சிநேகிதி

சர்மிளா சென்னையிலிருந்து அம்மா வீட்டுக்கு வந்து போயிருந்த தகவல் தற்செயலாகத் தான் தெரியவந்தது எனக்கு.
சிநேகிதி

சர்மிளா சென்னையிலிருந்து அம்மா வீட்டுக்கு வந்து போயிருந்த தகவல் தற்செயலாகத் தான் தெரியவந்தது எனக்கு.
இதுமாதிரியான சமயங்களில் ஏதாவது ஒரு நேரத்தில் 'வரப் போகிறேன்' என்றோ அல்லது 'வந்துவிட்டேன்' என்றோ தகவல் தருவாள் அவள். போய்ப் பார்த்து விட்டு சில மணி நேரங்கள் இருந்து பழங்கதைகளைப் பேசி அரட்டை அடிப்போம். எங்கேயாவது போய், ஷாப்பிங்கில் ஏதாவது வாங்கி, எதையாவது சாப்பிட்டுவிட்டு வருவோம்.
கடைசியாக அவளைச் சந்தித்தபோது, அங்கலாய்த்துக் கொண்டாள்.
'ஏய் அகிலா, உன்னை மாதிரி உள்ளூர்லயே ஒருத்தருக்கு வாழ்க்கைப்பட்டிருந்தா எனக்கு கவலையே இல்லைடி, நினைச்ச நேரத்துக்கு அம்மா வீட்டுக்கு வரலாம். போகலாம்! என்னைப் பாரு.. அங்கிருந்து இங்கே வந்து சேரவே அரை நாள் ஆயிடுது.!'
போன தடவை அவள் உடுமலைப்பேட்டை வந்திருந்தபோது சந்திக்க முடியவில்லை. ஊருக்குத் திரும்பிப் போன பின்னால் வந்திருந்ததே தாமதமாக தெரிய வந்தது. போன் செய்து சண்டை போட, 'ப்ச் அதனால என்னடி.. அடுத்த தடவை பார்த்துக்கலாம்..' என்று சொன்னாள். ஆனால் இப்போது நிதானமான மனநிலையில் யோசித்துப் பார்க்கும்போது, ஒரு விஷயம் தெளிவாகப் புரிகிறது.
இந்த சர்மிளா நான் அழைத்தால்தான் பேசுகிறாள், ஒரு தடவை கூட அவளாக என்னை அழைத்ததில்லை! தவிர எத்தனை தடவை அவளது வீட்டுக்குப் போயிருக்கிறேன். ஒரு தடவை கூட என் வீடு வந்ததில்லை. ஏன் இப்படி இருக்கிறாள்?
அன்பு என்பது பரஸ்பரம் பகிரப்படுவது தானே நேர்மை. சும்மா நான் மட்டுமே தாங்கிக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம். பெரிய முட்டாள்தனம் அல்லவா இது. உன்னைவிட நான் தாழ்ந்து விட்டேனா. அல்லது என்னை விடவும் நீ என்ன ஒசத்தியா.? என் மனம் சூடேறத் தொடங்கியது.
திடீரென அவள் மீது வண்டி வண்டியாய் கோபம் வந்தது. நான் மட்டும்தான் அவளைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறேன். தோழி என்பதாலா? பல்லாண்டு கால நட்பின் பாரம்பரியத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமை என்பதாலா? அப்படியானால் அவளிடம் அந்த உணர்வும், கடமையும் இல்லையா?
'பெரிய இவ. இவ ஊருக்கு வந்துட்டா நான் தான் தேடிப் போய் பார்த்து பேசணுமோ? அப்படியொண்ணும் நான் மலிவாப் போயிடலை. இந்தத் தடவை உன்னைப் பார்க்க நான் வரமாட்டேன்டி. பார்க்கலாம், நீயாகக் கூப்பிட்டு போன் பேசு, அப்புறம் நாம சந்திக்கிறதைப் பத்தி யோசிக்கலாம்.'
மனம் கோபத்தில் சபதம் எடுத்து கொண்டது. சில நொடிகள்தான். தொபீரென்று கவிழ்ந்துவிட்டேன்.
'ஏய் பார்த்தியா, பார்த்தியா. நான் அப்படிப்பட்டவளாடி? நாம எத்தனை தூரம் பழகியிருக்கோம்!'
சர்மிளாவின் புன்னகை கலந்த குரல் மனதில் நிழல் உருவமாய் விரிய தடுமாறி நின்றேன். மனதில் பழைய நினைவுகள் வரிசை கட்டி..!
சர்மிளாவும் நானும் சிறு வயதுத் தோழிகள். அடுத்தடுத்த வீதியில் வீடு. நகராட்சிப் பள்ளியின் ஒரே வகுப்பில் ஒன்றாகப் படித்தவர்கள்.
