ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தீய எண்ணங்களில் இருந்து விடுபட...?

நீர்க் காய்களாகிய வெள்ளரி, பூசணி, பீர்க்கை, பரங்கி, முள்ளங்கி, பீட்ரூட், கேரட் போன்றவை சாப்பிட நல்லது.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தீய எண்ணங்களில் இருந்து விடுபட...?

என் வயது 72. அடிக்கடி வாய், நாக்கு, உதடு புண் வரும்.  நல்லெண்ணெய் கொப்பளிப்பதால் குணமாகும். அதுவே நெஞ்செரிச்சலாக ஓராண்டுக்கு மேலாக இருக்கிறது.  எரிச்சல் வரும்போது உடல் பலகீனம், சோர்வு, அசதி, நடக்க முடியாமை ஏற்படுகிறது. இந்த நரக வேதனையால் தீய எண்ணங்கள் ஏற்படுகின்றன. எந்த வைத்தியத்திலும் குணமாவதில்லை. மருத்துவம் கூறவும்.

-நா.அண்ணாமலை, ஓமலூர்.

இதயத்துக்கும்,, தொப்புளுக்கும் இடைபட்ட பகுதியில் தன் இருப்பிடமாகக் கொண்ட பித்த தோஷமானது, தன் இயற்கை நிலையைத் துறந்து, மேல் நோக்கி ஆவேசமான பயணத்தைச் செய்யும்போது, அதிலிருந்து பூதாகாரமாக வெளிப்படும் சூடானது, நீங்கள் குறிப்பிடும் வகையில் புண்ணையும், நெஞ்செரிச்சலையும் ஏற்படுத்துகிறது. 

உடலை வலுவாக்கத் தாங்கக் கூடிய கப தோஷத்தின் குணங்களாகிய நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம் போன்றவை இந்தச் சூடான பித்த வரவை எதிர்கொள்ள முடியாமல், நீர்த்த நிலைக்குச் செல்லும் நிலையில், உடல் பலகீனம், சோர்வு, அசதி, நடக்க முடியாமை போன்ற உபாதைகளைத் தோற்றுவித்து விடுகிறது.

நீர்த்த கபத்தைத் தூக்கி நிறுத்தவும், கோபத்தினால் உண்டான பித்த சூட்டைத் தணிக்கவும் வகை செய்யும் உணவும்- செயலும்- மருந்தும் தங்களுக்கு நல்லதொரு தீர்வாக அமையும் என்பதால், சிந்தனைக் குதிரையை அவற்றை நோக்கிச் செலுத்துவோம்.

நெருப்பும் காற்றும் அதிகம் கொண்ட  சில உணவுப் பொருள்களாகிய காரம், புளி, உப்புச் சுவையும், மிளகு, பட்டை, சோம்பு, கரம் மசாலா, பெருங்காயம், வர மிளகாய் போன்ற உணவுக்குச் சுவையும், வாசனையையும் கூட்டுப் பொருள்களையும், புலால் வகை உணவுகளில் கடல்வாழ் பிராணிகள், சிக்கன், மீன் வகையறாக்களையும் நீங்கள் சில மாதங்களுக்கு அறவே நீக்கித்தான் ஆக வேண்டும். குளிர்ச்சி தரும் உணவு வகைகள் உங்களுக்கு நல்லதாகும்.

நீர்க் காய்களாகிய வெள்ளரி, பூசணி, பீர்க்கை, பரங்கி, முள்ளங்கி, பீட்ரூட், கேரட் போன்றவை சாப்பிட நல்லது. டீ, காபி குடிப்பதற்கு பத்து- பதினைந்து விநாடிகள் முன்னதாக, சிறிது தண்ணீர் அருந்துவது நல்லது. இதனால் உணவுக் குழாயில் புண் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.

மேல் நோக்கிய பித்த சூட்டை கீழ்நோக்கி வெளியேற்றும் மிருதுவான மூலிகை மருந்தால், நெஞ்செரிச்சல் குணமாக அதிக வாய்ப்பிருக்கிறது.  அந்த வகையில் 'அவிபத்தி சூரணம்' ஐந்து கிராம் எடுத்து, பத்து மில்லி தேன் குழைத்து, காலை- மதியம் என இரு வேளையாக உணவுக்கு அரை மணி நேரம் முன்னதாக சிறிது சிறிதாக நக்கிச் சாப்பிடுவது நல்லதைத் தரும்.

சிறிய அளவில் பேதியை உருவாக்கும் இந்த மருந்தால், தங்களுக்குக் கேடு ஏதும் ஏற்படாது. பித்த சூட்டை இம்மருந்து வெளியேற்றினாலும், கப தோஷத்தின் குண வளர்ச்சிக்கு இது உதவிடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  இந்த மருந்தைத் தொடர்ந்து ஒரு வாரத்துக்கு சாப்பிட்ட பிறகு, 'விதார்யாதிகிருதம்' எனும் நெய் மருந்தை நீங்கள் காலை, மதியம், மாலை என மூன்று வேளை உணவுக்கு அரைமணி நேரம் முன்பாகச் சாப்பிடலாம்.

பத்து மில்லி நெய் மருந்தில், இரண்டு சிட்டிகை 'சங்க பஸ்மம்' கலந்து, அதில் ஐந்து மில்லி தேனும் விட்டுக் குழைத்து சிறிது சிறிதாக நக்கிச் சாப்பிடுதல் நலம்.

இரவில் தண்ணீரில் (சூடான) ஊற வைக்கப்படும் தனியா, சீரகம், ரோஜா இதழ்களை மறுநாள் காலை வடிகட்டி சாப்பிடும் கிராம வைத்திய முறையும் தங்களுக்கு நல்லதே. 'திரிபலை' சூரணத்தை சிறிது தேன் நெய்விட்டுக் குழப்பி, இரவு படுக்கும் முன் சாப்பிடுவதால் கண் எரிச்சல், நெஞ்செரிச்சல், பார்வைக் கோளாறுகள், உடல் சூடு போன்றவை நன்கு குணமாகும். 

படுக்கும் நிலையில் முழுவதுமாக உடலைக் கிடத்துவதைக் காட்டிலும், நெஞ்சுக்கூடு சற்று உயர வைத்து உறங்குவது நல்லது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com