டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

நாங்கள்  தேறிவிட்டோம்

மிக மெல்லிய குரலில் அழகான புன்சிரிப்புடன் அவர் கடந்து சென்றபோது, அவருடன் சென்ற அழகான வெள்ளை நாய்க் குட்டிதான் குட் மார்னிங் சொன்னதா?

News image
Updated On :19 பிப்ரவரி 2023, 12:30 am

DIN

""குட் மார்னிங்''
மிக மெல்லிய குரலில் அழகான புன்சிரிப்புடன் அவர் கடந்து சென்றபோது, அவருடன் சென்ற அழகான வெள்ளை நாய்க் குட்டிதான் குட் மார்னிங் சொன்னதா? எனும் யோசனை நந்தகுமாருக்கு! அவ்வளவு மென்மையாய் இதழ் பிரியாமல் அந்த மனிதர் சொன்ன விதம் அப்படி இருந்தது. இதற்கு முன்னர் அவரைப் பார்த்ததில்லை. பார்த்தவரோ, பார்க்காதவரோ, தெரிந்தவரோ, தெரியாதவரோ? எதிர்படும் எல்லோருக்கும் குட்மார்னிங் சொல்வது ஆஸ்திரேலியர்களின் இயல்பு என்பது இந்த இருபது நாள்களில் காலை நடைப்பயிற்சியின்போது பழக்கமாகி விட்டிருந்தது. அந்த ஒரு வார்த்தையைத் தவிர இன்னொன்று இருக்காது. மிஞ்சிப் போனால், " ஹெள டு யு டு'. அவ்வளவுதான்.

இயல்பாகவே அவர்கள் மிக அமைதியானவர்களாய் இருந்தனர். அதிகம் பேச மாட்டார்கள்.

உணவகங்கள், மால்கள், பொழுதுபோக்கிடங்கள் போன்ற பொது இடங்களிலும் சில பேராக வந்திருந்தாலும் அமைதியாகத் தாம் உண்டு; தங்களுடைய வேலை உண்டு எனக் கருமமே கண்ணாக இருப்பார்களே தவிர, அநாவசியப் பேச்சு இருக்காது. வந்த புதிதில் வெகுவாய் வியக்க வைத்த அவர்களின் இந்த மெளன விரதம் ஒரு வாரத்தில் பழகி விட்டிருந்தாலும் தீர்ந்தபாடில்லை; அந்த ஆச்சரியம். இரவு பகலின்றி இரைச்சலுக்குப் பழக்கப்பட்ட உணர்வுகளாயிற்றே!

""ஏண்டா செல்வா. வீட்டுல கூட இவர்கள் மெளனச் சாமியாராகத் தான்இருப்பாங்களா? ஒருத்தரோட ஒருத்தர் பேசிக்கவே மாட்டாங்களா?''

""அதெப்படிப்பா முடியும். நல்லா கலகலன்னே இருப்பாங்க! ஆனாலும் நம்மளவு பேசிப்பாங்களான்னு தெரியலே? இங்கெல்லாம் வீட்டு வேலைக்கு ஆள் கிடைக்க மாட்டாங்க! புருஷன்- பெண்டாட்டி ரெண்டு பேரும் ஆபீஸ் வேலைன்னு நாளெல்லாம் மிரட்டிட்டே இருக்கறப்ப உட்காந்து பேசவெல்லாம் நேரம் எப்படி இருக்கும்பா? அதுவும் புது ஆளுங்க கிட்ட எந்த ஊர் , இங்க எப்ப வந்தீங்க? இங்க யார் இருக்காங்கன்னு துருவித் துருவிக் கேக்க மாட்டாங்க? தேவையில்லாமல் சொந்த விஷயங்களைப் பகிர்ந்துக்கவே மாட்டாங்க! அதுவும் அவ்வளவு பழக்கமில்லாதவர்களிடம்! எங்களுக்கு இதெல்லாம் நல்லாப் பழகிப் போச்சுப்பா! போகப் போக உங்களுக்கும் பழகிடும்.''