சர்மிளாவைப் பற்றி நினைத்தால் முதலில் ஞாபகத்துக்கு வருவது அந்தக் குண்டு விழிகள்தான். கவிதை பேசும் கண்கள். ஊண், உறக்கம் தொலைத்து பார்த்துக் கொண்டேயிருக்க வைக்கும் மயக்க விழிகள். ஒரு சாம்ராஜ்யத்தை வீழ்த்திவிடும் சக்தி வாய்ந்த விழிகள். முக அமைப்பும் அப்படித் தான். அளந்து வைத்து செய்த பொம்மை போல இருப்பாள். ஒரு ஆணாக இருந்தால் அந்த அழகை பக்கம்பக்கமாக நான் வர்ணித்திருப்பேன்.. நானும் ஒரு பெண் என்பதால் பொறாமை மட்டுமே வருகிறது. சினிமா நடிகைகளைவிட நிஜ அழகி. நீங்கள் இதுவரை வாழ்க்கையில் சந்தித்த அத்தனை பேரையும் விட கூடுதலாக ஒரு மார்க் பெறுகிறவள்!
தன் அழகைப் பற்றி அவளிடம் பெரிதான அலட்டல் இல்லை. அந்த அழகுக்கும், தனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போலத் தான் நடந்து கொள்வாள்.
ஏகப்பட்ட பேர் பைத்தியமாகி அவள் பின்னாலேயே சுற்றுவார்கள். வகுப்பில் உடன் படிப்பவன்கள், தெருவாசிகள், டுடோரியல் மாணவர்கள், அக்கம்பக்கம் கடைக்காரர்கள்.. என அத்தனை ஆண்களும். அந்தத் தெருவையே பிரகாசம் ஆக்கியிருந்தாள் அவள். எத்தனை விதமான காதல் கடிதங்கள், எத்தனை பின்தொடர்தல்கள், எத்தனை கெஞ்சல்கள், எத்தனை தற்கொலை மிரட்டல்கள். எதற்கும் மருள மாட்டாள். அவளின் உறவு வழி மாமாவோ, பெரியப்பாவோ காவல் துறையில் பெரிய அதிகாரியாக இருப்பதாக அடிக்கடி சொல்லுவாள்.
'ஒரு புகார் பண்ணிணா நீ அவ்ளோ தான் ‘ என்று மிரட்டுவாள். ' அது நிஜமா, பொய்யா' எனத் தெரியாது. தொந்தரவு செய்கிறவர்களை தவிர்க்க இருந்திருக்கலாம். இத்தனைக்கும் தன் அழகைப் பராமரிப்பதே கிடையாது அவள். நானாவது முகத்துக்குப் பாசிப்பயிறு மாவு, முடிக்கு செம்பருத்தி தைலம், தோல் மினுமினுப்புக்கு பாதாம் என எதையாவது வைத்தியம் பார்த்துகொண்டே இருப்பேன். அவளுக்கோ கொசு கடித்து தழும்புப் புள்ளி வீங்கியிருக்கும். அது கூடப் பேரழகைத் தரும். ஆனால் இந்த மாதிரி பேரழகுப் பெண்களுக்கு தோழியாக வாழ்க்கைப் படுவது பெரிய சாபம். அந்தத் துன்பத்தை சொல்ல முடியாது. அனுபவித்தால் தான் உணர முடியும். நானும் ஒன்றும் சாதாரணமானவள் கிடையாது. ஓரளவு நிறமும், கட்டான உடல் அமைப்பும் கொண்டவள் தான். ஆனால் சர்மிளா அருகில் வைத்துப் பார்த்தால், ம்ஹூம்.
அவளை நெருங்குவதற்காக முதலில் என்னிடம் பேச ஆரம்பிப்பார்கள். என் பின்னேயும் அலைவார்கள். ஏதேதோ பரிசுகள் கிடைக்கும். எனக்கோ வெறுப்பாய் வரும். 'உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையாடா' என மனதுக்குள் கத்துவேன்.
'எனக்காக.. உங்க ஃப்ரெண்ட் கிட்ட பேசக் கூடாதா..? ஒரு கிஃப்ட் தர்றேன் சேர்த்திடறீங்களா, இந்த க்ரீட்டிங் கார்டை மட்டும் அவ கைல கொடுத்துட்டாப் போதும்.'
எல்லாவற்றையும் ஒரே தலையாட்டலில் மறுத்திடுவேன். 'அவளுக்கு சிபாரிசே பிடிக்காது!' என நேரடியாக திருப்பிவிட்டு விடுவேன்..
இந்த சர்மிளாவாவது என்னை விடுகிறாளா என்றால் அதுவும் இல்லை. கோயிலுக்குப் போனால் 'நீயும் வாடி', கடைக்குப் போனால் 'கூட வாடி', உடம்பு சரியில்லாமல் ஊசி குத்தப் போனால் 'துணைக்கு வாடி..'
