

புதிய வீடு வாங்கிய தீபிகா!
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை தற்போது தீபிகா படுகோன் வீட்டில் இருந்து கவனித்து வருகிறார். குழந்தை பிறந்த கையோடு, தீபிகா படுகோன் புதிய வீடு ஒன்றை விலைக்கு வாங்கி இருக்கிறார். மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியில் தனது கணவர் ரன்வீர் சிங் தாயார் அஞ்சு பவ்னானி வீட்டுக்கு அருகில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் சாகர் ரேஷம் ஹவுசிங் சொசைட்டி அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.17.8 கோடிக்கு அந்த வீட்டை வாங்கி இருக்கிறார்.
15-ஆவது மாடியில் இருக்கும் இந்த வீடு 1,845 சதுர அடி கொண்டதாகும். அதோடு அந்த வீட்டை தனது தயாரிப்பு நிறுவனம் சார்பாக வாங்கி இருக்கிறார். கடற்கரையை நோக்கி இருக்கும் அந்த வீடு தீபிகா படுகோனின் மாமியார் வீட்டுக்கு அடுத்த கட்டடத்தில் இருக்கிறது. இம்மாதம் 12-இல் வீடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முத்திரை தீர்வையாக ரூ.1.07 கோடி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த மாதத் தொடக்கத்தில் ரன்வீர் சிங் தாயாரும் இதே கட்டடத்தில் 19.13 கோடி ரூபாய்க்கு ஒரு வீட்டை வாங்கினார். ஏற்கெனவே நடிகர் ஷாருக்கான் வீட்டுக்கு அருகில் அடுக்குமாடி குடியிருப்பில் தீபிகா படுகோன், அவரின் கணவர் ரன்வீர் சிங்கும் சேர்ந்து 4 மாடிகளை மொத்தமாக விலைக்கு வாங்கி இருக்கின்றனர். அதே கட்டடத்தில் மாடியில் 1300 சதுர அடியையும் தங்களது சொந்தமாக்கி இருக்கின்றனர். அதன் மொத்த மதிப்பு ரூ.100 கோடியாகும்.
தங்களது மகளுடன் பாலிவுட் தம்பதி இந்த புதிய வீட்டில் குடியேற இருக்கிறது. நான்கு மாடிகள் கொண்ட வீடு 11,266 சதுர அடி கொண்டதாகும். 2021-ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் கடற்கரை நகரமான அலிபாக்கில் 22 கோடி ரூபாய்க்கு கடற்கரையில் பங்களா ஒன்றையும் இருவரும் சேர்ந்து வாங்கினர். 2018-இல் தீபிகாவும், ரன்வீர் சிங்கும் காதலித்து திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
கங்கனாவுக்கு தணிக்கை குழு பதில் !
கங்கனா ரனாவத் எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் 'எமர்ஜென்சி'.
படத்தில் இந்திரா காந்தியாக நடித்திருக்கிறார் கங்கனா. எமர்ஜென்சி சமயத்தில் நிகழ்ந்த விஷயங்களை மையப்படுத்தி உருவாகியிருக்கிறது இந்தத் திரைப்படம். செப்டம்பர் 6-இல் இத்திரைப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சீக்கியர்களைத் தவறாகச் சித்திரித்துள்ளதாகத் தெரிவித்து, சீக்கிய அமைப்பினர் இத்திரைப்படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அதன் பிறகு தணிக்கை குழு பரிந்துரைத்த சில காட்சிகளை நீக்காததால், சான்றிதழ் கிடைக்கவில்லை. அதனால் பட ரிலீஸ் தள்ளிப்போனது.
தணிக்கை குழு தணிக்கை சான்றிதழைக் கொடுக்காமல் படத்தின் ரிலீஸூக்கும் முட்டுக்கட்டை போடுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார் கங்கனா ரனாவத். கடந்த வாரம் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஜீ என்டர்டெயிமென்ட், 'ஹரியானா மாநிலத்தின் சட்டப் பேரவைத் தேர்தல் போன்ற அரசியல் காரணங்களால் இத்திரைப்படத்திற்கான தணிக்கை சான்றிதழை நிலுவையில் வைத்துள்ளது'என குற்றம்சாட்டியிருந்தது. அதன் பிறகு தயாரிப்பு நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தை நாடியது.
நீதிமன்றமும் தணிக்கை சான்றிதழ் கொடுக்காமல் தாமதப்படுத்தும் விவகாரத்துக்கு கடுமையாக சாடியது. அதன் பிறகு செப்டம்பர் 25-க்குள் முடிவெடுக்குமாறு உத்தரவிட்டிருந்தது. அதன் பிறகு நீதிமன்றத்தில் ஆஜரான தணிக்கை குழுவின் வழக்குரைஞர் அபினவ் சந்திரசூட், 'தணிக்கை குழு சான்றிதழைக் கொடுப்பதற்கு முன் படத்தில் சில காட்சிகள் நீக்கத்துக்குப் பரிந்துரைத்திருக்கிறது.'எனக் கூறினார். தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சரண் ஜகிதியாணி, 'தணிக்கை குழு சொன்ன காட்சிகளை நீக்கம் செய்யலாமா?, வேண்டாமா? என முடிவெடுப்பதற்கு சில கால அவகாசம் தேவை'எனக் கேட்டிருக்கிறார். இதன்பிறகு வழக்கின் அடுத்த விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
விவகாரத்து கோரினார் ஊர்மிளா!
பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோண்ட்கர் காஷ்மீரைச் சேர்ந்த தொழிலதிபரும், மாடலுமான மொஹ்சின் அக்தர் மிர் என்பவரைக் காதலித்து, 2016-இல் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு முன்பு இருவரும் சில காலம் சேர்ந்து வாழ்ந்தனர். மொஹ்சினுக்கு ஊர்மிளாவைவிட 10 வயது குறைவு என்பதால் அப்போது பாலிவுட்டில் பேசுபொருளானது. இப்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஊர்மிளா விவாகரத்து கோரி மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இந்த விவாகரத்து கோரும் மனுவை ஊர்மிளா தாக்கல் செய்யவில்லை. இருவரும் என்ன காரணத்துக்காக, விவாகரத்து கோரினர் என்று தெரியவில்லை. திருமணமாகி எட்டு ஆண்டில் இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் குழந்தை கிடையாது.
இருவரும் 2014-இல் பாலிவுட் டிசைனர் மனீஷ் மல்கோத்ராவின் உறவினர் ஒருவரின் திருமணத்தில் முதல் முறையாக சந்தித்தனர். இருவரும் சந்திக்க மனீஷ் மல்கோத்ராவும் முக்கிய காரணமாக இருந்தார். அதோடு மொஹ்சினும், மனீஷ் மல்கோத்ராவும் இணைந்து தொழில் செய்து வருகின்றனர். 1990-களில் பாலிவுட்டில் மிகவும் பிரபலமாக விளங்கிய ஊர்மிளா 2019-மக்களவைத் தேர்தலில் மும்பையில் போட்டியிட்டு, பா.ஜ.க. வேட்பாளரிடம் தோற்றுப்போனார். அதனை தொடர்ந்து ஊர்மிளா சிவசேனாவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.