""நீயும் விமலாவும் கூட அப்படித்தான் ஆயிட்டீங்க! ரெண்டு பேரும் நாளெல்லாம் வேலை, வேலைன்னு களைத்துப் போறீங்களா? கிடைக்கும் கொஞ்சம் ஓய்வு நேரத்தில் கூட உட்கார்ந்து நாலு வார்த்தை பேசறதில்லே நீங்க? நல்ல வேளை. என்னுடன் உன் அம்மா வரலே. அவளால் ஒரு மணி நேரம் கூடத் தாக்குப் பிடிக்க முடியாது . என்னை நாளைக்கே ஊருக்கு ப்ளைட் ஏத்தி விடுங்கன்னு நச்சரித்திருப்பாள்!''

""என்ன செய்யறதுப்பா. நம்ம ஊர் போல் சமையலுக்கு வீட்டு வேலைக்குன்னு இங்க யாரும் கிடைக்க மாட்டாங்களே. அங்க இஸ்திரி கூட வீட்டுக்கே வந்து எடுத்திட்டுப் போறாங்க! அதான் சோர்வாயிடறோம். அதுவுமில்லாம எங்களுக்கும் இந்த நிசப்தம் நல்லாப் பழக்கமாயிட்டதுப்பா!''

"" நீங்களே பரவாயில்லை. இந்த சதீஷ் இருக்கானே! ஆறு வயசிலேயே இப்படி இதெல்லாம் பழகிட்டான். பாரேன்.''

""நாளைக்கே டிக்கெட் எடுன்னு நீங்க கிளம்பிட மாட்டீங்க தானே மாமா?'' என்று துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்த விமலா சிரித்தபடி கேட்டாள்.

""நீ வேற! இதுக்கெல்லாம் பயந்து மூட்டை கட்டும் ஆளில்லைம்மா நான். முழுசா ஆறு மாசம் இருந்திட்டுதான் கிளம்புவேன். இந்த ஊர்க்காரங்க சுபாவம் ரொம்பவே புதுசா இருக்கா? அதான்''

இப்படியே தனிமையும் தானுமாய் நடைப்பயிற்சிக்குச் சென்று கொண்டிருந்த ஒரு காலை வேளையில் அந்த பஞ்சாபிக்காரரைச் சந்தித்தார் நந்தகுமார்.

கொலு வைத்தாற் போல் ஒரே மாதிரி அமைப்புள்ள அழகான தனி வீடுகள். நீள் வரிசையில். ஒவ்வொரு வீட்டின் முன்னும் பச்சைக் கம்பளம் விரித்தது போல் மெத்தென்ற புல்வெளிப் பரப்பு. வீடுகளுக்கும் சாலைக்கும் இடையே நீளும் நடைப் பாதை. அங்கு தான் அனைவரின் நடைப்பயிற்சி உலா ! எவ்வளவு ரம்மியமான சூழல் அமைத்துத் தந்துள்ளது இந்த உள்ளாட்சி நிர்வாகம்! இந்திய நாட்டின் ஜனத் தொகையில் மூன்று சதவீதம் மக்களே ஆஸ்திரேலிய நாட்டில் இருப்பதால்தான் இதெல்லாம் சாத்தியமாகிறதா? மனப் பூர்வமாய் மெச்சிக் கொண்டார் நந்தகுமார். ஆனால் இதற்கும் ரேஷன் பேச்சுக்கும் என்ன சம்பந்தம் எனும் எரிச்சலும் கூடவே எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

மனிதச் சுவடுகளேயற்ற சாலையில் கார்கள் மட்டும் விரைந்து கொண்டிருந்தன. நல்ல காலம். மக்களின் அசாதாரண மெளனம் பறவைகளுக்குத் தொற்றிக் கொள்ளவில்லை. கீச்..கீச்.. என அவைகளுக்கே உரித்த கொஞ்சம் வித்தியாசமான ஒலிகளில் பலகுரல் இசை. ஆனால் ஒன்று கூடக் கண்ணில் படவில்லை. இலை போட்டுச் சாப்பிடலாம் போல் படு சுத்தமாக மழுமழுவென்றிருந்த சாலையின் இரு மருங்கும் ஒரே அளவில் வரிசையாக அணிவகுத்து நின்ற மரகதப் பச்சை மரங்களில் ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தன அவை.

