ஸ்வீட் பன்

'தில்லியிலிருந்து சென்னைக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம், பயணிகளால் நிரம்பியிருந்தது.
ஸ்வீட் பன்

'தில்லியிலிருந்து சென்னைக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம், பயணிகளால் நிரம்பியிருந்தது. விமானப் பணிப்பெண்கள் சுறுசுறுப்பாக காலை உணவுத் தட்டுகளைப் பயணிகளின் முன் வைத்து, போனஸாக ஒரு புன்னகையையும் தந்துவிட்டுச் சென்றனர். விமானத்தில் காலை சிற்றுண்டியில் கொடுத்த 'பன்' சாமா என்கிற சுவாமிநாதனுக்குப் பழைய நினைவுகளைக் கிளறிவிட்டன.
சென்னையில் வேலை முடித்து, சிதம்பரம் செல்வதாக முடிவு செய்திருந்தான் சாமா. மாமா வீட்டில் இருந்து ஆரம்பக் கல்வி பயின்ற பள்ளிக்கூடம், கோயில், சினிமா தியேட்டர்கள் எல்லாம் மனதில் வந்து போயின. ஐம்பது வருடங்களில் எல்லாம் மாறியிருக்கலாம். அன்னபூரணி?
மாமா வீட்டில் இருந்து, படித்து கொண்டிருந்தான் சாமா. வீட்டில் தாத்தா, பாட்டி, மாமா, மாமி உடன் ஒரு சித்தியும் உண்டு. கோயில், கடை, சினிமா எல்லாம் இவனே போய் வருவான். கோடை விடுமுறைக்கு மட்டும் தஞ்சாவூர் போவது வழக்கம். இரண்டு தம்பிகள், ஒரு தங்கை. அவள் சாமாவின் வகுப்பில் படிக்கும் ராஜியைப் போல இருப்பாள். விடுமுறைக்கு வந்தால் அம்மா அவனுக்குப் பிடித்தாற்போல சமைத்துப் போடுவாள். எந்த வருடமும் தஞ்சாவூரிலிருந்த அவன் பெற்றோர் வீட்டுக்குப் போய், அங்கு படிப்பைத் தொடர வேண்டியிருக்கலாம்.
எட்டாவது படிக்கும்போதே சாமாவுடன் படித்துகொண்டிருந்த அன்னபூரணியைப் புதிதாக வந்திருந்த அரசு பெண்கள் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டனர் அவள் பெற்றோர். கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த பள்ளிகள், பெற்றோர் வாழ்ந்த காலம்!
ஆறு வருடங்களாக அன்னபூரணியையும், அவன் தங்கை சாயலில் இருந்த ராஜியையும் சாமாவுக்கு மிகவும் பிடிக்கும். நன்றாகப் பேசுவார்கள். படிப்பிலும் கெட்டி. இவர்கள் மூன்று பேருக்கும்தான் வகுப்பின் முதலிடத்துக்குப் போட்டி! ஓரிரண்டு மதிப்பெண்கள் வித்தியாசத்தில் முதலில் இருப்பார்கள்! அன்னபூரணியைத் தொடர்ந்து ராஜியும் புதுப் பள்ளிக்கூடம் போய்விட, சாமாவுக்குப் பள்ளிக்
கூடம் போகவே பிடிக்கவில்லை. எப்போதாவது மாலை வேளையில் கோயில், கடைத் தெருவில் பார்த்தால் சிரிப்பாள், பேச மாட்டாள். கூடவே வரும்அம்மாவோ, அப்பாவோ திட்டுவார்களோ என்னவோ, அவனுக்குத் தெரியாது. அவனும் ஒரு அரைச் சிரிப்பு சிரித்துவிட்டுச் செல்வான். புதிய சர்ட் அணிந்து கொள்ளும்போதெல்லாம், அன்னபூரணி நினைவு அதிகமாக வரும்.
'ஏய், இந்த கலர் நல்லா இருக்கு; ம்ஹூம், இது என்ன லேடீஸ் ஜாக்கெட் கலர்ல ஒரு சட்டை?; இது கொஞ்சம் லூஸாருக்கு, ஒன்னைப் போலவே' என்றெல்லாம் சொல்லிச்சிரிப்பாள்!'
சாமாவும் அடுத்த வருடமே தஞ்சாவூர் சென்றுவிட்டான். சென்னை, பெங்களூரு... எனப் படித்து, தில்லியில் பெரிய நிறுவனத்தில் சீனியர் மேனேஜராக வேலை. மனைவி சியாமளா, இரண்டு குழந்தைகள் என வாழ்க்கையின் ஓட்டத்தில் வெகுதூரம் வந்துவிட்டான்!
