பேல்பூரி

'வண்டி எனது,  உயிர் உனது, பார்த்து வா தோழா!'
பேல்பூரி


கண்டது

(தருமபுரியில் ஆட்டோ ஒன்றின் பின்புறம் எழுதப்பட்டிருந்த வாசகம்)

'வண்டி எனது,  உயிர் உனது, 
பார்த்து வா தோழா!'

-மா.பழனி,
கூத்தம்பாடி.

(நாகர்கோவிலில் உள்ள ஒரு ரெடிமேட் கடையின் பெயர்)

'கண்டிப்பா சொல்லணுமா?'

ஏ.முகமது ஹுமாயூன்,
நாகர்கோவில்.

(மதுரை அருகேயுள்ள இரு கிராமங்களின் பெயர்)

'கல்புளிச்சான்பட்டி, மம்மூட்டிபட்டி.'

-இலக்கியவாணி,
பாளையங்கோட்டை.

கேட்டது

(சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள கடையில் எடை போடும் இயந்திரம் அருகே இரு சிறுவர்களும், முதியவரும் பேசியது)

'ஏண்டா. பசங்களா.. ஒரு ரூபாயை வைச்சு ரெண்டு பேரும் எடை பார்க்கிறீங்களே எப்படி?'
'ரொம்ப சிம்பிள். எடை பார்த்து வரும் வெயிட்டை பாதியா பிரிச்சுக்குவோம்.'

ஆர்.ராஜலட்சுமி,
சென்னை117.

(திருச்சியில் உள்ள தேநீர்க் கடையில் இருவர்)

'டீ காபி சாப்பிடக் கூடாதுன்னு டாக்டர் சொல்லி இருக்கார்டா..'
'அப்ப வா. பலகாரம் வாங்கு. ரெண்டு பேரும் சாப்பிடலாம்.'

-அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.

(மதுரையில் ஆம்புலன்ஸ் பின்னால் ஹெல் மெட் அணியாமல் வந்தவருக்கும், போக்குவரத்துக் காவலருக்கும் நடைபெற்ற உரையாடல்)

'சார்.. சார்.. ஆம்புலன்ஸ் கூட நான் போகணும்?'
'இப்படி ஹெல்மெட் இல்லாமல் போனா ஆம்புலன்ஸிலியே போகலாம். வா?'

நா.குழந்தைவேல்,
மதுரை.


யோசிக்கிறாங்கப்பா!

வாழ்க்கையை நாம் திரும்பிப் பார்க்கும்போது 
விரும்பிப் பார்ப்பது போல் ஏதாவது செய்திருக்க வேண்டும்.

ஜி.மஞ்சரி,
கிருஷ்ணகிரி.

மைக்ரோ கதை


கோபால் குடல் நோய்க்காக, சென்னையின் பிரபல மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  இரு வாரங்களாகியும் குணமாகவில்லை.  ஒருநாள் மனைவி கோமதி, இரு மகன்கள்,  மகளை அழைத்தார்.
அவர்களிடம்,  'பெரிய மகன் திருவல்லிக்கேணியில் பத்து பங்களாவைப் பார்த்துகொள்ளட்டும்.  இளைய மகன் அண்ணா நகரில் ஆறு மாடி அபார்ட்மென்ட்டை கவனிக்கட்டும். சென்ட்ரல் அருகே ஐந்து ஹோட்டல்களை மகள் பார்த்துகொள்ளட்டும்' என்றார்.
இதை கேட்ட நர்ஸ் வியந்து கோமதியைப் பார்த்து, 'இவ்வளவு பெரிய செல்வந்தரா உனக்கு கிடைத்திருப்பது பெரிய அதிர்ஷ்டம்தான்' என்றார். இதற்கு கோமதி கோபத்துடன், 'அட போம்மா. நீ வேற இவ்வளவும் அவர் பால் ஊற்றும் இடங்கள். என் வீட்டுக்காரர் பால்காரர்' என்றார்.

ஜி.அர்ச்சுனன்,
செங்கல்பட்டு.

எஸ்எம்எஸ்


உண்மை ஊர் சுற்றும்போது 
பொய் உலகையே சுற்றிவிடுகிறது.

வி.ந.ஸ்ரீதரன்,
சிறுசேரி.

அப்படீங்களா!

இணைய சேவையில் பல்வேறு மொழி பயன்பாட்டாளர்களுக்கு முக்கியமானது மொழிபெயர்ப்பு.  இது 100 சதவீதம் துல்லியமாக இல்லை என்றாலும் பெரும்பாலான வார்த்தைகளுக்கு பல்வேறு இணையான சொற்களை அளிக்கிறது. 
இந்தச் சேவையில் பிரபலமான கூகுளுக்கு போட்டியாக மென்பொருளில் முன்னோடியான மைக்ரோசாஃப்ட்டும் புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. தற்போது மேலும் நான்கு இந்திய மொழிகள் மொழிபெயர்க்கும் சேவையை  மைக்ரோசாஃப்ட் அறிமுகம் செய்துள்ளது.
காஷ்மீரி, போஜ்பூரி, போடோ, டோக்ரி ஆகியவை சேர்த்து இந்தச் சேவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.  தமிழ், அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி, தெலுங்கு, உருது, சிந்தி, பஞ்சாபி, ஒடியா, நேபாளி, மராத்தி, மலையாளம், மைதிலி, கொங்கனி, கன்னடம் ஆகியவற்றுடன் சேர்த்து 20 மொழிகளாக உள்ளன. இதை 22ஆக  விரைவில் அதிகரிக்க மைக்ரோசாஃப்ட் திட்டமிட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேடர் ஆப், எட்ஜ் புரோசர், ஆபிஸ் 365, பிங் டிரான்ஸ்லேடர் ஆகியவற்றில் இந்த மொழிபெயர்ப்பு சேவைகளைப் பெறலாம்.  உலகம் முழுவதும் உள்ள 135 மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு சேவையை மைக்ரோசாஃப்ட் வழங்கி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com