காகங்கள் மட்டும் கா.. கா... எனக் கரைந்தபடி ஏழெட்டு கண்ணில் பட்டபோது, "அட நம்ம இனம்' என ஹல்லோ என வாய் விட்டுச் சொன்னபடி கையசைத்துச் சிரித்தார். சற்று நேரத்தில் எப்போதும் எதிர்ப்படும் ஓரிரு உள்ளுர் குட் மார்னிங்கள்! இதாவது வாய்த்ததே எனும் திருப்தியில், இவர் அதையே பதிலாக்க, மென் சிரிப்புடன் கடந்து விட்டார்கள் அவர்கள்.

ஓரிரு வீடுகள் முன் பெரிய புல் வெட்டும் சாதனத்தின் உதவியால் புல் வெளியைச் சீராக்கும் பணியில் படு சுறுசுறுப்பாக முனைந்திருந்த இரு முதிய பெண்கள் நந்தகுமாரைப் பார்த்து, சின்னதாய் முறுவலித்து தங்களது வேலையைத் தொடர்ந்தனர். இவர்கள் காலையில் காப்பி குடித்திருப்பார்களா? தேவையற்ற எண்ணம்! தனக்குள் சிரித்தபடி சில அடிகள் நடந்த போது அந்தச் சிரிப்பு தொடரும் விதமாய் அப்போதுதான் அந்த பஞ்சாபிக்காரரைச் சந்தித்தார். நீள் கோடுகள் பொட்ட வெளிர் நீல பைஜாமா சட்டை நீண்ட வெண் தாடி...டர்பன் என அவர்களுக்கேயான யூனிஃபாரர்மில் ஏறக்குறைய அறுபத்தைந்து வயதிருக்கும். அடடா! நம்ம நாட்டுக்காரர்! அவர் நெருங்கியபோது அந்த முகத்திலும் ஒளி மிளிரும் சிரிப்பு!

""ஆர் யூ ஃப்ரம் இந்தியா?''
""யெஸ்..தமிழ்நாடு. யூ ..''
""கபீர் சிங். லூதியானா''

இருவர் கரங்களும் ஒரே நேரத்தில் நீள, வெகு மகிழ்வான கைக் குலுக்கலாக இருந்தது அது.

""இரண்டு வருஷமாய் இதே வழியில்தான் வாக்கிங் வந்துட்டிருக்கேன். முதல் முதலாக இங்க ஓர் இந்தியரைச் சந்திப்பது எவ்வளவு ஆனந்தமா இருக்கு தெரியுமா?''

""அப்படியா! இருபது நாளா வர்ற எனக்கே சந்தோஷமா இருக்குன்னா? உங்க ஹாப்பினெஸ் நல்லாப் புரியுது. நான் இங்க என் பிள்ளை வீட்டுக்கு வந்திருக்கேன். நீங்க எப்ப வந்தீங்க?''

குலுக்கிக் கொண்ட அவர்கள் கைகள் இன்னும் விலகிக் கொள்ளவில்லை. ஹிந்தியிலும் ஆங்கிலத்திலுமாய் அவர்களின் உரையாடல்! அந்த நீண்ட சாலையில் பிரியும் கிளைச் சாலையில் அவர்கள் வீடு. இங்கு 12 ஆண்டுகளுக்கும் மேலாய் வசிக்கும் இளைய மகன் வீட்டில் மனைவியுடன் இருக்கிறார். அவ்வப்போது மனைவியும் உடன் வருவாராம். இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியா சென்று மூத்த மகனுடன் சில மாதங்கள் தங்கி வருபவர்கள். கி.மு., கி.பி. என்பதைப் போல், கோ. பி. அதாவது "கோவிட்' ஆட்சிக்குப் பின்னர் மூன்றாண்டுகளாய் போகவில்லையாம். இதற்கு மேல் எதுவும் பேசாமல். மீண்டும் பரஸ்பரம் மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டு தம் வழி நடந்தனர். வீடு திரும்பியது தான் தாமதம். ஒரு இந்தியரின் அறிமுகம் கிடைத்துள்ள தகவலைப் பகிர்ந்து கொண்டபோது, அவர்கள் இவரின் புது நண்பரைப் பார்த்திருப்பதாகக் சொன்னார்கள் பேசியதில்லையாம்.

