சாப்பாடு!

சாப்பாடு!

ஆவி பறக்கும் சூடான சோறு, முள்ளங்கிக் குழம்பு, நெய், காரட் பொறியல்.. எல்லாம் ஒரு தட்டில் வைத்து ஜானகி, கஸ்தூரியின் கையில் கொடுத்தாள்.


'கஸ்தூரி, இந்தா, இந்தச் சாப்பாட்டை எடுத்துக்க!''
ஆவி பறக்கும் சூடான சோறு, முள்ளங்கிக் குழம்பு, நெய், காரட் பொறியல்.. எல்லாம் ஒரு தட்டில் வைத்து ஜானகி, கஸ்தூரியின் கையில் கொடுத்தாள்.
காலையில் எழுந்து, குளித்து, முகம் முழுக்க மஞ்சள் பூசி, பெரிய குங்குமப் பொட்டுடன் வேலைக்கு வரும் கஸ்தூரிக்கு, ஜானகி காலையிலேயே சூடாக சாப்பாடோ, டிபனோ  எது அன்று செய்கிறாளோ அதை  கொடுத்து விடுவாள். சாப்பாட்டுத் தட்டை எடுத்துகொண்டு, வெளியில் பால்கனியில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினாள் கஸ்தூரி. பால்கனி சுவரில் ஒரு பிடி சோற்றை வைக்க, வழக்கமாக வரும் காக்கை ஒன்று, கொத்தியபடி அங்கும் இங்கும் பார்த்தது.
சாப்பாட்டு மேசையில் எதிரும் புதிருமாக அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த ரேணுவும், ப்ரீதமும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர்.
'ம்.. சீக்கிரம் சாப்பிடுங்க! மணி வந்து காரைத் துடைத்துத் தயாராகி,  அரை மணி நேரம் ஆகிறது.  அள்ளிப் போட்டுகிட்டுக் கிளம்புங்க!  சீக்கிரம் காலேஜுக்கு'' என்று ஜானகி, மதியத்துக்கான டிபன் கேரியர் பையை மேசை மீது வைத்தாள்.
பெரியவள் ரேணு இளங்கலை மூன்றாம் ஆண்டு.  சின்னவள் ப்ரீதம் இளங்கலை முதலாம் ஆண்டு. நன்றாகப் படிப்பார்கள் என்றாலும், மருத்துவம், பொறியியல் என்ற சிக்கல்களுக்குள் சிக்காதவர்கள்!  முதுகலை படித்து, கல்லூரிப் பேராசிரியராக விரும்பும் ரேணுவும், விசுவல் கம்யூனிகேஷன் படித்து, ஒரு நல்ல படைப்பாளியாக வேண்டும் என விரும்பும் ப்ரீதமும் ஒரே கல்லுரியில்  பெண்ணியக் கருத்துகளில் மிகவும் ஆர்வம் உடையவர்கள்.  குட்டையாகத் தலைமுடியை கத்தரித்து, புருவங்களைச் செதுக்கி, ஜீன்ஸ், டீ சர்ட் என வலம் வருபவர்கள். ஆணுக்குப் பெண் சமம் என்பதில் உறுதியானவர்கள்.   
'என்னம்மா நீ, இவ்வளவு படிச்சு மார்டனா இருக்கே, ஆனாலும், இன்னும் பழைய பழக்கங்களை மாத்திக்க மாட்டேங்கறயே?''
ஜானகிக்குப் புரியாமல்,  'எதைப் பற்றி சொல்ற நீ?'' என்றாள் ரேணுவைப் பார்த்து!
உடை, உணவு, பழக்க வழக்கங்கள் எதிலும் தலையிடாமல், அதே சமயம் அவர்களின் போக்கைக் கவனமாகக் கட்டுக்குள் வைத்திருப்பதையா? விரும்பிய படிப்பு, கல்லூரி என சுதந்திரமாக விட்டிருப்பதையா? எதைச் சொல்கிறாள்? 
'கிராமத்தில் அந்தக் காலத்திலேயே பாட்டி செய்ததையேதான் நீயும் செய்யறே?''
நெற்றி சுருக்கி, தலை சாய்த்து ஜானகி தன் பெண்ணைப் பார்த்தாள்.  ப்ரீதம் அம்மாவைப் பார்த்தபடியே காரட் பொறியலை எடுத்துத் தனது தட்டில் வைத்துக்கொண்டாள்.
'சமையலைச் சொல்றயா?''
