தாது தண்ணீர்...

தாது தண்ணீர்...

மனித உடல்களில் உள்ள செல்களுக்குத் தேவையான தாதுக்களைத் தண்ணீரில் கலந்தும் மாத்திரை வடிவிலும் தயாரித்து அதற்கான காப்புரிமையையும், உணவுப் பாதுகாப்புத் துறையின் சான்றிதழையும் பெற்றுள்ளார் திருச்சி தில்லை நகரைச் சேர்ந்த மருத்துவர் பி.ரஜினிகாந்த்.
Published on

மனித உடல்களில் உள்ள செல்களுக்குத் தேவையான தாதுக்களைத் தண்ணீரில் கலந்தும் மாத்திரை வடிவிலும் தயாரித்து அதற்கான காப்புரிமையையும், உணவுப் பாதுகாப்புத் துறையின் சான்றிதழையும் பெற்றுள்ளார் திருச்சி தில்லை நகரைச் சேர்ந்த மருத்துவர் பி.ரஜினிகாந்த்.

மதுரையில் 'செல் தெரபி' குறித்த டிப்ளமோ படிப்பில் 2014இல் படித்த இவர், தண்ணீர் குறித்த ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறார்.

அவரிடம் பேசியபோது:

'உணவே மருந்து, மருந்தே உணவு' என்ற முறையில் சித்தர்களும், முன்னோர்களும் வாழ்ந்து, நீண்ட நாள்கள் நோயில்லாமல் இருந்தனர்.

தற்போது உலகமே உள்ளங்கையில் சுருங்கியிருக்கும் இந்தச் சூழலில் மாறி வரும் உணவுப் பழக்கம், தாதுக்கள் இல்லாத குடிநீர், சரியான தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புதிய நோய்களும் தோன்றிக் கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு நோயையும் சரியான உணவுப் பழக்கத்தின் மூலம் முன்கூட்டியே தடுக்கவும் முடியும். வந்தபின்பும் உணவுப் பழக்கத்தில் உரிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவதால் சரியாக்கவும் முடியும்.

நோயின் காரணமாக திசுக்களில் மாற்றம் உண்டாகிறது. இதனால் தசையால் மாற்றம் ஏற்படுகிறது. இந்தப் பிரச்னை வந்தது நமது உணவுப் பழக்க வழக்கத்தில் ஏற்பட்ட மாற்றத்தாலும் வாழ்க்கை மாற்றத்தாலும், திசுக்களில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டறிந்து அதற்கேற்ப குடிநீரில் தாதுக்களைச் சேர்த்துக் கொடுக்கிறோம். இதனால் திசுக்கள் புத்துணர்ச்சி பெறுவதுடன் நோயையும் தீர்கிறது. உணவில் செய்ய வேண்டிய மாற்றம் குறித்தும் நோயாளிகளுக்குக் கற்றுத் தருகிறோம்.

கோயில்களில் உள்ள தீர்த்தக் குளங்கள், துளசி தீர்த்தம் ஆகியன மருந்தாகப் பயன்படுகின்றன.

ஆரோக்கியமான தண்ணீர் அறுங்கோண வடிவத்தைப் பெற்றிருக்கும். அந்தத் தண்ணீர்தான் திசுக்களை வலுவாக்கும். ஆனால் பிற தண்ணீர் குடித்தாலும் செல்களை வலுவாக்காது. இதனால்தான் உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இந்தப் பிரச்னையைச் சரி செய்ய அறுங்கோண வடிவம் கொண்ட நீரைப் பருகும்போது உடலில் ஏற்படும் பிரச்னைகளைச் சரி செய்யலாம். கேரளத்தில் இப்போதும் தண்ணீரில் சீரகம், மூலிகைகளைச் சேர்த்து கொதிக்க வைத்துக் குடிக்கின்றனர்.

நோயாளியின் உடலுக்குத் தேவையான தாதுப் பொருள்களைக் கலந்து பானங்களைத் தயாரித்துள்ளோம். இதற்கு காப்புரிமை வாங்கப்பட்டுள்ளது. இதை 'செம்பவழ பானம்' எனப் பெயரிட்டு விற்கிறோம். நோயாளியின் நோய்க்குத் தகுந்தபடி செம்பவழ பானத்தில் சேர்க்கப்படும் தாதுக்களை அதிகப்படுத்துகிறோம்.

இந்தப் பானங்களைப் பருகும் நோயாளிகளுக்கு நுரையீரல் பலப்படுகிறது. ரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. ரத்தம் உறைவது தடுக்கப்படுகிறது. இந்தப் பானத்தை அருந்தும் விளையாட்டு வீரர்கள் களைப்படையாமல் தொடர்ந்து நீண்ட நேரம் விளையாட முடிகிறது. சிங்கப்பூர் நாட்டுக்கு தற்போது செம்பவழ பானம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த பானத்தைப் பருகுவதன் மூலம் தோலில் திசுக்கள் புதுப்பிக்கப்பட்டு எப்போதும் இளமையாக உணர முடியும். உடலில் பிராண வாயுவும் அதிகரிக்கும்.

தொடர்ந்து அருந்துவதன் மூலம் மன அழுத்தமும் நீங்கி புத்துணர்ச்சியை அளிக்கிறது. உடலின் அமில, கார சமன்பாட்டையும் மேம்படுத்துகிறது. ரத்த நாளங்களில் கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. உடல் எடையைச் சமப்படுத்த உதவுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. இளமையைத்தக்க வைக்க உதவுகிறது.

உடலுக்குத் தேவையான அரிய வகைக் கற்களைப் பொடிசெய்து கூட்டாகச் சேர்த்து துகள்களாக வடித்து வெள்ளி, பிளாட்டினம் கலவை வெளிப்பூச்சாக சேர்க்கப்படுகிறது. ஒவ்வொரு செயல் முறையும் மிகவும் பாதுகாப்பாகச் செய்யப்படுகிறது.

இது தவிர ஆளி விதை, முருங்கை, பிரண்டை, கருஞ்சீரகம், வேப்பிலை, உள்ளிட்ட 12 வகையான துணை உணவுப் பொருள்களும் தயாரிக்கிறோம். இவற்றைத் தொடர்ந்து உண்டால் நோய்களை வருமுன் காக்க முடியும். பீட்ரூட் பனங்கற்கண்டு சத்துமாவுப் பொடியும் தயாரித்துள்ளோம். இதைப் பாலில் கலந்தோ வெந்நீரில் கலந்தோ குடிக்கலாம்.

இஞ்சி ஆயிலை நேரடியாகவோ மூட்டு வலி உள்ள இடத்தில் தேய்க்கலாம் அல்லது தண்ணீரில் கலந்து குடிக்கலாம். இதனால் மூட்டு வலி குணமாகும்.

'உணவே மருந்து' என்பதன் அடிப்படையில் செம்பவழ பானம் தயாரித்து வருகிறோம். இதைப் பயன்படுத்திய கூனம்பட்டி ஆதீனம் ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகள் எனக்கு 'வைத்திய சேவா ரத்னா' விருதை வழங்கினார்'' என்கிறார் பி.ரஜினிகாந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com