பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
எனது வயது முப்பத்து மூன்று. மத்திய அரசு ஊழியை. ஹார்மோன் மாத்திரை சாப்பிட்டால்தான் மாத விலக்கு ஏற்படுகிறது. சினைப்பை நீர்க்கட்டிகளால் மாதவிலக்கு சரியாக ஏற்படுவதில்லை. பல மணி நேரம் அமர்ந்தே வேலை செய்வதால், பசியின்மை, வயிறு உப்புசம், மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளும் உள்ளன. ஆபத்தான ஹார்மோன் மாத்திரைகளை நிறுத்தி, மாதவிலக்கு சரியானபடி ஏற்பட ஆயுர்வேத மருந்து உள்ளதா?
-ராகினி, பெங்களூரு.
ஸஹஸ்ரயோகம் எனும் ஆயுர்வேத நூலில், "சித்ரக கிரந்திகாதி' என்ற பெயரில் ஒரு மருந்து நீங்கள் குறிப்பிடும் உபாதைக்குப் பரிந்துரை செய்கிறது. வயிற்றிலுள்ள மப்புநிலையை மாற்றி பசியை நன்கு தூண்டி விடுவதுடன் மலச்சிக்கலையும் குணப்படுத்தித் தரும். வயிற்று வலியை குணப்படுத்தும் மாதவிடாய் நாள்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, சினைப்பை நீர்க்கட்டிகள் போன்ற உபாதைகளையும் நீக்க உதவும்.
கொடுவேலி, திப்பிலி, ஆமணக்கு, சுக்கு ஆகிய நான்கு மருந்துகளை மட்டுமே உள்ளடக்கிய இந்த மருந்தைக் கஷாயமாக்கி, உடல்நிலைக்கு ஏற்றவாறு தகுந்த மேம்பொடி மருந்துகளுடன் வழங்குவது, ஆயுர்வேத சிகிச்சை முறையாகும்.
ஒவ்வொரு மருந்திலும் உள்ள குணங்களின் வாயிலாக , அவை எந்த வகையான தோஷங்களின் சீற்றத்தைத் தணித்து அதனால் ஏற்படக் கூடிய நோய்களையும் குணப்படுத்தும் என்ற ஆராய்ச்சியின் அடிப்படையில்தான் மூலிகைகளின் கலவையானது தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் கொடுவேலி- லேசான தன்மை, வறட்சி, கப-வாத-தோஷ சீற்றத்தை அடக்குதல், வீக்கம், வலி, மூல உபாதையைக் குணப்படுத்துதல் போன்ற தன்மைகளை உடையது.
திப்பிலியும் லேசானது, வறட்சியானது, ஊடுருவும் தன்மையுடையது. கபவாத உபாதைகளைக் குணப்படுத்தும். மலமிளக்கி, பசி தூண்டி, செரிமானத்தைச் சீராக்கும். ஆமணக்கு- நெய்ப்பு, நுண்ணியது. ஊடுருவும் தன்மை, வாத, தோஷ சீற்றத்தைக் கட்டுப்படுத்துவது, ஊளைச் சதையைக் கரைப்பது, மலமிளக்கி, பசித் தீயைத் தூண்டும்.
சுக்கு- லேசான தன்மை, நெய்ப்புடையது. கபவாத தோஷ சீற்றத்தை அடக்குவது, பசியைத் தூண்டும், செரிக்காமல் கிடைக்கும் உணவைச் செரிக்க வைக்கும்.நாட்டு மருந்துக் கடைகளில் இவை நான்கும் எளிதாகக் கிடைக்கக் கூடியவை. வகைக்கு பதினைந்து கிராம் எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து காய்ச்சி இருநூற்று ஐம்பது மில்லியாக வற்றியதும் வடிகட்டி, காலை, மாலை சரிபங்காகப் பிரித்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரலாம்.
சினைப்பை நீர்க்கட்டிகளால் மாதவிலக்கு சரியாக ஏற்படாமல், ஹார்மோன் மாத்திரை சாப்பிட்டால்தான் ஏற்படும் என்ற நிலையை இந்தக் கஷாய மருந்தின் மாற்றலாம். உடல்நிலைக்குத் தகுந்தவாறு காஞ்சநார குக்குலு எனும் மாத்திரை, பஞ்சகோல சூரணம், கல்யாண க்ஷôரம் போன்ற மருந்துகளைச் சேர்த்து பரிந்துரை செய்வது மருத்துவர்கள் செய்யும் பணியாகும்.
பருமனான உடல்வாகு கொண்ட பெண்களுக்கு உடல் இளைக்கவும், இந்தக் கஷாயம் பயன்படும். சுமார் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை இந்த மருந்துகள் பயன்படுத்த நல்லது. இந்த மருந்து விற்பனையிலுள்ளது.
உணவில் மாமிசக் கொழுப்பு சேர்ந்து உணவு, எண்ணெயில் பொரித்த எடுத்தவை, பேக்கரி (அடுமனை) பொருள்கள், நொறுக்குத் தீனிகள், சூடு ஆறிய உணவு வகைகள், விடுமுறை நாள்களில் உணவை உண்ட பிறகு பகலில் படுத்து உறங்குதல், இனிப்பு- புளிப்பு- உப்புச் சுவை அதிகம் கொண்ட உணவு வகைகளை நீங்கள் அறவே நீக்க வேண்டும். கொடிக்காய்கள், கீரைகள் சாப்பிடலாம். சமைத்தவுடன் உணவை சூடாகச் சாப்பிடுவது நலம்.
(தொடரும்)