'இல்லே.. கஸ்தூரி தனியா வெளியில் பால்கனிலேயே சாப்பிடறாளே  அதைச் சொன்னேன். எங்களோட டைனிங் டேபிள்ல உட்கார்ந்து சாப்பிடச் சொல்லக் கூடாதா?''
ஜானகிக்கு ஒரு விநாடி 'திடுக்' கென்றது. பின்னர் மனதுக்குள் சிரித்தாள்.  
'நான் சாப்பாடுதான் கொடுத்தேன். இடம் அவளாகத் தேர்ந்தெடுத்தது. அவளுக்கு எங்க விருப்பமோ அங்கே உட்கார்ந்து சாப்பிடறா?''
'நீ சொல்லலாமே?  எங்களோடயே உட்காரச் சொல்லி!''
'ஏற்றத்தாழ்வு இன்னும் போகலை போல இருக்கு. அவ நம்மோடையே உட்கார்ந்து சாப்பிட்டா என்ன?'' என்று தன் பங்குக்கு கேட்டாள் ப்ரீதம்.
'நீங்க நினைக்கிறது தப்பு. ஓட்டல், கல்யாணங்கள் என எல்லா இடங்களிலும் ஒண்ணாத்தானே உட்கார்ந்து சாப்பிடுகிறோம்?''
'அது பொது இடம். அங்கெல்லாம் அப்படித்தான். வீட்ல இது என்ன பாகுபாடு?''
வெளியூருக்கு நம்முடன் வண்டி ஓட்டி வரும் மணியும், ஓட்டலில் தனியாகத்தானே அமர்ந்து சாப்பிடுகிறான்?  அதற்குப் பெயர் என்ன? ஜானகிக்கு நேரமில்லை  சேர வேண்டிய நல்ல செய்தி சேர வேண்டியவர்களுக்குத் தவறான புரிதலில் சொல்லப்பட்டிருக்கிறது என்பது மட்டும் புரிந்தது.
'சரி, இப்போ உங்களுக்கு நேரமாகிவிட்டது, கிளம்புங்கள். நாளைக்கு உங்களுடனேயே கஸ்தூரியை உட்கார வைத்து சாப்பாடு போடுகிறேன்!'' என்றாள் ஜானகி.
ரேணுவுக்குத் தன் அம்மாவை நன்கு தெரியும். எந்தக் காரியத்திலும் ஒரு ஒழுங்கு,  நேர்த்தி. கஸ்தூரிக்குச் செய்வதிலும் ஒரு குறையும் வைக்க மாட்டாள். ஆனாலும் இந்த ஒரு செயல் மட்டும் ரேணுவால் புரிந்து கொள்ள முடியவில்லை.
'சரிம்மா. கஸ்தூரியும் நம்பள மாதிரிதானே, எல்லோரும் சேர்ந்து தான் சாப்பிடணும்? தனியா அவ ஏன் சாப்பிடணும்?'' என்று கேள்வியைக் காற்றில் தொங்க விட்டு, இருவரும் கிளம்பிப் போய்விட்டனர்.
கஸ்தூரி தன் தட்டையும், ரேணு, ப்ரீதம் சாப்பிட்ட தட்டுகளையும் கழுவி வைத்தாள்.  வீடு பெருக்கி, துணி துவைத்து, மற்ற பாத்திரங்கள் துலக்கி அவளுக்கு இன்னும் ஒரு மணி நேரம் வேலையிருக்கிறது. ஜானகி கொடுத்த சாப்பாடு மனதுக்கும், உடலுக்கும் இதமாக இருந்தது.
ஜானகியின் வீட்டில் கஸ்தூரி வேலைக்குச் சேர்ந்தபோது பதினேழு அல்லது பதினெட்டு வயதிருக்கும். ரேணுவும், ப்ரீதமும் சின்னக் குழந்தைகள். ஜானகி கஸ்தூரிக்கு எல்லாம் கற்றுக் கொடுத்தாள், சமையல் உள்பட! தன் மகள் போலவே அவளைக் கவனித்து வந்தாள்.  வேலுவை கஸ்தூரி திருமணம் செய்து கொண்டபோது, ஜானகி, தன்னால் ஆன எல்லா உதவிகளையும் செய்தாள். திருமணத்துக்குப் பின்னும், கஸ்தூரியும் ஜானகியின் குடும்பத்தில் ஒருத்தி போலவே எல்லா வேலைகளையும் செய்து வந்தாள்!  
