புத்தி கெட்டவர்கள்
'விடிந்தால் திங்கள்கிழமை. சீக்கிரம் படுத்தால்தான் காலையில் கிளம்ப முடியும்' என்று முடிவு செய்து படுக்கையில் படுத்தார் ராமமூர்த்தி. தூங்கும்முன், சற்று நேரம் யூடியூப் பார்க்கலாம் என்று அதையும் இதையும் செல்போனில் புரட்டிக் கொண்டிருந்தார். கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. எழுந்து சென்று கதவைத் திறந்தால் எதிரில் நிற்பது பாபு.
ராமமூர்த்திக்கு ஆச்சரியம் தாளவில்லை.
'நேத்து கூட பேசினே. வர்றேன்னு ஒரு வார்த்தை கூட சொல்லல.. என்ன திடீர்னு..'
'மாமா... நீங்க இருக்கீங்களான்னு தெரிஞ்சுக்கத்தான் போன் பண்ணினேன்.'
'சரி வா. சாப்டியா?'
'எல்லாம் ஆச்சு மாமா... வரும்போது சாப்டுட்டுதான் வந்தேன். அசதியா இருக்கு.. தூங்கலாம்.'
'அதெல்லாம் இருக்கட்டும். உன் பொண்டாட்டி, அந்த டாக்டரம்மா எப்படி இருக்காங்க?'
'இருக்கா இருக்கா... எல்லா கதையும் நாளைக்கு சொல்லுறேன்.. இப்ப தூங்கலாம்.'
'ஒரு முக்கியமான விஷயம்... என்னன்னா நான் பழையபடி உன் கூட இந்த ரூம்லதான் இருக்கப் போறேன்.'
'இது என்னடா. கூத்தா இருக்கு? நாலு வருஷமா இங்கே தங்கி படிச்ச. அதுல ஒரு நியாயம் இருந்துச்சி. இப்ப பெரிய உத்தியோகத்தில இருக்கே? கல்யாணம் வேற பண்ணி பொண்டாட்டியோட இருக்கே.. இனிமே இந்த ரூம்ல உனக்கு என்னடா வேலை.'
'கல்யாணம் பண்ணிட்டேன்னு சொன்னீங்க... அதுவரைக்கும்தான் உண்மை. பொண்டாட்டியோட இருக்கேன்னு சொன்னதெல்லாம் அவ்வளவு உண்மை இல்லை. அதனால நீங்க தூங்குங்க... மீதியை நாளைக்கு பேசிக்கலாம்..'
'சரி...' என்று கண்களை மூடிய ராமமூர்த்திக்கு உறக்கம் வரவில்லை. 'இந்தப் பையன் என்னென்னமோ சொல்றான் என்ன நடந்துச்சுன்னு தெரியலையே' என்று யோசித்தபடியே தூங்கிப் போனார்.
அசந்து தூங்கிய ராமமூர்த்தி சற்றைக்கெல்லாம் தூக்கம் கலைந்து திரும்பிப் பார்த்தார். 'பாபு தூங்கிவிட்டானா?' என்பதை பார்ப்பதற்காக சற்றே கண்
விழித்தார். அங்கே பாபு பால்கனியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்ததும் அவருக்கு மெல்ல பழைய நினைவுகள் தோன்றின.
சென்னையில் பரபரப்பான பகுதியில் உள்ள இந்த லாட்ஜ் நேர் எதிரே வரிசையாக தெருவில் வசிக்கும் பல குடும்பங்கள் இருந்தன. உயர்ந்த சுற்றுச்சுவரின் மேலே இருந்து இறங்கிய தார்பாய்கள்தான் அவர்களது வீடு. அதுவும் பெரும்பாலும் இரவில்தான் அந்த தார்பாய்கள் உயர்த்தப்படும். மற்ற நேரங்களில் பெரும்பாலும் அவை சுவரோடு ஒட்டிய நிலையில் இரண்டு மூங்கில் கழிகள் உடன் காணப்படும். இந்த நடைபாதையில் 10, 12 குடும்பங்கள் இருக்கக் கூடும். எல்லாருமே அன்றாடங்காச்சிகள்தான். கூலி வேலைக்கு போவது, பூ கட்டி விற்பது என்று எல்லோரும் எப்போதும் உழைத்துக் கொண்டே இருக்கும் மக்கள்தான்.