நாற்பது வருடங்களுக்குப் பிறகு இம்முறை ஏனோ சிதம்பரம் செல்ல வேண்டும் எனத் தோன்றவே, இந்த பிரயாணத் திட்டம். மாமா வீட்டில் யாரும் இல்லை. இருந்தாலும் சென்று பார்த்து விட்டு வர ஓர் ஆசை. பள்ளிக்கூடம், கோயில், மாமா வீடு, 'மான்ஸ்ரோ' பேக்கரி, ஓடகரை, அன்னபூரணி - எல்லாம் கருப்பு வெள்ளைப்படங்களாக மனதில் ஓடிக்கொண்டிருந்தன!
'ஏய், சாமா, இன்னும் எழுந்திருக்கலையா?'
மாமியில் குரல் கேட்டு திண்ணையிலிருந்து எழுந்த சாமா, போர்வையை மடித்துப் பாயுடன் சுருட்டி எடுத்துக்கொண்டு ரேழியைத் தாண்டி உள்ளே சென்றான். தாழ்வாரத்தின் மூலையிலிருந்த சமையல் அறையிலிருந்து காபியின் மணம் கொல்லைத் தாழ்வாரம் வரை படர்ந்திருந்தது.
கிணற்றங்கரையில் தாம்புக் கயிறு ஜகடையில் சுழல, அடிப்பக்கம் நசுங்கி ஒடுங்கியிருந்த அலுமினியப் பக்கெட்டில் நீர் எடுத்தான். கிணற்றுக் கட்டையில் சாய்ந்து நின்றது நீர் நிறைந்த வாளி. இளஞ்சிவப்புப் பல்பொடியில் பல் விளக்கி, முகம் கழுவி உள்ளே வந்தான். சுவாமி அலமாரியில் இருந்த கருப்பு மர டப்பாவிலிருந்து விபூதியை நெற்றியில் பூசிக் கொண்டான். புன்னகையுடன் மாமி, குடிக்கும் சூட்டில்நுரையுடன் கொடுத்த காப்பியைக் குடித்தான்.
காது வைத்த சணல் பையில் பச்சை கலரில் மகாலட்சுமி நின்றுகொண்டிருந்தாள். உள்ளிருந்து புத்தகம், நோட்டு எடுத்து ஏதோ வாசித்து, அன்றைய வீட்டுப்பாடத்தை எழுதினான். கிணற்றடியில் குளித்து, அரை நிஜார், சட்டை போட்டுக்கொண்டு, மாமி பிசைந்து கொடுத்த பழைய சோறு சாப்பிட்டுப் பள்ளிக்கூடம் கிளம்பினான்.
அந்தக்கால, வைதீகமான மத்திய தரக் குடும்பம். குறைந்தபட்ச வாழ்வாதாரத்தில் அதிகபட்ச பாரம்பரிய பழக்க வழக்கங்களைக் கடை பிடிக்கும் நடுத்தர வர்க்கம். இந்தச் சூழலில்தான் சாமாவின்ஆரம்பக் கல்வி என்னும் அஸ்திவாரம் போடப்பட்டது.
பள்ளிக்கூடம் செல்லும் வழியில், பிள்ளையார் கோயில் தாண்டினால், 'மான்ஸ்ரோ' பேக்கரியிலிருந்து 'பன்' வாசம் மூக்கைத் துளைக்கும். வெளியிலிருந்து பார்த்தாலே, உள்ளே பெரிய அலுமினிய மேசையில் அன்று சுடப்பட்ட 'பன்', ரொட்டிகள் அடுக்கி வைத்திருப்பது தெரியும்.
பேக்கரியின் வாசலில் நின்றிருந்தவர் கட்டம் போட்ட லுங்கியும், பனியனும் போட்டிருந்தார்.
' 'உன் பெயர் என்ன?'
'சாமா'
'உள்ளே வா, 'பன்' வேணுமா?'
தலை வேண்டாமென்று ஆடியது, ஆனால் கை நீண்டது. எதிர் சாரியிலிருந்து வந்த நாய் ஒன்று தன் வாலை ஆட்டியவாறுஅவன் அருகில் வந்து நின்றது.
தலையில் ஒரு மெரூன் கலர் திராட்சையுடன், சூடான, 'மெத்'தென்ற 'ஸ்வீட் பன்' ஒன்று சாமாவின் கைக்கு வந்தது. பிய்த்தால் வெண்மையான பஞ்சு போல. வாயில் போட்டவுடன் இனிப்பாகக் கரைந்தது. ஒரு விள்ளல் நாய்க்கும் போட்டான், அது பின்னாலேயே வாலை ஆட்டியபடி வந்தது.
