டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

'பிரணாப்தா'என்கிற மந்திரச் சொல்! - 128

வாஜ்பாய் தலைமையில் அமைச்சரவை பதவி ஏற்றுக்கொண்ட அன்று மாலையில், தில்லி பிரஸ் கிளப்பில் காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருந்தது.

News image
Updated On :27 பிப்ரவரி 2023, 11:35 am

வாஜ்பாய் தலைமையில் அமைச்சரவை பதவி ஏற்றுக்கொண்ட அன்று மாலையில், தில்லி பிரஸ் கிளப்பில் காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருந்தது.  ஆட்சி அமைக்க வாஜ்பாயை குடியரசுத் தலைவர் அழைத்தது சரியா, தவறா என்கிற விவாதம் ஒருபுறமும், வாஜ்பாய் அரசால் பெரும்பான்மை பலத்தைப் பெற முடியுமா என்கிற கேள்வி இன்னொருபுறமும் பத்திரிகையாளர்களால் அலசப்பட்டதை கவனித்தபடி நான் அங்கே அமர்ந்திருந்தேன்.

அங்கிருந்து அருகிலுள்ள ரஃபி மார்க் ஐ.என்.எஸ். கட்டடத்தில் இருந்த மலையாள மனோரமா அலுவலகத்தில் டி.வி.ஆர். ஷெனாயை சந்திக்கச் 
சென்றேன். 

"வாஜ்பாயால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா? எந்த தைரியத்தில் பாஜக ஆட்சி அமைத்திருக்கிறது? பதினைந்து நாள்களுக்காக ஆட்சி அமைத்து வாஜ்பாய் ஏன் பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டும்? பதவி ஆசை பிடித்தவர் என்கிற பழி ஏற்படாதா?'' - என் மனதில் எழுந்த கேள்விகளையெல்லாம் அவரிடம் கொட்டித் தீர்த்தேன்.

""நீங்கள் யோசிப்பதை அவர்கள் யோசித்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறீர்களா? அவர்கள் திட்டமிட்டுத்தான் ஆட்சி அமைத்திருக்கிறார்கள்.''

""அப்படியா சொல்கிறீர்கள்?''

""ஆமாம், இந்திய அரசியலில் 1996 திருப்புமுனையாக அமையப் போகிறது. அப்படி ஒரு திருப்புமுனையை உருவாக்கத்தான் பாஜக திட்டமிட்டு ஆட்சி அமைத்திருக்கிறது.''

எனக்கு அதன் பின்னணி புரியவில்லை. கவிழப் போகும் ஆட்சியை, வலியப்போய் அமைப்பதில் அப்படியென்ன திட்டமிடலும், ராஜதந்திரமும் இருக்கக்கூடும் என்பதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு எனக்கு அப்போது அரசியல் முதிர்ச்சி இருக்கவில்லை என்பதை இப்போது உணர்கிறேன்.

""பாஜகவின் திட்டம்தான் என்ன? எனக்குப் புரியவில்லை. தெளிவுபடுத்துங்களேன்.''

""1947-இல் இருந்து கடந்த அரை நூற்றாண்டு காலமாக இந்திய அரசியல் காங்கிரஸை மையமாக வைத்துத்தான் சுழன்று கொண்டிருக்கிறது. காங்கிரஸூம், அதை எதிர்க்கும் கட்சிகளும் என்பதுதான் இதுவரையில் அரசியல் போக்காக இருந்து வருகிறது. இப்போது, வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைத்து, பாஜகவும் அதை எதிர்க்கும் கட்சிகளும் என்கிற புதிய பாதைக்கு இந்திய அரசியலின் போக்கையே மாற்றிவிட்டது பாரதிய ஜனதா கட்சி...''

ஷெனாய் சாரின் உதவியாளர் உள்ளே வந்தார். நான் விடைபெற்றேன். 