'ஜானகி அம்மா மாதிரி யாரு செய்வாங்க? பசி வேளைக்கு சாப்பாடு, நாள் கிழமையில் புடவை, துணிமணி, கேக்கறப்போ பணம், எதுக்கும் கொறையே இல்லை. சாப்பாடு கூட, மொத நாளு சாப்பாட்ட போடமாட்டாங்க. அவங்க சாப்பிடற அதே சாப்பாட்டத்தான் சூடா குடுப்பாங்க!'' என்று தனது கணவன் வேலுவிடம் சொல்வாள் கஸ்தூரி. 
'ஆமா.  வித்தியாசமெல்லாம் பார்க்க மாட்டங்க ஜானகியம்மா. நான் எப்போ போனாலும், காபியோ, டீயோ சூடாக் கையிலே கொண்டுவந்து குடுப்பாங்க!'' என்பான் வேலு.
ஜானகி தன்னுடைய அன்றாட பூஜையை முடித்து, கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி, இரண்டு பழம் நெய்வேத்தியம் செய்து, சாப்பிட வந்தாள்.  அதற்குள் கஸ்தூரி வேலைகளை முடித்து, ஃப்ரிஜ்ஜிலிருந்து தயிர், ஊறுகாய், தண்ணீர் எல்லாம் எடுத்து டைனிங் டேபிளில் வைத்தாள். ஜானகி சாப்பிட உட்கார்ந்தாள்.
ரேணுவும், ப்ரீதமும் கேட்ட கேள்வி, ஜானகிக்கு வியப்பாக இருந்தது. 'குழந்தைகளுக்கு இப்படி ஓர் எண்ணம் வரும்படி, நாம் ஏதும் தவறாகச் செய்துவிட்டோமோ?'  என நினைத்தாள். 
ஜானகியின் கல்லூரிப் படிப்பு டவுனில் இருந்தாலும், வீடு ஐந்தாறு கிலோ மீட்டர் தள்ளியிருந்த அக்ரகாரத்தில்தான்.  மாடி வீடு, வாசலில் நிரந்தரப் பந்தல், வில் வண்டி, வெளியூர் செல்லக் கார், ஊஞ்சல், பின்கட்டில் மாடுகள் என வசதியான வாழ்க்கைதான். ஜானகியின் அப்பாவுக்கு நிலம் நீச்சு என பூர்வீக சொத்து இருந்தாலும், தன் படிப்புக்கேற்ற வழக்குரைஞர் தொழிலை விடாமல் நேர்மையாகச் செய்துவந்தார். ஏழைகளுக்குத் தன் செலவிலேயே வழக்காடி, ஜெயித்தும் தருவார். வீட்டுக்கு வரும் கிளைண்ட் யாராக இருந்தாலும், வீட்டு தம்ளரில் மோரோ, டவரா தம்ளரில் காபியோ நிச்சயமாக உண்டு!
ஜானகியின் அம்மா அந்தக் காலத்து மனுஷி. மடி, ஆச்சாரம் எல்லாம் பார்த்தாலும், மனித நேயம் மிக்கவள். வீட்டு வேலை செய்த லட்சுமிக்குப் பணம், புதுத் துணி, வருஷாந்திர நெல்.. என எல்லாம் கொடுப்பாள். ஆனாலும், தன் ஆச்சாரத்தை விட்டுத் தர அவள் மனம் இடம் கொடுக்காது. வீட்டைச் சுற்றியுள்ள நடைபாதையில் வந்துதான், வீட்டின் பின்கட்டுக்கு வரவேண்டும். பாத்திரங்கள் தேய்ப்பது, துணிகள் துவைப்பது எல்லாம் வீட்டுக்கு வெளியே உள்ள பின் கட்டில்தான். காலையில் ஒரு காபியும், பின்னர் பழைய சோறும், குழம்பும் கொடுப்பாள்.  இல்லாத நாள்களில், கையில் காசு கொடுத்து வெளியில் சாப்பிடச் சொல்வாள். ஜானகி காலேஜ் விட்டு வந்தாலும், வீட்டுக்குப் பின்புறம் சென்று, குளித்துவிட்டுத்தான் வீட்டுக்குள் வரவேண்டும். அதெல்லாம்  அந்தக் காலம்.
'என்னம்மா ரொம்ப யோசனையா இருக்கீங்க? ஒடம்புக்கு ஏதாச்சும் சொகமில்லையா?'' என்று கஸ்தூரியின் குரல் கேட்டுத் தன் நினைவுக்கு வந்தாள் ஜானகி.
'அதெல்லாம் ஒண்ணுமில்லே. வேலையெல்லாம் முடிச்சுட்டயா? சரி,  நீ கௌம்பு.''
