பட்டினி இல்லாத இந்தியா என் கனவு!

இந்தியாவில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி,  உணவு உற்பத்தியில் தன்னிறைவை உண்டாக்கிய பெருமைக்குரியவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன். 
பட்டினி இல்லாத இந்தியா என் கனவு!

இந்தியாவில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி, உணவு உற்பத்தியில் தன்னிறைவை உண்டாக்கிய பெருமைக்குரியவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன்.
1925ஆம் ஆண்டு ஆக. 7இல் கும்பகோணத்தில் பிறந்த இவர், நாட்டின் முதுகெலும்பாக உள்ள வேளாண் துறையில் அபரிதமான வளர்ச்சியை ஏற்படுத்தி, உலக அரங்கில் இந்தியாவை வியந்து பார்க்க வைத்தவர். இவர் 2023 செப். 28இல் மறைந்தார்.
'பசியால் இந்தியர்கள் தானாக மடிந்து விடுவார்கள்' என்ற வெளிநாடுகள் கொண்டிருந்த ஏளனமான கருத்தைப் பொய்யாக்கி, இந்திய வேளாண் உற்பத்திப் பொருள்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சூழ்நிலையை ஏற்படுத்தினார். அப்போது இவருக்கு உறுதுணையாக இருந்தவர்,அப் மத்திய அமைச்சராக இருந்தசி. சுப்பிரமணியம்.
இந்திய மண்ணில் விதைத்து அறுவடை செய்து புரட்சி செய்துவிட்டு, நாடாளுமன்றத்தில் வேளாண் துறைக்கு சட்டப் பாதுகாப்பு அளிக்கும் பணியை ஆற்றினார் எம்.எஸ். சுவாமிநாதன்.
மாநிலங்களவை உறுப்பினராக எந்தவித ஆடம்பரமும் இன்றி நாடாளுமன்றத்துக்கு வந்து சென்ற சுவாமிநாதன் 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் தினமணிக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

வேளாண் துறையை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?

எனது தந்தை எம்.கே. சாம்பசிவம், கும்பகோணத்தில் புகழ்பெற்ற மருத்துவர். யானைக்கால் நோய் வருவதற்குக் காரணமான கொசுக்களை பொதுமக்கள், மாணவர்களின் பங்களிப்புடன் கச்சா எண்ணெயைப் பயன்படுத்தி ஒரே ஆண்டில் ஒழித்தார். அதனால், 'கொசு ஒழித்த சாம்பசிவம்' என்று அவரை அழைத்தவர்கள் உண்டு. அவரிடம் இருந்துதான் கல்வி மூலம் மக்களை ஒன்று திரட்டும் செயல்பாட்டையும் தன்னம்பிக்கையையும் கற்றுக் கொண்டேன். நான் மருத்துவம் படித்து, எனது தந்தை கட்டிய மருத்துவமனையை நிர்வகிக்க வேண்டும் என்று எனது குடும்பத்தார் விரும்பினர்.
1942ஆம் ஆண்டு ஏற்பட்ட 'பெங்கால் பஞ்சம்' சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. அதனால், வேளாண் துறையில் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன்.
1947ஆம் ஆண்டு கோயம்பத்தூரில் பி.எஸ்ஸி. வேளாண் படிப்பை முடித்துவிட்டு, தில்லி பூசா நிறுவனத்தில் புதிய மரபணு பயிர்கள் குறித்து முதுநிலைப் படிப்பை மேற்கொண்டேன். அதன்பின்னர், வேளாண் துறையில் எதிர்காலம் இல்லை என்று எனது உறவினர்கள் வற்புறுத்தி ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத வைத்தனர். 1948ஆம் ஆண்டு ஐ.பி.எஸ்.க்கு தேர்வு செய்யப்பட்டேன். ஆனால், அந்த பணிக்குச் செல்லவில்லை.
ஹாலந்து, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தேன். அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் நிரந்தரப் பணி கிடைத்தது. எனினும், நாட்டுக்குச் சேவையாற்ற 1954ஆம் ஆண்டு மீண்டும் இந்தியாவுக்கு வந்தேன். ஐ.பி.எஸ். பணியில் சேர மீண்டும் அழைப்பு வந்தது. நிராகரித்து விட்டேன்.
நான்கு மாதங்கள் எனக்கு வேளாண் துறையில் அரசு பணி கிடைக்காத காரணத்தால் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தினரே எனக்கு மீண்டும் வேலைவாய்ப்பைத் தருவதாக கூறினர். நான் அதை ஏற்கவில்லை. பின்னர் கட்டாக்கில், வேளாண் துறையில் அரசு பணி கிடைத்தது.

