மேற்கு வங்கத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மாற்றம் செய்யப்படுவது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் தேர்தல் ஆணையம் போன்ற பாரபட்சமின்றி செயல்படும் அமைப்புகளை பாஜக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்திற்கு ஏப்ரல் 23, 29 தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. மே 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் 291 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக உள்ளிட்ட மற்ற கட்சிகளும் வேட்பாளர்கள் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.
இதனிடையே தேர்தல் ஆணையம் அதிரடியாக மேற்குவங்கத்தில் அதிகளவில் அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறது.
இதுவரை 50க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அங்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் முதல்வர் மமதா பானர்ஜி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மமதா பானர்ஜி இதுதொடர்பாக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "தேர்தல் ஆணையம் மேற்குவங்கத்தை மட்டும் குறிவைத்து தாக்குகிறது. இது முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நடப்பது கவலையளிக்கிறது. தேர்தல்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே, தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், டிஜிபி, கூடுதல் டிஜிக்கள், ஐஜிக்கள், டிஐஜிக்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளனர். இது நிர்வாக நடவடிக்கை அல்ல. தேர்தல் ஆணையத்தின் அரசியல் தலையீடு.
பாரபட்சமின்றி இருக்க வேண்டிய தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளை திட்டமிட்டு அரசியல்மயமாக்குவது, அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்.
எஸ்ஐஆர் நடவடிக்கையின்போது அந்த பணிகளில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை, ஒருதலைப்பட்சமாகவும் அரசியல் கட்சிகளுக்கு அடிபணிவதாகவும் உள்ளது தெளிவாகிறது. இது மேற்குவங்க மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது.
உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை புறக்கணித்து தேர்தல் ஆணையம் இன்னும் வாக்காளர் பட்டியலை வெளியிடவில்லை. இந்நிலையில் அதிகாரிகள் நீக்கம்/இடமாற்றம் மேற்குவங்க நிர்வாக அமைப்பை முடக்குவதற்கான ஒரு திட்டமிட்ட முயற்சி.
பாஜக ஏன் இவ்வளவு அவசரப்படுகிறது? மேற்குவங்கத்தையும் மக்களையும் ஏன் இப்படி குறிவைக்கிறார்கள்? சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆன பிறகும், குடிமக்களை வரிசையில் நிற்க வைத்து அவர்களின் குடியுரிமையை நிரூபிக்கச் சொல்வதில் அவர்களுக்கு என்ன திருப்தி கிடைக்கிறது?
தேர்தல் ஆணையத்தின் இதுபோன்ற நடவடிக்கைகளால் அவற்றின் மீதான நம்பகத்தன்மை குறைகிறது. நீக்கப்பட்ட அதிகாரிகளுக்குத் தேர்தல் பணிகள் ஒதுக்கப்படக்கூடாது என்று கூறும் தேர்தல் ஆணையம் சில மணி நேரங்களிலேயே அதே அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கிறார்கள். பாஜகவின் வற்புறுத்தலால் செய்யப்படும் ஒரு திட்டமிட்ட சதி
ஜனநாயகக் கொள்கை அல்லாமல் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக, ஓர் அறிவிக்கப்படாத அவசரநிலையாக, அறிவிக்கப்படாத குடியரசுத் தலைவர் ஆட்சியாகவே இது இருக்கிறது.
மேற்குவங்க மக்களின் நம்பிக்கையைப் பெறத் தவறிய பாஜக, இப்போது வற்புறுத்தல், அச்சுறுத்தல், அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் மாநிலத்தைக் கைப்பற்ற முயற்சிக்கிறது.
நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் மேற்குவங்கத்திற்கு சேவை செய்ததற்காக மட்டுமே குறிவைக்கப்படும் இந்த அரசின் ஒவ்வொரு அதிகாரியுடனும் அவர்களது குடும்பத்தினருடனும் நான் துணை நிற்கிறேன். மேற்குவங்கம் ஒருபோதும் அச்சுறுத்தலுக்குப் பணிந்ததில்லை, இனியும் பணியாது.
மேற்குவங்கம் போராடும், மேற்குவங்கம் எதிர்க்கும், இந்த மண்ணில் பிளவுபடுத்தும் ஒவ்வொரு முயற்சியையும் தோற்கடிக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
Summary
Undeclared Emergency: west bengal CM Mamata banerjee slams ECI, BJP Over Officer Transfers
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே.வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக 90 லட்சம் வாக்காளர்களை நீக்கியுள்ளது! - மமதா குற்றச்சாட்டு!
மேற்கு வங்கத்தை வென்றால் தில்லியையும் கைப்பற்றலாம்: மமதா உறுதி

மோடி vs மமதா! மேற்கு வங்கத்தில் 4-வது முறையாக ஆட்சியமைப்பாரா மமதா?

கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்த மமதா பானர்ஜி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