ஜானகி மனதுக்குள் ஒரு முடிவுக்கு வந்தாள்.
சமீபத்தில் பவள விழா கொண்டாடிய மகளிர் கல்லூரி அது.  மைதானத்தின் ஓரத்திலிருந்த பெரிய மர நிழலில்  போடப்பட்டிருந்த சிமென்ட் பெஞ்சுகளில் வட்டமாக அமர்ந்து, ரேணுவும் ப்ரீதமும் தோழிகளுடன் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
'எப்படிப்பா உங்கம்மா இவ்வளவு வாசனையோட, டேஸ்டியா வெஜ் புலாவ் செய்யறாங்க?'' என்று கேட்டபடியே ஹம்சா, ரேணுவின் டிபன் பாக்ஸிலிருந்து ஒரு கரண்டி புலாவ் எடுத்தாள்.  அவள் வீட்டு இட்லியுடன் சட்னியும் ரேணுவுக்கு வந்தது.  ஹம்சாவுக்கு சிறிது தள்ளி அமர்ந்து சாப்பிட்டாள் செல்வி. அன்று அவள் வீட்டில் மீன் குழம்பு.
'ஏன் செல்வி தள்ளி உட்கார்ந்திருக்கே? மீன் குழம்புன்னா?''
'ம்..ம்..''
'வா, கிட்டே வந்து உட்கார்ந்து சாப்பிடு. நான் உன் மீனை எடுத்துக்க மாட்டேன்!''
தோழிகள் ஒரே சிரிப்பு!
'நாம தினமும் ஒண்ணாத்தானே உட்கார்ந்து சாப்பிடுகிறோம்? யாருக்கு எது பிடிக்குதோ அதைச் சாப்பிடுகிறோம். உணவுப் பழக்கம், சாப்பிடும் முறை எல்லாம் அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதுல தவறென்ன இருக்கு? இன்னும் மனதளவிலே ஏற்றத்தாழ்வு போகலே போல இருக்கு!'' என்ற ரேணு, காலையில் தனது வீட்டில் நடந்ததைத் தன் தோழிகளிடம் கூறினாள். 
'எங்க வீட்டிலேயும் வேலை செய்கின்றவர்களுக்கென்று தனி சமையல் உண்டு!'' என்று பெரிய ரைஸ் மில் சொந்தக்காரர் பெண் சரோஜா சொன்னாள்.  அதோடு, ' இருபத்தி ஐந்து பேருக்கும் மேல் வேலை செய்வதால், அவர்களுக்குத் தனியாக சமைக்க வேண்டியதிருக்கும். அவர்களுக்கு ஒரு வேளை உணவு கொடுத்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார் என் அப்பா'' என்றாள்.
'இன்னும் சமூக மாற்றங்கள் வர வேண்டும். சமத்துவம் எல்லாம் இங்கே பேச்சளவில்தான் இருக்கு! நகரங்களில் ஏதோ கொஞ்சம் மாற்றங்கள் தெரியுது. கிராமப்புறங்களில் இன்னும் சில இடங்களில் இரட்டைத் தம்ளர் முறை உள்ளது'' என்றாள் ரேணு. 
'எங்கே இதெல்லாம் மாறிடப் போவுதோன்னு கவலையோட, மேடையில் முழங்கும் மனிதர்களும் இங்கே உண்டு. மாறிட்டா, அவங்க பொழப்புக்கே வந்துடும் கேடு'' என்று செல்வி சொன்னாள். கல்லூரி மணியடிக்கவே, தோழிகள் வகுப்பறைக்குச் சென்றனர். 
மறுநாள் காலை சீக்கிரமே சாப்பாடு தயார் செய்துவிட்டாள் ஜானகி. டைனிங் டேபிளின் ஒரு பக்கம் ரேணுவும், ப்ரீதமும் உட்கார, எதிரில் கஸ்தூரிக்கும் தட்டு வைத்துப் பரிமாறினாள். கஸ்தூரி கூச்சத்துடன்,  'நான் பால்கனியிலேயே சாப்பிடுகிறேன் அம்மா'' என்றாள். உடனே ரேணு, 'ஏன் கஸ்தூரி, எங்களுடன் உட்கார்ந்து சாப்பிடமாட்டியா?' ‘என்று கேட்டாள்.
'ஐயோ.. அப்படி இல்லே ரேணும்மா'' என்று தயங்கினாள்.
