/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மூட்டுகளில் வலியும் வீக்கமும் தீர வழி என்ன?

என் வயது ஐம்பத்தொன்று. தோள்பட்டை, முழங்கை மூட்டு, மணிக்கட்டு, கைவிரல் பூட்டுகள் மற்றும் பிற எலும்புகள் கூடும் மூட்டுகளில் கடும் வீக்கமும், வலியும் ஏற்பட்டு கடந்த மூன்று வருடங்களாக அவதிப்படுகின்றேன்.

News image
Updated On :21 டிசம்பர் 2024, 6:29 pm

DIN

என் வயது ஐம்பத்தொன்று. தோள்பட்டை, முழங்கை மூட்டு, மணிக்கட்டு, கைவிரல் பூட்டுகள் மற்றும் பிற எலும்புகள் கூடும் மூட்டுகளில் கடும் வீக்கமும், வலியும் ஏற்பட்டு கடந்த மூன்று வருடங்களாக அவதிப்படுகின்றேன். இதற்கு ஆயுர்வேத முறைப்படி உணவு, மருந்துகள் உள்ளதா?

-தேவிகா, காஞ்சிபுரம்.

'ஆமவாதம்' என்பது இந்த உபாதைக்குப் பெயர். ஆற்று மணலை மூட்டை கட்டி, சூடாக்கி வீக்கம், வலி உள்ள மூட்டுகளில் ஒத்தடம் கொடுப்பது நல்லது. சுக்கை மைய இடித்துத் தண்ணீருடன் கலந்து காய்ச்சி, வென்னீராகப் பருகுவது வேதனையை அகற்றும்.

கசப்புச் சுவையுடைய கறிகாய்களைத் தேர்ந்தெடுத்து உணவாக உட்கொள்வதும் நலமே. பார்லி, பழைய அரிசி ஆகியவற்றை சமைத்து உண்ண வேண்டும். மூக்கிரட்டை, நெருஞ்சில் இலைகளை வதக்கி, கீரைபோல் சாப்பிட்டு வந்தால் மூட்டுகளில் ஏற்பட்டுள்ள வீக்கம், வலி நன்றாகக் குறையும்.

கொள்ளு மற்றும் அரிசியைக் கலந்து கஞ்சியாக்கி, இந்துப்புடன் சேர்ந்து இளஞ்சூடாகக் காலை உணவாக ஏற்றால், வீக்கமும் வலியும் குறைவதுடன் உடல் வலுவும் நன்கு கூடும்.

முருங்கை மரப்பட்டையை பசுவின் சிறுநீர்விட்டு அரைத்து, இளஞ்சூடாக வீக்கம், வலி உள்ள மூட்டுகளில் பற்றிட, மூட்டுகள் லேசாகி எளிதாக நகர்த்த இயலும்.

'யானை எப்படி பெரிய காட்டையே அழித்துவிடுமோ அதைப் போலவே ஆமவாதம் எனும் யானையானது, காடு எனும் மனித உடலை அழித்திவிடும் தன்மையுடையது. யானையை அடக்க, சிங்கம் உதவுவது போல் ஆமவாதம எனும் உபாதையை விளக்கெண்ணெய் எனும் சிங்கமானது அடக்க உதவுகிறது' என்கிறார் பாவபிரகாசர் எனும் ஆயுர்வேத முனிவர்.

மூன்று கிராம் கடுக்காய்ப் பொடியை முப்பது மில்லி விளக்கெண்ணெய்யுடன் குழைத்து நக்கிச் சாப்பிட பிறகு, விற்பனையிலுள்ள 'தசமூலம்' எனும் கஷாய மருந்தை பதினைந்து மில்லி எடுத்து அறுபது மில்லி வென்னீர் கலந்து, காலை, மாலை வெறும் வயிற்றில் பருகி வந்தால், மூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கம், சயாடிகா எனும் இடுப்பு முதல் முட்டி வரையுள்ள நரம்பு இழுப்பு வலி, விதைவாதம் மற்றும் முகவாய் நரம்பு இழுப்பு போன்ற உபாதைகள் நன்றாக குணமடையும்.

சிவதை வேர், இந்துப்பு, சுக்கு ஆகியவற்றை வகைக்கு இரண்டு கிராம் வீதம் இடித்துக் கலந்து, அரிசி வடித்த இளஞ்சூடான கஞ்சியுடன் குடிக்க, பேதியாகி வயிறு சுத்தமாவதுடன் ஆமவாத உபாதையின் தீவிரமும் குறைந்துவிடும்.

விற்பனையிலுள்ள 'ராஸ்னாபஞ்சகம்' அல்லது 'ராஸ்னாஸப்தகம்' எனும் கஷாயத்துடன் ஆமணக்கு எண்ணெய் கலந்து காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வர, முடக்குவாதம் எனும் ஆமவாத நோய் விரைவில் குணடையும். ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனை இதற்குத் தேவைப்படும்.

தசமூலம் அல்லது சுக்கு கஷாயத்துடன் விளக்கெண்ணெய் கலந்து குடித்தாலும், இடுப்பு எலும்பு வலி, சிறுநீர்ப் பை சார்ந்த வலி, கீழ் இடுப்பு வலி ஆகியவை குணமாகும்.

பூண்டு, சுக்கு மற்றும் நொச்சி வேரை சம அளவாக எடுத்து, சுமார் இருபத்து நான்கு கிராம் பொடித்து, இருநூறு மில்லி தண்ணீர் கலந்துக் காய்ச்சி, ஐம்பது மில்லி வற்றியதும் வடிக்கட்டி குடிக்க, 'ஆர்த்ரைட்டிஸ்' எனும் மூட்டுவாத நோய்க்கு சிறந்த மருந்தாகும்.

(தொடரும்)

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.