மலரும் நினைவுகள்...

மக்களோடு நீக்கமற நிறைந்திருப்பது திரைத்துறையும், திரைக்கலைஞர்களும்தான்.
மலரும் நினைவுகள்...
Published on
Updated on
2 min read

மக்களோடு நீக்கமற நிறைந்திருப்பது திரைத்துறையும், திரைக்கலைஞர்களும்தான். சிறுவர்கள் முதல் முதியோர் வரையில், ஆண்-பெண் பேதமின்றி திரைப்படங்களை ரசிப்பதுண்டு. மண்ணில் மறைந்தாலும், இன்றும் மக்கள் மனங்களில் மறையாதத் திரைக்கலைஞர்கள் பலர் உண்டு. அவர்களில் சிலரைப் பற்றி நீங்காத நினைவுகள்.

பி.சுசீலா, பி.லீலா, பி.பார்வதி, பி.மாதுரி ஆகிய நால்வரும் ஒரே இனிஷியல். எம்.என்.நம்பியாரும், எம்.என்.ராஜமும் ஒரே இனிஷியல். எஸ்.வி.ரெங்கராவ், எஸ்.வி.சுப்பையா, எஸ்.வி.சகஸ்ரநாமம், எஸ்.வி.ராம்தாஸ், எஸ்.வி.சேகர் ஆகிய ஐந்து நடிகர்களுக்கும் , பின்னணிப் பாடகர் எஸ்.வி.பொன்னுசாமிக்கும் ஒரே இனிஷியல். இவர்கள் வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால், இனிஷியல் ஒற்றுமை காணப்படுகிறது.

பின்னணிப் பாடகிகள் பி.மாதுரியையும், அம்புலியையும் மெருகேற்றிய ஜி.தேவராஜனுக்கு திருவனந்தபுரத்தில் கேரள மக்கள் சிலை வைத்துள்ளனர். இந்தச் சிலை வளாகத்தில், அவருடைய பாடல்களை ஒலிபரப்பி கீதாஞ்சலி செய்கின்றனர்.

'நீலவண்ணக்கண்ணா வாடா

நீ ஒரு முத்தம் தாடா

நிலையான இன்பம் தந்து

விளையாடும் செல்வா வாடா'

என்பது 'மங்கையர் திலகம்' படத்தில் இடம்பெற்ற பாலசரஸ்வதி தேவியின் முத்திரைப் பாடல் இது.

படத்தில் பாடுவது பத்மினி. கதாநாயகன் சிவாஜி கணேசன். ஆனால், பத்மினியும், சிவாஜி கணேசனும் ஜோடி அல்ல. சிவாஜி கணேசனுக்கு ஜோடி எம்.என்.ராஜம். சிவாஜிக்கு அண்ணி பத்மினி. பத்மினிக்கு ஜோடியாக நடித்தவர் எஸ்.வி.சுப்பையா.

'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தில் சிவாஜி கணேசனும், ஏ.கருணாநிதியும் மாறுவேடத்தில் தோன்றும் ஒரு பாடல் காட்சி உண்டு.

'மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு

மாப்பிள்ளையைக் கூட்டிக்கிட்டு

காட்டுவழி போற வளே கன்னியம்மா

ஒங்கக் காசுமாலை பத்திரமா பாத்துக்கம்மா..'

என்ற பாடலும் உண்டு.

ஏ.கருணாநிதி பெண் வேடம் போட்டிருப்பார். சிவாஜி கணேசனுக்காக, டி.எம்.சௌந்தரராஜன் பாட, பெண் வேடம் போட்ட ஏ.கருணாநிதிக்குக் குரல் கொடுத்தவர் பாடகி டி.வி.ரத்தினம்.

'ஆளை ஆளைப் பார்க்கிறார்

ஆளை ஆளைப் பார்க்கிறார்

ஆட்டத் தைப் பார்த்திடாமல்

ஆளை ஆளை பார்க்கிறார்'

என்று 'ரத்கக் கண்ணீர்' படத்தில் எம்.என்.ராஜத்துக்காகப் பாடுபவர்தான் பாடகி டி.வி.ரத்தினம்.

-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.

