ஹேமா வழக்கம் போல சத்தம் போடத் தொடங்கினாள்.
'என்னங்க - தோடு காணாம போயிடுச்சி'' மடிக்கணினியில் வேலை செய்துகொண்டிருந்த கணேசன், 'உனக்கு இதுவே வேலையா போச்சு. பொறுமையா தேடு.. பொருளை நினைத்த இடத்தில வைக்க வேண்டியது. காணல.. காணலன்னு ஒப்பாரி வைக்கவேண்டியது'' என்றான்.
'தோடை டப்பாவுல போட்டு அலமாரியில் தான் வச்சேனுங்க. .?''
'அது நீ வழக்கமா செய்றது. இரண்டு நிமிஷம் டைம் எடுத்துக்கோ? யோசி. தோடை கடைசியா என்ன செய்தாய் என்று பாரு. இப்ப எனக்கு ஒவ்வொண்ணா சொல்லிக்கிட்டு வா?''
'நேத்து சாயந்திரம் ரிசப்ஷன் போனோம். நைட் 10 மணிக்கு வீட்டுக்குள் நுழைந்தோம். சேலையை கழட்டி மடித்து வைத்தேன். நைட்டிக்கு மாறினேன். தோடை கழட்டினேன். உங்களுடைய தலையணை மேல் வைத்தேன். தலையணை உறை தூசியா இருக்குன்னு அதை நன்றாக உதறிவிட்டு திரும்ப மாட்டி வைத்தேன்.''
கணேசன், 'இப்ப நான் சொல்றேன். துடைப்பத்தை எடுத்து அறையைக் கூட்டினாயா?''
'சட்'டென்று ஹேமா அறையின் மூலையில் சாத்திவைக்கப்பட்டிருந்தத் துடைப்பத்தை எடுக்க, அதன் முனையில் தோடு இருந்தது.
- அ.கௌரிசங்கர்