பிணக்கு

இருவரும் முடிவு செய்தார்கள்; ஒருவருக்கொருவர் பேசுவதில்லை என்று! பேசினால்தானே தகராறு. பேசாமலிருந்தால் ஒன்றுமில்லை.
பிணக்கு

இருவரும் முடிவு செய்தார்கள்; ஒருவருக்கொருவர் பேசுவதில்லை என்று! பேசினால்தானே தகராறு. பேசாமலிருந்தால் ஒன்றுமில்லை. ஹேமாவுக்கும், கோபாலனுக்கும் இந்த முடிவு சரி என்று பட்டது. அவர்களைத் தேடி யாராவது வந்தால் தேவையில்லாமல் வம்பு ஏற்படுமே என்று அப்போது மட்டும் ஒன்றிரண்டு வார்த்தைகள் அவசியம் கருதிப் பேசுவார்கள்.

ஏன் இந்த முடிவை எடுத்தார்கள்?

திருமணமாகி மூன்றாண்டுகள் முடிந்துவிட்டன. நூற்றுக்கணக்கில் சண்டை போட்டிருப்பார்கள். அவனுடன் ஏற்பட்ட பந்தமே கசந்துவிட்டது ஹேமாவுக்கு. எப்போது வேண்டுமானாலும் உதறி வந்திருக்கலாம். ஆனால் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி மூன்றாண்டுகள் பொறுத்துக் கொண்டோம்.
மணவாழ்க்கைக் கசந்து விட்டது ஹேமாவுக்கு. இத்தனைக்கும் அவனுக்கு இணையாக அவளும் சம்பாதிக்கிறாள். இருவரும் காலையில் பரபரவென்று கிளம்பி விடுவார்கள். தத்தம் அலுவலகங்களுக்கு! ஹேமாவும் டூ வீலர் ஓட்டுவாள். அவள் தனக்கென்று பைக் வைத்திருக்கிறாள். அதை எடுத்துக் கொண்டு எங்கே போக வேண்டுமென்றாலும் பறந்து விடுவாள்.
மடிப்பாக்கத்திலிருந்து கிண்டியில் இருக்கும் அவள் அலுவலகத்துக்குப் போய் வருவது அவளுக்குச் சற்று சிரமமாக இருந்தாலும், அலுக்காமல் போய் வருவாள். அவனது அலுவலகம் தாம்பரத்தைத் தாண்டி இருந்தது. நேரிடையாகப் பஸ் பிடித்துப் போய்விடுவான். "இது என்ன இயந்திரத்தனமான வாழ்க்கை' என்று இருவருக்கும் தோன்றாமலில்லை. இருவரின் பெற்றோர்கள் அவர்களுடன் சில நாள்கள் இருந்து பார்த்தார்கள். முடியவில்லை. எப்படியெல்லாம் ஒருவருக்கொருவர் இருக்க வேண்டுமென்று அவர்களிடம் பேசிப் பார்த்தார்கள். இருவரும் அதைக் கேட்பதில்லை. அவர்கள் போக்கிலிருந்தார்கள்.
"நாம் விரும்புகிற மாதிரியே நம் பிள்ளைகள் வாழ்வதில்லை' என்று அவர்கள் தங்களுக்குள்ளேயே சொல்லிப் பார்த்துக் கொண்டார்கள்.
அவர்களுக்கு இதுவரை குழந்தை பிறக்கவில்லை என்ற கவலை அவர்களைத் தொற்றிக் கொண்டது.
ஒரு குழந்தை பிறந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று அவர்கள் நம்பினார்கள். இவர்களுக்காக எல்லாக் கடவுள்களையும் வேண்டினார்கள். சில வேண்டுதல்கள் விஷயமாக இவர்களைத் தொந்தரவும் செய்ய ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு என்னமோ குழந்தை பிறக்கவில்லை.
கொஞ்சம், கொஞ்சமாக அவர்களுக்குள் விரிசல் ஆரம்பித்தது. ஒருமுறை எதோ கோபத்தில் கோபாலன் சாப்பாட்டுத் தட்டை தூக்கி எறிந்தான். நல்லகாலம். அவர்களுடைய பெற்றோர்கள் அந்தத் தருணத்தில் அவர்களுடன் இல்லை. அவள் திகைத்து விட்டாள். அன்று அவள் அவனுடன் பேசவில்லை. ஏன் அதன் தொடர்ச்சியாக நாலைந்து நாள்கள் பேசவில்லை.
