ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மார்பில் அரிப்பு குணமடைய வழி என்ன?
மார்பு கீலாய்டு சிகிச்சைக்கு ஆயுர்வேதம்: கஷாயம் மற்றும் மூலிகைத் தைலங்களின் முக்கியத்துவம்


என் மகனுக்கு வயது 32. அவருக்கு மார்பில் கீலாய்டு தழும்பு ஒன்றரை வருடமாக இருக்கிறது. சிறிய அளவில் தொடங்கி, தற்போது நான்கு அங்குல நீளம் உள்ளது. மார்பில் மட்டும்தான் உள்ளது. சில வாரங்களாக அரிப்பும் உள்ளது. இதை எப்படி குணப்படுத்தலாம்?
-ந.முத்துக்குமாரசாமி, சென்னை-73.
ஒவ்வாத உணவு வகைகளின் சேர்க்கையால் மூவகை தோஷங்களாகிய வாத- பித்த- கபங்கள், ஏழு தாதுக்களாகிய ரஸ-ரக்த-மாம்ஸ்- மே-
எலும்பு- மஜ்ஜை, விந்து ஆகியவை -கெட்டுவிடுகின்றன. தோஷ தாதுக்கள் கெடுவதால், மலங்களை உந்தி வெளியேற்றும் குழாய்களும் கெடுகின்றன. ஒட்டுமொத்தமாக, உடல் கேடுற்ற நிலையில், அவற்றின் பிரதிபலிப்பை தோலில் தழும்புகளாகவும், படை, சொறி, சிரங்குகளாகவும் காண்கிறோம்.
கப, பித்த தோஷங்களின் இருப்பிடமாகிய மார்பில் உபாதை காணப்படுவதால், கருங்காலிக் கட்டை, வேப்பம்பட்டை, சீந்தில் கொடி, பேய்ப் புடல், மரமஞ்சள், சிறு காஞ்சூரி போன்ற மூலிகைகளின் சேர்க்கையால் கஷாயம் செய்து பருகி வர உபாதையின் தாக்கமானது விரைவில் குணமாகும்.
இவற்றை வாங்கி கஷாயம் தயாரித்துச் சாப்பிட நேரமில்லை என்று நீங்கள் நினைத்தால் விற்பனையிலுள்ள படோல கடுரோஹிண்யாதி கஷாயம், ஆரக்வதாதி கஷாயம், திக்தகம் கஷாயம், படோலமூலாதி கஷாயம் போன்றவற்றில் ஒன்றை மருத்துவர் ஆலோசனையின்படி, காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
தோல் உபாதைகள் அனைத்துமே பலமுறை குடல் சுத்தி செய்யப்பட வேண்டிய நோயாகும். உடல் உள்புறம் நன்கு சுத்தம் செய்த பின்புதான் வெளியில் பூச்சு, தைலங்களைப் பயன்படுத்த வேண்டும். மாணிபத்ரம் எனும் லேகிய மருந்தை பேதி மருந்தாகப் பயன்படுத்துவது நல்லது.
ஆயுர்வேத மருத்துவமனைகளில் மேற்குறிப்பிட்ட குடல்சுத்தி முறைகளைச் செய்தவுடன் மார்பில் கீலாய்டு பகுதியின் மீது மூலிகைத் தைலங்களைத் தடவி ஒன்றிரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன்பின்னர், அதன் மேல் சரக்கொன்றைப்பட்டை, நால்பாமரப்பட்டை, வேப்பம்பட்டை, புங்கம்பட்டை போன்றவற்றைக் கொண்டு கஷாயம் தயாரித்து ஊற்றலாம். இதனால் அரிப்பு குறைவதுடன் கீலாய்டு தழும்பின் தாக்கமும் மட்டுப்படும்.
ஒரு தோல் நோயைக் காணும்போது, அது தோல் நோய்தானா என்பதனையும், வேறுநோயால் உண்டான தோல் நோயின் வெளிப்பாடா என்பதையும் அறிய வேண்டும். மனதில் ஏற்படும் வெறுப்பு, கோபம், துக்கம், எதிர்மறை சிந்தனைகள் போன்றவற்றால் தோல் உபாதையின் சீற்றம் மேலும் கூடிவிடும். அதுபோன்ற நிலைகளில் மன அமைதிக்கான மருந்துகளையும் சேர்த்துகொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
தோல் உபாதையைக் குணப்படுத்தும் மூலிகைத் தைலங்கள் பல உள்ளன. உடல்தன்மைக்கேற்ப தேர்ந்தெடுத்து, ஆசன வாய் மூலம் மலப்பைக்குச் செலுத்தி அதன்பின்னர் பட்டைகளால் தயாரிக்கப்பட்ட கஷாயத்தையும் ஆசன வாய் மூலம் செலுத்தி குடலைச் சுத்தம் செய்வதன் வழியாக ரத்தத்தைச் சுத்தப்படுத்தலாம். புளித்த
தயிர், கத்தரிக்காய், புலால் உணவு, நல்லெண்ணெய், கடுகு, பகல் தூக்கம், அடிக்கடி உடலுறவு ஆகியவற்றை தவிர்க்கப்பட வேண்டும்.
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...