ராமமூர்த்தியின் அறைக்கு நேர் எதிரே உள்ள மாலாவின் குடும்பத்தில் அநேகமாய் மூணு, நாலு குழந்தைகள் இருக்கலாம். பாபுவும் ராமமூர்த்தி அறைக்கு வந்து தங்கி படிக்க ஆரம்பித்த காலத்தில் இரண்டு குழந்தைகள்தான் இருந்ததாக நினைவு. ஓராண்டுக்கு முன்பு ராமமூர்த்தி அறையை காலி செய்துவிட்டு கிளம்பும் தருணத்தில் மாலாவுக்கு நாலு குழந்தைகள் இருந்ததாக நினைவு. முதல் மாடியில் பால்கனியில் இருந்து பார்க்கையில் மாலாவின் குடும்பம் மிக அருகில் இருப்பதும் அங்கு நடக்கும் சங்கதிகள் சுலபமாக அறியக் கூடிய வகையிலும் இருந்தது.
ஒவ்வொரு முறையும் மாலா கர்ப்பமாகி வயிற்றை தள்ளிக் கொண்டு நிற்கும்போதும் பாபுவும் ராம
மூர்த்தியிடம் வெறுப்போடு பேசுவான்.
'ஏன் இவர்களுக்கெல்லாம் புத்தியே கிடையாதா... பெற்றுக் கொண்ட பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்க வேண்டாமா? இப்படி அடுத்தடுத்து பெற்றுக் கொண்டே போனால் இந்த குழந்தைகளின் தேவையை எப்படி இவர்கள் நிறைவேற்றுவார்கள்...'
ராமமூர்த்தி சிரித்தபடியே, 'உன்னையும் என்னையும்போல் எல்லாத்துக்கும் யோசிச்சுகிட்டு இருக்கிற ஜனங்க இல்லை இவங்க. நம்மைப் போன்றவர்கள் வாழ்க்கையை முழுதாகப் புரிந்துகொண்டதாக நினைத்துகொண்டு எதிர்காலத்தை எண்ணியெண்ணி யோசித்து ஒரு வாழ்க்கை வாழ்கிறோம் ஆனால் இவர்களைப் போன்ற மனிதர்கள் 'லிவ் டுடே' என்ற தத்துவத்தின்படி இன்றைய வாழ்க்கையை இன்றே வாழ்ந்து தீர்ப்பவர்கள். நாளைய வாழ்க்கையைப் பற்றி பெரிதாக கவலை ஏதும் இல்லாதவர்கள். சொல்லப் போனால் எது சரியான வாழ்க்கை என்பதை யாரும் அறுதியிட்டுக் கூற முடியாது என்பதே உண்மை' என்பார்.
பதிலுக்கு, 'மாமா. நீங்கப் பேசறது எனக்கு
விநோதமா இருக்கு . . . இதுபோன்ற மனிதர்களின் பொறுப்பற்ற செயல்களால் ஒரு தேசமே பெரும்
சிக்கலுக்கு உள்ளாகிறது. ஒரு தேசத்தின் பொருளாதார திட்டமிடல் மக்கள் தொகையை சார்ந்தது. அதை இப்படி கண்டபடி மாற்றுபவர்களை என்னவென்று சொல்வது' என்பான் பாபு.
பகலெல்லாம் அழுக்காகக் காணப்படும் பூக்காரி மாலா, மாலை மலர்ந்ததும் சீவி முடித்து சிங்காரித்து பூ விற்க உட்கார்ந்து விடுவாள். இரவில் ராமமூர்த்தியும் பாபுவும் அருகில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டு வர போகும் தருணங்களில் எல்லாம் மாலாவைத் தாண்டிதான் போவார்கள். இரவு 9 மணி வாக்கில் மாலா ஒரு சட்டி நிறைய மீன் குழம்பு வைப்பது வழக்கம். பகலில் எத்தனை சண்டை நடந்தாலும்
இரவில் தெருவிளக்கு வெளிச்சத்தில் அவர்கள் குடும்பத்தோடு உட்கார்ந்து உணவு அருந்துவார்கள். ஏதாவது தருணத்தில் அந்தக் குடும்பத்தோடு இவர்கள் எப்போதாவது சிறிது நேரம் நின்று பேசுவது உண்டு.