அவளைச் சமாதானம் செய்து சகஜ நிலைக்குக் கொண்டு வருவதற்குள் அவனுக்குப் போதும் போதுமென்று ஆகிவிட்டது. அவன் அவளுடன் ஏன் அப்படிக் கோபப்பட்டான் என்பது பற்றி அவன் யோசிக்கவுமில்லை. அவனிடத்தில் எந்தவித நியாயமுமில்லை என்றாலும் அவன் கோபப்படத்தான் செய்வான்.
திருமணத்துக்குமுன் அவன் அப்பா, அம்மாவிடம் கூட அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறான். எதற்கெடுத்தாலும் அவனுக்குக் கோபம் வரும். திருமணத்துக்குப் பின்னர் அவன் மாறி விடுவானென்று அவர்கள் நினைத்தார்கள். அவன் மாறவில்லை.
கொஞ்சம், கொஞ்சமாக அவர்கள் இருவரிடையே பிளவு ஏற்பட்டு முற்றிவிட்டது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதில்லை. பேசுவதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள். தனித்தனியாகச் சமையல் செய்து கொண்டார்கள். இப்படி வாழ்வது வேடிக்கையாக இருந்தது. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அவர்கள் ஆதர்ச தம்பதியர்.
அவள் யோசித்துப் பார்த்தாள் எத்தனை நாளைக்கு இப்படி இருப்பது என்று. ஒருநாள் அவனுடன் அவள் பேச ஆரம்பித்தாள். ஆனால் அவன் "பிகு' செய்துகொண்டான். அன்று அவள் பேச முயற்சி செய்தாலும் அவன் வேண்டுமென்றே பேசவில்லை.
ஒருநாள் சில துணிமணிகளை எடுத்துக்கொண்டு பெங்களூரு போய்விட்டாள். அவள் அண்ணன் இருக்குமிடத்துக்கு! அண்ணன் வீட்டில்தான் அவளுடைய பெற்றோர் இருந்தார்கள். அவள் செல்லும்போது அவனிடம் ஒன்றும் சொல்லவில்லை. ஒரு குறிப்பை மட்டும் பெங்களூரு போவதாக எழுதி வைத்துவிட்டுப் போனாள். அவனால் அவளைத் தடுக்க முடியவில்லை. என்னவென்று கேட்கவும் விரும்பாமல் இருந்தான். இரண்டு நாளில் வழக்கம்போல் ஒன்றும் பேசாமல் உர்ரென்று இருந்தான்.
திடீரென்று அங்கு வந்ததை அவளது அண்ணனால் புரிந்துகொள்ள முடியவில்லை.
""தனியாக இடம் பார்க்கப் போகிறேன். என்னுடன் வந்து இருங்கள்'' என்றாள் அவள் தனது பெற்றோர்களிடம். என்ன காரணம் என்று அவர்கள் விசாரித்தார்கள்.
""இனிமேல் அவனுடன் குடும்பம் நடத்த முடியாது'' என்றாள். அவள் அண்ணன் குடும்பம் கூட அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தது. அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அங்கு ஒரு வாரத்துக்கு மேல் அவள் தங்க விரும்பவில்லை. உடனே கிளம்பிவிட்டாள்.
கோபாலன் அவள் வீட்டில் இல்லை என்பதை ஆழமாக உணர்ந்தான். அவளுடன் பேச
முடியவில்லை என்று இருந்தாலும் அவளுடைய இருப்பு அவனுக்கு ஆறுதல் அளிக்காமலில்லை. கோபாலன் தன்னையே நொந்து கொண்டான். அவனுடைய முன்கோபம்தான் எல்லாவற்றுக்கும் காரணம்.
சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் அவன் படப்படப்பாகப் பேசிவிடுவான். பிறகு வருந்துவான்., அவன் தன்மானம் அவளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று தோன்றியதில்லை. இதுதான் பெரிய பிரச்சினையாகப் போய் விட்டது.
அவள் பெங்களூரிலிருந்து வந்த பிறகு எப்போதும்போல் இருந்தாள். அவனிடம் அவள் பேசவில்லை. பேசாவிட்டாலும் பரவாயில்லை. அவள் வந்து விட்டாள் என்று அவன் மகிழ்ந்தான். அவளோ அவனைப் பொருள்படுத்தவே இல்லை.
