பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்! - 220

நான் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி விரைந்தேன். குடியரசுத் தலைவர் மாளிகையின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது அமைச்சரவைச் செயலரின் அலுவலகம்.
பிரணாப் முகர்ஜி
பிரணாப் முகர்ஜி
Published on
Updated on
4 min read

நான் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி விரைந்தேன். குடியரசுத் தலைவர் மாளிகையின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது அமைச்சரவைச் செயலரின் அலுவலகம்.

அப்போது அமைச்சரவைச் செயலராக இருந்தவர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன். மிகவும் இக்கட்டான கூட்டணி ஆட்சிக் காலத்தில் தேவே கெளடா, ஐ.கே.குஜ்ரால், அடல் பிகாரி வாஜ்பாய் என்று மூன்று பிரதமர்களின் கீழ் அமைச்சரவைச் செயலராகப் பணியாற்றியவர் என்கிற பெருமைக்குரியவர் அவர்.

தமிழகத்தைச் சேர்ந்த டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன், உத்தர பிரதேசத்தின் தலைமைச் செயலராகவும், மத்திய அரசின் அமைச்சரவைச் செயலராகவும் இருந்தவர். மத்திய ஜவுளித் துறைச் செயலராக இருந்த டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியத்தை, உத்தர பிரதேசத்தின் தலைமைச் செயலாளராக அனுப்பினார், அப்போது பிரதமராக இருந்த பி.வி.நரசிம்ம ராவ்.

பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருந்த நேரம். மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரவும், குடியரசுத் தலைவர் ஆட்சியில் நிர்வாகத்தை ஒழுங்குப்படுத்தவும் அவர் அனுப்பப்பட்டார். உத்தர பிரதேச கேடரைச் (பிரிவை) சேர்ந்தவர் என்பதால் அந்த மாநிலத்தின் ஒவ்வொரு அங்குலமும் அவருக்கு அத்துப்படி என்று சொல்வார்கள்.

டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் நினைவுகூரப்படுவதற்கு இன்னொரு முக்கியமான காரணம் உண்டு. தலைமைத் தேர்தல் ஆணையர்களாக இருந்த டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, என்.கோபால

சுவாமி மற்றும் 80 மூத்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இணைத்து அவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும், அதில் கிடைக்கப் பெற்ற தீர்ப்பும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.

மாநில அரசுகள் (அரசியல்வாதிகள்) உயர் அரசு அதிகாரிகளை விருப்பு வெறுப்பு காரணமாக இடமாற்றம் செய்வது தடுக்கப்பட வேண்டும் என்கிற நோக்கத்துடன் ஏனைய பணி ஓய்வுபெற்ற மூத்த அதிகாரிகளுடன் இணைந்து, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுத்தார் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன். அதிகாரிகள் சுதந்திரமாகவும், சட்டப்படியும் செயல்பட அனுமதிக்கும் பல ஆணைய உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது முக்கியமான கோரிக்கை.

அமைச்சர்கள் தங்களது உத்தரவுகளை எழுத்து மூலம் மட்டுமே வழக்க வேண்டும்; அதிகாரிகளுக்குக் குறிப்பிட்ட பணிக்கால வரம்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்; அவர்களது பணி நியமனம் குறித்துத் தீர்மானிக்கக் குழு அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்டவை அவர்களது மனுவின் ஏனைய கோரிக்கைகள். இவை உச்சநீதிமன்றத்தின் 2013 தீர்ப்பின் மூலம் உறுதிப்பட்டன. அவை பின்பற்றப்படுகின்றனவா என்பது வேறு விஷயம்.

குறிப்பிட்ட நேரத்தில் அமைச்சரவை செயலர் அலுவலகத்தை அடைந்துவிட்டேன். அவரை சந்திக்க அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அடுத்த அரை மணி நேரம் எங்களுக்குள் நடந்த கருத்துப் பரிமாற்றம் குறித்து ஒரு புத்தகமே எழுதலாம். அப்போது அவருடன் ஏற்பட்ட அந்தத் தொடர்பு அவரது கடைசி காலம்வரை நீடித்தது. அவர் பணி ஓய்வுபெற்று நொய்டாவில் குடியிருந்தபோது, தில்லிக்குச் செல்லும்போதெல்லாம் அவரை சந்திக்காமல் நான் திரும்பியதில்லை.