இவளாலேயே பத்தாம் வகுப்பில் இரண்டு பேர் வகுப்பில் ரத்தம் சிந்திக் கொண்டார்கள். மணிகண்டனும், பீட்டரும். சாதாரண வாக்குவாதத்தில் ஆரம்பித்து பெரும் சண்டையாகி வகுப்பறையில் கட்டிப்புரண்டனர். விஷயம் தெரிந்து வந்த ஹெட் மாஸ்டர் இருவரின் டிக்கிகளையும் ரூல்ட் நோட் ஆக்கி வெவ்வேறு வகுப்புகளுக்கு மாற்றிவிட்டார்.
'நானா சண்டை போடச் சொன்னேன். அவன்கிட்ட பேசக்கூடாதுன்னு இவன் சொல்றான், இவன் கூடப் பேசாதேன்னு அவன் சொல்றான்.. சரிங்கடான்னு ரெண்டு பேர் கூட பேசறதையும் நிப்பாட்டிட்டேன்.'
கல்லூரியில் படிக்கும்போதும் இதே மாதிரி ஒரு பிரச்னை. ஹெச்.ஓ.டி.யும், இங்கிலீஸ் பேராசிரியர் ஒருவரும் இவளுக்காக மோதிக் கொண்டனர்.
கவிதை பாடிக் கொண்டு ஒருவன், கிடாரில் விரல் வித்தை காட்டிக் கொண்டு ஒருவன், பைக்கில் சர்க்கஸ் செய்தபடி ஒருவன், வேளைக்கு ஒரு புது சட்டை மாற்றும் ஒருவன்.. அவளது கவனம் கவர நடக்கும் கிறுக்குத் தனங்கள் பொழுது
போக்கு .
ஆனால் ஒரு நல்ல விஷயம் யாரையுமே நிராகரிக்க மாட்டாள், எல்லோரோடும் பேசுவாள். அதில் ஈகோ கிடையாது. 'பாவம்டி' என்று 'உச்' கொட்டுவாள்.
'யாராவது வேற மாதிரிப் பேசினாலோ, லவ் லெட்டர் தந்தாலோ அதோட சரி, அவங்க நட்பு கட். அப்புறம் பேச மாட்டேன்..' என தன் நேர்மையை பறை சாற்றுவாள்.
இவ்வளவு ரிஸ்க் எதுக்கு. மாமா மகன் இருக்கான், அத்தை பையன் இருக்கான்னு ஏதாவது கதைவிடவேண்டியது தானே, யாரும் தொந்தரவு செய்ய மாட்டாங்கள்ல..?
'நல்ல ஐடியா' எனத் தலையாட்டுவாளே தவிர செய்யமாட்டாள். உள்ளூர, இந்தப் பைத்தியக்காரத்தனங்களை அவளும் ரசிக்கிறாள், இன்பம் கொள்கிறாள் என்பது எனக்கு புரிந்தே இருந்தது.
கல்லூரி முடித்த இரண்டாவது மாதத்திலேயே திருமணம் நிச்சயமாகிவிட்டது அவளுக்கு.
கணவன் பாபு, அவளுக்கு சற்று சொந்தம். தலைநகரில் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். அரண்மனை வீடு, கப்பல் மாதிரி கார்.. என நல்ல வசதி. அதில் மயங்கிய அவளது பெற்றோர் தலையாட்டி சம்மதித்து விட அவளுக்கு உடனடி திருமணம். போயிருந்தேன்.
அந்த பாபு பவர் கண்ணாடி போட்டுக் கொண்டு, மீசை இல்லாமல், பொருந்தாத சட்டையில் பரிதாபமாக நின்றிருந்தார்.
'என்னடி இது..' என்றேன் செத்துப் போன
குரலில்.
ஏமாற்றத்தை விழுங்கினபடி புன்னகைத்தாள். 'ஏய், நாங்க ஜோடி சேர்ந்து சினிமாவுலயா நடிக்கப் போறோம். குடும்பம் தானே நடத்தப் போறோம்! கல்லூரி வாழ்க்கை வானவில் மாதிரி. இந்த திருமண வாழ்க்கை வானம் மாதிரி. இதுதான் நிரந்தரம். பெத்தவங்க சந்தோஷத்தை கெடுக்க விரும்பலைடி.' என ஏதோ சமாதானம் சொன்னாள்.
அவரும் அவளது அழகைப் பார்த்து திகைத்துப் போயிருந்தார். காலம் முழுக்க இவளை பொத்தி வைத்துப் பாதுகாப்பது எப்படி என்ற திணறல் மனதுக்குள் இருந்திருக்கும் போல!
