

ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெற மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு, சுபாஷ் சந்திரபோஸ், பகத் சிங், ராணி லட்சுமிபாய். சர்தார் வல்லபபாய் படேல், பால கங்காதர் திலகர், லாலா லஜபதி ராய், சரோஜினி நாயுடு, சந்திரசேகரர் ஆசாத் உள்ளிட்ட ஏராளமானோர் தியாகங்கள் செய்தனர். இதன் விளைவாக, 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15இல் சுதந்திரம் கிடைத்தது.
-'ஜன கண மன...' என்ற பாடலை ரவீந்திரநாத் தாகூர் எழுதினார். இது முதலில் வங்காளத்தில் எழுதப்பட்டு, ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டது. முதன்முதலாக 1911ஆம் ஆண்டு டிசம்பர் 27 அன்று கொல்கத்தா (அப்போது கல்கத்தா) கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸாரால் பாடப்பட்டது. 1950ஆம் ஆண்டு ஜனவரி 24இல் தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. தேசிய நிகழ்வுகள், அதிகாரப்பூர்வ விழாக்கள், பள்ளிக் கூட்டங்களில் பாடம். இது இந்தியாவின் ஒற்றுமை, பல்வகைமைக்கான பிரதிபலிப்பாகும். பல பகுதிகள், நதிகளைக் குறிப்பிடுவதோடு, தேசியப் பெருமையை உணர்விக்கிறது. பாடலின் அதிகாரப்பூர்வ நீளம் 52 விநாடிகள். பாடப்படும் அல்லது ஒலிக்கும்போது கவனமாக நின்று மரியாதை காட்டுதல் அவசியம்.
'வந்தே மாதரம்' என்பது இந்தியாவில் மிகுந்த மரியாதையும் தேசப்பற்றும் கொண்ட பாடலாகும். வங்காள எழுத்தாளர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி (பங்கிம் சந்திர சட்டோபாத்யாய்) எழுதியது. இது 1882இல் வெளியான 'ஆனந்தமடம்' என்ற நாவலில் இடம்பெற்றதாகும். 'வந்தே மாதரம்' என்பது 'நான் உன்னை வணங்குகிறேன். தாய்' என தமிழ் மொழிபெயர்ப்பாகும். இது தாய்நாட்டை தாய்க்கடவுளாகக் காட்டும் பாடலாகும். சுதந்திரப் போராட்டத்தில் பலருக்கு ஊக்கமளித்து, போராட்ட குரலாக இருந்தது.
பாடலின் முதல் இரண்டு வசனங்களான 'வந்தே மாதரம் சுஜலாம் சுபலாம் மலயஜசீதலாம் சஷ்யஷ்யாமலாம் மாதரம் வந்தே மாதரம்' -ஆனது 1950ஆம் ஆண்டு ஜனவரி 24இல் தேசியப் பாடலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஏ.எஸ்.கோவிந்தராசன், கோடம்பாக்கம்.
ஷாஜகான் தில்லியில் ஷாஜகானாபாத் எனும் தலைநகரை உருவாக்கினார். இந்த ஷாஜகானாபாத்தில் அவர் கட்டிய கோட்டையே 'செங்கோட்டை' என்று கூறுகிறோம்.
1638இல் தொடங்கப்பட்ட செங்கோட்டை 1648இல் நிறைவு பெற்றது. இதன் பழைய பெயர் 'கிலா இ முபாரக்' என்பதாகும். இதன் பொருள் 'ஆசிர்வதிக்கப்பட்ட கோட்டை' ஆகும்.
அரசக் குடும்பத்தினர் வசித்ததால் இந்தப் பெயர் சூட்டப்பட்டது. பின்னர், இந்தக் கோட்டையின் நிறத்தின் காரணமான மக்கள் லால்கிலா, ரெட் போர்ட், செங்கோட்டை என்று அழைத்தனர்.
சுதந்திரத் தினத்தில் சிறப்புப் பெறும் இந்தக் கோட்டையை சிறப்பிக்கும் வகையில், 'லால்கிலா' எக்ஸ்பிரஸ் மேற்கு வங்கத்தில் இருந்து சியால்டாவுக்கும் தில்லிக்கும் இடையே ஓடுகிறது.
தேசிய சின்னமான அசோகத் தூண் 9,500 கிலோ எடையும், 6.5 மீட்டர் உயரமும் கொண்டதாக அமைந்துள்ளது. தூரத்தில் இருந்து பார்த்தாலும் தெளிவாகத் தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நுழைவுவாயிலில் உள்ள அசோக சக்கரம் ,'சத்யமேவ ஜெயதே' என்ற வார்த்தைகள் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.