மாலாவின் புருஷன் மாணிக்கம் முன்னே ரிக்ஷா, இப்போது ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கும் கதையே விநோதமானது. தினமும் வட இந்திய ரயில்கள் வரும் நேரத்தில் சென்ட்ரல் ரயில் நிலைய வாசலில் காத்திருப்பான். வட இந்தியாவில் இருந்து வரும் பயணிகளைப் பிடித்து அவர்களை அழைத்துச் சென்று லாட்ஜில் விடுவதுதான் மாணிக்கத்தின் வேலை.
அப்படி அவன் கொண்டுவிடும் வாடிக்கையாளர் அந்த லாட்ஜில் சிங்கிள் பெட் ரூம் எடுத்தால் லாட்ஜ் உரிமையாளர் மாணிக்கத்துக்கு நூறு ரூபாய் கொடுப்பார். அதே வாடிக்கையாளர் டபுள் பெட்ரூம் எடுத்தால் மாணிக்கத்துக்கு இருநூறு ரூபாய் கிடைக்கும். சில நேரங்களில் அந்த ரயில் பயணி ஏ.சி. ரூம் எடுக்கும் சந்தர்ப்பத்தில், லாட்ஜில் இருந்து மாணிக்கத்துக்கு ஐநூறு கிடைப்பதுண்டு. எத்தனை கிடைத்தாலும் அத்தனையும் குடித்துவிட்டு மாலாவிடம் நூறோ, இருநூறோ தான் மாணிக்கம் கொடுப்பான்.
மாணிக்கம் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் மாலா அவனுக்கு தினமும் இரவில் மீன் குழம்போடு உணவு பரிமாறத் தவறுவதில்லை. 'பகல் நேரத்தில் இவர்களுக்கு இடையே நடக்கும் உக்கிரமான சண்டையை பார்க்கும் யாருமே இனி இவர்கள் சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை' என்றுதான் நினைப்பார்கள்.
ஆனால் அப்படி ஒன்று நடந்ததாகவே எண்ணாமல் இரவில் அவர்கள் கூடி உணவு உண்ணும் அழகே தனி. இதைப் பற்றி எல்லாம் பாபுவும் ராமமூர்த்தியும் பலமுறை பேசியிருக்கின்றனர். அநேகமாக அந்த மூன்றாவது குழந்தை ராமமூர்த்தியின் ரூமுக்கு பாபு வந்து தங்கி ஐ.ஏ.எஸ். படிக்கும் காலத்தில்தான் பிறந்தது என்று நினைவு. இப்போது பாபு பால்கனியில் நின்று வேடிக்கை பார்ப்பதைப் பார்த்த ராமமூர்த்திக்கு ஏற்கெனவே பாபுவுடன் பேசியதெல்லாம் நினைவுக்கு வந்தது.
பாபுவோ ராமமூர்த்தியின் சொந்த அக்கா மகன். 'ஐ.ஏ.எஸ். அலுவலராகியே தீர வேண்டும்' என்ற தீராத வேட்கையுடன் மூன்று ஆண்டுகள் இந்த ரூமில்தான் தங்கி படித்தான் பாபு. 'பள்ளியில் முதல் மாணவனாக வந்த பாபு நிச்சயம் தன்னுடைய இலக்கை அடைந்து விடுவான்' என்று ராமமூர்த்தியும் தீர்க்கமாக நம்பினார்.
இரண்டு முறை தேர்வில் நேர்முகத் தேர்வு வரைக்கும் சென்ற பாபுவால் தேர்ச்சி பெற முடியவில்லை. மூன்றாவது முறையே பாபுவுக்கு வருமான வரித் துறையில் பெரிய வேலை கிடைத்தது. பாபுவோ மீண்டும் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ். ஆகியே தீருவேன் என்று முனைப்பு காட்டினான். பலரும் வற்புறுத்தியதால் வருமான வரித் துறையில் போய் சேர்ந்தான்.