முதல் மணி அடிப்பதற்கு முன்பே பள்ளிக்கூடம் வந்துவிட்டான் சாமா. குமார், சந்துரு, சைக்கிளில் போலியோ காலுடன் வரும் நடராஜன், ராஜி, ஐந்தாம் வகுப்பு ராமு சார் பெயர்த்தி விஜி எல்லோரும் வந்துவிட்டார்கள். அன்னபூரணியைக் காணவில்லை. அவளுக்குப் பக்கத்துத் தெருவில்தான் வீடு. திண்ணையில் சட்டம் அடித்து, வாயிலில் கீத்துக் கொட்டகை போட்ட வீடு. பையை வைத்து விட்டு 'பன்'னைப் பிய்த்து உடனிருந்தவர்களுக்குக் கொடுத்தான்.
'அந்த பேக்கரிமேன்தான் கொடுத்தார். ஏன்னுதெரியலை.'
'உங்க மாமாவுக்குத் தெரிஞ்சவரா?'
'தெரியாது'
'ம்..'
'எனக்குத் தெரியாதுன்னு சொன்னேன்.'
பெல் அடிக்க ஒரு நிமிடம் இருக்கும்போது, மூச்சு வாங்க ஓடி வந்த அன்னபூரணியின் மேல் உதட்டில் வியர்த்திருந்தது.
'ஏன் லேட்டு?'
'வீட்டுக்கு யாரோ வந்துட்டங்க. லேட்
ஆயிடுத்து.'
'இந்தா பன்..'
'எனக்கு வேண்டாம்.'
'ஏன்?'
'எங்க பாட்டி அதுல முட்டை இருக்கும்பா?'
'அதெல்லாம் ஒண்ணுமில்ல இந்தா, இதைச் சாப்பிடு..'
'நீ குடுக்கறயேன்னு வாங்கிக்கறேன். வீட்டுக்குத் தெரிஞ்சா திட்டுவாளோ என்னவோ?'
மதிய உணவுக்கு வீட்டுக்கு வரும்போதும், திரும்பிப் பள்ளிக்கூடம் போகும்போதும் சாமா பேக்கரியைப் பார்த்தபடியே போவான். அப்போதெல்லாம், அவனுக்கு பன் வாசனை அடிக்கும். நடராஜன், கையில் டிபன் பாக்ஸில் மதிய உணவு கொண்டு வருவான். நிறைய பேருக்கு மஞ்சள் நிற ரவா உப்புமாவும், கரைத்த பாலும் மதிய உணவாகக் கொடுப்பார்கள். இதற்காக வீட்டிலிருந்து தட்டைக் கொண்டு வருவார்கள் சில பிள்ளைகள்.
சனிக்கிழமை அரை நாள்தான் பள்ளிக்கூடம். பிறகு திங்கள்கிழமைதான். 'வீட்டுல என்ன இருக்கு? பேக்கரிக்குப் போக முடியாது. அன்னபூரணியையும் பார்க்க முடியாது' என சாமாவுக்கு வருத்தமாக இருக்கும்.
பேக்கரிமேன் பன் கொடுப்பதை ஒருநாள் மாமா பார்த்துவிட்டார். மாலை பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடன் மாமா, 'பன் வாங்கக் காசு ஏது?' என்று கேட்டார்.
'காசு இல்லே. சும்மாதான் கொடுத்தார்.'
'நீ போய் பன் வேணும்னு கேட்டியா?'
'இல்லே, அவரேதான் கூப்பிட்டுக் கொடுத்தார்.'
'வேண்டாம்னு சொல்லிட வேண்டியது
தானே? யார் எது கொடுத்தாலும் வாங்கிச்சாப்பிட்டுடுவியா?'
'என்னை மன்னிச்சுடுங்க?.'
'சரி போ, இனிமே வேண்டாம்னுசொல்லிடு.'
அந்த பேக்கரி மேன் பார்வையே சரியில்லை என்று சித்தி, மாமாவிடம் சொன்னது சாமாவுக்குத் துல்லியமாகக் கேட்டது.
மறுநாள் பேக்கரி இருக்கும் பக்கத்துக்கு எதிர் சாரியில் சென்றான் சாமா. எட்டிப் பார்த்த பேக்கரிமேன், 'என்ன சாமா, அந்தப் பக்கம் போறே?'