கோல்ஃப் விளையாடுவதைத் தனது உடற்பயிற்சியாகக் கொண்டிருந்த டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் டென்னிஸ் விளையாட்டிலும் ஆர்வம் கொண்டவர். டென்னிஸ் வீரர் ராமநாதன் கிருஷ்ணன் அவரது உறவினர். இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் மத்திய அரசின் கல்விக் கொள்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் அவர்தான் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

'தேவே கெளடா ஆட்சி விரைவில் கவிழ்ந்துவிடும் என்று பரவலாகப் பேசப்படுகிறதே.. உங்களது கருத்து என்ன?'

'ஆட்சி நிலைக்கிறதா, கவிழ்கிறதா என்பது குறித்துக் கருத்துத் தெரிவிப்பது அமைச்சரவைச் செயலராக இருக்கும் எனக்குத் தேவையில்லாத வேலை. ஆனால், நிலையற்ற ஆட்சி தொடர்வது இந்தியாவுக்கு நல்லதல்ல. ஆட்சியைக் கவிழ்ப்பதைவிட, ஆட்சியில் காங்கிரஸ் இணைந்து ஸ்திரப்படுத்துவது நல்லது என்பது எனது கருத்து. அதற்கு விருப்பமில்லை என்றால், ஆதரவை விலக்கிக் கொண்டு தேர்தலுக்கு வழிகோல வேண்டும்.'

'நிர்வாக ரீதியாக இந்த ஆட்சி குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?'

'எதுவும் சொல்ல நான் தயாராக இல்லை. சில அமைச்சர்கள் தனிப்பட்ட ஆதாயத்துக்காக அவசரக் கோலத்தில் முடிவெடுக்கிறார்கள். அவற்றுக்கு நான் முட்டுக்கட்டை போட்டுக் கிடப்பில் வைத்திருக்கிறேன். சில அமைச்சர்கள் தங்களது நேர்மை கேள்விக் குறியாகிவிடக் கூடாது என்கிற காரணத்தால் மிகவும் ஜாக்கிரதையாக முடிவெடுக்காமல் இருக்கிறார்கள். அதனால், நிர்வாகம் ஸ்தம்பித்துவிடுகிறது. இந்த நிலைமை தொடரக் கூடாது. இதை நான் சொல்வதாக இல்லாமல் நீங்கள் எழுதுவதுபோலத் தெரிவியுங்கள். இப்படியே தொடர்வது, இந்தியாவின் முன்னேற்றத்தை முடக்கிவிடும்.'

என்னை சந்திக்க அவர் நேரம் ஒதுக்கியதன் காரணம் அப்போது தெரிந்தது. நிர்வாக இயந்திரம் ஸ்தம்பித்திருக்கிறது என்பது விவாதப் பொருளானால், மாற்றம் ஏற்படும் என்கிற தேசநலன்தான் அந்தக் காரணம் என்பதை நான் புரிந்து கொண்டேன்.

அமைச்சரவைச் செயலரை சந்தித்த அடுத்த நாளே எனக்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் லால் கிருஷ்ண அத்வானியைப் பேட்டி காண்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது. அசோகா ரோடு அலுவலகத்தில் சந்திக்க வரும்படி அவரது உதவியாளர் தொலைபேசியில் தெரிவித்தார். ஆட்டம் காணும் ஐக்கிய முன்னணி அரசு குறித்து அவர் என்ன சொல்லப் போகிறார் என்கிற ஆவலுடன் விரைந்தேன்.

என்னை அதிக நேரம் காக்க வைக்காமல் உடனே உள்ளே அழைத்தார் அத்வானி.