சிறுவயதில் ஏ.நாகேஸ்வரராவ் மிக அழகாக இருப்பார். இதனால் அப்போது பெண் வேடங்கள்தான் கிடைத்தன. அவர் நடித்த முதல் படம் 'தர்ம பத்தினி' . இந்தப் படம் கோலாப்பூரில் எடுக்கப்பட்டது. இந்தப் படப்பிடிப்பைக் காண அவர் தனது தந்தையுடன் சென்றிருந்தார். படத்தில் ஒரு காட்சியில் ஒரேயொரு நிமிடம் தோன்ற ஒருவர் தேவைப்பட, கூட்டத்தில் இருந்த நாகேஸ்வரராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிற்காலத்தில் பிரபலமான நடிகராகத் திகழ்ந்தார்.

-ராஜி ராதா, பெங்களூரு.

ஒரு காலத்தில் பாடகராகவும், குணச்சித்திர நடிகராகவும் சிறந்து விளங்கியவர் செருகளத்தூர் சாமா. அவர் 'அம்பிகாபதி' படத்தில் திருவள்ளுவராக நடித்தார். அவர் நாயகனாக திருவள்ளுவர் வேடம்தாங்கி, திருநெல்வேலி பாப்பா என்பவர் வாசுகியாக நடிக்க 'திருவள்ளுவர்' திரைப்படம் வெளிவந்தது.

-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

பத்தினி
பத்தினி

லங்கையில் 'பைலட் பிரேம்நாத்' படப்பிடிப்பு நடந்தபோது, நிகழ்ந்த ருசிகரச் சம்பவம்.

எம்.ஜி.ஆர். பிறந்த கொழும்பு கண்டி நகரில் உள்ள தேயிலைத் தோட்டத்தில், சிவாஜி கணேசன் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது தோட்டத் தொழிலாளர்கள் வேலையைவிட்டு வந்து ஒன்றுசேர்ந்து, படப்பிடிப்புக் குழுவினரைச் சூழ்ந்து, 'நாங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்து வந்துவிட்டோம். உங்கள் பேச்சு அழகாக இருக்கிறது'' என்று கூறினர்.

இதைக் கேட்ட இயக்குநர் திருலோகசந்தர் கண் கலங்கி, அவர்களை படப் பிடிப்பை காண அனுமதித்தார்.

பின்னர், திருலோகசந்தர் அந்த நகரில் இருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்துகொண்டார். அவர் சென்னை திரும்பியபோதும், எம்.ஜி.ஆரை சந்தித்து மண்ணை அளித்து, விஷயத்தைச் சொன்னார்.

அந்த மண்ணை பயபக்தியுடன் எம்.ஜி.ஆர். தனது கண்களில் ஒற்றிக் கொண்டு, பத்திரமாக வைத்துகொள்வதாகக் கூறினார். பின்னர், திருலோகசந்தரின் கரங்களைப் பற்றி எம்.ஜி.ஆர். நன்றி தெரிவித்தார்.

-முக்கிமலை நஞ்சன்

'அமுதைப் பொழியும் நிலவே' (தங்கமலை ரகசியம்), 'மாசிலா நம் காதலை..' (அம்பிகாபதி), 'இன்பம் பொங்கும் வெண்ணிலா (வீரபாண்டியன் கட்டபொம்மன்) .. என்று புகழ்பெற்ற பாடல்களை எழுதியவர் கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியன்.

அவர் ஒருமுறை கூறும்போது, 'நாலரை வயதிலேயே என் தந்தையை இழந்துவிட்டேன். என்னை வளர்த்து ஆளாக்கியது என் அம்மா. வசதி இல்லாததால், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தேன். ஆனாலும், என்னால் கவிதை எழுத முடிந்தது என்றால், அதற்கு காரணம் என் அம்மா. தினமும் படுப்பதற்கு முன்பு தேவாரமோ, திருவாசகமோ சொல்லிவிட்டு படு. அதேபோல், காலையில் எழுந்திருக்கும்போதும் ஏதேனும் ஒரு பாட்டைச் சொல்லிவிட்டு எழுந்திரு என்பார். இதனால் எனக்கு சிறுவயதிலேயே கவிதைக்கான சந்தம் பிடித்துகொண்டது. பின்னர், கொஞ்சம் கொஞ்சமாய் பாடல்களை எழுதினேன். கவிஞரானேன்'' என்றார்.

-த.சீ.பாலு, அத்திப்பட்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com