திரைக்  கதிர்

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் "தங்கலான்' படம் அடுத்தாண்டு ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டனர்.
திரைக்  கதிர்

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் "தங்கலான்' படம் அடுத்தாண்டு ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டனர். இந்நிலையில் "தங்கலான்' படத்தின் சில போர்ஷன்கள் திருப்திகரமாக வரவில்லை என்றும், அதனை ரீ-ஷூட் செய்யவிருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின. இதனால் படத்தின் ரிலீஸை தள்ளிப்போகும் எனச் செய்திகள் கிளம்பியிருக்கின்றன. விக்ரமின் திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்கப் படமாக "தங்கலான்' உருவாகி வருகிறது. இப்படத்தில் பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி எனப் பலர் நடித்துள்ளனர். ஒவ்வொருவரின் உழைப்பும் பெரிதாகப் பேசப்படும் என்கிறார்கள்.

-------------------------------------------------------

தனுஷின் "கேப்டன் மில்லர்' பொங்கல் விருந்தாகத் திரைக்கு வருகிறது. இதற்கிடையே அவர் இயக்கி வந்த "தனுஷ் 50' படப்பிடிப்பு, நிறைவு பெற்றிருக்கிறது. ராஜ்கிரண் நடித்த "பா.பாண்டி' படத்தை அடுத்து, இப்போது தனது 50-ஆவது படத்தை தனுஷே இயக்கியிருக்கிறார். "திருச்சிற்றம்பலம்' வெற்றி காரணமாக அதன் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் கூட்டணியில் மீண்டும் இணைந்தார் தனுஷ். இது அவரது 50-ஆவது படம் என்பதால், அதனை தனுஷே இயக்க முடிவெடுத்தார். இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், துஷாரா எனப் பலரும் நடிக்கின்றனர். இந்தக் கதை வடசென்னையின் கேங்ஸ்டர் கதை இது என்பதால், வடசென்னை ஏரியாவில் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டனர். தனுஷ் நினைத்தது போல், கதைக்கான லொகேஷன் அமையாமல் போனது. அதனால் ஈசிஆர் சாலையில் அந்த தளத்தை உருவாக்கி படப்பிடிப்பு நடக்கிறது.

-------------------------------------------------------

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இவர், பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிரித்விராஜ் நடிப்பில்"சலார்' படத்தில் கதநாயகியாக நடித்துள்ளார். இதையடுத்து ஹாலிவுட்டிலும்  நடித்து வருகிறார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஸ்ருதி ஹாசன், தான் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்து மீண்டு வந்ததாக மனம் திறந்து பேசியுள்ளார். "என் வாழ்நாளில் எட்டு ஆண்டுகள் மதுவுக்கு அடிமையாக இருந்தேன். அந்த நாள்களில் பார்ட்டிகளில் நிதானமாக இருப்பது எனக்கு மிகவும் கடினமாக இருக்கும். நண்பர்களுடன் குடிப்பதை விரும்புவேன். ஆனால் போதைப்பொருளை ஒருபோதும் பயன்படுத்தியது இல்லை. அந்த நாள்களில் மது என் வாழ்க்கையை ஆட்டிப்படைத்திருந்தது. பின்னர் அதிலிருந்து மீண்டுவிட்டேன். இப்போது அதுபற்றி நான் வருத்தப்படவில்லை. அது என் வாழ்க்கையின் ஒரு கட்டம். பலரும் இதைக் கடந்து அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர்' என்று தெரிவித்துள்ளார்.

-------------------------------------------------------


அஜித்தை வைத்துப் படம் ஆரம்பித்திருக்க வேண்டிய இயக்குநர் விக்னேஷ் சிவன், லைகா நிறுவனத்துடன் ஏற்பட்ட மோதலால் அந்த வாய்ப்பை இழந்தார். "லவ் டுடே' பிரதீப் ரங்கநாதனை வைத்து, அடுத்த பட அறிவிப்பைக் கசிய விட்டு தன் கெளரவத்தைக் காப்பாற்றிக் கொண்ட விக்னேஷ் சிவன், அங்கேயும் கதையை முடிக்க அதிக டைம் எடுத்துக் கொண்டார். ஆனாலும், படத்தின் ஒன் லைனே பிரதீப்புக்குப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்துவிட, ஒருவழியாக "எல்.ஐ.சி' எனத் தலைப்புவைத்து படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்கள். "விடாது கருப்பு' கதையாக, இப்போது படத் தலைப்பின் உரிமை தொடர்பாகவும் புதிய சர்ச்சை கிளம்பியிருக்கிறது. இசையமைப்பாளர் குமரன் அந்த தலைப்பு உரிமை கொண்டாடி இருக்கிறார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com