'ஐக்கிய முன்னணி ஆட்சி குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?'

'இந்த அபத்த நாடகம் அதிக காலம் நீடிப்பது சந்தேகம்தான். ஆட்சியில் பங்குபெறும் கட்சிகளுக்கு உள்ளேயே கருத்து வேறு

பாடுகள் காணப்படுகின்றன. வெளியில் இருந்து ஆதரவு தரும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கும் ஐக்கிய முன்னணி அரசின் கோட்பாடுகள், கொள்கைகளுடன் முரண்பாடு காணப்படுகிறது. இப்படியே எத்தனை நாள்தான் தொடர முடியும்?'

'ஆனால் தொடர்கிறதே...'

'சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றதால்தான், இந்தக் கூட்டணி அரசு நீடிக்கிறது. காங்கிரஸ் கட்சியோ, ஜனதா தளமோ வெற்றி பெற்றிருந்தால், பொதுத் தேர்தலை சந்திக்கத் தயாராகி இருப்பார்கள். அரசு கவிழ்ந்திருக்கும்.'

'உத்தர பிரதேசத்தின் ஆளுநர் ரமேஷ் பண்டாரியைத் திரும்பப் பெற வேண்டும் என்கிற உங்கள் கண்டனத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்க காங்கிரஸ் முடி

வெடுத்திருக்கிறது...'

'ஐக்கிய முன்னணியை ஆதரிக்கவும் முடியாமல், எதிர்க்கவும் துணிவில்லாமல் காங்கிரஸ் தவிக்கிறது. தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்துவிட்டு, அதற்குப் பிறகு ஆளுநர் ரமேஷ் பண்டாரியை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப் போவதாகத் தெரிவித்திருப்பது, எந்த அளவுக்கு காங்கிரஸ் பலவீனப்பட்டிருக்கிறது என்பதன் அடையாளம்.'

'ஆளுநர் ரமேஷ் பண்டாரி குறித்த உங்கள் குற்றச்சாட்டுதான் என்ன?'

'அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி பாஜக. அதை ஆட்சி அமைக்க அழைப்பதுதான் முறை. எங்களுக்குப் பெரும்பான்மை இல்லை என்று முன்கூட்டியே முடிவு செய்யும் அதிகாரம் ஆளுநருக்குக் கிடையாது. ஆனால், அப்படி செயல்படும் ஆளுநரைக் கண்டிக்க அரசியல் சட்டத்தில் இடமில்லை என்பதுதான் வேதனையாக இருக்கிறது.'

'அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?'

'மாநில ஆளுநர்களாக இருப்பவர்கள் அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தினால் அவர்களை நாடாளுமன்றத்தில், கண்டனத் தீர்மானம் மூலம் கண்டிக்க அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். குடியரசுத் தலைவர் விருப்பப்படும் வரை ஆளுநர்கள் பதவியில் இருக்கலாம் என்று ஆளுநர்கள் நியமனம் குறித்த சட்டம் கூறுகிறது. இது நீதிமன்ற விவாதத்துக்கு உட்படுத்தப்பட வேண்டும்.'

'அப்படியானால், ஆளுநர் பதவியே வேண்டாம் என்பதுதான் உங்கள் கருத்தா?'

'நான் அப்படிச் சொல்லவில்லை. ஆளுநர் பதவி என்பது தேவையானது என்பதுதான் எங்கள் கருத்து. அரசியல் சாசனப் பதவிகளில், கண்டிக்க முடியாத நிலையில் இருப்பவர் ஆளுநர். அதனால், ஆளுநர் என்பவர் மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்பட்டால் போதும் என்கிற நிலைமை காணப்படுகிறது. அவரால் சொந்தமாக எந்த முடிவும் எடுக்க முடியாது என்கிற நிலைமை மாற வேண்டும். எந்தப் பதவியாக இருந்தாலும் அதன் அதிகாரத்துக்கு ஒரு கடிவாளம் தேவை என்பதுதான் எங்கள் நிலைப்பாடு!'