வழக்கம்போல் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நாள்கணக்கில் பேசிக்கொள்ளாமல் இருந்தார்கள். அவன் தனியாக தன் சமையலைப் பார்த்துக் கொண்டான். அவளும் அப்படித்தான். அவர்கள் வசித்த வீடு அவர்
களுடைய மெளனத்தை ரசித்தது. அவளைத் தேடி அவள் நண்பர்கள் வர ஆரம்பித்தார்கள். அவளுடன் படித்தவர்கள், தற்போது அவளுடன் பணி ஆற்றுபவர்கள். எல்லோரும் அவள் வீட்டுக்கு வந்து அரட்டை அடிப்பார்கள். அப்போதெல்லாம் அவன் கண்ணில் படமாட்டான். அல்லது வீட்டில் இருக்க மாட்டான்.
ஆரம்பத்தில் மற்றவர்கள் வந்தால் அவர்கள் இருவரும் நடிப்பார்கள். இப்போதெல்லாம் அதுமாதிரி நடிக்க முடிவதில்லை.
தெளிவாக அவன் மீதுள்ள வெறுப்பை அவள் நண்பர்களிடம் காட்டாமலில்லை. அதைக் கேட்டு அவர்கள் அவளுக்காக வருந்தினார்கள்.
சில நாள்கள் அவர்களுடன் அவள் வெளியே போய்விடுவாள். சாப்பிட்டுவிட்டு மெதுவாக வருவாள். அவள் கையிலிருந்த ஒரு சாவியை வைத்துக் கொண்டு படுக்கை அறையில் போய் படுத்து விடுவாள். அவர்கள் சண்டை போட ஆரம்பித்தவுடன் இருவரும் தனித்தனி அறைகளில் படுத்துக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
அந்த வீடு ஒரு வாடகை வீடுதான். திருமணம் ஆன புதிதில் அந்த வீட்டுக்கு அவர்கள் குடி வந்தபோது அதுமாதிரி வீடு வாங்க வேண்டு
மென்று நினைத்தார்கள்.ஆனால் அதெல்லாம் முடியாத காரியமாகப் போய் விட்டது. யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்தால் இந்தப் பிரச்னை சரியாகப் போயிருக்கும். அவனுடைய முன்கோபம்தான் அவளுக்கு அவனிடம் ஒருவித வெறுப்பை ஏற்படுத்தியது. அவள் மீது எந்தத் தப்பும் இல்லையா? இல்லாமல் இல்லை. அவளுக்குக் கோபம் வராதே தவிர எல்லாவற்றுக்கும் பிடிவாதம் உண்டு.
அவள் ஒரு முடிவுக்கு வந்தாள். அவனுடன் தன் வாழ்க்கையைத் தொடர முடியாதென்று. ஒரு ஞாயிற்றுக்கிழமை அவளைத் தேடி அவள் அலுவலக நண்பர்கள் வந்தார்கள். எல்லோரும் உரக்கச் சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தார்கள். அவளது நண்பர்களில் ஒருவர், ""நான் வேண்டுமானால் கோபாலனுடன் பேசிப் பார்க்கிறேன், நீங்கள் இருவரும் இப்படி இருப்பது சரியில்லை'' என்றார்.
""பிரயோசனமில்லை'' என்றாள் ஹேமா.
பிறகு துணிச்சலாக அவனிடம் பேச ஆரம்பித்தார். அவர் அனுபவம் உள்ள நண்பர். அவளுடன் அவள் அலுவலகத்தில் பணிபுரிகிறார். ஹேமா மாதிரி ஒரு பெண் மனைவியாகக் கிடைத்ததற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.'' என்றார். பதிலில்லை.
""உங்களுக்குள் என்ன பிரச்னை?'' என்றார் மீண்டும்.
கோபாலன் திகைத்தான்.
அவரிடம் ஹேமா பேசிவிட்டாளா? என்ற ஆத்திரம் கூட வந்ததுஅவனுக்கு!
அவர் கேட்டதற்கு சாதாரணமாக முகத்தை வைத்துக்கொண்டு, ""ஒன்றுமில்லை'' என்றான்.
""எனக்குத் தெரியும் நீங்கள் ஒருவரையொருவர் பேசிக்கொள்வதில்லை.''
""ம்ம்ம்.. இது தனிப்பட்ட எங்கள் பிரச்னை. இதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை, என்றான் கோபாலன் முகத்தில் அடித்த மாதிரி. அதன் பின்னர் அவன் அங்கு நிற்காமல் போய்விட்டான்.
ஹேமாவுக்கு இந்தச் செயல் வருத்தமாகதான் இருந்தது. அவள் தலைகுனிந்துகொண்டாள்.