'எனக்கு 'பன்' வேணாம். மாமா திட்டுவாங்க?'
'இங்கே வா. நான் மாமாகிட்டேசொல்லிக்கறேன்.'
'பன்' வாசம் இழுத்தது.
'உங்க தாத்தா, பாட்டி, மாமா, சித்தி எல்லாரையும் எனக்குத் தெரியும். நான் குடுத்தாஒண்ணும் சொல்ல மாட்டாங்க?' என்றபடி 'பன்' ஒன்றைக் கொடுத்தார்.
'சித்தி' என்று அழுத்திச் சொன்னதாக சாமாவுக்குப் பட்டது பிரமையோ?
பள்ளிக்கூட வாசலிலேயே அன்னபூரணியைப் பார்த்து, சாமா'பன்'னில் பாதியைக் கொடுக்க, 'தினமும் பன் கொடுப்பாரா அவர்?' தின்றபடியே கேட்டாள்.
'மாமா வாங்காதே என்கிறார். பேக்கரிமேன் எனக்கு எல்லாரையும் தெரியும்னு சொல்லி 'பன்'னைக் கொடுக்கிறார்.'
'இனிமே வேண்டாம்னுசொல்லிட்டுவந்துடு. ஏன் வீணாவீட்ல திட்டு வாங்கறே?'
விமானம் தட தடவென தரையிறங்கியது. அன்னபூரணி இருப்பாளா? திருமணமாகி, குழந்தைகளுடன் வேற ஊர் சென்றிருப்பாளோ? சிதம்பரத்திலேயே இருப்பாளோ? யூனிஃபார்ம் போட்டுக் காத்திருந்த டிரைவரின் குரல், அவன் நினைவுகளைக் கலைத்து.
சிதம்பரம் ரயில் நிலையம் சிறிதும் மாறாமல் அப்படியே இருந்தது. மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் எதுவும் காணவில்லை. புகை உமிழும் மஞ்சள் நிற ஆட்டோ ஒன்றில் மாமா வீடு வந்தான் சாமா. வாசலில் இருந்த இரண்டு வேப்ப மரங்களில் ஒன்று மட்டும் அப்படியே இருந்தது. அடங்கியிருந்த ஓட்டு வீடு, இரண்டு அடுக்கு மாடிக் கட்டடமாக நின்றுகொண்டு அவனை 'யார்?' என்று கேட்பது போலிருந்தது.
முகம் தெரியாத மனிதர்கள் மனதில் பதிந்திருந்த வீட்டைச் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருந்தனர். கோலி அடித்தது, பம்பரம் சுற்றியது, வாசல் சுவரில் பொங்கலுக்குக் காவியும், வெள்ளையும் பட்டை பட்டையாய் அடித்தது, வேனிற்காலப் பந்தலில் கயிற்றுக் கட்டிலில் தூங்கியது, இரண்டாம் ஆட்டம் முடிந்து செல்லும் மாட்டு வண்டிகள், படம் பற்றிப்பேசியபடிச் செல்லும் மனிதர்கள், தூரத்தில் ஊளையிடும் நாய்... எல்லாம் நினைவில் நிழலாடின.
பேக்கரியும் அடுக்குமாடிக் குடியிருப்பாக மாறியிருந்தது.
நைட்டியில் இருந்த ஒரு பெண்மணி, 'யார் வேணும்?' என்றார்.
'இங்கே.. ஒரு பேக்கரி இருக்குமே?'
'ஓ, அதுவா.. அது மூடி ரொம்ப காலமாச்சே. அந்த ஓனர் ஒரு ரோட்டு விபத்துலே போய்ட்டாரு?'
அடுக்குமாடிக் குடியிருப்புக்கு'மானஸரோவர்' என்ற பெயர் வைத்திருந்தார்கள். ஒரு நிமிடம் கையில் சூடான பன்னுடன், காது வைத்த சாக்குப்பையைத் தோளில் தூக்கியவாறு நடந்து செல்லும் சாமா, வளர்ந்த மனிதனாய், பேருந்து சாலை, பெட்ரோல் பங்க், புதிய கடைகளைக் கடந்து பள்ளிக்கூடம் வாசலில் நின்றான். எதிர்ச் சுவரில் புதிய படங்களின் போஸ்டர்கள்.
மூடியிருந்த கேட் வழியே, நேராக நின்ற கொடிமரமும், சுதந்திர தின விழாவும், சாக்லெட்டும், ராஜியும், அன்னபூரணியும் போலியோ காலுடன் நடராஜனும், மதிய உணவு சமையல் அறையும்...எல்லாம் நிழற்படமாய் மனதில் ஓடின.