அவளது திருமணம் முடிந்து சரியாக எட்டாவது மாதம் என் திருமணம் நடந்தது. உள்ளூரிலேயே அமைந்துவிட்டது.
திருமணத்துக்கு கணவனுடன் வந்திருந்தாள். விசேஷமாக இருப்பதை வெட்கம் கலந்து சொன்னாள். தான் சந்தோஷமாக இருப்பதாகவும், அவர்கள் வீட்டில் தன்னை நன்றாக கவனித்துக் கொள்வதாகவும் சொன்னாள். அப்புறம் பெண் குழந்தை பிறந்திருப்பதாக ஒரு தகவல் வந்தடைந்தது. சிசேரியன்.
போய்ப் பார்த்து விட்டு வந்தேன். அவளது கூர்மூக்கு அப்படியே இருந்தது.
அடுத்த வருசம் எனக்கு சாய் பிறந்தான்.
அப்புறம் நாள்களின் நகர்வில் அவ்வப்போது போனில் பேசிக் கொள்வோம். தாய் வீட்டுக்கு வரும்போது அழைப்பாள். போய் பார்த்துவிட்டு வருவேன்.
இப்போது அவள் வந்து போயிருப்பதாக கல்பனா தான் சொல்லியிருந்தாள்.
'உனக்குத் தெரியாதா, கூப்பிடலையா' என்று கேட்டாள் பின்னிணைப்பாக. எரிச்சலாக இருந்தது. கோபமாக வந்தது. ஏன் என்று தெரியவில்லை. மனதை புரிந்து கொள்ள முடியாது அல்லாடினேன்.
அடுப்பில் பாலை வைத்துவிட்டு அது பொங்கி வரும் விநாடிக்காக காத்திருந்த நேரத்தில் செல்போன் ஒலித்தது. செல்லைப் பார்க்கவா, அடுப்பை அணைக்கவா எனத் தடுமாறின ஒரு மில்லி நொடியில் செல்லும் அணைந்து, பாலும் பொங்கி வழிந்து!
என் வாழ்க்கையில் மட்டும் தான் இப்படிப்பட்ட கொடூரங்கள் நிகழும் போல.
போனை தூக்கி கடாசிவிட்டு அடுப்பைத் துடைத்துக் கொண்டிருந்தபோது மீண்டும் ஒலித்தது அது. சர்மிளாவின் பெயர் மின்னிமின்னி ஒளிர்ந்தது.
ஆன் செய்து, 'என்னடி அதிசயமா இருக்கு. போன்லாம் பண்றே?' என்றேன் டாப் கியரில்.
அவள் அதை மதிக்கவில்லை. 'டீ, நம்ம சுபத்ரா நம்பர் இருக்கா. அவங்கப்பா லாயர் தானே?' என்றாள்.
'ஆமா. அனுப்பி வைக்கிறேன்' என்றேன்.
'ஊருக்கு வந்திருந்தியா என்ன.. கூப்பிடலை..'
'வந்தேன், உடனே கிளம்பிட்டேன். கொஞ்சம் எமர்ஜென்சிடி. அதான்.'
'ஓ. பாப்பா எப்படியிருக்கா. வீட்டுக்
காரர்?'
அவளிடம் பதிலில்லை. திடீரென அழுகை சத்தம்.
'ஏய் என்னாச்சுடி!' என்று பதறினேன்.
'அவரு, அவரு சரியில்லை, எனக்குத் தெரியாம வேறொருத்தி கூட குடும்பம் நடத்திட்டு இருக்காரு மூணு வருஷமா. இப்பத் தான் கண்டுபிடிச்சேன். தட்டிக் கேட்டா அப்படித் தான் பண்ணுவேன்னு கத்தறாரு. எனக்கு அவரோடசேர்ந்து வாழப் பிடிக்கலை, அதான் டைவர்ஸூக்கு அப்ளை பண்ணலாம்ன்னு முடிவெடுத்து ஃபார்மலிட்டீஸ் கேட்க, சுபத்ரா அப்பா கூட ஆலோசனை பண்ண அவ நம்பர் கேட்டேன்.'
'என்னடி சொல்றே, இப்படியெல்லாம் கூட.. என்னால நம்பமுடியலைடி. உன்னை ஏமாத்த, துரோகம் பண்ண அந்தாளுக்கு எப்படி மனசு வந்தது?'- குமைந்தேன் தாங்காமல்.
'அடுத்த வாரம் வர்றேன், நேர்ல பேசுவோம். நம்பர் அனுப்பி வெச்சுடு மறக்காம..?' என்று செல்போனை துண்டித்தாள்.
மனம் முழுக்க அதிர்ச்சியை சுமந்து கொண்டு அப்படியே சுவரோரம் நின்றுவிட்டேன். சர்மிளாவின் பின்னால் சுற்றின அத்தனை ஆண்களும் ஏனோ நினைவுக்கு வந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com