அவள் சொன்னதுதான் சரி. அவனுடன் ஏன் பேசினோம் என்று தோன்றியது அந்த நண்பருக்கு, ""நீங்கள் இத்தனை நாள்கள் கடத்தியிருக்கக் கூடாது. அவனை விட்டுப் போயிருக்க வேண்டும்.'' என்றார்.
இதற்கு ஹேமா ஒன்றும் சொல்லவில்லை.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, கோபாலனுக்கு அவளை எப்படியாவது சமாதானம் செய்ய வேண்டுமென்று தோன்றிவிட்டது. ஹேமா தன்னைவிட்டு மீண்டும் போய்விடுவாள் என்ற பயம் அவனைக் கவ்விக் கொண்டது. அதைப் பற்றியே அவன் 24 மணி நேரம் யோசித்துக்கொண்டிருந்தான். அவளிடம் முழுதாக சரண் அடைந்து விடலாம் என்றும் நினைத்தான்.
கோபாலனுக்கு எந்த நண்பனும் கிடையாது. யாருடனும் அவன் சரியாகப் பேச மாட்டான். அதாவது பேசுவதுகூட காரணம் காரணமின்றி பேச மாட்டான். ஒருவர் அவனுடன் பேசுகிறான் என்றால் எதற்காகப் பேசுகிறான் என்று யோசிப்பான். ஆனால் புத்தகம் படிப்பான். இசை மீது அவனுக்கு அபாரமான ஞானம் உண்டு. தட்டில் சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டு புத்தகம் படிக்கும் பழக்கம் அவனுக்கு உண்டு. அவளிடம் அவன் படிக்கிற புத்தகங்களைப் பற்றிப் பேசுவான். அதைக் கேட்கிற ஆர்வம் அவளுக்கு இருந்ததில்லை
""முன்னெல்லாம் நான் தெருவிலே நடந்து போகும்போது புத்தகம் படிப்பேன் தெரியுமா? இப்போதுதான் என்னை மாற்றிக் கொண்டேன்'' என்றான் ஒருநாள் அவளிடம். அவள் முகத்தைச் சுளித்தாள். இதெல்லாம் அவளுடன் சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தபோது நடந்தது.
""இன்ன புத்தகங்கள்தான் படிப்பது என்பதில்லை. எதை வேண்டுமானாலும் படிப்பான். ஹேமாவுக்கோ புத்தகமே பிடிக்காது. அவள் கல்லூரி படிக்கும்போது பாடப் புத்தகங்களைத் தவிர வேற எதையும் படித்ததில்லை.
ஹேமாவுக்குப் போகப்போகத்தான் அவனது போக்கு புரிந்தது. அவன் இயல்பு என்று அவனை விட்டுவிட்டாள். ஆனால் அவள் சுபாவம் வேறு மாதிரி இருந்தது. அவளுக்குப் பழக நாலு மனுஷாள் வேண்டும் போலிருந்தது.
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அவனுடைய முன்கோபம் மட்டும் காரணமாக அவளுக்குத் தோன்றவில்லை.
ஒருநாள் இரவு அவர்கள் இருவரும் டைனிங் டேபிளில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவள் தயாரித்த உணவை அவளும், அவன் தயாரித்த உணவை அவனும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவனுக்கு விக்கல் ஏற்பட்டது. விடாமல் விக்கிக் கொண்டிருந்தான். அவளுக்குப் பாவமாக இருந்தது. அவள் உடனே தண்ணீர் எடுத்துக் கொடுத்தாள். அவளுக்கு நன்றி தெரிவித்தான். "இது கூடச் சொல்லத் தெரிகிறதே' என்று ஆச்சரியப்பட்டாள்.
""என்னை மன்னித்து விடு"' என்றான் திடீரென்று.
அவள் பேசாமலிருந்தாள்.
""என்னை விட்டுட்டுப் போயிடாதே ஹேமா!''
அவள் ஒன்றும் சொல்லவில்லை.
""நீ இல்லாமல் இந்த வீடே சரியாயில்லை. நீ என் கூடப் பேசாமலிருந்தாலும் சரி. நீ இந்த வீட்டில் இருக்கணும்.'' என்றான்.
அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவள் கண்கள் பனித்தன.
மெதுவாக அவள் கோபாலனின் கையை வருடினாள். அருகே அமர்ந்து அவனது தோளைச் சுற்றி கை போட்டு நெருக்கிக் கொண்டாள். அவனது வார்த்தைகளுக்காகவே காத்திருந்தது போல, ""நாளையிலிருந்து நம் இருவருக்கும் நானே சமைக்கிறேன்'' என்றாள் அவள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com