'வில்லிசையை மாணவிகளுக்கு இலவசமாகப் பயிற்றுவித்து, அந்தக் கலையை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்பதே எனது ஆசை' என்கிறார் 'வில்லிசை வித்தகி' விமலா.
தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட ஆலங்குளம் அருகேயுள்ள செல்லப்பிள்ளையார்குளம் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த ராஜலிங்கம்- பால்ரோஜா தம்பதியின் மகளான விமலாவிடம் பேசியபோது:
'1982-ஆம் ஆண்டில் பிறந்தேன். எனது தந்தை ராஜலிங்கம் கோயில்களில் வில்லிசை பாடுவதைக் கேட்டு, எனக்கும் ஆர்வம் ஏற்பட்டது. எனது ஆர்வத்தைப் பார்த்த எனது தந்தையும் மன்னார்கோவிலைச் சேர்ந்த இசக்கி புலவரிடம் வில்லிசையை முறையாகக் கற்க அனுப்பினார். எனது தந்தையும் குருவாக இருந்து நுணுக்கங்களைக் கற்றுத் தந்தார்.
எனது 12-ஆவது வயதில் எங்கள் ஊர் அம்மன் கோயிலில் எனது வில்லிசை அரங்கேற்றம் நடைபெற்றது.
வெளியூர்களில் சென்று வில்லிசை பாடவும் எனக்கு குடும்பத்தினர் ஊக்கம் அளித்தனர்.
ஒரு காலத்தில் கோலோச்சி வந்த வில்லிசை நடுவே சிறிது காலம் ஓய்வு எடுத்திருந்தது. தற்போது புத்துணர்வுடன் தற்போது மீண்டும் தனது இசையை பரப்பத் தொடங்கியுள்ளது.
அன்று இணையதளங்களோ, சமூக ஊடகங்களோ இல்லாத காலகட்டம். வில் பாடலை பாட செல்லும் கோயில் தொடர்பான விவரங்களையும், கடவுள்கள் குறித்த தகவல்களையும் உடனடியாகப் பதிவிறக்கம் செய்து பாடும் வசதி அப்போது இல்லை.
அதனால், வில்லிசை கச்சேரி நடைபெறும் பகுதி குறித்தும், கோயில் வரலாறு,கதை குறித்தும் கற்றறிந்த புலவர்களிடம் சென்று விவரம் கேட்பேன். பின்னர், அதை வில்லிசைக்குத் தகுந்தவாறு பாடலாக, பேச்சுவழக்காக மாற்றி இடையிடையே, நகைச்சுவை கலந்து வில்லிசை நடைபெறும் ஊர் பெருமைகளை இணைத்துப் பாடுவேன்.
சில சமயங்களில் ராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம், அகிலத்திரட்டு, அம்மன் கதைகள் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை பாட சொல்லுமாறு ஊர்பெரியவர்கள் சொல்வார்கள். அதனால் எப்போதும் கதைகளை நினைவில் வைத்திருக்க ஓய்வு நேரங்களில் அனைத்து கதைகளையும் பாடலாக்கி பயிற்சி செய்வேன்.
இதுவரை 2,500 மேடைகளில் வில்லிசை கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளேன். வில்லிசை என்பது குழு முயற்சிதான். என் குழுவில் ஐந்து பேர் பயணிக்கின்றனர்.
ஒருவர் கூறும் கருத்தை ஆமோதித்தோ, மறுத்தோ பேச வேண்டிய நேரத்தில் பயிற்சியையும் தாண்டி , சமயோசிதமாக சில சமயம் பேச வேண்டியிருக்கும். அதை எனது குழுவினர் சரியாகச் செய்து வருவதால்தான் என்னால் இத்தனை மேடைகளில் பாட முடிந்துள்ளது.
ஊட்டச்சத்துகளின் அவசியம் குறித்து வில்லிசை வாயிலாக, அரசு சார்பில் பள்ளிகளிலும் பொது இடங்களிலும் பாடி குழந்தைகளுக்கு விழிப்புணர்வுப் பிரசாரம் செய்துள்ளேன்.
விருதுகளும், பாராட்டுகளும் கலைஞர்களுக்கு மிக அவசியம். விருதுகள் எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும். அதையும் தாண்டி, கைதட்டலும், பாராட்டும்தான் எங்களை மேலும் செயல்பட செய்யும்.
2010-இல் தமிழ்நாடு அரசு கலை,பண்பாட்டு துறை சார்பில் சிறந்த வில்லிசை கலைஞருக்கான 'கலை வளர்மணி' விருதை அன்றைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் செல்வராஜ், மாவட்ட கலை மன்ற செயலர் முத்து ஆகியோர் வழங்கினர். 2013-ம் ஆண்டிலும் அன்றைய ஆட்சியர் சமயமூர்த்தி , சிறந்த வில்லிசை கலைஞருக்கான விருதை குடியரசு தின விழாவில் வழங்கினார்.
'அமுதப்புலவி' எனும் பட்டத்தை கிராமிய வில்லிசை கலைஞர்கள் சங்கத்தினரும், 'ஒளவையார் விருதை' சுரண்டை ஒளவை தமிழ் சங்கத்தினரும், 'வில்லிசை வித்தகி' பட்டத்தை சுரண்டை ஒளவை தமிழ் சங்கத்தினரும் வழங்கினர்.
இன்று சமூக ஊடகங்களில் வில்லிசையும் கொடி கட்டி பறக்கிறது. கிராமங்களின் பெருமையான வில்லிசை எதிர்காலத் தலைமுறையினருக்கும் சென்றடைய வேண்டும். இந்தக் கலையைக் கற்று கச்சேரி செய்ய விரும்பும் கல்லூரி மாணவிகளுக்கு இலவசமாகப் பயிற்றுவிக்க வேண்டும் என்பதே எனது ஆசை' என்கிறார் விமலா.
-.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.