உயர் அதிகாரியாகச் சேர்ந்த பாபுவுக்கு கே.கே. நகரில் ஒரு பங்களா ஒதுக்கப்பட்டது. அங்கு குடியேறிய பாபுவும் தனது மாமாவைத் தன்னுடன் தங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டான். ராமமூர்த்தி உறுதியாக மறுத்துவிட்டார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இதே லாட்ஜில் இருந்து பழகிவிட்ட தனக்கு புது இடம் தோதுபடாது என்று மறுத்துவிட்டார்.
'நல்ல உத்தியோகத்தில் அமர்ந்துவிட்ட பாபுவுக்கு கல்யாணம் செய்துவிட வேண்டும்' என்று பாபுவின் அம்மா பேச ஆரம்பித்தார். ' உறவுக்காரப் பெண் உஷாதான் பாபுவுக்கு மனைவி' என்று பல காலமாக குடும்பத்தில் பேச்சு இருந்தது.
ஒருநாள் ராமமூர்த்தி, 'என்னடா பாபு.. உங்க அம்மா உனக்கு உஷாவை கட்டி வைக்கணும்னு சொல்லிக்கிட்டு இருக்காங்களே. எப்ப கல்யாணம் வச்சுக்கலாம்' என்று கேட்டார். இதற்கு பாபுவின் பதிலைக் கேட்ட ராமமூர்த்தி ஒரு கணம் மிரண்டு போனார். 'மாமா எனக்கும்கூட முன்னாடி மனசுல அப்படி ஒரு எண்ணம் இருந்ததுதான்.
ஆனால் பன்னிரெண்டாம் வகுப்பு வரைக்கும் அடைக்கம்பட்டியில் படித்து, பக்கத்தில் இருந்த பெரம்பலூரில் போயி காலேஜ் படிச்ச பொண்ண கூட்டிக்கிட்டு வந்து வாழ எனக்கும் யோசனையா இருக்கு . . . இந்த உத்தியோகத்துக்கு வந்த இந்த ஒரு வருஷத்துல எங்க ஆபீஸில் நடந்த எத்தனையோ நிகழ்ச்சிகளுக்கு போயிட்டு வந்து இருக்கேன். எல்லா இடத்திலும் கூட வேலை செய்ற எல்லார் மனைவிகளும் வெள்ளை வெளேர் தோலும் நுனி நாக்கு
இங்கிலீஷ் பேச்சுமா இருக்கிறாங்க... இந்த இடத்துக்கு நான் உஷாவை கூட்டிட்டு வந்தா அது அவளுக்கும் கஷ்டம் எனக்கும் சரிப்பட்டு வராது. உங்களுக்கே இதெல்லாம் புரியும் மாமா, இதை எப்படியாவது நீங்க அம்மாகிட்ட சொல்லி இந்தக் கல்யாணத்தை நடக்காம பாத்துக்கங்க?' என்றான் பாபு.
ராமமூர்த்தியும் ஏதேதோ காரணம் சொல்லி அந்த கல்யாணத்தை நிறுத்தினார்.
ஓராண்டு ஓடியிருக்கும். திடீரென ஒரு நாள் பாபு தனது மாமாவிடம் தனக்கான பெண்ணைத் தேர்வு செய்துவிட்டதாக கூறினான். தன்னுடன் வேலை பார்க்கும் ஒருவரின் உறவினரை தான் ஒரு சில நிகழ்ச்சிகளில் பார்த்து பழகியதாகவும் அந்தப் பெண் மருத்துவம் படித்திருப்பதாகவும் அவர்களுடன் பேசியதில் அந்தப் பெண் மிகுந்த அறிவும் அழகும் ஆற்றலும் உள்ள பெண்ணாக தோன்றுவதால் அந்தப் பெண்ணையே மணக்க இருப்பதாகவும் தெரிவித்தான். அப்படியே அந்தத் திருமணமும் நடந்தேறியது. இந்தச் சங்கதிகளை நினைத்தப்படியே ராமமூர்த்தி தூங்கிப் போனார்.
