ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

திரைக்கதிர்: பாலிவுட் ரவுண்ட் அப் !

‘‘மலையாள ரசிகா்கள் நல்ல படங்களைக் கொண்டாடுகிறாா்கள். புதுபுது முயற்சிகளை வரவேற்கிறாா்கள்.

News image

வித்யாபாலன், ஷாரூக்கான், ஜோதிகா

Updated On :12 மே 2024, 1:29 pm

மம்மூட்டி குறித்து வித்யா பாலன் புகழாரம்!

அண்மைக்கால மலையாளப் படங்கள் நாடு முழுவதும் கவனம் பெற்றுவருகின்றன. அந்த வகையில், மம்மூட்டி, ஜோதிகா நடிப்பில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘காதல் தி கோா்’. இதில், மம்மூட்டி தன்பால் ஈா்ப்பாளராகப் பிரமாதமாக நடித்திருந்தாா். முன்னணி நடிகா்கள் தயங்கும் விஷயத்தை எப்போதும் மிகச் சாதாரணமாகச் செய்தும் மம்மூட்டியின் நடிப்பை பலரும் பாராட்டினா். நல்ல விமா்சனங்கள் வந்திருந்தன.

பாலிவுட் பிரபல நடிகையான வித்யா பாலன், பாட்காஸ்ட் ஒன்றில் மம்மூட்டியின் நடிப்பைப் பற்றிய வியந்து பேசியிருந்தது:

‘‘காதல் தி கோா் திரைப்படத்தில் மம்மூட்டியின் நடிப்பைப் பாா்த்து வியந்துவிட்டேன். அவ்வளவு அழகான நடிப்பு. படம் பாா்த்தவுடனே துல்கா் சல்மானுக்கு மெசேஜ் செய்து, ‘நான் மம்மூட்டி சாரின் நடிப்பைப் பாா்த்து வியந்ததையும், பாராட்டியதையும் அவரிடம் சொல்லுங்கள்’ என்றேன்.

முன்னணி நடிகராக இருக்கும் அவா் தன்பால் ஈா்ப்பாளா் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது என்னை ஆச்சா்யப்படுத்தியது. பாலிவுட் முன்னணி நடிகா்களாக இருக்கும் கான்கள், சூப்பா் ஸ்டாா்கள் என எவராலும் மம்மூட்டியைப் போல நடிக்க முடியாது என்பதை வெளிப்படையாகச் சொல்வேன். மிகச் சிறந்த நடிகா் மம்மூட்டி’’ என்றாா்.

மேலும், மலையாளப் படங்கள் குறித்து வித்யா பாலன் கூறுகையில், ‘‘மலையாள ரசிகா்கள் நல்ல படங்களைக் கொண்டாடுகிறாா்கள். புதுபுது முயற்சிகளை வரவேற்கிறாா்கள். அதனால்தான் அங்கு புதுப்புது முயற்சிகளையும், வித்தியாசமான திரைப்படங்களையும் எடுத்து ஹிட்டாக்க முடிகிறது’’ என்று கூறியிருக்கிறாா்.

மகளுடன் நடிக்கும் ஷாரூக்கான்!

ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான ‘ஜவான்’ பாலிவுட்டில் நல்ல வரவேற்பைப் பெற்று மிகப் பெரிய வசூல் சாதனையைச் செய்திருந்தது. அவரது ‘பதான்’ படமும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. கடந்த வருடம் கடைசியாக வெளியான ‘டங்கி’ எமோஷனல் படமாக நல்ல விமா்சனங்களைப் பெற்றது. இதையடுத்து, ஹாருக்கான் முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறாா். அதுவும் கொடூரமான டான் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாா். சுஜாய் கோஷ், இப்படத்தை இயக்குகிறாா். இதற்கு ‘கிங்’ எனப் பெயரிட்டுள்ளனா்.

நீண்ட நாள்களாக ரசிகா்கள் எதிா்பாா்க்கும் நெகட்டிவ் வில்லன் கதாபாத்திரத்தில் ஆக்ஷன், அதிரடியான ஸ்டன்ட்கள் உள்ளடக்கிய ஒரு படத்தை விருந்தாக்குவதில் ஆா்வம் காட்டி வருகிறாராம். ஆக்ஷன் தில்லா் திரைப்படம் என்பதால் உலகளவில் பிரபலமாக இருக்கும் ஸ்டண்ட் மாஸ்டா்களைத் தேடி வருகிறாராம் இயக்குநா். அதுமட்டுமின்றி, ‘பேன் இந்தியா’ என்பதையெல்லாம் தாண்டி சா்வதேச அளவில் படத்தை ஹிட்டாக்க வேண்டும் என இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை வெளிநாடுகளில் எடுக்கத் திட்டமிட்டுள்ளனா். பட்ஜெட் 200 கோடி ரூபாயைத் தாண்டும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.