Story image

அசோகா சாலை பாஜக அலுவலகத்தில் நிருபர் கூட்டம் ஒன்றுக்குச் சென்றிருந்த என்னைப் பார்த்துவிட்டார் ஜஸ்வந்த் சிங். முதலாவது வாஜ்பாய் அரசின் நிதியமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்டிருந்தார் அவர். என்னை அவரது வீட்டில் வந்து சந்திக்கும்படி கூறிவிட்டுக் காரில் ஏறிக் கிளம்பி
விட்டார்.

பாரதிய ஜனதா கட்சியில் என் மீது அக்கறையும் அன்பும் வைத்திருந்தவர்களில் ஜஸ்வந்த் சிங் குறிப்பிடத்தக்கவர். முன் அனுமதி பெறாமல் எப்போது வேண்டுமானாலும் அவரது வீட்டுக்குச் செல்லவும், அவரைச் சந்திக்கவும் எனக்கு உரிமை இருந்தது. எனது "நியூஸ்கிரைப்' செய்தி நிறுவனத்துக்கு  அவ்வப்போது கட்டுரைகளை எழுதித் தந்து, அதன் மரியாதையை உயர்த்தியதில் அவருக்கும் பெரும் பங்குண்டு.

தீன் மூர்த்தி லேனிலில் இருந்த ஜஸ்வந்த் சிங்கின் வீட்டுக்கு நான் சென்றபோது, அவர் வந்திருக்கவில்லை. என்னைக் காத்திருக்கச் சொன்னதாக அவரது உதவியாளர் தெரிவித்தார். வீட்டின் ஒரு பகுதியிலிருந்த அலுவலக அறையில் நான் அமர்ந்திருந்தேன்.

சுமார் அரை மணி நேரத்துக்குப் பிறகு ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக மூன்று கார்கள் அவரது பங்களாவுக்கு வந்தன. ஜஸ்வந்த் சிங்கைப் பின் தொடர்ந்து, அப்போதைய வாஜ்பாய் அரசின் சட்ட அமைச்சராக இருந்த ராம் ஜெத்மலானியும், வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சிக்கந்தர் பக்தும் அவரவர் கார்களிலிருந்து இறங்கி, ஜஸ்வந்த் சிங் வீட்டுக்குள் நுழைந்தனர்.

அவர்கள் மூவரும் விவாதத்தில் இருந்திருக்க வேண்டும். சிறிது நேரத்துக்குப் பிறகு என்னை ஜஸ்வந்த் சிங் அழைப்பதாக அவரது உதவியாளர் சொன்னார். என்னை அவர்கள் மூவரும் அமர்ந்திருந்த வரவேற்பறைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கே இருந்த மூவரில் எனக்குப் பரிச்சயம் இல்லாதவர் ராம் ஜெத்மலானி. ஜஸ்வந்த் சிங் என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அமரச் சொன்னார்கள். அமர்ந்தேன்.

""திமுக மூன்றாவது அணியிலிருந்து வெளியே வராது. வாஜ்பாய் அரசை ஆதரிக்காது. பிரதமராகி இருக்க வேண்டிய மூப்பனாருக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. அதில் அவருக்கு வருத்தம் எதுவும் இல்லையா? உங்களுக்கு அதுபற்றி ஏதாவது தெரியுமா?'' - ஜஸ்வந்த் சிங் கேட்டார்.

""தெரியாது.  அப்படியே வருத்தம் இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாதவர் ஜி.கே. மூப்பனார் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். 

திமுகவைச் சார்ந்துதான் அவரது முடிவு இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். காங்கிரஸ் ஆட்சி அமைப்பதாக இருந்தால் ஒருவேளை அவர் திமுகவின் முடிவையும் மீறி அந்த ஆட்சியை ஆதரிக்கக்கூடும். நிச்சயமாக பாஜகவை அவர் ஆதரிக்க வாய்ப்பில்லை.''

""யாரைத் தொடர்பு கொண்டால், மூப்பனாரின் மனநிலையைத் தெரிந்துகொள்ளலாம்?'' - கேட்டது சிக்கந்தர் பக்த்.

""ப. சிதம்பரத்தை வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள்.''