விடிந்ததும். பரபரப்பாகக் கிளம்பி ராமமூர்த்தியும் பாபுவும் அலுவலகம் சென்றனர். இருவரும் அலுவலகம் போய் வந்தவுடன் இரவு எட்டு மணி வாக்கில் சற்று ஓய்வாக உட்கார்ந்திருந்தனர். 'சரி இப்பவாவது சொல்லுடா பாபு, என்னதான் நடந்தது. ஏன் வீட்டை விட்டுட்டு இங்க வந்துட்டே' என்று கேட்டார் ராமமூர்த்தி.
பாபுவின் முகத்தில் சலிப்பும் வெறுப்பும் கலந்திருந்தது. 'அப்புறம் சொல்றேனே மாமா' என்ற பாபுவிடம், 'என்ன அப்புறம், இப்பவே சொல்லு, எனக்கு ராத்திரி முழுக்க தூக்கமே வரல... முழிச்சி பாத்தா நீ பால்கனியில் நின்னு வேடிக்கை பார்த்துகிட்டு இருந்த, சரி உனக்கு மனசு சரி இல்லை போல இருக்கு... உன்னை தொல்லை பண்ண வேணாம்னுதான் நேற்று இரவு எதுவும் கேட்கல' என்றார் ராமமூர்த்தி. 'அதான் சொல்றேனே மாமா... எல்லாம் விவரமா அப்புறமா சொல்றேன்' என்றான் பாபு.
'சரி. மத்ததெல்லாம் அப்புறமா சொல்லு. இப்ப உன் டாக்டர் பொண்டாட்டி எங்க இருக்கா அதை மொதல்ல சொல்லு' என்றார் ராமமூர்த்தி.
'சரி மாமா. நீங்க என்னைவிட மாட்டீங்க ... எல்லாத்தையும் இப்பவே சொல்லிடுறேன்' என்று சற்று நேரம் மெளனம் காத்தவுடன் பாபுவே தொடர்ந்தான்.
'மாமா கல்யாணமாகி ரெண்டு பேரும் ஒரு வாரம் சிங்கப்பூர் தேனிலவு போயிருந்தோம். அந்த ஒரு வாரமும் தன்னுடைய படிப்பு. கனவு. லட்சியம் இதபத்தித்தான் பேசிக்கிட்டு இருந்தா. சரி புருஷனா வந்தவன்கிட்ட தன்னுடைய ஆசைகளைப் பற்றி சொல்றது இயல்புதானே என்று கேட்டேன். இது பத்தி எல்லாம் நாங்க காதலிச்ச காலத்திலேயே அவள்
ஏற்கெனவே என்கிட்ட பேசி இருந்ததும் எனக்கு ஞாபகத்தில் இருந்தது. எப்படியாவது எம்.எஸ். படிக்கணும். அதுக்கும் மேல படிக்கணும். பெண்களுக்கான ஒரு பெரிய மருத்துவமனை நடத்தணும் என்பதுதான் அவ மனசுக்குள்ள ஊறிக் கிடக்கிற பெரிய லட்சியம். அவளுடைய இந்த ஆசையை அறிந்துதான். அது மிக உயர்வானது என்று எண்ணி நான் அவளை காதலித்து கட்டிக்கிட்டேன்.
ஆனா வேடிக்கை என்னன்னா அவளுக்கு அதை தவிர வேறு எந்த யோசனையும் இல்லை. சிங்கப்பூரில் இருந்து வந்த ஒரு வாரத்திலேயே 'அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. நான்தான் பக்கத்தில் இருந்து பாத்துக்க வேண்டும்' என்று சொல்லிக் கொண்டிருந்தவள், திடீரென ஒரு நாள் காலையில் கிளம்பி கோயம்புத்தூர் போய்விட்டாள். சரி போகட்டும் பெண் பிள்ளைகள் அம்மாவோடு பாசமாக இருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டேன். ஊருக்கு போனவள் அதன் பிறகு எப்படி இருக்க என்று கூட ஒரு போன் செய்து விசாரிக்கவில்லை, திரும்பி வருவது பற்றியும் அவளுக்கு எந்த யோசனையும் இல்லை.