பள்ளியைத் தாண்டி, அடுத்த தெருவில் அதே சட்டமடித்த வீடு. வாசலில் கொட்டகை இல்லை. 'அன்னபூரணி, நீ இருக்கிறாயா?' என்று சாமாவின் மனம் அடித்து கொண்டது .
திண்ணையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த பெரியவர், எண்பது வயதிருக்கலாம், மெதுவாக முன்னால் சாய்ந்து,
'யார் வேணும்?' என்பதைப் போலப் பார்த்தார்.
'நான் சுவாமிநாதன். தில்லியிலிருந்து வர்றேன். நாற்பது வருஷம் இருக்கும், இங்கே பக்கத்துத் தெரு பள்ளிக்கூடத்துலதான் படிச்சேன். இந்த வீட்டிலே அன்னபூரணின்னு என்கூட படிச்ச பொண்ணு.'
'ஓ, அன்னபூரணி கிளாஸ்மேட்டா? வாங்க உட்காருங்க?'
எதிர்த் திண்ணையில் உட்கார்ந்தான்.
'பேரென்ன சொன்னேள்?'
'சுவாமிநாதன், சாமான்னு கூப்பிடுவாங்க?'
'ம்.. சொல்லியிருக்கா 'ஸ்வீட் பன்' சாமாதானே?'
மனம் ஒரு துள்ளு துள்ளியது. அன்னபூரணி தன்னைப் பற்றி பேசியிருக்கிறாளா?
தலையாட்டி, சிரித்து வைத்தான்.
'யாருப்பா?' என்று குரல் வந்த திசையில் பார்த்தான் சாமா. அன்னபூரணியேதான். தலை நரைத்து, வயதுக்கு அதிகமான முதுமையுடன் அன்னபூரணி.
'சாமா'
முகம் மலர்ந்ததாக அவனுக்குத் தோன்றியது.
'ஹலோ, ஸ்வீட் 'பன்' சாமாவா?'
'ஆமாம் அன்னபூரணி, என்னை நினைவு இருக்கா?'
'எப்படி மறக்கும்? ஸ்வீட் 'பன்'னையும், உங்க மாமா திட்டினதையும் மறக்க முடியுமா?'
நினைவுகளுக்கு என்றும் அழிவில்லை - நினைத்துகொண்டான்.
எங்கோ பார்த்துப் பேசும் இந்த அன்னபூரணி, என் மனதில் சின்னவளாய்ப் பாவாடை சட்டையுடன்சிரிக்கும் அவள் இல்லை. அவள் இவளில்லை.
'அம்மை போட்டு, இவளுக்கு இரண்டு கண்களிலும் பார்வை போய்விட்டது. இருந்தாலும் உன் பெயரை வைத்துக் கண்டு
பிடிச்சுட்டா?' முதியவர் ஏதோதோ சொல்லி, புலம்பிக் கொண்டிருந்தார்.
'எனக்கு நேரமாயிடுத்து அன்னபூரணி. பள்ளிக்கூடம், மாமா வீடு, பேக்கரி, மனிதர்கள் எல்லாமே மாறி, ஊரே வேற மாதிரி இருக்கு. நாம கூட மாறிட்டோம். மனசு மட்டும் அதே மாதிரி, சின்ன வயசில இருந்த அதே மாதிரி, மாறாம இருக்கு.'
'என்னால உன்னைப் பார்க்க முடியலையேன்னு இருக்கு சாமா. ஆனாலும் அந்த சாமாவை, கையில ஸ்வீட் 'பன்'ன வெச்சிண்டு காத்துக்கிட்டிருந்த அந்த சாமாவை மறக்காம என் மனசுல பார்க்க முடியுது. எங்க எப்படி இருந்தாலும் சின்ன வயசு நினைவுகள் மறக்கறதில்லை சாமா' என்றவளின் கண்களில் இரண்டு சொட்டுக் கண்ணீர்.
போர் முடிந்து, ராதையைப் பார்க்கப் போன கிருஷ்ணன், அவள் முதுமைக் கோலத்தைப் பார்க்க விரும்பாமல், இளமைக்கால நினைவுகளுடன் வந்து விடுவதாக எங்கேயோ படித்த ஞாபகம் - சாமா மீண்டும் பள்ளிக்கூடஅன்னபூரணியை மனதில் நினைத்தபடி திரும்பினான்.
தில்லிக்குச் செல்லும் விமானத்தில் கொடுத்த ஸ்வீட் 'பன்'னை சாமா எடுத்துகொள்ளவில்லை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com