பசுமைப் புரட்சி ஏற்பட காரணம் என்ன?

1960ஆம் ஆண்டுகளில் இந்தியாவுக்கு மிகப் பெரிய சவால் ஏற்பட்டது. பிகாரில் ஏற்பட்ட பஞ்சத்தைப் போக்க அமெரிக்காவில் இருந்து ஒரு கோடி டன் கோதுமையை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி இறக்குமதி செய்தார். இல்லையென்றால் பெங்கால் பஞ்சத்தைவிட பிகாரில் ஏராளமானோர் உயிரிழந்திருப்பர். அதைப் பார்த்து, 'இந்தியாவால் உணவு உற்பத்தி செய்ய முடியாது. ஒரு கப்பல் நிறைய உணவுத் தானியங்கள் வந்தாலும் அவர்களது பசியைப் போக்க இயலாது. ஆடுகளைப் போல் பசியால் உயிரிழப்பார்கள்' என்றெல்லாம் இந்தியாவை வெளிநாட்டினர் விமர்சனம் செய்தனர்.
ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டு 'நாரி' எனப்படும் குட்டை ரக கோதுமைப் பயிர்களை, 1963ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து கொண்டு வந்து இந்தியாவில் அறிமுகம் செய்தேன். அதனால் விவசாயிகளுக்கு 200 சதவீதம் லாபம் கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
1964ஆம் ஆண்டு வேளாண்துறை அமைச்சராகப் பதவி ஏற்ற சி. சுப்பிரமணியம், கோதுமை இறக்குமதி செய்யப்படுவதைக் குறைக்க உள்நாட்டில் கோதுமை உற்பத்தி செய்ய உதவினார். இதனால் பல ஆய்வு திட்டங்களைச் செய்தோம்.
தில்லியில் கன்ஜன்வாலா பகுதியில் உள்ள ஜோன்டி கிராமத்துக்கு பிரதமர் இந்திரா காந்தியை அழைத்துச் சென்று குட்டை ரக கோதுமை உற்பத்தியைக் காண்பித்தோம். அதன் பிறகு தான் 1968 ஆம் ஆண்டு கோதுமைப் புரட்சியை, இந்திரா காந்தி அறிவித்தார்.

நெல் புரட்சி ஏப்படி ஏற்பட்டது?

1950 ஆம் ஆண்டு புதிய நெற்பயிர்கள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சீனர்கள் குட்டை ரக நெற்பயிற்களை உருவாக்கினர். அது தைவானுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. அது 'ஐ.ஆர். 8' என்று விவசாயிகள் மத்தியில் பிரபலமானது. அதிக லாபத்தையும்
தந்தது.

பசுமைப் புரட்சி ஏற்படுவதற்கு முக்கிய பங்கு யாருடையது?

இந்தியாவின் பசுமைப் புரட்சி ஏற்பட்டதற்கு இந்திரா காந்தியின் பங்கு இன்றியமையாதது. உணவுப் பொருள்களின் சேமிப்பு இல்லை என்றால் சுதந்திரமான வெளியறவுக் கொள்கையைக் கடைப்பிடிக்க முடியாது என்பதை அவர் நன்றாக உணர்ந்திருந்தார். இந்தியாவில் பசுமைப் புரட்சி ஏற்படவில்லை என்றால் போக்ரான் அணு ஆயுத சோதனையை இந்தியா நடத்தி இருக்க முடியாது. இந்தியாவின் பசுமை புரட்சியினால் ஏராளமான பயன்கள் ஏற்பட்டுள்ளன.

விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

பருவ மழையும், சந்தை ஆகிய இரண்டும் விவசாயிகளுக்கு முக்கியம். பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டுவரும் உணவுத் தானியங்களுக்கான பணத்தை விவசாயிகள் உடனடியாகப் பெறுகின்றனர். இதன் காரணமாகத்தான் அந்த மாநிலங்களில் உற்பத்தி அதிகரித்துள்ளது. சந்தையை பலப்படுத்தினால் விவசாயிகள் தற்கொலைகள் செய்துகொள்வது நடைபெறாது.

தமிழகத்தின் வேளாண் உற்பத்தி உங்கள் கருத்து...?

தமிழக விவசாயிகள் சிறப்பாக உற்பத்தி செய்துவருகிறார்கள். பஞ்சாப்புக்கு இணையாக தமிழகமும் உற்பத்தி செய்து வருகிறது. தமிழக விவசாயிகளுக்கு
தண்ணீர்தான் தட்டுப்பாடு.

1990ஆம் ஆண்டு சதுப்பு நிலக் காடுகள் (மாங்குரோவ்) அமைக்கப்பட்டன. தமிழகத்தில் அதை அகற்றிவிட்டு இறால் பண்ணைகளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அப்போது தமிழக திட்டக் குழுவில் இருந்த நான், அதை ஏற்கவில்லை. சுனாமி ஏற்பட்ட பிறகுதான் சதுப்புநிலக் காடுகளின் மகிமையை அனைவரும் தெரிந்து கொண்டனர்.

நாடாளுமன்றத்தில் உங்கள் பணி?

உணவு உற்பத்திக்கு முக்கியத்துக்கு அளித்த மத்திய அரசு அதைச் சேமித்து வைப்பதற்கு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதை மாநிலங்களவையில் வலியுறுத்தி வருகிறேன்.

உணவுத் தானியங்களைச் சேமித்து வைக்க அரசுதான் செலவிட வேண்டும். இதில் தனியார் பங்களிப்பை அரசு எதிர்பார்க்கக் கூடாது. மாநிலங்களவையில் நான் தெரிவிக்கும் கருத்துகள் சிலவற்றை ஏற்று அரசு செயல்படுத்தி வருகிறது.
மரபணு மாற்றப்பட்ட விதைகள் குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மரபணு விதைகள் தொடர்பாக ஆய்வு செய்ய சுயேச்சையான மரபணு கட்டுப்பாட்டு ஆணையம் உருவாக்க வேண்டும். அதில் பொதுமக்கள், அரசியல், ஊடகம் ஆகிய பல்வேறு பிரிவினரின் கருத்துகளைக் கேட்க வேண்டும்.

இந்திய வேளாண் துறையில் உங்கள் கனவு நிறைவேறிவிட்டதா?

விவசாய நிலங்களைப் பாதுகாக்க வேண்டும். சீனாவைப் பொருத்தவரை அவர்களின் வேளாண் உற்பத்தியை முழுமையாகப் பயன்படுத்திவிட்டதால் உற்பத்தியை மேலும் அதிகரிக்க முடியாது. ஆனால் இந்தியாவால் வேளாண் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இந்தியாவின் வேளாண் உற்பத்தி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் வேளாண் உற்பத்தி ஏற்படாது என்று கூறியவர்களுக்கு பசுமைப் புரட்சி ஏற்படுத்தி காண்பித்து விட்டோம்.

'பட்டினியில்லாத இந்தியா'தான் எனது கனவு. தற்போது மத்திய அரசு கொண்டுவரும் 'உணவுப் பாதுகாப்பு மசோதா' அதை நிறைவேற்றும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com