அப்போது பாஜக தலைவராக இருந்த எல்.கே.அத்வானி எனக்கு அளித்த அந்தப் பேட்டி, இந்தியாவில் உள்ள 18 நாளிதழ்களில் பிரசுரமாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. 27 ஆண்டுகளுக்கு முன்னால் எல்.கே.அத்வானியால் எழுப்பப்பட்ட அந்தப் பிரச்னை இன்றுவரை விடை இல்லாமல் தொடர்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகத்தான் இந்தப் பதிவு.

உத்தர பிரதேசத்தில் ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன் காங்கிரஸ் - பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியை அமைக்க வேண்டும் என்கிற முயற்சிக்கு முலாயம் சிங் யாதவ் முட்டுக்கட்டை போட்டார். அப்படியொரு ஆட்சி அமைந்தால் அது காங்கிரஸை மீண்டும் வலுப்படுத்திவிடும் என்றும், சமாஜ்வாதி கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் கருதினார். ஜனதா தளமும் அதே கருத்தை கொண்டிருந்தது.

உத்தர பிரதேச ஆளுநர் ரமேஷ் பண்டாரிக்கு எதிரான பாஜகவின் தீர்மானத்தை ஆதரித்தால், வகுப்புவாத சக்திகளை ஆதரிப்பவருடன் சேர்ந்துகொண்டதாகிவிடும் என்பதால், அந்தத் தீர்மானத்தை எதிர்க்கக் காங்கிரஸ் முடிவெடுத்திருந்தது. பிரணாப் முகர்ஜி, சரத்பவார், ஜிதேந்திர பிரசாதா ஆகிய மூன்று மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பிரதமர் தேவே கெளடாவை சந்தித்து, தீர்மானத்தைத் தோற்கடிக்க உதவுவதாகவும், அதற்குப் பிறகு ஆளுநர் ரமேஷ் பண்டாரியை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

ஒருபுறம் ஆளுநர் ரமேஷ் பண்டாரிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பாஜக கொண்டுவரும் தீர்மானத்தை எதிர்ப்பதில் காங்கிரஸூம், ஐக்கிய முன்னணி கூட்டணிக் கட்சிகளும் ஈடுபட்டிருந்தபோது, இன்னொருபுறம் மிகவும் ரகசியமாக வேறொரு அரசியல் பேரம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

ஆளுநர் ஒருவரே முன்னின்று அரசியல் பேரம் நடத்தி, ஆட்சி அமைய உதவிய சம்பவம் உத்தர பிரதேசத்தில் அரங்கேற இருந்தது. இப்படி நடக்கப் போகிறது என்று எனக்குத் தெரிவித்தவர் அஜீத் சிங். அது மட்டுமல்ல, லக்னெளவுக்கு உடனடியாக நான் செல்ல எனக்கு விமான டிக்கெட் எடுத்துத் தந்து உதவியவரும் அவர்தான்.

'இந்திய அரசியல் இதுவரையில் பார்க்காத புதிய பாணி அரசியல் லக்னெளவில் அரங்கேற இருக்கிறது. அங்கே நீங்கள் தங்குவதற்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியில் ஏற்பாடு செய்திருக்கிறேன். விமான நிலையத்துக்குப் புறப்படுங்கள்' என்று கூறி வழியனுப்பினார் அஜீத் சிங்.

அவரது அலுவலகத்தில் இருந்தே, 'உத்தர பிரதேசத்தில் திடீர் அரசியல் திருப்பம்' (அன்எக்ஸ்பெக்டட் யூடர்ன் இன் யு.பி.) என்று தலைப்பிட்டு செய்தி அனுப்பிய கையோடு விமானநிலையம் கிளம்பினேன்.

கடைசிப் பயணியாக விமானத்தில் நுழைந்த என்னால், எனது கண்களை நம்ப முடியவில்லை. முதல் வகுப்பு பயணிகள் இருக்கையில் அமர்ந்திருந்த அரசியல் கட்சி தலைவர்கள்தான் அதற்குக் காரணம்!

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com