""சிதம்பரமா? ஹி ஹாஸ் அதர் பிளான்ஸ் (அவருக்கு வேறு திட்டம் இருக்கிறது). மூப்பனாரே ஏற்றுக்கொண்டாலும் அவர் தடுத்து விடுவார்?'' - சீறினார் ராம் ஜெத்மலானி.

ஜஸ்வந்த் சிங் புன்னகைத்தார். சிக்கந்தர் பக்த், ""ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?'' என்று ராம் ஜெத்மலானியிடம் கேட்டார். 

""தேவே கெளடா தலைமையில் அமையும் ஆட்சியில் நிதியமைச்சராகும் எதிர்பார்ப்பில் இருக்கிறார் சிதம்பரம். அவர் எப்படி மூப்பனார் நம்மை ஆதரிப்பதை அனுமதிப்பார்? வேறு ஏதாவது உருப்படியாக யோசியுங்கள்...'' - ஜெத்மலானி.

""நீங்கள் சோ சாரைத் தொடர்பு கொண்டு, மூப்பனாரிடம் பேசிப் பாருங்கள். அவர் சொன்னால் மூப்பனார் கேட்கக்கூடும்...'' - என்றேன் நான்.

""ஏற்கெனவே சோவிடம் பேசிவிட்டோம். அவர் தலையிட மாட்டேன் என்று சொல்லி விட்டார்...'' என்று தெரிவித்தார் ஜெத்மலானி.

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு சிக்கந்தர் பக்த்தும், ஜெத்மலானியும் கிளம்பிச் சென்றனர். வரவேற்பறையிலிருந்து நான் அலுவலக அறையில் ஜஸ்வந்த் சிங்குக்காகக் காத்திருந்தேன். வந்தார்.

""அகாலி தளம் (8), சமதா கட்சி (8), சிவசேனை (15) மூன்று கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. 11 எம்பிக்கள் கொண்ட பகுஜன் சமாஜ் கட்சி எந்தக் கூட்டணியையும் ஆதரிக்கப் போவதில்லை. இந்த சூழலில் தமிழ் மாநில காங்கிரஸூம், பகுஜன் சமாஜ் கட்சியைப் போல வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருந்தாலேகூடப் போதும்.''

Story image

""அப்படியே இருந்தாலும்கூட உங்களுக்குப் பெரும்பான்மை பலம் இருக்கப் போவதில்லையே...''

ஜஸ்வந்த் சிங் பதில் சொல்லவில்லை. வேறு ஏதோ வியூகம் வகுக்கிறார்கள் என்பது மட்டும் புரிந்தது.

தீன் மூர்த்தி லேனிலிருந்து பொடி நடையாக நடந்து செளத் அவென்யூவில் இருந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர்ஜி வீட்டை அடைந்தேன். முலாயம் சிங் யாதவ் வந்திருப்பதாகவும் அவர் சந்திரசேகர்ஜியுடன் பேசிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்கள். முலாயம் சிங் கிளம்பிப் போன பிறகு சந்திரசேகர்ஜி என்னை உள்ளே அழைத்தார்.

""ஜெயலலிதாவின் ஆட்சியை அகற்றியதுடன் சோவின் வேலை முடிந்துவிட்டது, அப்படித்தானே...?'' என்றபடி சிரித்தார் அவர்.

""மூப்பனார் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இருக்க சோ சாரைப் பரிந்துரைக்கச் சொல்கிறார்கள். அவர் மறுத்துவிட்டாராம்.''

""சோ எப்போதுமே அப்படித்தான். அவர் ஏதாவது நினைத்தால், அதை நடத்திவிட்டு ஒதுங்கிவிடுவார். சோ அப்படி ஒதுங்குவது சரியல்ல...''

""அவர்தான் உங்களது நெருங்கிய நண்பராயிற்றே? அவர் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதுதானே. நீங்கள் சொன்னால் கேட்பார்...''

""அப்படியெல்லாம் அவரை எடை போட்டுவிடாதீர்கள். அவர் யார் சொன்னாலும் கேட்கமாட்டார். அவருக்கு சரியென்று தோன்றினால்தான் கேட்பார். ஆனால், அவர் சொல்வதை மற்றவர்களைக் கேட்க வைத்துவிடுவார். அதுதான் சோவின் சாமர்த்தியம்...''

