உலகின் முதல் டிரோன் கேமரா அலைபேசி

புதிய தொழில்நுட்ப மையம்: விவோவின் நுட்பம் புரட்சிகரம்
உலகின்  முதல்  டிரோன் கேமரா அலைபேசி
Picasa
Published on
Updated on
1 min read

டிரோனில் கேமரா அல்லது கேமராக்களை பொருத்தி டிரோனைப் பறக்க விட்டு 'பருந்துப் பார்வை' படங்களை மிக உயரத்திலிருந்து கீழ் நோக்கி எடுத்து, நிகழ்ச்சிகளுக்காகவும் பல்வேறு காரணங்களுக்காகவும் பயன்படுத்துவது அதிகமாகிறது. ஹெலிகாப்டரில் பறந்து படம் பிடிக்கச் செலவழித்த நிலையில், டிரோன்களின் பயன்பாட்டால் செலவினம் குறைந்துள்ளது.

ஆண்டிராய்ட் அலைபேசிகள் அறிமுகமானதில் இருந்து திரைப்படம் எடுக்கும் அளவுக்கு தொழில்நுட்பத்தில் சிறந்த கேமராக்கள் பொருத்தப்பட்ட அலைபேசிகள் சந்தையில் கிடைக்கின்றன.

இந்த கேமராக்களால் தூரத்திலிருக்கும் பொருள்களைப் படம் பிடிக்க முடியும். ஆனால் உயரத்திலிருந்து கீழ் நோக்கி படம் பிடிக்க முடியாது. உயரத்திலிருந்து கீழ் நோக்கி படம் பிடிக்க வேண்டும் என்றால், அலைபேசியுடன் படம் பிடிப்பவர் அந்த உயரமான இடத்துக்கு ஏறிச் செல்ல வேண்டும்.

'விவோ' அலைபேசி நிறுவனம், உலகின் முதல் டிரோன் கேமரா பொருத்தப்பட்ட அலைபேசியைக் கண்டுபிடித்துள்ளது. இதில், பொத்தானை அழுத்தினால், அலைபேசியில் பொருத்தப்பட்ட கேமரா அலைபேசியிலிருந்து விடுபட்டு மேலே பறந்து தேவையான உயரத்தில் நின்று அல்லது பறந்து தெளிவான படங்களை பிடித்து அலைபேசிக்கு அனுப்பும்.

இந்த டிரோன் கேமராவின் திறன் 200 மெகா பிக்ஸல் ஆகும். தேவையான கோணங்களில் அட்டகாசமான படங்கள் அல்லது ரீல்களை படம்பிடிக்கும் திறமை இந்த கேமராவுக்கு உண்டு.

குழுவாக வந்தவர்களை உயரத்தில் பறந்தபடி 'செல்பி' எடுக்கவும் பயன்படுத்தலாம். படம் பிடிக்கும் வேலை முடிந்ததும் பொத்தானை அழுத்தினால், கேமரா அலைபேசியில் வந்து சமர்த்தாக அமர்ந்து கொள்ளும்.

பொதுவாக, ஸ்மார்ட் அலைபேசியின் நீளம் அதிகபட்சம் 6.2 அங்குலம். விவோவின் டிரோன் கேமரா மொபைல் 7.1 அங்குல நீளம் இருக்கும். அலைபேசியின் தரம் எல்லா அலைபேசிகளுக்கும் சவால் விடும் விதத்தில் அமைந்திருக்கும்.

அலைபேசியின் சேமிப்புத் திறன் 256 அல்லது 512 ஜி.பி. ஆகும். ரேம் 12 ஜி.பி. ஆகும். நீண்ட நேரம் கேமரா உயரத்தில் பறக்க வேண்டிவந்தால் அதற்கான மின்சக்தி வழங்கும் வசதியுடன் பேட்டரி மிகச் சக்தி வாய்ந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

வழக்கமான அலைபேசியைப் பின்னுக்குத் தள்ளும் விவோ டிரோன் கேமரா அலைபேசி, 'அலைபேசி உலகில்' புரட்சியை உருவாக்கும். கற்பனை, கலைத் திறன் கொண்டவர்கள் பலரும் அதிசயிக்கும் விதங்களில் படம் எடுத்துத் தள்ளலாம்.

இந்த ஆண்டின் முடிவில் சந்தைக்கு வரும் இந்த டிரோன் கேமரா அலைபேசி சுமார் ரூபாய் ஒரு லட்சம் இருக்கும் என்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com