவள் கனகா'' என்றவுடன் அனைவரும் முகத்திலும் பீதி.
கனகா என்ற பெண்மணி பேச ஆரம்பித்தாள். "நாங்க குமாரசாமி கூட எங்க ஊரு பஞ்சாயத்து யூனியன் ஸ்கூலுல ஒன்றாய் படித்தவர்கள். நாங்க அவனைப் பார்த்தே முப்பது வருஷம் இருக்கும் என்று சொல்லி, படிக்கும்போது தங்களுக்குள் நடந்த வேடிக்கைகளையும், நகைச்சுவைகளையும் எங்களிடம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு சொல்லி, கண்கலங்கி விளக்கைத் தொட்டு வணங்கி, "" இப்படி அல்பாயுசுல போயிட்டானே!'' என்று வருத்தப்பட்டு வெளியே சென்றுவிட்டனர்.
இப்போதுதான் எல்லோருக்கும், அப்பா தன் பள்ளிப்படிப்பு சந்தோஷங்களை அசை போட்டபடியே நிம்மதியான மரணத்தை எய்தினார் என்று புரியவந்தது. எல்லோரும் குற்றவுணர்வுடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.
பாட்டி எல்லோரையும் குழப்பிக் கொண்டு அப்பாவைப் பற்றி அவதூறு பேசியபோதும், அம்மா தன் கணவர் மீது அபார நம்பிக்கை வைத்தது, அவர்களின் சிறந்த தாம்பத்திய வாழ்க்கைக்கு ஓர் சான்று என்று அவரைப் பார்த்து பெருமிதம் கொண்டேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com