உலகில் நாள்தோறும் இயற்கை ஏதாவொரு அதிசயத்தை நிகழ்த்துகிறது. அந்த வகையில், சில அதிசயங்களையும், ருசிகர நிகழ்வுகள், சம்பவங்கள், வியக்க வைக்கும் பொருள்கள்... சிலவற்றைஅறிவோம்.
விலைமதிப்புமிக்க அரண்மனை இந்தியாவிலேயே விலைமதிப்புமிக்க மாளிகை என்றால் அம்பானி குடும்பத்தின் 'அன்டிலியா' தான் நினைவுக்கு வரும். ஆனால், அதையும்விட விலை உயர்ந்த மாளிகையில், 'நவீன இந்தியாவின் மகாராணி' என்று அழைக்கப்படும் ராதிகா ராஜே கெய்க்வாட் வசித்துவருகிறார்.
பரோடா மகாராஜா சமர்ஜித் சிங் ரஞ்சித் சிங் கெய்க்வாட்டின் (முன்னாள் கிரிக்கெட் வீரர்) மனைவியான அவர், புகழ்பெற்ற 'மில்லியனர் ஏசியா' இதழில் இடம்பெற்றவர். இவர்களுடன் இரு மகள்கள் உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் உள்ள வதோராவில் உள்ள 'லட்சுமி விலாஸ்' என்பதே இவர்கள் வசிக்கும் விலைமதிப்புமிக்க அரண்மனையாகும். கெய்க்வாட் அரசக் குடும்பத்தினரின் பாரம்பரிய இல்லமான இந்த அரண்மனையை 1890இல் மகாராஜா மூன்றாம் சயாஜிராவ் கெய்க்வாட் கட்டினார். இதன் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய்.
நள்ளிரவில் சூரியன்
புவி தன்னைத் தானே சுழன்று கொண்டு சூரியனையும் சுற்றி வருவதால், 12 மணி நேரம் பகலும், 12 மணி நேரம் இரவும் உண்டாகிறது. அப்படி இருக்கையில், சில இடங்களில் சூரியன் இரவுப் பொழுதிலும் மறையாமல் வெளிச்சமாகவே இருக்கிறது. ஐஸ்லாந்து, பின்லாந்து, கனடா, சுவீடன் உள்ளிட்ட நாடுகளில்தான் இந்த நிலை.
ஆர்டிக் வட்டத்தில் உள்ள நார்வே நாட்டில் மே மாத இறுதியில் இருந்து ஜூலை மாதம் வரை 76 நாள்களுக்கு சூரியன் மறைவதில்லை. அதனால்தான் நார்வே 'நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு' என்று அழைக்கப்படுகிறது. இங்கு அதிகமாக வனப் பகுதிகள் இருப்பதால் மற்ற ஐரோப்பிய நாடுகளைவிட, இந்த நாடு அதிக மழைப்பொழிவைப் பெறுகிறது.
அமெரிக்காவில் உள்ள மாகாணங்களில் ஒன்றான அலாஸ்காவில் மே மாத இறுதியில் இருந்து ஜூலை இறுதி வரை சூரியன் மறைவதில்லை. இந்தப் பகுதியில் நவம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்து அடுத்த 30 நாள்களுக்கு சூரியன் உதிக்காது.
'பூமாலை' நாடுகள்
இந்தியா, நேபாளம், பூடான், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய 5 நாடுகளையும் உலக வரைப்படத்தில் பார்க்கும்போது, ஒரு பூமாலையைக் கோர்த்தது போல் இருக்கும். இதனால், இவற்றுக்கு 'பூமாலை நாடுகள்' என்று பெயர்.
கிராபைட்
கிராபைட் என்ற தனிமத்தில் இருந்து பென்சில் தயாரிக்கப்படுகிறது. இது புவியில் காணப்படும் வித்தியாசமான தனிமம் என்பதோடு, பளபளப்புடன் உள்ளது.
இதனை குகைகளின் சுவர்களில் வரைய ஆதிமனிதன் பயன்படுத்தினான். எகிப்தியர்களோ மண்பாண்டங்களை அலங்கரிக்கப் பயன்படுத்தினர். பீரங்கி பந்துகளை உருவாக்கும் அச்சுக்களை வரிசைப்படுத்தவும் கிராபைட் பயன்படுத்தப்பட்டது. பழங்காலம் முதல் இன்றுவரையில் கிராபைட் பல்வேறு வகைகளில் மனிதர்களுக்குப் பயன்படுகிறது.
பெரிய விமான நிலையம்
சவூதி அரேபியாவில் அமைந்திருக்கும் தம்மம் விமான நிலையம் என்ற கிங் பஹத் விமான நிலையம்தான் மிகப் பெரிய விமான நிலையம் ஆகும். தம்மம் நகரில் இருந்து 31 கி.மீ. தொலைவில், 776 சதுர கி.மீ. பரப்பளவில் இருக்கிறது. இங்கு 4 கி.மீ. நீளமுடைய இரு ஓடுபாதைகள் உள்ளன.
பெரிய ஸ்டேடியம்
ஆந்திர கிரிக்கெட் சங்கம் சார்பில், அமராவதியில், உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு ரூ.800 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது குஜராத் மாநிலத்துக்கு உள்பட்ட அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம்தான் உலகின் மிகப் பெரிய ஸ்டேடியமாக விளங்குகிறது.
முதல் வெப் கேமரா
1991இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அங்குள்ள காபி குடுவையின் நிலையை அறிய அடிக்கடி சென்று பரிசோதிப்பதற்குப் பதிலாக, முதல்முதலில் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டது. இதுவே உலகின் முதல் வெப் கேமரா.
எழுத்தறிவு
உலக மனித அபிவிருத்தி உள்ளடக்கப் புள்ளிவிவரப்படி, உலகில் எழுத்தறிவு பெற்ற நாடுகளில் முதல் மூன்று நாடுகள் ஐரோப்பியாவில்தான் இடம்பெற்றுள்ளன.
ஜார்ஜியா 100 % எழுத்தறிவு பெற்று முதலிடத்திலும், எஸ்தோனியா 99.85 % எழுத்தறிவு பெற்று 2ஆம் இடத்திலும், லாத்வியா 98.8% எழுத்தறிவு பெற்று மூன்றாம் இடத்திலும் இருக்கிறது.
கோட்டாறு ஆ.கோலப்பன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.