ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மலச்சிக்கல் உபாதைக்கு தீர்வு..?
எனக்கு வயது இருபத்து எட்டு. வியாபாரம் பெருக்குவதற்காக, பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது.


பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
எனக்கு வயது இருபத்து எட்டு. வியாபாரம் பெருக்குவதற்காக, பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது. உணவை ஹோட்டல்களில் அடிக்கடி சாப்பிடுகிறேன். இதனால் வயிற்று உப்புசம், பசியின்மை, மலச்சிக்கல் போன்ற உபாதைகளால் அவதியுறுகிறேன். இந்த உபாதைகள் நீங்க, எளிய வகை மூலிகை மருந்து உள்ளதா?
-விக்னேஷ், நங்கநல்லூர், சென்னை.
உண்ணும் உணவு கூழாகி, சத்து, மலம் என இரு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. உணவின் சத்தான பகுதியை கல்லீரல் எனும் பகுதிக்கு எடுத்துச் செல்வது, சக்கையான மலத்தை பெருங்குடல் பகுதிக்கு அனுப்புவது என்று எந்த நேரமும் சுறுசுறுப்பாக "ஸமானன்' எனும் குடல் வாயு செயல்பட்டு கொண்டிருக்கிறது. மலத்தைச் சேரவிடாமல் பெருங்குடலில் இருந்து தன் அசைவுகளின் மூலமாக "அபானன்' வெளியேற்றுகிறது. இந்த இரு வாயுக்களும் தங்களுக்குக் கெட்டுப் போய் உள்ளதாகத் தெரிகிறது.
இவற்றைச் சரிசெய்வதற்கான எளிய வகை மூலிகைச் சேர்க்கை உள்ளதா? என்ற கேள்விக்குப் பதில் அளிக்கும்படி கட்டாயப்படுத்துவதன் மூலமாக, நீங்கள் வியாபாரப் பயணத்தை நிறுத்த விரும்பவில்லை என்றும் ஹோட்டல் உணவைச் சாப்பிடாமல் இருக்க முடியாது என்பதையும் தெளிவாக்கியுள்ளீர்கள். அதாவது இவ்விரு விஷயங்களிலும் கைவைத்து விடாதீர்கள் என்று கூறுவதும் விளங்குகிறது.
இந்துப்பு 2 பங்கு, குரோசானி ஓமம் 2 பங்கு, ஓமம் 3 பங்கு, சுக்கு 5 பங்கு, கடுக்காய் 12 பங்கு ஆகிய மருந்துகளை நுண்ணியதாகப் பொடித்து "வைச்வாநரசூரணம்' என்ற பெயரில் விற்பனையாகிறது.
சுமார் மூன்று கிராம் முதல் ஐந்து கிராம் வரை எடுத்து தயிர் தெளிவு, மோர், நெய், வென்னீர் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றுடன் கலந்து காலை, இரவு உணவுக்கு அரை மணி நேரம் முன் சாப்பிட்டால் வயிற்றுப் பொருமல் எனும் உப்புசம், மூலம், மலச்சிக்கல், ஸமான- அபான வாயுக்களின் மந்தச் செயல்பாடு, பூட்டுகளில் மப்புநீர் சேர்ந்து ஏற்படும் வீக்கம் மற்றும் வலி, வயிற்றில் வாயு உண்டோடி பந்தாகச் சுருட்டிக் கொள்ளும் குல்ம உபாதை, நெஞ்சு வலி, சிறுநீர்ப் பை சார்ந்த உபாதைகள், மண்ணீரல் நோய்கள் தீரும்.
நீங்கள் கேட்டது இரு உபாதைகளின் குணம் மட்டுமே. ஆனால் இந்தச் சூரணத்தால் மேலும் பல உபாதைகள் ஏற்படாதவாறும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். நீங்கள் வெளியூர்களில் தங்கும் விடுதிகளில் தண்ணீரைச் சூடாக்கும் கெட்டில் வைத்துள்ள விடுதிகளில் தங்கினால் வென்னீருக்காக அலைய வேண்டிய நிர்பந்தம் இருக்காது.
காலை, இரவு உணவுக்குப் பிறகு "தசமூலாரிஷ்டம்' எனும் மருந்தை நீங்கள் முப்பது மில்லி அருந்தலாம். உணவை நன்கு செரிக்கவைத்து, வயிற்றில் வாயுவை சேரவிடாமல் அவை தம் பணியை சரிவர செய்ய உதவிடும்.
பசி நன்றாக எடுக்கிறது. ஆனால் வயிற்றில் வாயு சேர்க்கையும், மலச்சிக்கலும் தொடர்கிறது என்று உங்களுக்குத் தென்படத் தொடங்கினால் அவை குணமாக, ஒரு சிறந்த ஆயுர்வேத மருந்து இருக்கிறது. ஆயுர்வேத மருத்துவர்களிடம் சென்று ஆலோசனை செய்தவுடன் பயன்படுத்துதல் நல்லது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...