கவிஞர், சிறுகதை- தொடர்கதை எழுத்தாளர், நாவலாசிரியர், கட்டுரையாளர், பத்திரிகை ஆசிரியர், பேச்சாளர், கதை சொல்லி, ஆவணப் பட இயக்குநர், திரைக்கதை வசனகர்த்தா, பாடலாசிரியர், திரைப்பட இயக்குநர், படத் தயாரிப்பாளர்... என்று பன்முக ஆளுமைகள் கொண்டவர் மாடத்து தெக்கேப்பாட்டு வாசுதேவன் நாயர்.
'மாடத்து தெக்கேப்பாட்டு' என்ற வீட்டுப் பெயரின் சுருக்கம்தான் 'எம்.டி'. இவர் மலையாள எழுத்துலக ஆளுமைகளான வைக்கம் முகம்மது பஷீர், தகழி, கேசவதேவ்.. ஆகியோரைத் தொடர்ந்தவர்.
அந்தத் தாய்க்கு மூன்று மகன்கள். நான்காம் முறையாக கர்ப்பம் தரித்தபோது, அவர் ரொம்பவும் பலவீனமாக இருந்தார். கருவிலேயே கலைத்துவிடலாம் என்று குடும்பத்தார் முடிவு செய்து, மருந்தும் கொடுத்தனர். ஆனால் கரு அசைந்து கொடுக்கவில்லை. பிறந்த ஆண் குழந்தை நோஞ்சானாக இருந்தது. நோஞ்சான் பிள்ளை ஒரு 'அசகாய விருட்சமாக' விரிந்தது.
சுட்டித் தனம் இருந்தாலும் படிப்பில் சூட்டிகையாக இருந்ததால், இரண்டாம் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்புக்கு 'டபுள் பிரமோஷன்' கிடைத்தது. சிறு வயதிலேயே 'கிருஷ்ண சரிதம்', ஸ்லோகங்கள் மனப்பாடம். பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி.
மருத்துவத்துக்குப் படிக்க வைக்கலாம் என்று பெற்றோர் ஆசைப்பட்டனர். ஆனால், பொருளாதாரம் காரணமாக, கலைக் கல்லூரியில் 'எம்.டி.' படிக்க வேண்டியதாகிவிட்டது. அவர் தனது 12-ஆவது வயதில் வார இதழ்கள் வாசிப்பு தொடங்கியதால், மனதில் தோன்றியதை கவிதையாக நோட்டில் பதித்து மறைத்து வைத்தார் குட்டி 'எம்.டி.'.
கல்லூரியில் படிக்கும்போது முதல் சிறுகதை பத்திரிகையில் வெளியானது. தொடர்ந்து, 'நியூயார்க் ஹெரால்டு', ' டிரிபூன்
ஹிந்துஸ்தான் டைம்ஸ்', 'மாத்ருபூமி' ஆகிய பத்திரிகைகள் இணைந்து நடத்திய உலக சிறுகதை போட்டியில், 'எம்.டி.' யின் 'வளர்த்து மிருகங்கள்' (வீட்டு விலங்குகள்) என்ற சிறுகதைக்கு முதல் பரிசு கிடைத்தது. தொடர்ந்து, கவிதையைப் பாதியில் விட்டுவிட்டு உரைநடைகள்தான் தனது களம் என்று அடையாளம் கண்டு கொண்டார். 'மாத்ருபூமி' நாளிதழில் உதவி ஆசிரியரானார். நாடகத் துறையை அவர் தொடவில்லை.
இவர் தனது சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு, 'முறைப்பெண்' என்ற திரைப்படத்துக்கு திரைக்கதை, வசனத்தை எழுதினார். அறுபது திரைக்கதைகளைப் படைத்தார். அதில் 'சாதாரண, சராசரி படங்களுக்கு இடையில் பல படங்கள் காலத்தை வெல்லும் கிளாசிக் படங்களாக அமைந்ததில் திருப்தி ஏற்பட்டது' என்று சொன்ன 'எம்.டி.' சமகால மலையாள இலக்கியத்தில் திரைப்படத் துறையில் இமயமாக உயர்ந்தார்.
'எனது கதைகளில் நாயகன் அமானுஷ்யனல்ல; சாதாரண மனிதனே... மிகைப்படுத்தலில் எனக்கு நம்பிக்கையில்லை' என்று சொல்லி வந்த 'எம்.டி.', நடிகர்களான பிரேம் நசீர், மது, சத்யன், மம்மூட்டி , மோகன்லால் என்று கேரள ரசிகர்களால் மறக்க முடியாத பாத்திரங்களை வழங்கினார். கமல்ஹாசன் கதாநாயகனாக மலையாளத்தில் முதன் முதலில் நடித்த 'கன்னியாகுமரி' படத்தின் கதை, வசனமும் 'எம்.டி.' , எப்போதும் சீரியஸாக முகத்தை வைத்திருந்த 'எம்.டி.'யை சிரித்துப் பார்த்தவர்கள் சிலர்தான்.
கேரளத்தில் அணு மின்நிலையம் நிறுவப் போவதாகச் செய்தி வெளிவந்ததும் , பொதுமக்களுடன் சேர்ந்து 'எம்.டி.' போராட்டம் நடத்தினாலும், அவர் அரசியல் கட்சிகளைச் சாரவில்லை.
பீமன் கண்ணோட்டத்தில் புதிய மகாபாரதம் படைத்தவர் அவர். அது 'இரண்டாம் இடம்' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஞான பீடம் பத்மவிபூஷண், சாகித்திய அகாதெமி விருதுகளைப் பெற்றிருக்கும் 'எம்.டி.' கேரளத்தில் பெறாத விருதுகள் இல்லை. சீனியர் எழுத்தாளரான தகழி சிவசங்கரப் பிள்ளை குறித்த ஆவணப் படம் எடுக்க, 'எம்.டி. தகழியுடன் ஒரு மாத காலம் உடனிருந்து, படப்பிடிப்பை நடத்தினார். ஆவணப் படத்துக்குப் பின்னணிக் குரலையும் அளித்தார் 'எம்,டி.'
அவர் தனது வாழ்க்கைப் பயணத்தை சரிதையாக எழுதவில்லை. இன்னொருவர் எழுதியிருந்தாலும், அச்சுக்கு வெளிவரும் முன்னே அவர் பயணித்துவிட்டார்.
-
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.