""வாஜ்பாய் ஆட்சி பிழைக்குமா?''

""இந்த ஆட்சியும் பிழைக்காது. இதற்கு பதிலாக அமையப்போகும் ஆட்சியும் நிலைக்காது. காங்கிரஸூம், கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆட்சியில் பங்கு பெற்றால் மட்டும்தான் நிலையான ஆட்சி அமையும். இல்லையென்றால், அந்த ஆட்சியை ஒரே வருடத்தில் காங்கிரஸ் கவிழ்த்துவிடும். அதனால் காங்கிரஸூக்கு லாபம் கிடைக்கப்போவதில்லை. இப்போது இருப்பதைவிட அதிக இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்கும்.''

தீர்க்க தரிசனம்போலச் சொன்னார் சந்திரசேகர்ஜி.

""தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டிருக்கும் நிலையில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமையக்கூடாது என்கிறார்களே மூன்றாவது அணித் தலைவர்கள். அவர்கள் எப்படி காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை ஏற்றுக் கொள்வார்கள்?''

""பிரதமராக இருந்த நரசிம்ம ராவின் தலைமையும், அந்த அரசின் கொள்கைகளும்தானே நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.  நரசிம்ம ராவ் அல்லாமல் பிரணாப் முகர்ஜி தலைமையில் கூட்டணி ஆட்சி அமையட்டும். அதுவும் வேண்டாம் என்றால், முன்னாள் காங்கிரஸ்காரரான மூப்பனார்ஜி தலைமையில் ஆட்சி அமைக்கட்டும். வேறு எப்படி, யார் ஆட்சி அமைத்தாலும் அந்தக் கூட்டணி நிலைக்காது.''

""முலாயம் சிங் யாதவ் என்ன நினைக்கிறார்?''

""ஜனதா தளத்தின் தலைமையில், அதிலும் குறிப்பாக தேவே கெளடா தலைமையில் ஆட்சி அமைவதை அவர் விரும்பவில்லை. மூன்றாவது அணியிலிருந்து விலகினால், மாயாவதி அந்தக் கூட்டணியில் சேர்ந்து விடுவார் என்பதால்தான் அவர் அங்கே தொடர்கிறார்.''

அன்றைய அரசியல் சூழல் குறித்து அவரிடம் விளக்கமாக ஒரு பேட்டி எடுத்தேன். அந்தப் பேட்டியில் மேலே குறிப்பிட்ட விவரங்கள் இருந்தன. இரண்டு நாள் கழித்து வெளிவந்த எனது சந்திரசேகர்ஜியின் பேட்டி அப்போது பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான நரசிம்ம ராவை நேரில் சந்தித்த தேவே கெளடா, குடியரசுத் தலைரையும் சந்தித்துவிட்டு பெங்களூரு திரும்பிவிட்டார். தமிழக முதல்வர் கருணாநிதியும் சென்னை திரும்பிவிட்டார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தில்லியில் தங்கி இருந்து மூன்றாவது அணியைக் கட்டமைப்பதில் முனைப்புக் காட்டினார்.

1996 மூன்றாவது அணியைக் கட்டமைத்து ஐக்கிய முன்னணி ஆட்சியை நிறுவியதில் முக்கியப் பங்கு வகித்தவர்கள் மூன்று பேர். அவர்கள் - தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான என். சந்திரபாபு நாயுடு, ஜனதா தளத் தலைவர் ஜெய்பால் ரெட்டி, மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித்.

புதிதாக வேறு கட்சிகளின் ஆதரவு கிடைக்காது என்பது உறுதியானபோது, பெரும்பான்மையை ஏற்படுத்த பாஜக இன்னொரு வியூகத்தை அமைக்க முற்பட்டது. அந்த முயற்சி வெற்றி பெற்றிருந்தால், ஒருவேளை முதலாவது வாஜ்பாய் அரசின் ஆட்சி தொடந்திருக்கக் கூடும். அந்த வியூகம் என்ன தெரியுமா?

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.