ஜானகி, கஸ்தூரியின் கையைப் பிடித்து, அமரச் செய்தாள்.  மூன்று பேருக்கும் பரிமாறினாள்.
கஸ்தூரி, நாற்காலியின் முனையில் அமர்ந்திருந்தாள். எல்லாம் கொஞ்சமாக, அவசர அவசரமாகச் சாப்பிட்டாள். இடையிடையே ரேணுவையும், ப்ரீதத்தையும் பார்த்துகொண்டாள். அவள் கண்களில் நீர் வழிந்தது. அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு, ரசம், மோர் எல்லாம் வேண்டாமென்று எழுந்துவிட்டாள்.  குறைவாகவும், அவசரமாகவும், சங்கடத்துடனும் சாப்பிடும் கஸ்தூரியை,  ரேணு அதிசயமாகப் பார்த்தாள்! 
ரேணுவும் ப்ரீதமும் கல்லூரிக்குச் சென்ற பிறகு, 'இது வேண்டாம்மா. எனக்குத் தனியாகவே சாப்பாடு போடுங்கம்மா. என்னால அவங்க கூட உட்கார்ந்து சாப்பிட முடியலம்மா? ரொம்ப கூச்சமா இருக்குது!'' என்றாள் கஸ்தூரி.
'இது நம்ம வீடுதானம்மா. ரேணுவையும், ப்ரீதமையும் சின்ன வயசுலேர்ந்தே உனக்குத் தெரியுந்தானே? அப்புறம் என்ன கூச்சம்?''
'இருக்கலாம்மா. சாப்பிடறது உங்க சாப்பாடா இருந்தாலும், நாங்க வேற மாதிரியா சாப்பிடுவோம்.  உங்களோட அப்படி ஃப்ரீயா சாப்பிட முடியலம்மா. ஓட்டல், கல்யாணம் அங்கெல்லாம், நிறைய பேர் சாப்பிடுவாங்க, தெரியாது.''
ஜானகி, கஸ்தூரியின் அருகில் வந்து, 'அசடு. நம்ம வீட்டில் அந்த மாதிரியெல்லாம் நினைக்கவே கூடாது. உன் வீட்டில் எப்படி சாப்பிடுவையோ, அப்படியே இங்கயும் சாப்பிடு'' என்றாள்.
'முடியலைம்மா.. பால்கனியிலேயே சாப்பிடறேன். அதான் நிம்மதியாகவும் நல்லாவும் இருக்கு!''
விநயத்துடன் பார்த்தாள் ஜானகி. 'நீ சரியா சாப்பிடலைன்றதெ நான் கவனிச்சேன். இந்தா இந்தக் கேரியர்ல சாப்பாடு கட்டிவெச்சிருக்கேன். வீட்டுக்குப் போய் வேலுவோட நிம்மதியாச் சாப்பிடு!''
இரவு அலுவலகத்திலிருந்து வந்த பிரபு, 'ஜானகி, தட்டைப் போடு. பசி கொல்லுது'' என்றான்.
'என்ன ஆச்சு? ஆபீஸ்ல  மீட்டிங் முடிஞ்சு, டின்னர் கிடையாதா?''
'ம்ம்.. இருந்தது. எம்.டி. , ஃபாரீன் டெலிகேட்ஸ், பெரிய ஆஃபீஸர்களோட உட்கார்ந்து ஃப்ரீயா சாப்பிட முடியலெ. ஏதோ கொஞ்சம் கொறிச்சிட்டு, வந்துட்டேன். நம்ம வீட்ல சாப்பிடற மாதிரி ஆகுமா?''
'அது ஸ்பெஷல் சாப்பாடு ஆச்சே!''
'இருக்கட்டுமே. நிம்மதியா நம்ம இஷ்டப்படி வேணும்கிறதை வீட்டில சாப்பிடறாமாதிரி அங்கெல்லாம் சாப்பிட முடியாது. அந்த சூழலே நமக்கு அந்நியமாத் தெரியுது!''
ஹாலில் டிவி பார்த்துக்கொண்டிருந்த ரேணு, அப்பாவை ஆச்சரியமாகப் பார்த்தாள்.
'தப்பா நெனச்சிக்க மாட்டாங்களா?''
'என்ன நெனச்சிக்கிட்டா என்ன? மரியாதைக்கு அவங்கக் கூட இருந்தேன். சாப்பிடறது என் இஷ்டம். தனிமனித சுதந்திரம்!''
டி.வி.யில் இரண்டு பேர் ஏதோ காரசாரமாக அன்றைய அரசியலை விவாதித்தபடி இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com