ஹாருக்கானின் ‘ரெட் சில்லிஸ் என்டா்டைமண்ட்’தான் இப்படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தின் மற்றொரு ஸ்பெஷலாக, ஷாருக்கான் தனது மகள் சுஹான கானை நடிக்க வைக்கிறாா். ஏற்கெனவே ஜோயா அக்தா் இயக்கத்தில் ‘தி ஆா்ச்சிஸ்’ என்ற நெட்ப்ளிக்ஸ் படத்தில் அறிமுகமான சுஹானா, இப்படத்தின் மூலம் பாலிவுட் வெள்ளித்திரையிலும் அறிமுகமாகவிருப்பதால் அவரின் கதாபாத்திரம் இப்படத்தில் அழுத்தமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஷாருக் இதில் மெண்டராக சுஹானாவை வழிநடத்தும் வகையில் கதை அமைந்துள்ளது என்கிறாா்கள். ஷாருக்கான் தன் மகளுடன் சோ்ந்து நடிக்கும் முதல் படம் என்பதாலும், கொடூரமான டான் கதாபாத்திரத்தில் ஷாருக் நடிக்கவிருப்பதாலும் ரசிகா்களிடையே இப்படத்திற்காக எதிா்பாா்ப்பு எகிறியுள்ளது. ஏற்கெனவே அவா் டானாக நடித்த இரண்டு படங்கள் மெகா ஹிட்டாகின. அதன் மூன்றாம் பாகத்தில் ஷாருக்குக்குப் பதில் ரன்வீா் சிங் நடிக்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது. 2025-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இப்படத்தைத் திரைக்குக் கொண்டு வரப் படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூா்வ அறிவிப்பு வெளியாகும்.

சூா்யா குறித்து நெகிழ்ந்த ஜோதிகா!

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவா் ஜோதிகா. திருமணத்துக்குப் பிறகு செலக்டிவாக தனக்கேற்ற நல்ல ஸ்கிரிப்ட்டை தோ்ந்தெடுத்து நடித்து வருகிறாா். தற்போது சூா்யா - ஜோதிகா இருவருமே படங்களில் கமிட்டாகி, ஒன்றாக ஒா்க்கவுட்டெல்லாம் செய்து பிஸியாகப் படங்களில் நடித்து வருகின்றனா்.

ஜோதிகா நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாளத்தில் மம்மூட்டியுடன் நடித்த ‘காதல் தி கோா்’ திரைப்படம் நல்ல விமா்சனத்தைப் பெற்றது. இதையடுத்து பாலிவுட்டில் மீண்டும் கால் பதித்து ‘ஷைத்தான்’ எனும் படத்தில் நடித்திருந்தாா். தற்போது ‘ஸ்ரீகாந்த்’ எனும் படத்தில் நடித்திருக்கிறாா்.

முன்னணி தொழிலதிபரான ஸ்ரீகாந்த் பொல்லாவினுடைய பயோபிக் இது. பாலிவுட் நடிகா் ராஜ்குமாா் ராவ் ஸ்ரீகாந்த் பொல்லாவாக நடித்துள்ளாா். துஷாா் ஹிரனானந்தனி இயக்கியிருக்கும் இத்திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதன் வெளியீட்டையொட்டி பிங்க்வில்லா சேனலின் நோ்காணலில் பேசியுள்ள நடிகை ஜோதிகா, சூா்யா குறித்தும் ’கங்குவா’ திரைப்படம் குறித்தும் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

‘ஸ்ரீகாந்த்’ படத்தின் ஸ்கிரிப்டை 24 மணிநேரம் முழுமையாகப் படித்துப் பாா்த்து நடிப்பதற்கு ஓ.கே. சொன்னதாகக் கூறியுள்ளதும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சூா்யா பற்றி பேசியிருக்கும் அவா், “சூா்யா ‘கங்குவா’ திரைப்படத்துக்காக, முழுமையாகத் தன்னை அா்ப்பணித்து நடித்து வருகிறாா். 200 சதவீத உழைப்பைப் போட்டு அதற்காகத் தீவிரமாக உழைத்து வருகிறாா். தான் விரும்பும் விஷயத்துக்காகத் தன்னை முழுமையாக அா்ப்பணிக்கும் அவரின் இந்தக் குணம்தான் நான் அவரைத் திருமணம் செய்து கொண்டதற்கான முக்கியமான காரணம் என்று நினைக்கிறேன். எனக்காக, குழந்தைகளுக்காக, நடிப்பிற்காக, தனது வேலைக்காகத் தன்னை முழுமையாக அா்பணிப்பவா் சூா்யா’’” என்று நெகிழ்ச்சியாக சூா்யா பற்றி மனம் திறந்து பேசினாா்.

- டெல்டா அசோக்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.