24-ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் துவங்குவதற்கு இன்னும் நூறு நாட்கள் கூட இல்லை. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரத்தில் வருகிற ஜூலை மாதம் 26- ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் மாதம் 11 - ஆம் தேதி வரை ஒலிம்பிக்ஸ் திருவிழா நடைபெற உள்ளது. பாரிஸ் நகரத்தில் ஒலிம்பிக்ஸ் நடப்பது இது முதல் முறை இல்லை. இதற்கு முன்பாக 1900 - ஆம் ஆண்டிலும், 1924 - ஆம் ஆண்டிலும் ஒலிம்பிக்ஸ் பாரிஸ் நகரத்தில்தான் நடைபெற்றது.
இன்னும் சொல்லப்போனால், கடந்த 1924 - ஆம் ஆண்டு நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக்சிற்கு இது நூறாண்டு. இந்தத் தருணத்தில் பாரிஸ் நகரத்தில் மீண்டும் ஒலிம்பிக்ஸ் நடப்பது பிரான்ஸ் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான ஒரு விஷயம்.
இது போல ஒரு ஊரில் மூன்று தடவை ஒலிம்பிக்ஸ் நடப்பதும் கூட ஓர் அரிய விஷயம்தான். இது வரை இந்தப் பெருமை லண்டனுக்கு மட்டுமே உண்டு. பிரான்ஸ் நாட்டு ஒலிம்பிக்ஸ் சங்கம், இந்தப் போட்டிகளை நடத்தி முடிக்க எழுபத்தைந்தாயிரம் கோடி ரூபாய் செலவு பிடிக்கும் என்று கணக்கிட்டுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிசின் அதிகாரபூர்வமான சின்னமாக வழக்கமான பறவை அல்லது விலங்கு இல்லாமல் ஒரு பொருளைத்தான் அறிவித்திருக்கிறார்கள். அது ஒரு சிவப்பு நிறத் தொப்பி. அதற்கு ஃப்ரிஜியன் என்று பெயர். பிரான்ஸ் நாட்டில் நடந்த, வரலாற்றில் இடம் பிடித்த பிரெஞ்சுப் புரட்சியின்போது போராட்டத்தின் அடையாளமாக இந்த சிவப்பு நிறத் தொப்பி உருவகப்படுத்தப்பட்டது.
ஒலிம்பிக் போட்டிகளைத் தொடர்ந்து ஊனமுற்றோர்களுக்கான பாராஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெறும். அதற்கும் ஃப்ரிஜியன் தொப்பிதான் அதிகார
பூர்வமான சின்னமாகும். ஆனால், ஒரு சின்ன வித்தியாசம். மாற்றுய்த் திறனாளிகளை அடையாளப்படுத்தும் வகையில் அந்தத் தொப்பி ஒரு செயற்கைக் கால் கொண்டதாக இருக்கும்.
பாரிஸ் ஒலிம்பிக்சில் 32 வகையான விளையாட்டுக்களில் 329 விதமான போட்டிகள் நடைபெற உள்ளன. இவற்றில் 206 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரத்து ஐநூறு விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்பார்கள்.
ஒலிம்பிக்சில் பங்கேற்கவும், கண்டு களிக்கவும் பிரான்ஸ் நாட்டுக்கு வரும் விளையாட்டு வீரர்கள், விளையாட்டு ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் போன்ற அனைத்து தரப்பினருக்கும் தேவையான தகவல்களை அளிக்கவும், உதவிகள் செய்யவும் 45 ஆயிரம் வாலண்டியர்கள் களத்தில் இருப்பார்களாம்.
