நடமாடும்  தெய்வங்கள்!

தமிழ்க் கலாசாரம், பண்பாட்டை பிரதிபலிக்கும் பாரம்பரிய நடனங்களையும், தற்காப்புக் கலைகளையும் இளைய சமுதாயத்துக்கு இலவசமாக கற்றுக் கொடுத்து வருகிறார் ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள சிலம்பொலி
நடமாடும்  தெய்வங்கள்!

தமிழ்க் கலாசாரம், பண்பாட்டை பிரதிபலிக்கும் பாரம்பரிய நடனங்களையும், தற்காப்புக் கலைகளையும் இளைய சமுதாயத்துக்கு இலவசமாக கற்றுக் கொடுத்து வருகிறார் ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள சிலம்பொலி கிராமியக் கலைக் குழுவின் நிறுவனர் மு.லோகசுப்பிரமணியன்.

பாரம்பரியக் கலைகளை பல ஆண்டுகளாகக் கற்றுகொடுத்து வரும் இவர், தற்போது சற்று வித்தியாசமாகத் திருவிழாக்களுக்கு இளைஞர்களைத் தெய்வங்கள் போன்று அலங்கரித்து சுவாமி வீதியுலா வரும்போது,  அதற்கு முன்பாக நடனமாடிக்கொண்டு வரும் கலையையும் கற்றுக் கொடுத்து வருகிறார்.

ராமநாதபுரம் வழி விடு முருகன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவுக்காக, அருகில் உள்ள டி.டி.விநாயகர் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் இளைஞர்களைத் தெய்வங்களின் உருவங்களைப் போன்று அலங்கரித்துக் கொண்டிருந்த அவரிடம் பேசியபோது:

'தொடர்ந்து 13 ஆண்டுகளாக  பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு இலவசமாகவே பாரம்பரியக் கலைகளைக் கற்றுக் கொடுத்து வருகிறோம்.

கடந்த 3 ஆண்டுகளாக மட்டும் மதுரை மீனாட்சி, முருகன்,  கருப்பணசுவாமி,  24 கைகளை உடைய பத்ரகாளி போன்ற தெய்வங்களைப் போலவே இளைஞர்களை அலங்கரித்து அந்தத் தெய்வங்கள் நடனமாடினால் எப்படி இருக்குமோ அதேபோல நடனமாடவும் நடந்து வரவும் கற்றுத் தருகிறேன்.

கல்லூரி மாணவர்கள் இதுபோன்ற தெய்வங்களின் வேடங்களைப் போட்டுக் கொள்ள அதிகமான ஆர்வம் காட்டுகிறார்கள்.  பொதுமக்களிடையேயும் மிகுந்த வரவேற்பும் உள்ளது. எனவே இளைஞர்களின் தன்னார்வத்தைப் பயன்படுத்தி,  அவர்களுக்கு இலவசமாகவே தெய்வங்களின் நடனங்களைக் கற்றுத் தருகிறோம்.

அலங்காரப் பொருள்கள் மதுரை, குலசேகரப்பட்டிணம் போன்ற இடங்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன.  24 கைகளுடைய பத்ரகாளி வேடமிட ஒரு நபருக்கு குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரமாவது ஆகும். வேடத்தைப் போட்டுக் கொண்ட பிறகு குறைந்தபட்சம் 3 மணி நேரமாவது கலைந்துவிடாமல் வைத்திருக்க வேண்டும்.  இதற்கு பொறுமையும் அவசியம். பொறுமை இருந்தால் மட்டுமே இந்தக் கலையையும் கற்றுக் கொள்ள முடியும். இதுதவிர மீனாட்சி, முருகன், கருப்பண சுவாமி போன்ற வேடங்களிலும் இளைஞர்களை அலங்கரித்து அந்தத் தெய்வங்கள் சாலைகளில் நடந்து வந்தால் எப்படி இருக்குமோ? அதே போல நடந்து வரவும்,நடனமாடவும் கற்றுக் கொடுக்கிறோம்.

முக்கியமாக,  ருத்ர தாண்டவம் ஆடும் சிவன் வேடம் பார்ப்பதற்கு மிகவும் பரவசமாக இருக்கும். 

திருவிழாக்கள், கும்பாபிஷேக நிகழ்வுகள், சுவாமி வீதியுலாக்கள் ஆகியனவற்றுக்கு எங்கள் குழுவினர் தெய்வங்களின் வேடங்களை அணிந்து கொண்டு வருவதை பொதுமக்களும் ஆர்வமுடன் பார்த்து ரசிப்பார்கள். பலரும் தெய்வ வேடமிட்டு வருபவர்களுடன் சேர்ந்து 'செல்பி' எடுத்துகொண்டு ஆனந்தம் அடைவார்கள். பிறரை மகிழ்வித்து மகிழ்வதுதானே உண்மையான மகிழ்ச்சி.

எங்கள் குழுவில் பட்டப் படிப்பை படித்துகொண்டிருப்பவர்களும், முடித்தவர்களும் ஏராளமானோர் உள்ளனர்.

தமிழ்நாட்டின் பாரம்பரிய நடனங்களான கரகாட்டம், தப்பாட்டம்,  ஒயிலாட்டம், ஆடு, மாடு, குதிரை ஆட்டம், கட்டைக்கால் ஆட்டம் மற்றும் பாரம்பரிய தற்காப்புக் கலைகளான சிலம்பாட்டம், தீப்பந்த விளையாட்டு, வாள்வீச்சு, சுருள்வீச்சு, வேல்கம்பு, மான் கொம்பு சுற்றுதல், வழுக்கு மரத்தில் ஏறி சாகசங்கள் செய்யும் மள்ளர் கம்பம், தொங்கும் கயிற்றில் யோகா செய்யும் வித்தைகள் ஆகியனவற்றையும் கற்றுக் கொடுக்கிறோம்.

எந்தப்பகுதியில் இருப்பவர்களாக இருந்தாலும் எங்களிடம் இலவசமாக இந்தக் கலைகளைக் கற்றுக் கொள்ளலாம்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com