ஒரு வாரம், பத்து நாளில் வந்து விடுவாள் என்று எண்ணியிருந்த எனக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. அதற்குப் பிறகு மூன்று மாதம் கழித்து வந்தவள், என்னோடு ஆசையோடும் பாசத்தோடும் குடும்பம் நடத்தவில்லை. அம்மா, அத்தை போன்ற பெண்களைப் பார்த்து வளர்ந்த எனக்கு இந்தப் போக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.
இதற்கிடையே அமெரிக்காவில் இருந்து அவளோட அண்ணன் எப்படியாவது அவளுக்கு மேல் படிப்புக்கு ஏற்பாடு செய்துவிடுவான் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். இதுபோதாதுன்னு அடிக்கடி சொல்லாமல் கொள்ளாமல் சட்டென்று கிளம்பி கோயம்புத்தூர் போய்விடுவாள்.
இந்த ரூமில் வசித்ததைச் சொர்க்கமாக நினைக்கும் அளவுக்கு தனிமை என்னை வாட்டியது. அரசு கொடுத்துள்ள அவ்வளவு பெரிய பங்களாவில் தனியாக இருப்பது எத்தனை துயரமானது என்பதை அனுபவித்து பார்த்தால்தான் தெரியும்.
போன வாரம் முழுவதும் ஏதேதோ வேலையாக வெளியே போவதும் வருவதுமாக இருந்தாள். கூட இருக்கும் தன் புருஷனிடம் ஏதாவது சொல்லலாம் அல்லது அவன் உதவியை கேட்கலாம் என்றெல்லாம் அவள் எண்ணவே இல்லை. போன மாத கடைசியில் ஒருநாள் என்னிடம், தான் அண்ணனை தேடி அமெரிக்கா போவதாகவும் தனக்கு இரண்டு ஆண்டு மருத்துவ படிப்புக்கு சீட்டு கிடைத்திருப்பதாகவும் சொல்லிவிட்டு கிளம்பி போய்விட்டாள்.
இதுபத்தி புருஷன் என்ற முறையில் என்னோட கருத்து, ஆலோசனை எது பத்தியும் அவளுக்கு அக்கறையே இல்லை. அமெரிக்கா போகும் அவளை விமான நிலையத்துக்குச் சென்று வழியனுப்பும் சந்தர்ப்பம் கூட எனக்கு கிடைக்கவில்லை, அவளுடைய அம்மாவும் அப்பாவும் வீட்டுக்கு வந்து அவள் உடமைகளுடன் காரில் அவளை அழைத்து சென்றுவிட்டனர்' என்று மொத்த கதையையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்த பாபு சற்று நேரம் எதுவும் பேசாமல் ஜன்னல் வழியாக சாலையை பார்த்தபடி உட்கார்ந்திருந்தான்.
ராமமூர்த்திக்கு எதுவும் கேட்கத் தோன்றவில்லை. மெல்ல எழுந்து. பாபுவின் தோள்பட்டையில் கை வைத்து ஆதரவாய் சற்று அமுக்கிப் பிடித்தபடி, 'ஏன்டா மாப்பிள்ளை, உன் வீட்டுக்காரி அமெரிக்கா போய் எவ்வளவு நாளாச்சு?' என்றார்.
'அது ஆச்சு மாமா ஒரு மாசம் இருக்கும்..'
'ஏன்டா மாப்பிள்ளை. ஏன் இது பத்தி எல்லாம் என்கிட்ட ஒண்ணுமே சொல்லவில்லை...'
'இது பத்தி எல்லாம் என்னத்த சொல்றது மாமா? எல்லாம் மெல்ல, மெல்ல சரியாகிவிடும் என்று நம்பினேன். ஆனால் அவளுக்கு குடும்ப வாழ்க்கையில் பெரிசா ஈடுபாடு இருப்பதாக எனக்கு தெரியவில்லை, அவள் நினைவெல்லாம் படிப்பு, பட்டம், பெரிய ஆஸ்பத்திரி கட்டுவது என்ற போக்கிலேயே இருக்கிறது. நான் என்ன சொல்ல முடியும்?'