மறுநாள் தன்னுடைய மனைவியுடன் வந்த கபீர் சிங், நந்தகுமாரை அறிமுகப்படுத்தியபோது அந்தப் பெண்மணி முகத்திலும் அதே பூரிப்பு! அவரைச் சந்தித்ததிலான மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள். அந்த நிறைவு கண் காணாத் தேசத்தில் தாய் நாட்டவரைப் பார்த்த இயல்பான பற்றுதலா? அந்த நாட்டினர் அதிகம் பேசாதவர்களாக இருப்பதால் விளைந்த வெறுமையின் தாக்கமா? இரண்டுமாகத் தான் இருந்தது அந்த மூவரைப் பொறுத்தவரை!

நடைப்பயிற்சிப் பயணம்.. ஒரே பாதை.. ஒரே நேரமாக இருந்ததால் அன்றாடம் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.ஆனாலும் ஒருவரையொருவர் தத்தம் இல்லங்கள் வருமாறு அழைக்கவில்லை. வீட்டார் அதை விரும்புவார்களோ மாட்டார்களோ எனும் தயக்கம் இருவருக்குமே இருந்தது.

ஒரு நாள் நடைப்பயிற்சி முடித்துத் திரும்பியபோது , செல்வாவும் விமலாவும் மாய்ந்து மாய்ந்து சுத்தமாகவே இருந்த வீட்டை மில்லி மீட்டர் மில்லி மீட்டராய் மேலும் மெருகேற்றிக் கொண்டிருந்தனர். விடுமுறை நாளிலும் இவ்வளவு சீக்கிரம் எழுந்து மாங்கு மாங்கென்று வேலை செய்து கொண்டிருக்கும் மகனைப் பார்த்து ஏகத்துக்கு வியப்பேற்பட்டது. ஊரிலிருந்தபோது அவன் அம்மாவுக்கும் அவனுக்குமிடையே எந்த நேரமும் சண்டை தான். சுத்தம் என்பது அவன் அறியாத வார்த்தை. தன்னுடைய அறையில் துணிமணிகள், பொருள்களைக் கூடச் சீராக வைத்துக் கொள்ள மாட்டான். அவனா இப்படி ?!

""எல்லாம் நல்லாத் தானேடா இருக்கு! அழுக்கில்லாத சுவர் கதவுகளை ஏண்டா ரெண்டு பேருமா இப்படி விழுந்து விழுந்து துடைக்கிறீங்க?''

அவனுக்குக் கிடைத்த பதில், அதுவரை அறிந்திராத விஷயமாக இருந்தது. விந்தைகளின் காப்புரிமையா இந்த நாடு? வீட்டுச் சொந்தக்காரரின் மகனுக்கு சிட்னியிலிருந்து பிரிஸ்பேன் மாற்றலாகியுள்ளதால் அவர்களுக்கு இந்த வீடு வேண்டுமாம். காலி செய்ய அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு மாத அவகாசத்தில் மூன்று வாரங்கள் முடிந்து விட்டதாம். அவருக்கு இந்த விஷயம் ஏன் இதுவரை சொக்கவில்லை எனக் கேட்டபோது, வேறு வீடு கிடைத்தவுடன் சொல்லலாமென நினைத்தார்களாம். அந்த வேறு வீட்டுக்கான தேடலில் இவர்கள் எதிர்பார்ப்புக்கேற்ற வீடு கிடைத்து விட்டது. ஆனால் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன் வீடு ஏற்பாடு செய்த "ரென்டல் ஏஜென்ஸி' போன்ற நிறுவனத்தார் வந்து வீட்டைப் பார்வையிட்டு சீராகப் பராமரித்துள்ளார்கள் என்ற திருப்தி ஏற்பட்ட வேண்டுமாம். ஒப்பந்தம், முன்பணம், வாடகை வசூல்.. இப்படி எல்லாமே அந்த நிறுவனத்துடன் தான்! வீட்டுச் சொந்தக்காரருடன் வாடகைதாரர்களுக்கு அறிமுகமே பெரும்பாலும் இருக்காது.