பல்வேறு போட்டிகளையும் காண்பதற்காக ஒரு கோடியே 34 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகும் என்றும், ஒட்டு மொத்தமாக ஒரு கோடியே 53 லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸில் பாரிஸ் உட்பட 16
இடங்களில் பல்வேறு போட்டிகளும் நடப்பதன் காரணமாக பிரான்சுக்கு 3.5 பில்லியன் யூரோ அளவுக்கு பொருளாதார நலன்கள் கிடைக்கும் என்று பிரான்ஸ் அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
பல்வேறு வகையான ஊடகங்களைச் சேர்ந்த 34 ஆயிரம் பத்திரிகையாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் வருவார்கள். தொலைக்காட்சிகள் மூலமாக போட்டிகளைக் கண்டு ரசிப்பவர்கள் 400 கோடி பேர். விளையாட்டுகளை நல்லபடியாக நடத்தி முடிக்க பல்வேறு ஏற்பாடுகளையும் பிரான்ஸ் செய்துகொண்டிருக்கும் அதே நேரத்தில், போட்டிகளில் எந்தெந்த நாடுகளுக்கு எத்தனை தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் கிடைக்கும் என்று பல்வேறு நிறுவனங்களும் கணிப்புகளை வெளியிட ஆரம்பித்துவிட்டன. அவற்றில் நீல்சன் கிரேஸ்நோட் ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனத்தின் கணிப்புகள் சர்வதேச அளவில் விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படுகின்றது.
பாரிஸ் ஒலிம்பிக்சில் மிக அதிக எண்ணிக்கையில் பதக்கங்களைத் தட்டிச் செல்லும் நாடு என்று அமெரிக்கா கணிக்கப்பட்டுள்ளது. பல்வேறு குழு, தடகளம் மற்றும் தனிநபர் விளையாட்டுக்களிலுமாக அமெரிக்கா மொத்தம் 123 பதக்கங்களை வெல்லும் என்று சொல்கிறார்கள். இவற்றில் 39 தங்கப்பதக்கங்களும் அடங்கும்.
இதன் மூலமாக தொடர்ந்து எட்டாவது தடவையாக அமெரிக்கா ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியில் மிக அதிக எண்ணிக்கையில் பதக்கங்களை வென்ற நாடு என்ற பெருமையை அடையும்.
கடந்த ஒலிம்பிக்சைவிட பத்து பதக்கங்களை இப்போது அமெரிக்கா கூடுதலாக வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, கடந்த நாற்பது ஆண்டுகளில் அமெரிக்காவின் மிகச் சிறந்த ஒலிம்பிக்ஸ் பங்கேற்பாக பாரிஸ் இருக்கும். பதக்க எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தை சீனா பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதாவது சீனா 89 பதக்கங்கள் வெல்லும் என்றும் இவற்றில் 35 தங்கமாக இருக்கும் என்றும் சொல்கிறர்கள். குறிப்பாக டைவிங், துப்பாக்கி சுடுதல், நீச்சல், பளு தூக்குதல், டேபிள் டென்னிஸ், ஜிம்னாஸ்டிக்ஸ், பேட்மின்டன் ஆகியவற்றில் சீனாவின் வெற்றி வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகத் தெரிய வருகிறது. மூன்றாவது இடம் பிடிக்கும் நாடு பிரிட்டன். இது மொத்தத்தில் 66 மெடல்களைத் தட்டிச் செல்லும் என்றும் இதில் 13 தங்கம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. நான்காவது இடம் இந்த ஆண்டு ஒலிம்பிக்ஸ் நடத்தும் நாடான பிரான்ஸ். இதற்கு 55 மெடல்கள் கிடைக்கும்; இதில்18 தங்கம் என்கிறது கணிப்பு.
முதல் பத்து இடங்களைப் பிடிக்கும் இதர நாடுகளின் பட்டியல்:
ஆஸ்திரேலியா : மொத்தம் 50-தங்கம் : 13.
ஜப்பான் : மொத்தம் 49- தங்கம் : 13.
இத்தாலி : மொத்தம் 47-தங்கம் : 12
நெதர்லாந்து : மொத்தம் 38-தங்கம்: 18;
ஜெர்மனி : மொத்தம்: 36-தங்கம் : 9
தென் கொரியா : மொத்தம் : 24-தங்கம்: 9
இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளதா?
நீரஜ் சோப்ரா : ஈட்டி எறிதல்
பி.வி.சிந்து, சாத்விக்,
சிராக் ஷெட்டி : பாட்மின்டன்
நிக்கெத் சரீன், லவ்லீனா : குத்துச் சண்டை
வினெஷ் போகத் : மல்யுத்தம்
மீராபாய் சானு : பளு தூக்குதல்
ஸ்ரீசங்கர் முரளி : நீளம் தாண்டுதல்
சிஃப்ட் கவுர் சம்ரா : துப்பாக்கி சுடுதல்
இந்திய ஹாக்கி அணிக்கும் வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.