'இதுக்குதான் மாப்பிள்ளை அப்பவே உங்க அம்மா சொல்லுச்சு. சாதாரணமா படிச்சிருந்தாகூட போதும். அடைக்கம்பட்டியில் இருந்த உன் அத்தை மகளை கட்டிக்கோன்னு சொல்லுச்சு. நீ என்ன சொன்ன, எனக்கு படிச்சவளா வேணும். நாகரிகமானவளா வேணும், வெள்ள வெளேர்னு வேணும், சமுதாயத்துல ஒரு ஃபங்க்ஷனுக்கு கூட்டிட்டு போனா பார்க்க பகட்டா இருக்கணும், இப்படின்னு என்னென்னத்தையோ நெனச்சு அடிப்படை விஷயத்தை கோட்டை விட்டுட்டியே மாப்பிள்ளை...'
'சரிதான் மாமா. இப்படி ஆகும்னு யாரு நினைச்சா' என்றபடி மீண்டும் மெளனமானான் பாபு.
'சரி சரி, மணி ஒன்பதாவுது. கிளம்பி வா, ஒரு எட்டு போயி ஏதாவது டிபன் சாப்பிட்டு வரலாம்' என்று கூறியபடி வெளியே கிளம்ப எழுந்தார் ராமமூர்த்தி. கூடவே பாபுவும் கிளம்பி மாடியைவிட்டு இறங்கினார்கள். சிறிய அந்தச் சாலையைக் கடந்து எதிரே மாலா குடியிருக்கும் பகுதிக்கு வந்தனர்.
அந்த நேரத்தில் மாலா தன் புருஷனுக்கும் பிள்ளைகளுக்கும் உணவு பரிமாறும் வேலையில் இருந்ததைப் பார்த்தனர். இப்போது மீண்டும் மாலா கர்ப்பம் தரித்து பெருத்த வயிறுடன் சிரமத்துடன் உணவு பரிமாறும் வேலையில் ஈடுபட்டு இருப்பதை பாபு பார்த்தான். அவர்களைத் தாண்டி இருவரும் நடந்தபோது, தலையை உயர்த்திய மாலா, பாபுவை பார்த்துவிட்டு முகமெல்லாம் பிரகாசிக்க, 'சாரு எப்படி இருக்கீங்க . . கல்யாணம் கட்டிகிட்டு போயிட்டதா ஐயாதான் சொன்னாரு. ஒரு நாளைக்கு உங்க வீட்டுக்காரம்மாவை ஒரு தடவை கூட்டிட்டு வந்து காட்டுறீங்களா?' என்றாள் அன்போடு.
என்ன பேசுவது என்று திகைத்த பாபு சட்டென்று சுதாரித்துக் கொண்டு, 'அதற்கு என்னம்மா. கண்டிப்பா ஒரு நாளைக்கு கூட்டிக்கிட்டு வந்து காட்டுறேன்' என்று சொல்லியபடி அந்த இடத்தை கடந்து சென்றனர்.
டிபன் கடையை நெருங்கும் வரைக்கும் இருவரிடமும் மெளனம் நிலவியது.
'என்னடா யோசனையா இருக்கே.. மாலா உன் பொண்டாட்டிய கூட்டிக்கிட்டு வரச் சொன்னத நெனச்சு பயந்துட்டியா..' என்றார் ராமமூர்த்தி.
'இல்ல இல்ல மாமா. திரும்பவும் இந்த பொம்பள மாசமா இருக்காளே அனேகமா இது அஞ்சாவது புள்ளையா இருக்குமோ?' என்றான் பாபு.
'ஆமா! ஆமா! அவங்களுக்கெல்லாம் நம்மள மாதிரி கண்டகண்ட கவலையெல்லாம் கிடையாது. ஆனாலும் இந்த வாழ்க்கையை முழுசா வாழ்ந்து பார்க்கும் ஆசையும் அனுபவமும் மனத்தைரியமும் அவங்களுக்குகிட்டதானே இருக்கு. ஆனா நீ அவங்களை என்னன்னு சொல்லுவ...'
'ஞாபகம் இல்லையே மாமா...'
'நீ எப்பவும் அவங்கள 'புத்தி கெட்டவங்க' அப்படின்னு சொல்லுவ...'
பாபு பதில் ஏதும் சொல்லாமல், ராமமூர்த்தி மாமாவை வெறித்துப் பார்த்தான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.