""என்னவோ போடா! இவ்வளவு தூரம் நாடு விட்டு நாடு வந்தது இப்படியெல்லாம் கஷ்டப்படறதுக்கா?'' என்று ஆயாசத்துடன் சோபாவில் சரிந்தார் நந்தகுமார்.

"" யார் சொன்னதுப்பா நாங்க கஷ்டப்படறோம்னு. நம்ம வீட்டு வேலைகளை நாம செய்வதை யாருமே கஷ்டமா நினைக்கறதில்ல இங்க . வாரமெல்லாம் உழைக்கறோம். வாரக் கடைசியில் நண்பர்கள் சந்திப்பு, சினிமா, வெளியில் சாப்பாடு, ஷாப்பிங், .மூணு மாதத்துக்கொரு முறை சின்னதா வெளியூர் பயணம்னு நாங்க சந்தோஷமாவே இருக்கோம். இங்க மக்கள் அநாவசியமா தலையிட மாட்டாங்க! அதிகம் பேச மாட்டாங்களே தவிர ரொம்ப நல்லவங்கப்பா! அவசரமென வந்தால் உடனே உதவிக்கு ஓடி வருவாங்க! இங்க கொஞ்சம் சுத்தம். சட்டத் திட்டமெல்லாம் அதிகம். அவ்வளவுதான். நல்லது தானே!. நம்ம ஊரில் ஓனர் வந்து இங்க ஏன்ஆணி அடிச்சே, கதவு தாழ்ப்பாளெல்லாம் ஏன் இவ்வளவு இறுக்கமாயிட்டதுன்னு ஆயிரம் கேள்வி கேப்பாங்களே அதுவும் அவஸ்தைதானே !

இங்க மட்டும்னு இல்லை. எல்லா நாடுகளிலுமே கஷ்ட சுகங்கள் இருக்குப்பா? கை நிறைய காசு வேணும். ஆனால், ஊரொடு ஒத்து வாழ மாட்டோன்னா எப்படிப்பா? திரும்பவும் சொல்றேன். நாங்க ரொம்ப ரொம்ப சந்தோஷமாத்தான் இருக்கோம்பா? வீணா ஏதேதோ நினைத்து மனதை குழப்பிக்காதிங்க'' என்று அலமாரியின் கைப் பிடியை அழுத்தித் துடைத்தவாறு நீளமாய் அப்பாவைச் சமாதானம் செய்தான் செல்வா.

மறுநாள் நடைப்பயிற்சி கிளம்பும் முன் ஒரு புதுக் குழப்பம். வீடு காலி செய்யப் போகும் விஷயம் தன்னிடமே இவன் இத்தனை நாள் கழித்துதானே சொன்னான். அப்படி இருக்கும்போது தனது நண்பரிடம் இதைச் சொல்வதா?, வேண்டாமா? என்று செல்வாவிடம் கேட்டே விட் டான்.

""சொல்லக் கூடாதுன்னு இல்ல. சொல்லாவிட்டாலும் பரவாயில்ல.''

""ஏன். சொன்னா என்ன? தாராளமா சொல்லலாம். அவர் மாமாவின் ஃப்ரண்டாச்சே!''

""நான் வேண்டான்னு சொல்லலையே?''

