ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: செரிமானம் விரைவில் ஏற்பட...?

என் வயது 53. காலையில் உண்ணும் சிற்றுண்டியில் ஏற்படும் விருப்பம் மதிய உணவில் ஏற்படுவதில்லை. அப்படி சாப்பிட்டாலும் செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரமாகிறது.  செரிமானம் விரைவில் ஏற்பட என்ன செய்ய வேண்டும்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: செரிமானம் விரைவில் ஏற்பட...?

என் வயது 53. காலையில் உண்ணும் சிற்றுண்டியில் ஏற்படும் விருப்பம் மதிய உணவில் ஏற்படுவதில்லை. அப்படி சாப்பிட்டாலும் செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரமாகிறது.  செரிமானம் விரைவில் ஏற்பட என்ன செய்ய வேண்டும்.

-கார்த்திகேயன்,
நன்னிலம்.

தனியா எனும் கொத்தமல்லி விதையும் சுக்கும் சேர்த்து காய்ச்சப்படும் தண்ணீர், மதிய உணவிற்கு ஒரு மணி நேரம் முன்பாக, நீங்கள் குடித்துவந்தால் காலைச் சிற்றுண்டி விரைவில் செரிமானமாகவும், மதிய உணவின் மீது விருப்பம் ஏற்படவும் உதவும்.

12 கிராம் வீதம் தனியாவையும், சுக்கையும் எடுத்து 192 மில்லி தண்ணீரில் கலந்து கொதிக்கவிட்டு, 48 மில்லியாக வற்றியதும் வடிகட்டி, வெதுவெதுப்பாகத் தொடர்ந்து இருவாரங்களுக்கு நீங்கள் குடித்து வந்தால், செரிமானத்திற்கான சுரப்பிகளனைத்தும் விரைவாக சுரப்பதுடன், வயிறு சார்ந்த குடல் வலியையும், சிறுநீர்ப்பைச் சார்ந்த உடல் உபாதையையும் நன்கு நீக்கிட உதவும். சிறுநீர்ப் பையினுள் உள்பகுதியை சுத்தப்படுத்தி, அங்கு தேங்கி நிற்கும் கழிவுகளையும் விரைவாக வெளியேற்றும்.

மேற்குறிப்பிட்ட  சிகிச்சை முறையை பாவப்பிரகாசர் எனும் ஆயுர்வேத முனிவர் பரிந்துரை செய்திருக்கிறார். ஐந்து கிராம் கடுக்காய்த் தூளுடன் மூன்று கிராம் சுக்குப் பொடி, இரண்டு கிராம் இந்துப்புத் தூளையும் நூறு மில்லி தண்ணீருடன் கலந்து காலையில் சிற்றுண்டி சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன் பருகினால், வயிறு மற்றும் சிறுகுடல், பெருங்குடல் அடப்பாசம், வாயு அனைத்தும் கீழ் நோக்கி எடுத்துச் செல்லப்பட்டு, நல்ல மலக்கழிச்சலை ஏற்படுத்தி, வயிற்றை சுத்தம் செய்து, செரிமான சுரப்பிகளைத் தூண்டிவிட்டு, காலைச் சிற்றுண்டியை விரைவில் செரிக்க வைத்து, மதிய உணவின் மீது நாட்டம் கொள்ளச் செய்யவும் உதவிடும் என்பதால்,  இதையும் நீங்கள் குடிப்பதற்கு முயற்சிக்கலாம். இந்த அறிவுரையையும் பாவபிரகாசரே செய்திருக்கிறார்.

சிற்றுண்டியில் ஏற்படும் விருப்பம் மதிய உணவின் மீது ஏன் ஏற்படவில்லை என்பதையும் நாம் அறிவது நலம்.  காலைச் சிற்றுண்டியாக நாம் சாப்பிடும் பூரி- மசால் கிழங்கு, இட்லி- மிளகாய்ப் பொடி+ நல்லெண்ணெய் , தேங்காய் சட்னி, சின்ன வெங்காயச் சாம்பார், இடியாப்பம்- தேங்காய்ப் பால், பரோட்டா- குருமா, பொங்கல், வடை, சட்னி, சாம்பார் போன்றவற்றிலிருந்துவரும் மணம், சுவை, சூடு ஆகியவற்றால் நாவிலுள்ள ருசி கோளங்கள் சுறுசுறுப்படைகின்றன.  எச்சில் சுரப்பிகள் வேகமாக எச்சிலை சுரக்கச் செய்கின்றன. வயிற்றுலுள்ள அமிலச் சுரப்பிகள், சிற்றுண்டியைப் பார்த்த அடுத்த விநாடியே சுரக்கின்றன. நரம்பு மண்டலங்கள் வழியாக இவை அனைத்தும் நிமிட நேரத்தில் நடந்துவிடுகின்றன. அதே நாடி நரம்புகள்தான் மதிய உணவையும் பார்க்கின்றன. ஆனால், விருப்பம் கொள்ளவில்லை. அதற்குக் காரணம் அதன் விருப்பத்துக்குக் காரணமான காலைச் சிற்றுண்டியை முன்பே சுவைத்துவிட்ட படியால், இதன் மீது ஏனோ நாட்டம் பிறக்கவில்லை. காலைச் சிற்றுண்டியைவிட, அதிகம் சத்து நிறைந்த மதிய உணவின் மதிப்பை இக்காரணத்தினால் நாம் இழக்கிறோம். அதனால் காலைச் சிற்றுண்டியை நிறுத்திவிட்டால் எப்படி இருக்கும்?

மதிய உணவை சற்று முன்பே காலையில் கொண்டுவந்து சாப்பிட்டால் சில மாதங்களில் வெறுப்பு மாறி, விருப்பம் ஏற்படும். ஆனால் பலருக்கும் இதில் உடன்பாடு இருக்காது. இட்லி, தோசை, பொங்கல், பூரி மீது அத்தனை விருப்பம்.  அவர்களுக்கு மதிய உணவை காலை, மதியத்தின் இடையே சாப்பிட்டு, இரவு உணவை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல், இரவு உறக்கத்துக்கு இரண்டு மணி நேரம் முன்பாகவே சாப்பிட்டுவிட்டால், செரிமானத்திற்கான மருந்துகளின் தேவையிருக்காது.

உணவு சத்து முழுவதும் உடலில் ஒட்டும். சக்கை அனைத்தும் நன்கு வெளியேறிவிடும். சிற்றுண்டியை அறியாத நம் முன்னோர் வாழ்வை நீங்களும் பின்பற்ற முயற்சிக்கலாமே!.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com