மகனின் பதில் திருப்தி அளிக்கும் விதமாய் இல்லை. அவர் தன் நண்பரிடம் சொல்லவுமில்லை. வழக்கம்போல், "" குட் மார்னிங். டீ. பிரேக் ஃபாஸ்ட். வெயில், குளிர்.. செடி கொடி, புல்.. பூ... இப்படியான உரையாடல்களின்இடையே சில நாள்கள் நகர்ந்தன. தன்னைக் கண்டதும் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் விதமாய் முகம் மலரும் கபீர் சிங்.

நடைப்பயிற்சியைச் சுவாரசியமானதாய் அடிக்கடி சொல்லும் அந்த மன நிறைவு. இவரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறோமே எனும் உறுத்தல் இம்சித்துக் கொண்டே இருந்தது. ஆனாலும் உறுதியாகவே இருந்தார். வீடு காலி செய்யும் நாள் வரை. இவர்கள் வீட்டின் வழியே தான் கபீர்சிங் நடைப்பயிற்சி போவதால் அன்று டெம்போவில் கடைசி சாமான் ஏற்றும் வரை வெளியில் தலைகாட்டவில்லை. . இடையில் ஒரு முறை வீதிப் பக்கம் பார்வை சென்றபோது, சாமான்கள் ஏறிக் கொண்டிருக்கும் லாரியைப் பார்த்தபடி கபீர் சிங் மெதுவாய் நடப்பது தெரிந்தது. அது இவர்கள் வீடு தான் என அவருக்குத் தெரியும்.

அங்கிருந்து ஏழெட்டு கிலோ மீட்டர் தள்ளியிருந்த புது வீட்டில் பொருள்களையெல்லாம் அதனதன் இடத்தில் ஒழுங்குபடுத்தும் மும்மரத்தில் நான்கு நாள்கள் கழிந்தவுடன் காலை நடைப்பயிற்சிக்குக் கிளம்பினார். அதே மாதிரி வீடுகள்.. அகன்ற சுத்தமான, ஆளரவமற்ற சாலைகள். .விலைஉயர்ந்த கார்கள்.. மர வரிசை...புல் வெளி...நடைப்பாதை.. ஆனாலும் சாலையின் வெறுமை மட்டும் இன்னும் அடர்த்தியாய் உணர வைத்தது. கபீர் சிங் இல்லாததால்...!

ரயில் சிநேகம் போன்றது தான் இதுவும்! மனதைத் தேற்றிக் கொண்டாலும் அவரிடம் ஒரு வார்த்தை சொல்லாமல் வந்துவிட்ட நெருடல் மட்டும் மிகவும் அவஸ்தைப்படுத்தியது. கைப்பேசி எண் கூடத் தெரியாதே?

சில நாள்கள் சென்றிருக்கும். ஒரு காலை வேளை. கண்முன் பறந்த காக்கைகளுடன் மானசீகமாய் பேசியபடி நடந்தபோது, சற்று தொலைவில் கபீர் சிங் போல் உருவம்.

அதே நடையும் உடையும். ஆம் அவரே தான். கபீர்சிங் தான்!

இருவரும் எதிரெதிர் நெருங்கியபோது கபீர் சிங் முகத்தில் குபீரென எழுந்த ஒளிக் கீற்றையும் மீறி, அந்த குற்ற உணர்வு. அவர் தலை குனிந்த தன்மை! ஏதோ புரிவது போலிருந்தது நந்தகுமாருக்கு!

""அதோ அதுதான் இப்ப நாங்க மாறியிருக்கிற வீடு'' என்று சற்றுத் தள்ளியிருந்து பார்வை தொடும் தூரத்திலிருந்த வீட்டைக் காட்டினார் கபீர் சிங்.
""மூன்று நாள்கள் முன் வந்தோம். அங்க நீங்க இருந்தபோதே எனக்குத் தெரியும். ஆனால்...'' என்று கபீர் சிங், மீண்டும் தரையைப் பார்த்தார்.
""பரவாயில்லை. ஐ அண்டர்ஸ்டாண்ட்.'' என்று அமைதியாய் கூறினார் நந்தகுமார்.
சில மெளன கணங்களுக்குப் பின்னர், இருவரது கரங்களும் சிநேகமாய் நீண்டு குலுக்கிக் கொண்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.